Thursday 29 June 2017

அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றி ஸ்டாலின்

“சமூக வாழ்வில்கூட, முதலில் புறச்சூழ்நிலைகள் மாறுகின்றன, முதலில் பொருளாயத நிலைமைகள் மாறுகின்றன, அதன் பின்னர் இந்த மாறிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மக்களுடைய உலக கண்ணோட்டம் ஆகியவையும் மாறுகின்றன.

இதனால் தான், பின்வருமாறு கூறுகிறார் மார்கஸ்:-
“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. ஆனால், இதற்க மாறாக, அவர்களது சமூக வாழ்க்கையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது,”

பொருளாயத நிலைமையை, புறச் சூழ்நிலைகளை வாழ்க்கையை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, நாம் “உள்ளடக்கம்” என்று சொல்வோமானால், கருத்தியல் ரீதியானதை, உணர்வை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, “வடிவம்” என்றுதான் நாம் சொல்ல முடியும்.  எனவே, வளர்ச்சி என்ற நிகழ்ச்சிப் போக்கில், உள்ளடக்கமானது வடிவத்தை முந்திக் கொண்டு செல்கிறது, வடிவமானது உள்ளடக்கத்துக்குப் பின்தங்கி நிற்கிறது. இந்த உண்மையில் இருந்துதான், பிரபலமான பொருள்முதல்வாதக் கருத்துரைப்பு தோன்றுகிறது.

மார்க்சின் கருத்துப்படி பொருளாதார வளர்ச்சிதான் சமூக வாழ்வின் “பொருளாயத அடித்தளமாக” சமூகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது, அதே நேரத்தில், சட்ட-அரசியல் மற்றும் மதவியல்-தத்துவவியல் வளர்ச்சியானது, இந்த உள்ளடக்கத்தின் “சித்தாந்த வடிவமாக”, அந்த உள்ளடக்கத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது. இதிலிருந்து பின்வரும் முடிவை மார்க்ஸ் வந்தடைகிறார். “பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்துடன் முழு பிரமாண்டமான மேற்கட்டுமானமும் அதிகமான அல்லது குறைவான வேகத்தில் (more or less rapidly) மாறுதலடைகிறது.
பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதார சூழ்நிலைகள் பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும். எந்த இலட்சியங்கள் பொருளாதார சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக் கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.”

(அராஜகவாதமா? சோஷலிசமா? -பக்கம்- 34 & 37-38)

Friday 16 June 2017

குறுங்குழுவாதத்தில் சிக்கியுள்ள பிரிவுகளைப் பற்றி- மார்க்ஸ் – எங்கெல்ஸ்

“முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் முதல் கட்டம் குறுங்குழுவாத இயக்கத்தைக் குறியடையாளமாகக் கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற முறையில் செயல்படுவதற்கு இன்னும் போதுமான வளர்ச்சியடையாத நேரத்தில் அது தர்க்கரீதியானதே. சில சிந்தனையாளர்கள் சமூக முரண்பாடுகளைக் குறைகூறி அவற்றுக்கு அதிசயமான தீர்வுகளைச் சொல்கிறார்கள், அவற்றை ஏற்றுக் கொள்வதும் போதனை செய்வதும் நடைமுறைக்குக் கொண்டுவருவதும் பெருந்திரளான தொழிலாளர்களிடம் விடப்படுகிறது. இப்படிப்பட்ட ஆரம்பகர்த்தாக்கள் அமைத்த குறுங்குழுக்கள் இயல்பாகவே விலகி நிற்பவையாக, அதாவது எல்லா உண்மையான நடவடிக்கை, அரசியல், வேலைநிறுத்தங்கள், கூட்டு ஸ்தாபனங்கள் அல்லது சுருக்கமாகச் சொல்லுவதென்றால் எல்லாவிதமான ஐக்கிய இயக்கத்துக்கும் அந்நியமானவையாக இருந்தன. பாட்டாளி வர்க்கப் பெருந்திரளினர் எப்பொழுதுமே அவற்றின் பிரச்சாரத்தைப் பற்றி அலட்சியமாக- விரோதமாக- இருந்திருக்கிறார்கள்.
இக்குறுங்குழுக்கள் ஆரம்பத்தில் இயக்கத்துக்கு நெம்புகோல்களைப் போல இருக்கின்றன. ஆனால் இயக்கம் அவற்றை மீறி வளர்ச்சி அடைந்த உடனே அவை தடையாக மாறிவிடுகின்றன.
சோதிடமும் இரசவாதமும் விஞ்ஞானத்தின் குழுந்தைப் பருவமாக இருப்பதைப் போல இதுவும் பாட்டாளி வர்க்கம் இயக்கத்தின் குழந்தைப் பருவம் என்று நாம் தொகுத்துரைக்கலாம்”

(அகிலத்தில் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கற்பனைகள்- 1872)

Wednesday 14 June 2017

முதலாளித்துவ வளர்ச்சியினால் எழும் முரண்பாடுகளைத் தீர்க்க பாட்டாளி வர்க்கப் புரட்சி தோன்றும்- எங்கெல்ஸ்

முதலாளித்துவப் புரட்சிதொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழிற்கூடங்களாக ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாக இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கையகப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கையகப்படுத்திக் கொண்டு அவற்றைப் பண்டங்களாக மாற்றுகிறார். உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கையகப்படுத்தலும் தனிப்பட்ட செயல்களாக, தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கையகப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.

() உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுதல். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுதல். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை.

() பண்ட உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கமும் பயனுறுதியும் அதிகரித்தல். கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயமான ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக அராஜகத்துக்கும் இடையேயான முரண்பாடு.

() ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாக, தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [விளைவு?] தொழில்துறை ரிசர்வ் பட்டாளம். மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம், ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகப் பண்டங்களின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகைஅங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்துசக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்தி சக்திகளை, முதலில் அவை மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்களைப் புழங்கவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்தி சக்திகளின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாக மாற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாக வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்தி சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

() உற்பத்தி சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்குக் குழுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.

பட்டாளி வர்க்கப் புரட்சிமுரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுவரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. இதுமுதற்கொண்டு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமூகமயமான உற்பத்தி சாத்தியம் ஆகிறது. அதுமுதற்கொண்டு, உற்பத்தியின் வளர்ச்சி, சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள் நிலவுவதை காலத்துக்கு ஒவ்வாததாய் ஆக்குகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது. முடிவில், தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோஷலிசத்தின் பணியாகும்.

(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)

புரட்சிகர கருத்துக்களின் தோற்றுவாய் புறநிலைமைகளே- மார்க்ஸ்-எங்கெல்ஸ்

“மனிதனினுடைய பொருளாயத வாழ்வின் நிலைமைகளிலும், அவனுடைய சமூக உறவுகளிலும், அவனுடைய சமூக வாழ்விலும் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும்போதும், மனிதனுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், கருத்துருவாக்கங்களும், சுருங்கக் கூறின், மனிதனுடைய உணர்வும் மாற்றம் அடைகிறது என்பதைப். புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் தேவையா, என்ன?

பொருள் உற்பத்தியில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தவிர கருத்துகளின் வரலாறு வேறு எதை நிரூபிக்கிறது? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துகள், அந்தந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்துரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளன.

சமுதாயத்தைப் புரட்சிகரமாக்கும் கருத்துகள் பற்றி மனிதர்கள் பேசும்போது, பழைய சமுதாயத்துக்குள்ளேயே புதியதொரு சமுதாயத்தின் கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்கிற உண்மையையும், பழைய வாழ்க்கை நிலைமைகள் கரைந்தழியும் அதே வேகத்தில் பழைய கருத்துகளும் கூடவே கரைந்தழிகின்றன என்கிற உண்மையையுந்தான் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.”

(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - 2 பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்)

Tuesday 13 June 2017

பலப்பிரோகத்தால் தனியுடைமை தோற்றுவிக்கப்படவில்லை பொருளாதாரக் காரணங்களின் விளைவாகவே ஏற்பட்டது- எங்கெல்ஸ்

”எங்கெல்லாம் தனியுடைமை மலர்ந்ததோ அங்கெல்லாம் அது உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் மாற்றம் அடைந்த உறவுகளின் விளைவாகவே, அதிகரித்த உற்பத்தி, பரஸ்பர உறவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் நலன்களுக்காகவே அதாவது பொருளாதாரக் காரணங்களின் விளைவாகவே ஏற்பட்டது. இதில் பலப்பிரயோகம் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. இன்னொரு நபரின் உடைமையை ஒரு கொள்ளைக்காரன் பறித்துக் கொள்ள வேண்டுமனால் தனியுடைமை அமைப்பு ஏற்கெனவே நிலவியிருந்திருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு. எனவே பலப்பிரயோகம் உடைமையை மாற்ற முடியுமே தவிர தனியுடைமை என்ற முறையில் எதையும் படைக்க முடியாது.

அதன் ஆக நவீன வடிவமான கூலி உழைப்பில்- “மனிதனைக் கீழடக்கி அவன் அடிமை வேலை புரியுமாறு செய்வதை”  விளக்குவதற்கு நாம் பலப்பிரயோகத்தையோ, பலப்பிரயோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட் உடைமையையோ பயன்படுத்த முடியாது. பழங்கால சமூகங்கள் குலைவுற்றதில் அதாவது தனியுடைமையின் நேடியான அல்லது நேரடியல்லாத பொதுவான  விரிவில் உழைப்பின் உற்பத்திப் பொருள்கள் பண்டங்களாக மாற்றப்பட்டதும், அவை உற்பத்தி செய்வோரின் நுகர்வுக்கு அன்றி மாறாகப் பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்படுவதும் வகித்த பங்கு குறித்து நாம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.
வேறு சொள்களில் கூறினால் நாம் களவு, பலப்பிரயோகம் மற்றும் ஏமாற்றுதலின் எல்லா சாத்தியக் கூறுகளையும் விலக்கிவைத்தால்கூட, எல்லாத் தனியுடைமையும் ஆரம்பத்தில் உடைமையாளரின் சொந்த உழைப்பையே அடிப்படையாக்கியதாக இருந்தது என்றும், பிந்திய நிகழ்ச்சிப் போக்கு முழுவதிலும் சமமதிப்புகள் சமமதிப்புகளுடன் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட்டன என்று நாம் ஒரு நிலையை மேற்கொண்டபோதிலும் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் முன்னேற்றமான பரிணாமம் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை, எண்ணிக்கையில் சிறிய வர்க்கம் தன் கரங்களில் உற்பத்தி சாதனங்கள் மற்றும் பிழைப்புச் சாதனங்களை ஏகபோகமாக வைத்திருப்பதற்கும் அளப்பரிய பெரும்பான்மையாக அமைந்த மற்ற வர்க்கமற்ற உடைமையற்ற பாட்டாளிகளின் இழிவுக்கும், சூதாட்ட ரீதியான உற்பத்தி திடீர் உயர்வுள்ள வாணிப நெருக்கடிகள் காலத்திற்குக் காலம் மாறிமாறி வருவதற்கும், உற்பத்தியில் இன்று நிலவும் அராஜகத்துக்கும் தவிர்கக முடியாத வகையில் நம்மைக் கொண்டு வருகிறது.


இந்த நிகழ்ச்சிப் போக்கு முழுவதையும் முற்றிலும் பொருளாதாரக் காரணங்களால் விளக்கிவிட முடியும், எந்த ஒரு கட்டத்திலும், கொள்ளையடித்தல், பலப்பிரயோகம், எந்த வகையிலுமான அரசு அல்லது அரசியல் தலையீடு அவசியமில்லை. “பலப்பிரயோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்ட உடைமை” என்பது இங்கும் நிலைமைகளின் உண்மையான போக்கைப் புரிந்து கொள்ள முடியாததை மூடிமறைக்க உத்தேசிக்கும் ஒரு தற்பெருமையாளரின் சொல்லடுக்கே அன்றி வேறெதுவும் அல்ல.
சுருங்கக் கூறின், எப்பொழுதும் எல்லா இடங்களிலும் பொருளாதார நிலைமைகளும் பொரளாதார சாதனங்களும்தான் “பலப்பிரயோகம்” வெற்றி ஈட்ட உதவுகின்றன, இவை இல்லாவிடில் பலப்பிரயோகம் பலப்பிரயோகமாக இருக்காது.”

(டூரிங்க்குக் மறுப்பு)

Monday 12 June 2017

முதலாளித்துவ உற்பத்தி முறையினால் எழும் பொருளாதார நெருக்கடிகள்- மார்க்ஸ்

“முதலாளித்துப் பொருளுற்பத்தியின் தலைய மூன்று உண்மைகள் வருமாறு:
1) உற்பத்திச் சாதனங்கள் ஒரு சிலர் கையில் குவிக்கப்படுகின்றன. இதனால் இவை நேரடி உழைப்பாளர்களின் உடைமையாக விளங்கும் நிலை மறைந்து சமூக உற்பத்தி ஆற்றல்களாய் மாறிப் போகின்றன. தொடக்கத்தில் இவை முதலாளிகளின் தனிச் சொத்தாக இருந்தாலும்கூட இவர்கள் முதலாளித்துவச் சமூகத்தின் அறங்காவலர்களாகவே இருக்கிறார்கள், ஆனால் இந்த அறங்காவல் பொறுப்பின் வரவுகளை எல்லாம் தமதாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.

2) உழைப்பு சமூக உழைப்பாக ஒழுங்கமைக்கப்படுகிறது, கூட்டு-வேலையின் மூலமும், உழைப்புப் பிரிவினையின் மூலமும், உழைப்பை இயற்கை விஞ்ஞானங்களுடன் ஒன்றுபடுத்துவதன் மூலமும் இது நடைபெறுகிறது.

இந்த இரு பொருளிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையானது- முரண்பாடான வடிவங்களில்தான் என்றாலும்- தனிச் சொத்தையும் தனிப்பட்ட சொந்த உழைப்பையும் ஒழித்துக்கட்டுகிறது.

3) உலகச் சந்தை உருவாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் திறன் பிரமாதமாய் வளர்ச்சி அடைகிறது, அதே விகிதத்தில் இல்லா விட்டாலும் மூலதன- மதிப்புகளும் (இவற்றின் பொருட் கூறுகள் மட்டுமல்ல) அதிகரிக்கின்றன, இவை மக்கள்தொகையைக் காட்டிலும் மிகத் துரிதமாய் அதிகரிக்கின்றன. இந்த வளர்ச்சியும் இந்த அதிகரிப்பும பெருகிச் செல்லும் செல்வத்துடன் ஒப்பிடுகையில் ஓயாமல் குறுகிச் செல்வதான அடிப்படையுடன் முரண்படுகின்றன (இந்தப் பிரம்மாண்டமான உற்பத்தித் திறன் அனைத்தும் இந்த அடிப்படைக்கே பணிபுரிகிறது). பெருகிச் செல்லும் இந்த மூலதனம் எந்நிலைமைகளில் தன் மதிப்பை அதிகமாக்கிக் கொள்கிறதோ அந்நிலைமைகளுடனும் இவை முரண்படுகின்றன. எனவேதான் நெருக்கடிகள் வெடித்தெழுகின்றன.”

(மூலதனம் தொகுதி 3 -பக்கம்- 352-353)

சரக்கு - மார்க்ஸ்

(commodity)

"முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை (capitalist mode of producation) நிலவுகிற சமுதாயங்களின் செல்வம் "சரக்குகளின் பெருந்திரட்டலாகக்" காட்சி தருகிறது. தனிச் சரக்குதான் அந்தச் செல்வத்தின் அலகு.

எனவே நமது ஆராய்ச்சி சரக்கின் பகுப்பாய்வில் இருந்து தொடங்க வேண்டும்.

சரக்கு (commodity) என்பது, முதலாவதாக நமக்குப் புறத்தேயுள்ள பொருள், தனது குணங்களைக் கொண்ட எதேனும் ஒருவிதமான மனிதத் தேவைகளை நிறைவு செய்கிற ஒன்று.

இந்தத் தேவைகளின் தன்மை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரிதான், உதாரணமாக அவை வயிற்றிலிந்து உதித்தாலும் சரி, அல்லது கேளிக்கையிலிருந்து உதித்தாலும் சரி-எல்லாம் ஒன்றுதான். இந்தத் தேவைகளை அப்பொருள் எப்படி நிறைவு செய்கிறது - என்பது குறித்தும் இங்கு நமக்குக் கவலை இல்லை."

(மூலதனம் I பக்கம் 59)