Thursday 18 June 2020

பாட்டாளி வர்க்கத்தின் தொழில் நலன்களும் கூடுதல் நலன்கன்களான சோசலிசப் புரட்சியையும் பற்றி – ஸ்டாலின்


(வர்க்கப் போராட்டம் என்பது தொழிற்சங்கப் போராட்டத்துடன் நின்றுபோவதில்லை. சோசலிச புரட்சியை நிகழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதாகும். இறுதியில் ஒரு வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தைப் படைத்து, அனைத்து ஒடுக்கு முறையில் இருந்து விடுவிப்பதாகும்.)


பாட்டாளி வர்க்கத்தின் தொழில் நலன்களைக் காப்பதற்குத் தொழிற்சங்கங்கள் உருவாக்கப் படுகின்றன. அச்சங்கங்கள் கூலி உயர்வுக்காகவும், குறைவான வேலை நேரத்துக்காகவும் மற்ற இதர கோரிக்கைகளுக்காகவும் போராடுகின்றன. ஆனால் தொழில் நலன்களை விட கூடுதலாகப் பாட்டாளி வர்க்கத்துக்கு சோசலிசப் புரட்சியை நடத்துவது, சோசலிச சமூகத்தை நிறுவுவது என்ற பொதுவான வர்க்க நலன்களும் உள்ளன. எனினும் ஓர் ஒன்றுபட்ட, பிளவுகளற்ற வர்க்கமாகப் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் சோசலிசப்புரட்சியை சாதிப்பது சாத்தியமல்ல. இதன் காரணமாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியதாகிறது, தனது இத்தகைய அரசியல் இயக்கத்திற்கான சித்தாந்த தலைமையாக செயல்படுவதற்குத்தான் அதற்கு ஓர் அரசியல் கட்சியும் தேவைப் படுகிறது.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் சங்கங்கள் நிச்சயமாக கட்சி சார்பற்றவையாகவும், நடுநிலை வகிப்பவையாகவும் உள்ளனவாகும். ஆனால் கட்சியிடமிருந்து நிதி விவகாரங்களிலும், அமைப்பு விவகாரத்திலும் தான் அவை சுயேச்சையாக உள்ளன என்பதை மட்டுமே இது பொருள்படுத்துகிறது. அதாவது சங்கங்கள் தமக்கென்று தனியாக சொந்த நிதிகளையும், சொந்த தலைமை அமைப்புகளையும் கொண்டு தமது சொந்தப் பேராயங்களைக் கூட்டுகின்றன, அதிகாரபூர்வமாக அவை அரசியல் கட்சிகளின் தீர்மானங்களால் வரம்பிடப்பட்டவையாக இல்லை.

தொழிற் சங்கங்களின் சித்தாந்த சார்பு என்பதைப் பொறுத்தவரை, அவை ஏதாவது அரசியல் கட்சியை சார்ந்து இருப்பதில் ஐயமிருக்கமுடியாது என்பதோடு அவ்வாறு அவை சார்பின்றி நிலவவும் முடியாது. ஏனெனில் எல்லாவற்றையும் விட வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக தொழிற்சங்கங்களில் இருப்பதால் அவர்கள் தவிர்க்க முடியாமல் தம்முடன் தமது அரசியல் சார்புகளையும் கொண்டு வருவார்கள். ஒருவேளை அரசியல் போராட்டத்தை பாட்டாளி வர்க்கத்தால் நடத்த முடியாதபோது அதனால் சில அரசியல் கட்சியின் சித்தாந்தத் தலைமையை எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. அதனினும் கூடுதலாக தனது சங்கங்களுக்கு "பூலோக சொர்க்கமான” சோசலிசத்தை அடையவும் வழிகாட்டியாக இருக்கும் ஒரு கட்சியை பாட்டாளி வர்க்கம் தானே நாடவேண்டியிருக்கிறது. ஆயினும் இங்கும் கூட பாட்டாளி வர்க்கமானது விழிப்புடனும், எச்சரிக்கையுணர்வுடனும் இருந்து செயல்பட வேண்டும். அது அரசியல் கட்சிகள் விற்பனைச் சரக்காக தம்மிடம் வைத்துள்ள சித்தாந்தங்களை விழிப்புடன் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். மேலும் எந்தக் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகத் தீரமாகவும், உறுதியோடும் முன்னிற்கிறதோ, எந்தக் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறதோ, அரசியல் அதிகாரத்தை நோக்கி துணிவோடு வழிநடத்திச் செல்கிறதோ, சோசலிசப் புரட்சியை நோக்கி எந்தக் கட்சி வழிநடத்திச் செல்கிறதோ அக்கட்சியின் சித்தாந்த தலைமையைத் தடையின்றி ஏற்க வேண்டும்.

இப்போதுவரை ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியானது இப்பாத்திரத்தை செவ்வனே செய்துவருகிறது. எனவே இதன் விளைவாக அதன் சித்தாந்த தலைமையை ஏற்றுக் கொள்வது தொழிற்சங்கங்களின் கடமையாகும்.

இவ்வாறுதான் மெய்யாக தொழிற்சங்கங்கள் நடந்து கொள்ளும் என்பது பொது அறிவுக்கு உகந்ததுதான்.

இவ்வாறு தொழிற்சங்கங்களின் துணையுடன் நடைபெறும் பொருளாதார மோதல்கள், சமூக-ஜனநாயகத்தின் சித்தாந்த தலைமையின் கீழ் நடைபெறும் அரசியல் தாக்குதல்கள் - ஆகியனலே இன்று பாட்டாளி வர்க்கம் நடத்தக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களாக உள்ளன.

வர்க்கப் போராட்டமானது மேலும் தீவிரமாக வெடித்தெழும் என்பதில் ஐயமிருக்க முடியாது. தனது போராட்டத்தினுள் அமைப்பின் உணர்வையும் அதன் ஒழுங்கையும் அறிமுகம் செய்வதே பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். இதை நிறைவேற்றுவதற்கு தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்தி வலுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து ரசிய தொழிற்சங்கங்களின் பேராயத்தால் ஒரு மாபெரும் அளவில் பங்காற்ற முடியும். இன்று நமக்குத் தேவைப்படுவது "கட்டி சார்பற்ற தொழிலாளர்கள் பேராயம் அல்ல, இன்று பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுகளற்ற ஓர் ஒன்றுபட்ட வர்க்கமாகக் கட்டி, யமைப்பதற்காக வேண்டி தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களே இன்று நமக்குத் தேவைப்படுவனவாகும். அதே சமயத்தில், கட்சியை வலுப்படுத்தவும் அதை எஃகுறுதி கொண்ட கோட்டையாக மாற்ற வும் பாட்டாளி வர்க்கம் தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கட்சிதான் அதன் வர்க்கப் போராட்டத்தில் அரசியல் மற்றும் சித்தாந்த தலைவராக செயல்படக் கூடியதாகும்.
(தொகுதி 1 – வர்க்கப் போராட்டம் – பக்கம்-300 -302)

Wednesday 10 June 2020

உற்பத்தி உறவுகள் – எங்கெல்ஸ்


“உற்பத்தியின் நிகழ்வுப்போக்கில், மனிதர்கள் இயற்கையின்மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்றுசேர்ந்து உழைப்பதன்மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன்மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வரையறுத்த தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்குச் செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.

உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும், எந்த நிலைமைகளின்கீழ் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
... ... ...
இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி செய்வதற்குரிய சமூக உறவுகளும், உற்பத்தியின் சமூக உறவுகளும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்பதை நாம் காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்த முழுமையில் சமூக உறவுகளாய் அமைகின்றன”
(கூலியுழைப்பும் மூலதனமும்- முன்னுரை)

நூலை முழுமையாகப் படிக்க:-
கூலியுழைப்பும் மூலதனமும்
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்