Friday 1 December 2017

பொருளாதார உறவுகளில் இருந்தும் அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகளில் இருந்தும் ஒரு சமூகப் புரட்சி ஏற்படும் என்கிற விஞ்ஞானக் கம்யூனிசம் பற்றி எங்கெல்ஸ்

(எல்பெர்பெல்ட் சொற்பொழிவுகள் - 1845 பிப்ரவரி 15ந் தேதியன்று நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து)

“… இன்றைக்கு இருக்கின்ற சமூக உறவுகளின் தவிர்க்க முடியாத விளைவு-எல்லா சந்தர்ப்பங்களின் கீழும் எல்லா இனங்களிலும் -ஒரு சமூகப் புரட்சியாக இருக்கும். கொடுக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்து ஒரு புதிய கணிதக் கருதுகோளை நாம் எவ்வளவு நிச்சயமாகப் பெற முடியுமோ அதைப் போல இன்றைக்கு இருக்கின்ற பொருளாதார உறவுகளிலிருந்தும் அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகளிலிருந்தும் ஒரு சமூகப் புரட்சி ஏற்படப்போவதை நிச்சயமாகப் பெற முடியும். எனினும் நாம் இந்தக் கொந்தளிப்பை இன்னும் சிறிதளவு நெருங்கிச் சென்று பார்ப்போம். அதன் வடிவம் எப்படி இருக்கும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும், இதற்கு முன்னர் ஏற்பட்ட வன்முறையான கொந்தளிப்புகளிலிருந்து அது எவ்விதங்களில் வேறுபட்டிருக்கும்?

கனவான்களே, ஒரு சமூகப் புரட்சி இதற்கு முன்னர் ஏற்பட்ட அரசியல் புரட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுவிதமானதாக இருக்கும். இவற்றைப் போல அது ஏகபோகத்தின் உடைமைக்கு எதிராகத் திருப்பப்பட்டதல்ல, உடைமையின் ஏகபோகத்துக்கு எதிரானதாக இருக்கும்.

கனவான்களே, சமூகப் புரட்சி என்பது பணக்காரர்களை எதிர்த்து ஏழை மக்களின் பகிரங்கமான யுத்தமாகும். இதற்கு முந்திய வரலாற்றுச் சண்டைகளில் அடித்தளத்தில் இருண்டும் மறைவாகவும் இருந்த அனைத்துப் பிரதான விசைகளும் காரணங்களும் இத்தகைய போராட்டத்தில் பகிரங்கமாகவும் மறைவுகள் இல்லாமலும் இயங்குகின்றன. அத்தகைய போராட்டம் அதற்கு முன்பு நடைபெற்ற அனைத்தைக் காட்டிலும் அதிகமான அளவுக்கு மூர்க்கத்தனமானதாகவும் இரத்தம் பெருக்கெடுப்பதாகவும் இருக்கும் என்று பயமுறுத்துவதும் உண்மையே.

இந்தப் போராட்டத்தின் விளைவு இரண்டு விதமாக இருக்கக் கூடும். போராடுகின்ற தரப்பு சாரத்தை அல்ல, தோற்றத்தை மட்டுமே பொருளை அல்ல, வடிவத்தை மட்டுமே தாக்குகிறது; அல்லது அது அந்தப் பொருளைத் தாக்குகிறது, தீமையை வேரோடு பிடுங்குகிறது. முதல் இனத்தில் தனி உடைமை தொடர்ந்து நிலவுவதற்கு அனுமதிக்கப்படும், அது வேறுவிதமான முறையில் வினியோகிக்கப்படுவது மட்டும் நடைபெறும். அப்பொழுது இன்றைய நிலைமையை ஏற்படுத்தியுள்ள காரணங்கள் நீடித்தியங்குவதற்கு அனுமதிக்கப் படுகின்றன. இவை சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ இதே நிலைமையை ஏற்படுத்தி மற்றொரு புரட்சியைக் கொண்டுவரும். ஆனால் இது சாத்தியமா, கனவான்களே? தன்னுடைய நோக்கத்தை உண்மையிலேயே நிறைவேற்றாத ஒரு புரட்சி இருக்கிறதா? முதலாம் சார்லசின் மத, அரசியல் ஒடுக்குமுறையினுல் வெடித்த ஆங்கிலப் புரட்சி தன் மத, அரசியல் கோட்பாடுகள் இரண்டையும் நிறைவேற்றிக் கொண்டது. பிரெஞ்சு முதலாளி வர்க்கம் பிரபுக் குலத்தையும் பழைய முடியாட்சியையும் எதிர்த்து நடத்திய போராட்டத்தில் தன்னுடைய நோக்கங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டது, தன்னைக் கலகம் செய்யுமாறு உந்தித் தள்ளிய எல்லாக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டியது. வறுமையும் அதற்குரிய காரணங்களும் ஒழிக்கப்படுவதற்கு முன்பு ஏழைகளின் புரட்சிகர எழுச்சி முடிந்துவிடுமா?

கன வான்களே, அது சாத்தியமல்ல, அப்படிக் கற்பனை செய்வது வரலாற்று அனுபவம் அனைத்தையும் மீறுவதாகும். மேலும் குறிப்பாக, இங்கிலாந்திலும் பிரான்சிலும் தொழிலாளர்களுடைய கல்வி மட்டம் அது சாத்தியம் என்று நாம் நினைக்க முடியாதபடிச் செய்கிறது. இப்பொழுது அடுத்த சாத்தியம் மட்டுமே இருக்கிறது; அதாவது, எதிர்காலத்தில் நடைபெறப் போகின்ற சமூகப் புரட்சி இல்லாமை மற்றும் வறுமை, அறியாமை மற்றும் குற்றச்செயல்களின் உண்மையான காரணங்களைத் தேடிப் போராடும், ஆகவே அது உண்மையான சமூக சீர்திருத்தத்தை நிறைவேற்றும். கம்யூனிசக் கோட்பாடுகளைப் பிரகடனம் செய்வதன் மூலமாக மட்டுமே இது நடைபெற முடியும். தொழிலாளி கூடச் சிந்தனை செய்கின்ற நாடுகளில் அவனைத் தூண்டுகின்ற கருத்துக்களைப் பற்றிச் சிறிது சிந்தனை செய்யுங்கள்.

கனவான்களே! பிரான்சை, தொழிலாளர் இயக்கத்தின் வெவ்வேறு பிரிவுகளைப் பாருங்கள். அவை அனைத்தும் கம்யூனிஸ்ட் தன்மை கொண்டிருக்கவில்லையா? இங்கிலாந்தில் தொழிலாளர்களுடைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குச் சொல்லப்படுகின்ற பிரேரணைகளைப் பற்றிச் சிந்தியுங்கள். அவை அனைத்துமே பொதுவான உடைமை என்ற கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லையா? சமூக சீர்திருத்தத்தைப் பற்றிய பல்வேறு முறைகளை ஆராய்ச்சி செய்யுங்கள். கம்யூனிஸ்ட் தன்மை இல்லாத முறைகளைக் கண்டுபிடிக்க முடியுமா? இன்றும் ஏதேனும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்ற முறைகள் அனைத்திலும் கம்யூனிஸ்ட் தன்மை இல்லாதது ஃபூரியேயினுடைய அமைப்பு ஒன்று மட்டுமே. அவர் மனித நடவடிக்கையின் உற்பத்திப் பொருள்களின் வினியோகத்தைக் காட்டிலும் மனித நடவடிக்கைக்குச் சமூக அமைப்பை ஏற்படுத்துவதில் அதிகமான கவனத்தைச் செலுத்தினர். எதிர்கால சமூகப் புரட்சி கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை அமுல் நடத்துவதில் நிறைவுபெறும், இதைத் தவிர வேறு எந்த சாத்தியத்துக்கும் இடமில்லை என்ற முடிவுக்கு வருவதை மேற்கூறிய விவரங்கள் நியாயப்படுத்துகின்றன.
கனவான்களே! இந்த முடிவுகள் சரியானவை என்றால், சமூகப் புரட்சியும் நடைமுறைக் கம்யூனிசமும் நம்மிடம் இன்றுள்ள நிலைமைகளின் அவசியமான விளைவு என்ரறால் எல்லாவற்றுக்குக்கும் மேலாக சமூக நிலைமைகள் வன்முறையில், இரத்தப் பெருக்கில் தூக்கியெறியப்படுவதைத் தவிர்ப்பதற்குரிய நடவடிக்கைகளைப் பற்றி நாம் அக்கறையெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி மட்டுமே உண்டு. கம்யூனிசத்தை சமாதான பூர்வமான முறையில் கொண்டு வருவது அல்லது குறைந்தபட்சம் அதற்குத் தயாரிப்புச் செய்வது அந்த வழியாகும். சமூகப் பிரச்சினை இரத்த வெள்ளத்தில் தீர்க்கப்படுவதை நாம் விரும்பவில்லை என்றால் நம் பாட்டாளி வர்க்கத்தினருடைய கல்விக்கும் அவர்களுடைய நிலைமைக்கும் இடையில் அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கின்ற முரண்பாடு-முரட்டு வன்முறை, மனமுறிவு மற்றும் பழிவாங்கும் வெறியுடன் இந்த முரண்பாடு தீர்க்கப்படும் என்பதே இதன் அர்த்தம் என்று மனித இயல்பைப் பற்றி நம்முடைய அனைத்து அனுபவமும் கூறுகிறது-வெடிப்பதை நாம் அனுமதிக்க விரும்பவில்லை என்றால், கனவான்களே, நாம் சமூகப் பிரச்சினையைப் பற்றி மிகத் தீவிரமாக, தப் பெண்ணங்கள் இன்றிச் சிந்திக்க வேண்டும்; நவீன அடிமை வகுப்பினரின் (helots)? நிலைமையை மனிதப் பண்புடைய தாக்குவதில் நம் பங்கினைச் செலுத்துவதை நம்முடைய வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது வரையிலும் இழிந்த நிலை வர்க்கங்களை மேலே உயர்த்துவது உங்களுடைய சொந்த நிலைமையை இழிவுபடுத்திக் கொள்ளாமல் முடியாது என்று உங்களில் சிலர் ஒருவேளை நினைத்தால் ஒவ்வொருவரும் தன்னுடைய மனித இயல்பை சுதந்திரமாக வளர்த்துத் தனக்குப் பக்கத்தில் வசிப்பவர்களுடன் மனித உறவில் வசிக்கக் கூடிய, தன்னுடைய நிலைமை பலாத்காரமாக நொறுக்கப்படும் என்று அஞ்ச வேண்டிய அவசியமில்லாத அத்தகைய நிலைமையை அனைத்து மக்களுக்கும் படைப்பது இங்கே சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒரு சில தனி நபர்கள் தியாகம் செய்வது வாழ்க்கையை மெய்யாகவே மனித ரீதியில் அனுபவிப்பதை அல்ல, நம்முடைய மோசமான நிலைமைகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆனந்தத்தின் வெளித்தோற்றத்தை - வெறும் தோற்ற அளவில் இருக்கின்ற இந்த வசதிகளை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுடைய அறிவு மற்றும் இதயத்துடன் முரண்படுகின்ற ஏதோ ஒன்றை-மட்டுமே தியாகம் செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையான மனித வாழ்க்கையை-அதன் அவசியங்கள் மற்றும் தேவைகள் அனைத்துடனும்-அழிப்பது நம்முடைய விருப்பமல்ல, அதற்கு மாறாக அதை மெய்யாகவே ஏற்படுத்துவது நம்முடைய விருப்பம். இவற்றைக்குகூட விட்டுவிடுங்கள்; நம்முடைய இன்றைய நிலைமையின் விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன, எத்தகைய திறுக்கு மறுக்கான முரண்பாடுகளுக்குள், ஒழுங்கு மீறல்களுக்குள் அது நம்மை இட்டுச் செல்கிறது என்பதை நீங்கள் ஒரு கண நேரமாவது தீவிரமாகச் சிந்தித்தால்-அப்பொழுது கனவான்களே, சமூகப் பிரச்சினையைத் தீவிரமாகவும் முற்றாகவும் ஆராய்வது அவசியம் என்று நீங்கள் நிச்சயமாக முடிவு செய்வீர்கள். இதைச் செய்யுமாறு நான் உங்களைத் தூண்டமுடிந்தால் என்னுடைய சொற்பொழிவின் நோக்கம் நிறைவேறியதாகக் கருதுவேன்.”

No comments:

Post a Comment