Friday 27 April 2018

அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை -மார்க்ஸ்

(இம் முன்னுரையில் மார்க்ஸ் தாம் கண்டுபிடித்த வரலாற்றியல் பொருள்முதல்வாத்தை சுருக்கமாகவும் செறிவாகவும் விளக்கியுள்ளார்.)

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைக் கீழ்க்கண்ட வரிசைமுறைப்படி நான் ஆராய்கிறேன்: மூலதனம், நிலச் சொத் துடைமை, கூலி உழைப்பு, அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை. நவீன முதலாளித்துவச் சமூகம் மூன்று மாபெரும் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வர்க்கங்களின் பொருளாதார வாழ்க்கையின் நிலைமைகளை முதல் மூன்று தலைப்புகளில் ஆராய்கிறேன்; அடுத்த மூன்று தலைப்புகளுக்கு இடையே இருக்கின்ற உள்ளிணைப்பு இயல்பாகவே புலப்படும். முதல் புத்தகத்தின் முதல் பகுதி மூலதனத்தைப் பற்றி ஆராய்கிறது


அதில் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் உள்ளன: 1) பண்டம்; 2)பணம் அல்லது சாதாரண நாணயச் செலாவணி முறை; 3) பொதுவாக மூலதனத்தைப் பற்றி. முதல் இரண்டு அத்தியாயங்களையும் கொண்டதே இந்தப் புத்தகம். இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எனக்கு முன்பாகக் கிடக்கின்றன. இவை அச்சிடப்படுவதற்காக எழுதப்பட்டவையல்ல; நீண்ட இடைவெளி கொண்ட வெவ்வேறு காலங்களில் என்னுடைய சுயவிளக்கத்துக்காக எழுதப்பட்டவையே. ஆரம்பத்தில் குறிப்பிட்ட திட்டப்படி இவற்றை ஒன்றுதிரட்டி ஒரே இணைப்பாகத் திருத்தி யமைப்பதென்பது எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பொறுத்த தாகும்

நான் எழுதிய பொதுவான முன்னுரையை இங்கே சேர்க்கவில்லை. ஏனென்றால் மேலும் சிந்தித்த பொழுது இன்னும் ஆதாரங்களைத் திரட்டி நிரூபிக்கப்பட வேண்டிய முடிவுகளை முன் கூட்டியே தெரி விப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றுகிறது; உண்மையிலேயே என்னைப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர் குறிப்பிட்டவற்றிலிருந்து பொதுப்படையானவற்றுக்கு முன்னேறுவ தென்று முடிவு செய்துகொள்ள வேண்டும். எனினும் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி சுருக்கமாகச் சில வார்த்தைகளைச் சொல்வது இங்கே பொருத்தமானதாகும்.

நான் நீதி இயலைப் படித்த போதிலும், தத்துவஞானத்துக்கும் வரலாற்றுக்கும் உட்பட்ட பாடமாகவே அதைப் படித்தேன். 1842-43ஆம் வருடங்களில், R/reinische zeitung" என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில், பொருளாயத நலன்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவற்றை விவாதிக்க வேண்டிய இக்கட்டான நிலை முதல் தடவையாக எனக்கு ஏற்பட்டது. காட்டு விறகுகள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப் படுவதையும், நிலச் சொத்துடைமை துண்டு துண்டாகப் பிரிக்கப் படுவதையும் பற்றி ரைனிஷ் நாடாளுமன்றத்தில் (Landtag) நடைபெற்ற விவாதங்கள்; மோஸெல் பள்ளத்தாக்கிலுள்ள விவசாயிகளின் நிலையைப் பற்றி Rheinische Zeitting எழுதியவற்றுக்கு எதிராக ரைன் மாநிலத்தின் ஓபர் - பிரசிடெண்ட் ஹெர் வொன் ஷாப்பர் எழுப்பிய அதிகாரபூர்வமான வாதங்கள், கடைசியாக வர்த்தக சுதந்திரம், வர்த்தகக் காப்பு வரி பற்றி நடைபெற்ற சொற்போர்கள் என்னை முதலில் பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்துமாறு செய்தன. இதற்கு மாறாக, "முன்னுக்குப் போக ஆசைப்படுகிற நல்லெண்ணங்கள் விவரமான அறிவின் இடத்தைப் பிடித்திருந்த அந்தக் காலத்தில் லேசான தத்துவஞான முலாம் பூசப்பட்ட பிரெஞ்சு சோஷலிசம், கம்யூனிசத்தின் எதிரொலி, Rheinische Zeitung பத்திரிகையில் குறிப்பிடத்தக்க விதத்தில் தென்பட்டது. 

இந்த மேம்போக்கான அறிவுக்கு (dilettantism) என்னுடைய மறுப்பைத் தெரிவித்தேன் என்றாலும் Allgemeine Zeitung" என்ற அவுக்ஸ்ப ர்க் நகரப் பத்திரிகையோடு நடத்திய விவாதத்தில் பிரெஞ்சுக்கொள்கைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி ஏதாவது அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு எனது கடந்த கால ஆராய்ச்சிகள் அனுமதிக்கவில்லை என்பதை அதே சமயத்தில் வெளிப் படையாக ஒத்துக்கொண்டேன். Rheinische Zeitung பத்திரிகையை வெளியிட்டவர்கள், தங்கள் பத்திரிகையில் மேலும் பணிவான கொள்கையைக் கடைப்பிடித்தால், அதன் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படலாம் என்ற நப்பாசைக்கு ஆளாகிய பொழுது, நான் அந்த வாய்ப்பை ஆர்வத்தோடு பற்றிக் கொண்டேன்; பொது அரங்கத்திலிருந்து விலகி என்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.

என்னை வாட்டிய சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதற்காக நான் செய்த முதல் ஆராய்ச்சி, சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவத்தை விமர்சன ரீதியாக மறு பரிசீலனை செய்ததாகும்; இந்தப் புத்தகத்துக்கு நான் எழுதிய அறிமுகம் 1844 ஆம் வருடத்தில் பாரிஸ் நகரத்தில் Deutsch - Frarizosische Jahrbucher' என்ற இதழில் வெளியிடப்பட்டது. சட்ட உறவுகளையோ அல்லது அரசியல் வடிவங்களையோ, தனித்தனியாகவோ அல்லது மனித அறிவின் பொதுவான வளர்ச்சிப் போக்கு என்று சொல்லப்படுகிற அடிப்படையைக் கொண்டோ புரிந்துகொள்ள முடியாது; அதற்கு மாறாக, அவை வாழ்க்கையின் பொருளாயத் நிலைமைகளில் பிறக்கின்றன; இவற்றின் முழுத்தொகுதியையே ஹெகல், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் உதாரணத்தைப் பின்பற்றி "சிவில் சமூகம்” (Civill society) என்ற வார்த்தைகளில் அடைக்கிறார்; எனினும் இந்த சிவில் சமூகத்தின் உள்ளமைப்பை அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் - என்னுடைய ஆராய்ச்சியின் பலனாக மேற்கூறிய முடிவுகளுக்கு வந்தேன். 

பாரிசில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஆனால் திரு.கிலோ என்னை பிரான்சிலிருந்து வெளியேற்ற உத்தர விட்டபடியால், இந்த ஆராய்ச்சியை பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் தொடர்ந்து செய்தேன். இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. 

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. 

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது, இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடிகிற உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் மனிதர் தம் உணர்நிலைக்குள் மோதல் உண்டாகி மாற்றியமைக்கப்படுகிற சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞான - சுருக்கமாகச் சொல்வதென்றால் கருத்து நிலை வடிவங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும். ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது, அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்தச் சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள், பழைய சமூகத்தின் சுற்று வட்டத் துக்குள் தாம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவு களை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாத படி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம்பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும் விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால், நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளைச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறை தான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம் - முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல', தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே. ஆனால் முதலாளித்துவச் சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைமைகளையும் உருவாக்குகின்றன, எனவே இந்தச் சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.

பிரெடெரிக் எங்கெல்ஸ் பொருளாதார வகையினங்களைப் பற்றிய விமர்சனம் என்ற மிகச் சிறந்த கட்டுரையை வெளியிட்டது முதல் (Deutsch - Franzosische Jahrbucher இதழில் அச்சிடப்பட்ட து) நான் அவருடன் கடிதங்களின் மூலமாகத் தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே அவரும் இதே முடிவுக்கு வேறு வழியின் மூலமாக வந்தார் “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்க த்தின் நிலை " (The corndition of the Working class in England) என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும்). 1845 ஆம் வருடத்தின் வசந்த காலத்தில் அவரும் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் குடியேறிய பிறகு நாங்களிருவரும் ஜெர்மன் தத்துவஞானத்தின் சித்தாந்தத்துக்கு எதிராக எங்களுடைய கருதுகோளை விளக்கி எழுதுவதென்று, அதாவது எங்களுடைய கடந்த காலத் தத்துவஞான மனசாட்சியோடு கணக்குத் தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தோம். ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானத்தின் விமர்சனம் என்ற வடிவத்தில் இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டோம். அச்சுக் காகிதத்தில் எட்டில் ஒரு பங்கின் அளவில் இரண்டு புத்தகங்களாக இருந்த இந்தக் கையெழுத்துப் பிரதியை' வெஸ்ட்ஃபாலியாவிலிருந்த வெளியிட்டாளர் களுக்கு அனுப்பி வெகு காலமான பிறகு, சூழ்நிலை மாறி விட்ட படியால் அதை அச்சிட அவர்களால் முடியாது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கையெழுத்துப் பிரதியை எலிகளின் கொறிக்கும் விமரிசனத்துக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு கொடுத்து விட்டோம். ஏனென்றால் சுயவிளக்கம் என்ற எங்களுடைய முக்கிய மான நோக்கம் நிறைவேறிவிட்டது. 

அந்த நாட்களில் எங்களுடைய கருத்துகளில் ஏதாவதொரு அம்சத்தைப் பொதுமக்களுக்கு விளக்கி நாங்கள் வெவ்வேறு சமயங்களில் வெளியிட்ட புத்தகங்களில், நானும் எங்கெல்சும் கூட்டாக எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (Manifesto of the communist Party), நான் வெளியிட்ட சுயேச்சை வணிகம் பற்றிய சொற்பொழிவு (Discours sur le libre echange) ஆகியவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கருத்து களின் முக்கிய மான அம்சங்கள் கோட்பாட்டளவிலானாலும் வாதம் புரிவதற்காக எழுதப்பட்ட மெய்யறிவின் வறுமை (The Poverty of Philosophy) என்ற புத்தகத்தில் முதல் தடவையாகச் சொல்லப்பட்டன, புரூதோனுக்கு மறுப்பாக எழுதப்பட்ட இந்த நூல் 1847 ஆம் வருடத்தில் வெளியிடப் பட்டது. நான் ஜெர்மன் மொழியில் எழுதிய கூலி உழைப்பு (Wage Labour) என்ற புத்தகத்தில் பிரஸ்ஸல்சிலுள்ள ஜெர்மன் தொழி லாளர்கள் சங்கத்தில் இதே பொருளில் நான் நிகழ்த்திய சொற் பொழிவுகளைப் பயன்படுத்திக் கொண்டேன். பிப்ரவரி புரட்சி யினாலும் அதன் காரணமாக பெல்ஜியத்திலிருந்து என்னைப் பலாத் காரமாக வெளியேற்றி விட்டதனாலும் அதைப் பிரசுரமாக வெளி யிடுவது தடைப்பட்டது.

1848, 1849 ஆம் வருடங்களில் Neue Rheinische Zeitung இதழை வெளியிடும் பணிகளும், அதன் பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் என்னுடைய பொருளாதார ஆராய்ச்சிகளை நிறுத்தி விட்டன. 1850 ஆம் வருடத்தில் லண்டன் நகரத்தில்தான் என்னுடைய ஆராய்ச்சிகளை மறுபடியும் தொடர்ந்து செய்ய முடிந்தது. பிரிட்டிஷ் மியூசியத்தில் அரசியல் பொருளாதார வரலாறு பற்றிச் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான விவரத் தொகுப்புகளும், முதலாளித்துவச் சமூகத்தை ஆராய்வதற்கு லண்டன் ஒரு வசதியான மையம் என்பதனாலும், கடைசியாக கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாக இந்தச் சமூகம் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தை எட்டிவிட்டது போலத் தோன்றியதும் என்னை மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தொடங்குமாறும், புதிதாகக் கிடைத்திருக்கும் விவரங்களைக் கவனத்தோடு ஆராயுமாறும் தூண்டியது. 

இந்த ஆராய்ச்சிகள் வெளித்தோற்றத்தில் சற்று அப்பாற்பட்ட விஷயங் களுக்கும் என்னைத் தாமாகவே இழுத்துச் சென்றபடியால், நான் அதற்கும் ஓரளவு நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் குறிப்பாக, என்னுடைய வாழ்க்கைக்கு நான் சம்பாதித்துத் தீரவேண்டிய அத்தியாவசியமான நிலை, இந்த ஆராய்ச்சிக்குச் செலவிடக் கூடிய நேரத்தைக் குறைத்தது. New York Daily Triburne என்ற பிரபலமான ஆங்கிலோ-அமெரிக்கப் பத்திரிகையில்" நான் கடந்த எட்டு வருடங் களாக எழுதி வருகிறேன். ஆனால் செய்திக் கடிதம் என்ற அடிப் படையில் மட்டுமே நான் எழுதியபடியால் என்னுடைய ஆராய்ச்சி களை மிகவும் அதிகமான அளவுக்குப் பிரித்துக் கொடுக்க நேர்ந்தது. பெரும்பாலான கட்டுரைகளில் பிரிட்டனிலும், ஐரோப்பாக் கண்டத்திலும் நடைபெறும் முக்கியமான பொருளாதார சம்பவங்களைப் பற்றியே எழுத வேண்டியிருந்தது. எனவே நடைமுறையிலிருக்கும் சில்லரை விவரங்களையும் கூட (அறுதியிட்டுச் சொல்வதென்றால் இவை அரசியல் பொருளாதார தத்துவத்தின் உலகத்துக்கு அப்பாற் பட்டவை) நான் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாயிற்று.

அரசியல் பொருளாதாரம் என்ற துறையில் என்னுடைய ஆராய்ச்சிகளின் போக்கின் முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டுகின்ற இந்தக் கட்டுரையில் என்னுடைய கருத்துகள் -அவற்றை எப்படி மதிப்பிட்ட போதிலும் அந்தக் கருத்துக்கும் ஆளும் வர்க்கங்களின் காரணம் நிறைந்த வெறுப்புக்கும் சிறிதும் பொருத்தமில்லாத போதிலும் - கடந்த பல ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கிற நேர்மையான ஆராய்ச்சியின் விளைவாகும். நரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தப்பட வேண்டும்:

இங்கே அவநம்பிக்கைகளை அகற்றி விடுங்கள்; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்து விடுங்கள். 
[Dante Divina Commedia]

லண்டன், ஜனவரி 1859

Tuesday 24 April 2018

சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கடமையைப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”:-


“முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் - முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் - நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.”
(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை- மார்க்ஸ், எங்கெல்ஸ்)