Sunday 15 May 2016

முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது

மார்க்ஸ்:-
“சுயேச்சையான தனித்த உழைப்பாளி அவரது உழைப்புச் சாதனங்களுடன் ஒன்றிக் கலப்பதன் அடிப்படையிலானதென்று சொல்லத்தக்க சுயசம்பாத்தியத் தனியுடைமை போய், முதலாளித்துத் தனியுடைமை வருகிறது, இது பிறர் உழைப்பின்- பெயரளவில் சுதந்தரமான உழைப்பின் – சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனிவரை போதுமான அளவு சிதைத்ததும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமூக அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொத்துடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே.

   இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது.
எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். இந்த மையப்பாட்டுன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு-வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலம் அவற்றை சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப்பதும். இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதக அளவில் வளர்கின்றன.

இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது, இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்று படுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுமையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலிருந்து விளைவதான முதலாளித்துவத் தனதாக்க முறை முதலாளித்துவத் தனியுடைமையைத் தோற்றுவிக்கிறது. உடைமையாளரின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனியாள்-தனியுடைமையின் முதல் மறுப்பு இது. ஆனால், முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக்குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு. இது உற்பத்தியாளருக்குத் தனியுடைமையை மீண்டும ஏற்படுத்தித் தருவதன்று, முதலாளித்துவ சகாப்தத்தால் வரப்பெற்றதாகிய கூட்டு-வேலையின் அடிப்படையிலும், நிலமும் உற்பத்திச் சாதனங்களும் எல்லாருக்கும் பொதுவாய் இருப்பதன் அடிப்படையிலுமான தனியாள் உடைமையை அவருக்கு அளிப்பது ஆகும்.

தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவ தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவத் தனியுடைமையை சமூகப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிட முடியாத அளவுக்கு நிகழ்முறையாகும், வன்முறை மலிந்த, கடினமான நிகழ்முறையாகும், இது இயற்கைதான். முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையப் பறிப்பதாகும்.”

(மூலதனம் முதல் தொகுதி -பக்கம்  1025-1027)