Tuesday 21 July 2015

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகள்

(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு- வெளிவந்து 150 ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டன. இன்றும் இந்த ஆவணம் பயன்படுமா? என்ற கேள்விக்கு, மார்க்சும் எங்கெல்சும் அறிக்கையின் முன்னுரையில் ”அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை.”(1872) கூறியிருப்பதை முன்வைத்து, எதிர்மறையான பதிலைத் தருகின்றனர். அறிக்கை ஆவணமாகிவிட்டது, மாற்ற வேண்டியதை மாற்ற வேண்டும் என்ற கருத்தை மார்க்சும் எங்கெல்சும் கூறினர் என்பது உண்மையே, அவ்வாறு கூறுவதற்கு முன்பு கூறியதையும் பார்க்க வேண்டும். “இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம்.” ஆக, பொதுக்கோட்பாடுகள் சரியானது என்று விவரங்களைச் செம்மை செய்யலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த செம்மைப்படுத்துதலை ஆவணத்திற்குள் செய்யாமல், முன்னுரையில் செய்ய வேண்டும் என்று கருத்துரைத்துள்ளனர்.

இன்றும் நாம் அறிக்கையை வளர்ச்சியடைந்த நிலைமைகளின் விவரங்களுக்கு ஏற்ப முன்னுரையுடன் வெளியிட வேண்டும். “அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன.” (1883)
அறிக்கையின் முதலாளிகளும் பாட்டாளிகளும் என்ற முதல் அத்தியாயத்தில், முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்முரண்பாட்டால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியைப் பற்றி விவரிக்கிறது. மீண்டும் மீண்டும் இன்றளவும் தோன்றும் பொருளாதார நெருக்கடி மார்க்சியத்தின் அடிப்படைகள் இன்றும்  மெய்யானது என்பதை நிரூபிக்கின்றன. பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்ற இரண்டாம் அத்தியாயம், பாட்டாளிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான நெருக்கத்தையும் இணக்கத்தையும் வலியுறுத்துகிறது.)

(அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகப் படிக்க பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்)

1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை  - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது.
...
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே.
..
அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது."

1882-ஆம் ஆண்டின் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முகவுரை - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது. அறுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலகல் (Kolokol)[8] இதழின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலை நாட்டினரால் அப்போது அதில் (அறிக்கையின் அந்த ருஷ்யப் பதிப்பில்) ஓர் இலக்கிய ஆர்வத்தை மட்டுமே காண முடிந்தது. அத்தகைய ஒரு கண்ணோட்டம் இன்று சாத்தியமற்றது.

அறிக்கையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை எடுத்துக்கூறும் கடைசிப் பிரிவு, அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) பாட்டாளி வர்க்க இயக்கம் இன்னும்கூட எவ்வளவு குறுகிய களத்தினில் செயல்படுவதாக இருந்தது என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக ருஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை பற்றிய தகவல்கள் இப்பிரிவில் விடுபட்டுள்ளன.
...
வெகுவிரைவில் நிகழவிருக்கும், நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ருஷ்யாவில், அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல், இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன்கூடவே, பாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும், புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இது, நேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமா? அல்லது அதற்கு மாறாக, மேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்த, அதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீரவேண்டுமா?

இதற்கு, இன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்."

1883-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை - ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"அந்தோ! தற்போதைய பதிப்பின் இந்த முகவுரைக்கு நான் மட்டும் தனியே கையெழுத்திட வேண்டியுள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் முழுமையும் வேறு எவரையும்விட அதிகமாகக் கடமைப்பட்டுள்ள அந்த மாமனிதர் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய கல்லறையின்மேல் முதலாவது பசும்புல் ஏற்கெனவே அரும்பிக் கொண்டிருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது. பின்வருவனவற்றை வெளிப்படையாக மீண்டும் இங்கே எடுத்துரைப்பது முன்னைக் காட்டிலும் அவசியமெனக் கருதுகிறேன்:

அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.

நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின் முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்."

1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரை – ஏங்கெல்ஸ்

"தொழிலாளர்களுடைய சங்கமான “கம்யூனிஸ்டுக் கழகத்தின்” (Communist League) வேலைத்திட்டமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்காகவே இருந்த கம்யூனிஸ்டுக் கழகம் பின்னாளில் சர்வதேச அமைப்பாக ஆயிற்று. 1848-க்கு முன்பு [ஐரோப்பா] கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளின் காரணமாக, இக்கழகம் தவிர்க்க முடியாதவாறு ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. வெளியிடுவதற்கென ஒரு முழுமையான, கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த கட்சி வேலைத்திட்டத்தைத் தயாரித்து அளிக்கும்படி, 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்டுக் கழக மாநாட்டில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பணிக்கப்பட்டனர்.
...
ஆளும் வர்க்கங்கள் மீது மற்றுமொரு தாக்குதலுக்குப் போதுமான பலத்தை ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் மீண்டும் பெற்றபோது, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் [அகிலம்] உதித்தெழுந்தது. ஆனால், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் மிக்க பாட்டாளி வர்க்கம் முழுவதையும் ஒரே அமைப்பாக ஒன்றிணைக்க வேண்டுமென்ற வெளிப்படையான குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இச்சங்கத்தால், அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாகப் பிரகடனப்படுத்த இயலவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும், ஃபிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரூதோன் (Proudhon)[12] ஆதரவாளர்களும், ஜெர்மன் நாட்டு லஸ்ஸாலியர்களும் (Lassalleans)[ஏ2] ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பரந்த வேலைத்திட்டம் ஒன்றையே அகிலமானது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அனைத்துத் தரப்பினரும் மனநிறைவுகொள்ளும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை வரைந்து கொடுத்த மார்க்ஸ், தொழிலாளி வர்க்கத்தின் அறிவுநுட்ப வளர்ச்சியில் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். அத்தகு வளர்ச்சி, ஒன்றிணைந்த செயல்பாடு, பரஸ்பரக் கலந்துரையாடல் ஆகியவற்றின் நிச்சயமான விளைவாகும். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நேரடி நிகழ்வுகளும், சாதக பாதகச் சூழ்நிலைகளும், வெற்றிகளையும்விட அதிகமாகத் தோல்விகளும், மனிதர்களின் அபிமானத்துக்குரிய பல்வேறு சாகச உத்திகள் போதுமானவை அல்ல என்பதை அவர்களின் மனதில் உறைக்கும்படி தெளிவாக உணர்த்தும். அவை தொழிலாளி வர்க்க விடுதலைக்குரிய மெய்யான நிலைமைகள் குறித்து, மேலும் முழுமையான உள்ளார்ந்த புரிதலுக்கு வழிகோலவே செய்யும் என மார்க்ஸ் கருதினார். மார்க்ஸின் எண்ணம் சரியாகவே இருந்தது. அகிலமானது 1874-இல் கலைக்கப்பட்டபோது, அது [தொடங்கப்பட்ட ஆண்டான] 1864-இல் கண்ட தொழிலாளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொழிலாளிகளையே விட்டுச் சென்றது.
..
... அறிக்கையின் வரலாறு, நவீனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது அறிக்கையானது, ஐயத்துக்கு இடமின்றி சோஷலிச இலக்கியங்கள் அனைத்தினுள்ளும் மிகப்பரந்த அளவில் செல்வாக்குப் பெற்ற, மிகவும் சர்வதேசத் தன்மை கொண்ட படைப்பாகத் திகழ்கிறது. சைபீரியாவிலிருந்து கலிஃபோர்னியாவரை கோடானு கோடி உழைக்கும் மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அறிக்கை எழுதப்பட்ட காலத்தில், இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்: இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites)[16], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists)[17]. இவ்விரு வகையினரும் ஏற்கெனவே வெறும் குறுங்குழுக்கள் நிலைக்குத் தாழ்ந்து, படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் ''படித்த'' வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பகுதி, வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதைத் தெளிவுபட உணர்ந்துகொண்டு, ஒரு முழுமையான சமுதாய மாற்றத்தின் தேவையைப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொண்டது. அது பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும், அது மூலாதாரமான கருத்தைத் தொட்டுக் காட்டியது.

அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பாக இருக்கும் நிலையில், இதன் மையக் கருவாக அமைந்த அடிப்படை வரையறுப்பு மார்க்சுக்கே உரியது என்பதைக் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அந்த அடிப்படை வரையறுப்பு இதுதான்: வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போது பொதுவாக நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும், அதிலிருந்து தவிர்க்கவியலா வகையில் பெறப்படும் சமூக அமைப்புமுறையும்தான் அடித்தளமாக அமைகின்றன. அதன்மீதே அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அறிவுத்துறை வரலாறு எழுப்பப்படுகிறது. அந்த அடித்தளத்திலிருந்து மட்டுமே அவற்றை விளக்கவும் முடியும். இதன் காரணமாகவே, மனிதகுல வரலாறு முழுமையும் (நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்டிருந்த புராதனப் பழங்குடி சமுதாயம் சிதைவுற்ற காலம்தொட்டே) வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. அதாவது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறானது பரிணாமங்களின் தொடர்வரிசையாக அமைகிறது. அது, இன்றைய காலகட்டத்தில், ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கம், தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடுகள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றாகவும் முடிவாகவும் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தன்னுடைய விடுதலையைப் பெற முடியாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.

என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புரூசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்."

1890-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை- ஏங்கெல்ஸ்

"...அறிக்கை வெளியானபோது, அதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் இரண்டு வகையினர் சோஷலிஸ்டுகள் எனக் கருதப்பட்டனர். ஒருபுறம் பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளின் ஆதரவாளர்கள் இருந்தனர். குறிப்பாக, இங்கிலாந்தில் ஓவனியர்கள், ஃபிரான்சில் ஃபூரியேயர்கள். இவ்விரு வகையினரும் அக்காலத்திலேயே குறுங்குழுக்கள் நிலைக்குச் சுருங்கிப் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம் மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள் இருந்தனர். மூலதனத்துக்கும் லாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி, இவர்கள் தமது சகல நோய்நீக்கும் சஞ்சீவிகள் மூலமும் அனைத்துவகை சில்லறை ஒட்டு வேலைகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினர். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள். 'படித்த' வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடியவர்கள். என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி சமுதாய அமைப்பைத் தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரியது. வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதை அது தீர்க்கமாக உணர்ந்திருந்தது. இப்பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட, பல வேளைகளில் பெரும்பாலும் பக்குவமற்ற ஒரு கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும் அது, ஃபிரான்சில் காபேயின் 'ஐகேரியக்' கம்யூனிசம், ஜெர்மனியில் வைட்லிங்கின் கம்யூனிசம் ஆகிய இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைப்புகளைத் தோற்றுவிக்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது. 1847-இல் சோஷலிசம் என்பது முதலாளித்துவ வர்க்க இயக்கத்தையும் [வேறொரு முகவுரையில் நடுத்தர வர்க்க இயக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்], கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாக இருந்தன. சோஷலிசமானது, குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் மிகவும் மரியாதைக்கு உரியதாக விளங்கியது, ஆனால் கம்யூனிசமோ அதற்கு நேர்மாறானதாக இருந்தது. நாங்கள் மிகத் தொடக்க காலம்தொட்டே, 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயல்பாட்டால்தான் பெறப்பட்டாக வேண்டும்'[21] என்ற தீர்மானகரமான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தோம். எனவே, [சோஷலிசம், கம்யூனிசம் என்கிற] இரண்டு பெயர்களுள் எதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அன்றைக்கு எங்களிடம் எவ்விதத் தயக்கமும் இருந்திருக்க முடியாது. அன்றுமுதல் இன்றுவரை அப்பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.

”உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” [அடிக்குறிப்பு எண் 52 காண்க] நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் திரண்டெழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில், நாங்கள் இந்த முழக்கத்தை உலகத்துக்குப் பிரகடனம் செய்தபோது, மிகச்சில ஆதரவுக் குரல்களே எழுந்தன. என்றாலும், 1864 செப்டம்பர் 28-இல் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி மக்கள், பெருமைமிக்க நினைவுக்குரிய சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் [முதலாவது அகிலம்] கைகோத்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்பது உண்மைதான். ஆனால் அது உருவாக்கிய, அனைத்து நாட்டுப் பாட்டாளிகளின் அழிவில்லா ஐக்கியமானது இன்னும் நிலைத்து நிற்கிறது, எப்போதையும்விட வலிமைமிக்கதாக வாழ்கிறது என்பதற்கு இன்றைய நாளைவிட வேறு சிறந்த சாட்சி ஏதுமில்லை. காரணம், இந்த வரிகளை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம்[22], ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது போரிடும் சக்திகளை மேலாய்வு செய்து வருகின்றது. இந்தப் போராட்ட சக்திகள் முதன்முதலாகத் திரட்டப்பட்டுள்ளன. அதுவும் ஒரே படையணியாக, ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்பட்டுள்ளன. 1866-இல் அகிலத்தின் ஜெனீவா மாநாட்டிலும், மீண்டும் 1889-இல் பாரிஸ் தொழிலாளர் மாநாட்டிலும் பிரகடனப்படுத்தியதைப்போல், ஒரே மாதிரியான எட்டு மணிநேர வேலைநாள் என்பதை முறையாகச் சட்டம் இயற்றி நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள் ஆகும். இன்றைய இந்தக் காட்சி, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் இன்றைக்கு மெய்யாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற உண்மையை, அனைத்து நாடுகளின் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் காணும் வண்ணம் அவர்களின் கண்களைத் திறக்கும்."

1892-ஆம் ஆண்டின் போலிஷ் பதிப்புக்கு எழுதிய முகவுரை- ஏங்கெல்ஸ்

"அனைத்துக்கும் முதலாவதாக, அண்மைக் காலமாகவே, அறிக்கையானது ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு சுட்டுகைபோல (index) ஆகியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடையும் அதே அளவுக்கு, அந்நாட்டுத் தொழிலாளர்களிடையே, உடைமை வர்க்கங்கள் தொடர்பாகத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அவர்களின் நிலைபாடு குறித்துத் தெளிவுபெற வேண்டிய தேவையும் வளர்கின்றது. சோஷலிச இயக்கம் அவர்களிடையே பரவுகின்றது. அறிக்கைக்கான தேவையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையினுடைய பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை மட்டுமன்றிப் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சி நிலையைக்கூடப் பெருமளவு துல்லியமாக அளவிட்டுவிட முடியும்."

1893-ஆம் ஆண்டின் இத்தாலியப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
இத்தாலிய வாசகருக்கு- ஏங்கெல்ஸ்


" 1848-ஆம் ஆண்டுப் புரட்சி, சோஷலிசப் புரட்சியாக இருக்கவில்லை. என்றாலும், அது சோஷலிசப் புரட்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது; அதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்தது. அனைத்து நாடுகளிலும் பெருவீதத் தொழில்துறைக்கு ஊக்கம் அளித்ததன் மூலம், முதலாளித்துவ ஆட்சியமைப்பு, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில், எண்ணிறந்த, ஒன்றுதிரண்டுள்ள, சக்திமிக்க பாட்டாளி வர்க்கத்தை எங்கெங்கும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக, முதலாளித்துவ வர்க்கம், அறிக்கையின் மொழியில் சொல்வதெனில், தனக்குச் சவக்குழி தோண்டுவோரைத் தானே வளர்த்தெடுத்துள்ளது. ஒவ்வொரு தேசத்துக்கும் தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும், பொதுவான லட்சியங்களை நோக்கிய, இந்தத் தேசங்களின் சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பையும் வென்றெடுப்பது சாத்தியமாக இருக்காது."

Sunday 19 July 2015

குறுங்குழு அராஜகவாதியின் வன்முறையான புரட்சியை எதிர்த்து- எங்கெல்ஸ்

(தேர்தலில் வாக்களிப்பது கூட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானதாக குறுங்குழுவாதம் கருதுகிறது. வன்முறையான புரட்சியைத் தவிர வேறு எதையும் தொழிலாளர்களின் நடவடிக்கையாக இவை ஏற்றுக் கொள்வதில்லை. இவைகளால் ஏற்படுத்திய சிறுபிள்ளைத் தனமான “சமூகப் புரட்சி”க் கலகம் போலீசாரால் முறியடிக்கப்பட்டது. இவைகள் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான நடவடிக்கைக்குரிய எத்தகைய களத்தையும் இல்லாமற்செய்து விட்டது. சொந்த குறுங்குழுவாத இயக்கத்தை முழுமையாகச் சீர்குலைத்தது தான் அவர்களுடைய பெரும் சாதனையாகும் என்கிறார் எங்கெல்ஸ்)

“சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாற்றைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கும் நமது வாசகர்கள், பாரிஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த உடனே அந்த மாபெரும் சங்கத்தில் வேற்றுமைகள் ஏற்பட்டன, 1872ல் நடைபெற்ற ‘ஹேக் காங்கிரசில் பகிரங்கமான பிளவுக்கும் அதன் காரணமாகச் சிதறலுக்கும் அவை இட்டுச் சென்றன என்பதை நினைவுப்படுத்திக் கொள்ள முடியும். ருஷ்யரான பக்கூனினும்  அவருடைய ஆதரவாளர்களும் தாங்கள் மிகவும் குறுகிய சிறுபான்மையினராக இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமையை – நியாயமான வழிகளினாலோ அல்லது கீழ்த் தரமான முறைகளினாலோ- கைப்பற்றச் செய்த மோசடிகளே இந்த வேற்றுமைக்குக் காரணமாக இருந்தன.

தொழிலாளி வர்க்கத்தின் எல்லா அரசியல் நடவடிக்கையையும் கொள்கை அளவில் எதிர்ப்பதே அவர்களுடைய முக்கியமான போக்கு, ஆகவே ஒரு தேர்தலில் வாக்களிப்பது கூட அவர்களுடைய பார்வையில் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட துரோக நடவடிக்கையாகும். வன்முறையான புரட்சியைத் தவிர வேறு எதையும் அவர்கள் நடவடிக்கைச் சாதனமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
..
இத்தாலியில் “சமூகப் புரட்சிகாகச்” செய்யப்பட்ட சிறுபிள்ளைத் தனமான முயற்சிக்குப் பிறகு -அதில் “அராஜகவாதிகளின்” அறிவோ அல்லது துணிவோ மெச்சக் கூடிய விதத்தில் வெளிப்படவில்லை- உண்மையான தொழிலாளி வர்க்கச் சக்தி அதிகமான அளவில் அறிவுக்குப் பொருந்திய நடவடிக் முறைகளைத் தேடத் துவங்கியது. பெல்ஜியத்தில் தலைவர்கள் பின்பற்றிய தலையிடாமைக் கொள்கையின் விளைவாக- அந்தக் கொள்கை தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான நடிவடிக்கைக்குரிய எத்தகைய களத்தையும் இல்லாமற்செய்து விட்டிருந்தது- இயக்கம் ஸ்தம்பித்து நின்றது.
..
இத்தாலியின் தலையிடாமைக் கொள்மையைப் பின்பற்றியவர்களில் எஞ்சியிருந்தவர்கள் மனமுறிவுக்கு உந்தப்பட்டவர்களாக நேபிள்சுக்குப் பக்கத்தில் மற்றொரு கலகத்தை முயற்சி செய்தார்கள். முப்பது அராஜகவாதிகள் “சமூகப் புரட்சியைப்” பிரகடனம் செய்தார்கள், ஆனால் போலீஸ்காரர்கள அவர்களைச் சீக்கிரமாக கவனித்துக் கொண்டார்கள். இத்தாலியில் தங்களுடைய சொந்த குறுங்குழுவாத இயக்கத்தை முழுமையாகச் சீர்குலைத்தது தான் அவர்களுடைய பெரும் சாதனையாகும்.”
(1877ல் ஐரோப்பாவின் தொழிலார்கள்)

(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 231-233)

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்

(மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்பதின் தோற்றத்தையும், அதன் உட்கூறுகளையும் லெனின் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்துள்ளார். மார்க்சியம் எந்தவித குறுங்குழுவாதத்தின் அடிப்படையில் தோன்றியவை கிடையாது, உலக நாகரிக வளர்ச்சியின் தொடர்க்சியே மார்க்சியம். மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்சியம் விடைகளிக்கிறது. மார்க்சியத்தை சுயமாக அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இந்த சிறிய கட்டுரையை பலமுறை படிக்க வேண்டும். மார்க்சியத்தின் இந்த மூன்று உட்பிரிவுகளையும் தனித்தனியாக என்ன பேசிகிறது என்பதை மனதில் நிறுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களைப் படிக்கும் போது, அது எந்தப் பிரிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை அறிந்து படித்தால் தெளிவுகிடைக்கும்.

மார்க்சியத்தை தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்று லெனின் தான் மார்க்சியத்தை மூன்றாகப் பிரித்தார் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. மார்க்ஸ் காலத்திலேயே எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்குக்கு மறுப்பு" என்ற நூலில் மூன்றாகப் பிரித்து டூரிங்குக்கு மார்கசிய வழியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.)

மார்க்சின் போதனை, நாகரிக உலெகங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான "நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்" என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவெதாரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல, தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் "குறுங்குழுவாதம்" போன்றெததுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல, உலக நாகரிக வளர்ச்கியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என் பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதைன மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூனறு உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

1
பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும், இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும், மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாற்று பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக் கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும்போரின் களனாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை "மறுப்பதற்கும்", பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தில் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர்பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிடுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கையேடுகளாகும்.

18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். செம்மை ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை - இதிலிந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் தோன்றியது - திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல்தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளங்கி விவரிக்கும் போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது - இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதேம சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய "புதிய" மறு வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.

தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதாலகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தைனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும், தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவெதன்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைத - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைத - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது- மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருததுக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கக்த்தைப் பலப் படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பைத நாம் பார்க்கிறோம்.

மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல்வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்கைள வழங்கியிருக்கிறது.

2
பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகிறது என்று தெளிந்து ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய - அதாவது, முதலாளித்துவ - சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.

மார்க்சுக்கு முற்பட்ட செம்மை அரசியல் பொருளதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம் ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்துக்கு அடித்தளமிட்டாகள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவர் திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விவரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்.

முதலாளித்துவப் பொருளாதாராவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம் என்பது இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது; அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகிவவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான். மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்புத் தான் லாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.

உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் கொள்கைக்கு மூலைக்கல் ஆகும்.

தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும். பெருவீத முதலாளித்துவ விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது, பண மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில்நுணுக்கத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது. விவசாயத் துறையில் சிற்றளவான உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்க முடியாத உண்மையாகும்.
மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது, ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான தொழிலாளர் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது, அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன, சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது, திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது.

தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்துவிடுகிறது.

பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்து வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.
பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பைத ஆண்டுதோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிருபித்துக் காட்டி வருகிறது.

உலெகங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.

3
நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை வீழ்த்தப்பட்டு "சுதந்திரமான" முதலாளித்துவச் சமுதாயம் ப்பூவுலகில் தோன்றிய பொழுது, இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்பு முறையையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும், இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலைதூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்பக் காலத்திய சோஷலிசம் கற்பனா சோஷலிசமாகத்தான் இருந்தன. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது, கண்டித்தது, சபித்தது, அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது, அதை விட மேலான ஓர் அமைப்பு முறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது, சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது.

ஆனால் கற்பனா சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமைய வல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை.

இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புயல்வேகப் புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும், உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.

நிலப்புரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராய் அரசியல் சுதந்திர லட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை.

வேறு எவருக்கும் முன்பாக மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில்தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும்.

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. ஆது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.

மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடு ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.


அமெரிக்காவிலிருந்து ஐப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாப்பிரிக்கா வரை, உலகெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான நிறுவனங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது, முதலாளித்துவச் சமுதாயத்திற்குரிய சார்புக் கருத்துக்களின் நின்று தன்னை விடுவித்துக் கொண்டுவருகிறது, தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது, தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது, தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது, தடை செய்ய முடியாதபடி வளர்ந்து வருகிறது.

Saturday 18 July 2015

பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகள் சமூகப் புரட்சிக்கு முன்நிபந்தனையாகும் - மார்க்ஸ்

பக்கூன் எழுதிய “அரசும் அராஜகவாதமும்” என்ற புத்தகத்தின் பொழிப்பு என்பதில் இருந்து

ஒரு தீவிரமான சமூகப் புரட்சி பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளைப் பொறுத்திருக்கிறது, அவையே அதன் முன்நிபந்தனை. ஆகவே முதலாளித்துவ உற்பத்தியோடு சேர்ந்து தொழில்துறைப் பாட்டாளி வர்க்கம் குறைந்தபட்சம் மக்கள் தொகையில் ஒரு முக்கியமான இடத்தை எங்கே வகிக்கிறதோ, அங்கு மட்டுமே புரட்சி சாத்தியம். அது வெற்றியடைய ஏதேனும் வாய்ப்பு இருக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் தன்னுடைய புரட்சியின் போது அந்தக் காலத்தில் இருந்த பிரெஞ்சு விவசாயிகளுக்குச் செய்த அளவுக்காவது அது விவசாயிகளுக்கு உடனடியாக அதற்குரிய மாற்றங்களுடன் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் ஆட்சி விவசாய ஊழியர்களை அடிமைப்படுத்துவதைக் குறிப்பதாக அனுமானிப்பது அருமையான கருத்தே. திரு.பக்கூனினுடைய இதயத்தின் ஆழத்திலுள்ள கருத்துக்கள் இங்கேதான் வெளிப்படுகின்றன. சமூகப் புரட்சியைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது, அதைப்பற்றி அவருக்குத் தெரிந்த எல்லாமே அரசியல் சொற்றொடர்கள்தான். அவருக்கு அதன் பொருளாதா முன்தேவைகள் இல்லாதவை. இதுவரை இருந்திருக்கின்ற எல்லாப் பொருளாதார வடிவங்களும் – வளர்ச்சி அடைந்தவை அல்லது வளர்ச்சி இல்லதவை- ஊழியனை அடிமைப்படுத்துவதை (கூலித் தொழிலாளி அல்லது விவசாயி, இதரவை ஆகிய எந்த வடிவத்திலும்) உள்ளடக்கி இருந்தபடியால் இவை எல்லாவற்றிலுமே தீவிரமான புரட்சி சம அளவுக்குச் சாத்தியம் என்று அவர் அனுமானிக்கிறார்.

 (அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 213-214)

குறுங்குழுவாதத்தை மறுத்து தொழிலாளர் கட்சி அமைப்பது பற்றி – மார்க்ஸ்

(சோஷலிஸ்டுக் குறுங்குழுவாத வளர்ச்சி மற்றும் உண்மையான தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று எப்பொழுதுமே எதிர்மறை விகிதத்தில் காணப்படுகிறது. தனிப்பட்ட பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எவ்வாறு மாறுகிறது என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டு கிறார். ஆளும் வர்க்கங்களின் அரசியல் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியான கிளர்ச்சியின் மூலம், தொழிலாளி வர்க்கத்துக்கு இதற்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆளும் வர்க்கங்களின் கைகளில் அது ஒரு விளையாட்டுச் சாமானாகத்தான் இருக்கும் என்கிறார் மார்க்ஸ்)

நியூயார்கிலிருந்து பி.போல்ட்டேக்க கா.மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் இருந்து
(லண்டன்) நவம்பவர் 23, 1871

… சோஷலிஸ்டு அல்லது அரை சோஷலிஸ்டுக் குழுக்களுக்குப் பதிலாகப் போராட்டத்துக்காகத் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான அமைப்பை ஏற்படுத்துவதற்காக அகிலம் நிறுவப்பட்டது. அசல் விதிகளும் நிறுவன அறிக்கையும் இதை எடுத்த எடுப்பிலேயே காட்டுகின்றன. மறுபக்கத்தில், வரலாற்று நிகழ்வுப் போக்கு ஏற்கெனவே குறுங்குழுவாதத்தை நொறுக்கி இராவிட்டால் அகிலம் நீடித்திருக்க முடியாது.

சோஷலிஸ்டுக் குறுங்குழுவாத வளர்ச்சி மற்றும் உண்மையான தொழலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று எப்பொழுதுமே எதிர்மறை விகிதத்தில் இருக்கின்றன. தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான வரலாற்று இயக்கத்துக்கு இன்னும் பக்குவம் அடையாதிருக்கும் வரை குறுங்குழுக்கள் (வரலாற்று வழியில்) நியாயமானவையே. தொழிலாளி வர்க்கம் இந்தப் பக்குவத்தைப் பெற்ற உடனே எல்லாக் குறுங்குழுக்களும் அடிப்படையிலேயே பிற்போக்காகி விடுகின்றன. எனினும் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுவது அகிலத்தின் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுவது அகிலத்தின் வரலாற்றில் திரும்பவும் நடைபெற்றது. எது காலாவதியாகி விட்டதோ, அது புதிதாக உருவாக்கப்பட்ட வடிவத்துக்குள் தன்னை நிறுவிக் கொள்வதற்கும் தன்னுடைய நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் முயற்சிக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் இந்த வர்க்கத்துக்கு அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதைத் தன்னுடைய இறுதிக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது, இது தொழிலாளி வர்க்கம் நிறுவன வழியாக ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை முன்பே வளர்ச்சி அடைந்திருப்பதை- துல்லியமாக அதன் பொருளாதாரப் போராட்டங்களில் இருந்தே தோன்றியிருப்பதை- அவசியமாககுவது இயற்கையே.

எனினும், மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக வெளிவருகின்ற, வெளியில் இருந்து அவைகள் மீது நிர்ப்பந்தம் கொண்டுவர முயற்சிக்கின்ற ஒவ்வொரு இயக்கமும் அரசியல் இயக்கமே. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் – அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில்துறையில் கூட- ஒரு நாளில் வேலை செய்கின்ற நேரத்தைக் குறைப்பதற்காக தனிப்பட்ட முதலாளிகள் மீது வேலை நிறுத்தங்கள், இதரவைகளின் மூலம் நிர்ப்பந்தம் கொண்டுவருகின்ற முயற்சி முற்றிலும் பொருளாதார இயக்கமே. மறுபக்கத்தில், எட்டு மணி நேர வேலை நாள், இதரவை பற்றி சட்டத்தைக் கொண்டுவருமாறு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்ற இயக்கம் அரசியல் இயக்கமாகும்.

இவ்விதத்தில் தொழிலாளர்களின் தனித்தனியான பொருளாதார இயக்கங்களில் இருந்து எல்லா இடங்களிலும் ஒர் அரசியல் இயக்கம், அதாவது ஒரு பொதுவான வடிவத்தில், பொதுவான சமூக வழியில் அடக்குமுறைச் சக்தியைக் கொண்டிருக்கும் வடிவத்தில் தன்னுடைய நலன்களை நிர்ப்பந்தமாக ஏற்படுத்துகின்ற வர்க்கத்தின் இயக்கம் வளர்ச்சி அடைகிறது. இந்த இயக்கங்களில் முன்பே ஏற்பட்டிருக்கும் நிறுவனத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் முன்னூக்கித்தாலும் அவை சம அளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்க்கின்ற சாதனங்களே.

தொழிலாளி வர்க்கம் கூட்டு ஆட்சிக்கு, அதாவது ஆளும் வர்க்கங்களின் அரசியல் ஆட்சிக்கு எதிராகத் தீர்மானமான தாக்குதலை நடத்தக் கூடிய அளவுக்குப் போதுமான நிறுவன வழியிலான வளர்ச்சியை இன்னும் பெறாமல் இருக்கின்ற இடங்களில் எப்படியாவது இந்த ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியான கிளர்ச்சியின் மூலம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான விரோதமான அணுகுமுறையின் மூலம் தொழிலாளி வர்க்கத்துக்கு இதற்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவைகளுடைய கைகளில் அது ஒரு விளையாட்டுச் சாமானாகத்தான் இருக்கும்.


(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 80-84)

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி - மார்க்ஸ் எங்கெல்ஸ்

(தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடிவடிக்கைகளைப் பற்றி  பேசும் போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் பொருளாதார இயக்கமும் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்க வேண்டியதை மார்க்சும் எங்கெல்சும் வலியுத்தி போடப்பட்ட சர்வதேசத் தீர்மனமாகும் இது. பொருளாதாரப் போராட்டத்துடன் நின்றுவிடாது அதனை தொழிலாளர் வர்க்க அரசியலுடன் இணைக்க வேண்டும்.)

சர்வதேசத் தொழிலாளர் சங்கங்கத்தின் பிரதிநிதிகளது மாநாட்டுத் தீர்மானங்களில் இருந்து

(1871 செப்டெம்பர் 17 முதல் 23 வரை லண்டனில் நடைவெற்றது)

 “அசல் விதிகளின் தவறான மொழிபெயர்ப்புகள் வெவ்வேறு விளக்கங்களுக்கு இடமளித்து சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும் நடவடிக்கையிலும் சேட்டைகளைச் செய்திருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு;

தொழிலாளர்கள் தங்கள் விடுதலைக்குச் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் கடிவாளம் போடப்படாத பிற்போக்குவாதம் வன்முறையால் நசுக்கும் பொழுது, வர்க்கங்கள் என்ற பிரிவினையையும் அதிலிருந்து ஏற்படுகின்ற உடைமை வர்க்கததினருடைய அரசியல் ஆதிக்கத்தையும் மிருகத் தனமான பலத்தின் மூலம் தக்கவைப்பதற்கு முயற்சி செய்யும் பொழுது;

உடைமை வர்க்கங்களின் இந்தக் கூட்டுச் சக்திக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் உடைமை வர்க்கங்களினால் ஏற்படுத்தப்பட்ட பழைய கட்சிகள் எல்லாவற்றுக்கும் வேறுபட்டிருக்கின்ற, எதிராக உள்ள ஒர் அரசியல் கட்சியாகத் தன்னை அமைத்துக் கொள்ளாமல் ஒரு வர்க்கம் என்ற முறையில் செயல்பட முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு;

தொழிலாளி வர்க்கம் தன்னுடைய பொருளாதாரப் போராட்டங்களால் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சக்திகளை இணைப்பு அதே சமயத்தில் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் அரசியல் சக்திக்கு எதிரான அதன் போராட்டங்களுக்கு நெம்புகோலாகப் பயன்பட வேண்டும் என்பதாக-

இந்த மாநாடு அகிலத்தின் உறுப்பினர்களுக்குப் பின்வருமாறு வலியுறுத்துகிறது:
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் பொருளாதார இயக்கமும் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன.”

 (அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 78-79)

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி - எங்கெல்ஸ்

(தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் கட்சியாக இணைந்து அரசியலில் ஈடுபடவேண்டும். இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கு முறை, தொழிலாளர்களை அரசியலில் ஈடுபடும்படி செய்கிறது. அவர்களை அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது முதலாளித்துவ வர்க்க அரசியலின் கரங்களுக்குள் விரட்டுவதாக ஆகிவிடும். தொழிலாளர்களின் கட்சி, முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது. எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதாகாது. நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளர்களின் அரசியலாகும்.)

எங்கெல்ஸ்:-

அரசியல் விஷயங்களில் முற்றிலும் ஒதுங்கி இருப்பது என்பது முடியாது, எனவே ஒதுங்கியிருக்கும் பத்திரிகைகள் அனைத்துமே உண்மையில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இது எப்படிச் செய்யப்பட வேண்டும், எந்தக் கொள்கையைக் கடைப்பிக்க வேண்டும் என்பது ஒன்றே பிரச்சினை. அதைத தவிர, நாம் தலையிடாதிருப்பதும் முடியாது. தொழிலாளர் கட்சி பெரும்பான்மையான நாடுகளில் ஏற்கெனவே ஒர் அரசியல் கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

நாம் தலையிடாமையைப் போதித்து இதை அழிக்கக் கூடாது. யதார்த்தமான அனுபவம், அரசியல் அல்லது சமூக காரணங்களுக்காக இன்றைக்கு இருக்கும் அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் அரசியல் ஒடுக்கு முறை – அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- தொழிலாளர்கள் அரசியலில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கின்றன. அவர்களிடம் ஒதுங்கி இருப்பதைப் போதிப்பது முதலாளித்துவ வர்க்க அரசியலின் கரங்களுக்குள் அவர்கள் விரட்டுவதைப் போன்றதாகும். குறிப்பாக, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நடிவடிக்கையை அட்டவணையில் சேர்த்துவிட்ட பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு ஒதுங்கி நிற்பது என்பது முற்றிலும் இயாலாதே.

வர்க்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதை எப்படி நிறைவேற்ற முடியும்? பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின் மூலமாகத்தான், இது எங்குமே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பொழுது அரசியலில் தலையிட வேண்டாம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்! தலையிடாமையைப் பின்பற்றுகின்ற எல்லோரும் தங்களைப் புரட்சியாளர்கள் என்று – எல்லாவற்றுக்கும் மேலான புரட்சியாளர்கள் என்று கூட- சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் புரட்சி என்பது தலைமையான அரசியல் நடிவடிக்கை, அதை விரும்புபவர் அதன் வழிகளையும் தொழிலாளர்களுக்குப் புரட்சியில் பயிற்சியை- அது இல்லை என்றால் போராட்டத்துக்கு மறுநாளே தொழிலாளர்கள் ஃபாவ்ர்களாலும் பியாட்டுகளாலும் எப்பொழுதும் ஏமாற்றப்படுவார்கள்- கொடுத்து அதற்குத் தயாரிக்கும் அரசியல் நடவடிக்கையையும் பிரும்புவார்கள். ஆனால் நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளர்களின் அரசியலாகும்.

தொழிலாளர்களின் கட்சி முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் சிலவற்றின் வெறும் ஒட்டுப்பகுதியாக இருக்கக் கூடாது, சொந்த குறிக்கோளையும் சொந்தக் கொள்கையையும் கொண்ட முற்றிலும் சுயேச்சையான கட்சியாக இருக்க வேண்டும்.
அரசியல் சுதந்திரம்- கூட்டம் நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கம் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் – இவை நம்முடைய ஆயுதங்கள். அவர்கள் இவற்றைப் பறிக்க முயற்சி செய்யும் பொழுது நாம் கைகளைக் கட்டிக்கொண்டு தலையிடாமல் இருப்பதா? எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கு இருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதை உள்ளடக்கிருக்கிறது என்று நம்மிம் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிலைமை அதை எதிர்ப்பதற்குரிய சாதனங்களையும் நம்மிடம் கொடுக்கும் பொழுது அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தினால் இன்றைக்கிருக்கும் நிலைமையை அங்கீகரிப்பது என்று பொருள் கூறமுடியாது.


(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 75-76)

Friday 17 July 2015

பாட்டாளி வர்க்க சர்வதேசியப் பார்வை- லெனின்

லெனின்:-
1, (சர்வதேச மூலதனத்தை எதிர்த்து)

 “தேசியப் பகைமையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுபடுத்தி, நிறுவன வழியாக திரட்டி பிறகு அத்தகைய தேசிய அளவிலுள்ள தொழிலாளி வர்க்க நிறுவனங்களைச் சர்வதேச மூலதனத்தை எதிர்த்துப் போராடக் கூடிய சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தனியொரு படையாக ஒன்றுபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை ….”
“மக்களின் நண்பவர்கள்” எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் சமூக-ஜனநாயகவாதிகளை எதிர்த்துப் போராடுவது எப்படி?
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 14-15)

2, (தொழிலாளர்கள் மீது ஆட்சி செய்யும் முதலாளிகள், தமது ஆட்சியை ஒரு நாட்டோடு நிறுத்துவதில்லை, இந்த உண்மையில் தான் எல்லா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாகிறது.)

“தொழிலாளி வர்க்க நிறுவனமும் ஒருமைப்பாடும் ஒரு நாடு அல்லது ஒரு தேசிய இனத்தோடு நின்றுவிடவில்லை. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர் கட்சிகள் உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் நோக்கங்களின் முழுமையான ஒன்றிணைப்பை (ஒருமைப்பாட்டை) உரத்த குரலில் அறிவிக்கின்றன.

அவை கூட்டாக நடத்தப்படுகின்ற காங்கிரசுகளில் ஒன்றுகூடுகின்றன, எல்லா நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் பொதுவான கோரிக்கைகளை வைக்கின்றன, விடுதலைக்காகப் போராடி வருகின்ற, நிறுவன வழியில் திரட்டப்பட்ட மொத்த பாட்டாளி வர்க்கத்துக்கும் ஒரு சர்வதேசக் கொண்டாட்ட நாளை (மே தினத்தை) ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றின் மூலம் எல்லா நாடுகளையும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒரு மாபெரும் தொழிலாளர் இராணுவமாக இணைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் மீது ஆட்சி செய்கின்ற முதலாளி வர்க்கம் தன்னுடைய ஆட்சியை ஒரு நாட்டோடு நிறுத்திக் கொண்டுவிடவில்லை. இந்த உண்மையில் இருந்துதான் எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாகத் தோன்றுகிறது.
..
முதலாளித்துவ நிறுவனங்களை- ஒரு நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில் ஒரே நேரத்தில்- ஏற்படுத்துவதற்காகப் பெரும் கூட்டுப்பங்கு கம்பெனிகளின் சர்வதேச சங்கங்கள் தலையைக் காட்டத் தொடங்கி இருக்கின்றன. மூலதனத்தின் ஆதிக்கம் சர்வதேச வழியிலானது. ஆகவே சர்வதேச மூலதனத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் கூட்டாகப் போராடினால் மட்டுமே எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்களுடைய விடுதலைக்காக நடத்துகின்ற போராட்டம் வெற்றி பெற முடியும்.”
சமூக-ஜனநாயகக் கட்சிக்கு ஒரு செயல்திட்டத்துக்கான நகலும் விளக்கமும்
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 16-17)

3, (கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரம் சர்வதேசியக் கலாச்சாரம், அது ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு தனித்த “தேசிய-கலாச்சார சுயாட்சி” என்பது முதலாளிகள் அல்லது குட்டி முதலாளிகள் ஆகியோரின் கலாச்சாரமேயாகும்.)

தேசியப் பிரச்சினை

“சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) எப்பொழுதும் சர்வதேசியவாதக் கருத்து நிலைக்காக நின்றிருக்கிறார்கள், இப்பொழுதும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். பண்ணையடிமை சொந்தக்காரர்களையும், போலீஸ் அரசையும் எதிர்த்து எல்லா தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாக்கும் பொழுது நாம் – “தேசியக் கலாச்சாரத்தை” அல்ல- ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியை மட்டுமே, ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிற சர்வதேசியக் கலாச்சாரத்தை ஆதரிக்கிறோம்.

“தேசிய-கலாச்சார சுயாட்சி” என்ற முழுக்கம் தேசங்களின் கலாச்சார ஒற்றுமை என்ற மாயத் தோற்றத்தைக்காட்டித் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது, ஆனால் நடைமுறையில் இன்று ஒவ்வொரு தேசத்திலும் நிலவுடைமையாளர்களின், முதலாளிகளின் அல்லது குட்டி முதலாளிகளின் “கலாச்சாரமே” மேலாதிக்கம் வகிக்கிறது.

முதலாளிய தேசியவாதத்தின் முழக்கங்களில் ஒன்று என்ற வகையில் நாம் தேசியக் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம். ஒரு முழுமையான ஜனநாயக, சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரத்துக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம்.

தேசிய இனங்களின் மிக முழுமையான சமத்துவம், அதிகமான அளவுக்கு முரணில்லாத ஜனநாயக அரசு அமைப்பு- இவற்றோடு எல்லா தேசிய இனங்களின் தொழிலார்களின் ஒற்றுமை- இதுவே நமது முழக்கம். இதுவே சர்வதேச, அனைத்துப புரட்சி சமூக-ஜனநாயகத்தின் முழுக்கம். இந்த உண்மையான பாட்டாளி வர்க்க முழக்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் “தேசிய” ஒற்றுமை என்ற போலியான தோற்றத்தையும் பிரமையையும் ஏற்படுத்தாது, ஆனால் “தேசிய-கலாச்சார சுயாட்சி” என்ற முழக்கம் இந்த மாயத் தோற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி ஏற்படுத்துகிறது, உழைக்கும் மக்களிடம் அந்தப் பிரமையை ஊன்றுகிறது.”
(லாத்வியன் பிராந்தியத்தின் சமூக-ஜனநாயகவாதிகளின்
 நான்காவது காங்கிரசின் நகல் திட்டம்)
                              (பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 82-83)

4, (தொழிலாளிக்கு தேசம் கிடையாது, ஏன் என்றால் அவனது விடுதலையின் நிலைமைகள் தேசியத்தோடு சுருங்கிக் காணப்படவில்லை. தொழிலாளியின் வர்க்க எதிரியும் சர்வதேசத் தன்மையானதாக இருக்கிறது. தொழிலாளியின் பொருளாதார நிலையும் தேசிய வழியிலானது கிடையாது, சர்வதேசியத் தன்மையானதேயாகும்)

 “”தொழிலாளிக்கு ஒரு தேசமும் கிடையாது”- இதற்கு பொருள்,

(அ) தொழிலாளியின் பொருளாதார நிலை தேசிய வழியிலானதல்ல- சர்வதேசிய வழியிலானது,

(ஆ) அவன் வர்க்க எதிரியும் சர்வதேசிய வழியிலானதே,

(இ) அவனுடைய விடுதலையின் நிலைமைகளும் அப்படிப்பட்டவையே.

(ஈ) தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமை அதிக முக்கியமானது- தேசியஇன ஒற்றுமையைக் காட்டிலும்”           
(இனேஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதம்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 238)


5. (பிற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரோடு பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது “தாய் நாட்டைப்” பற்றித் தேன்கலந்த அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துகிற தங்களின் முதலாளிகளின் சூழ்ச்சிகளினால், தேசியவாதக் முழக்கங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்)

“சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் அளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிவினை அவசியமானதுதானா என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமானதாகும்.
...
… சமூக-ஜனநாயகம் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் மற்றும் இதர் உழைக்கும் மக்களிடம் “தங்களுடைய சொந்த” முதலாளித்துவ வர்க்கத்தினரின்- அவர்கள், மறற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரோடும் ஜாரிஸ்ட் முடியாட்சியுடனும் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது “தாய் நாட்டைப்” பற்றித் தேன்கலந்த அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் தங்களுடைய முதலாளிகளின் சூழ்ச்சிகளில் இருந்து அதன் கவனத்தைத் திருப்புவதற்கும் முயற்சி செய்கிறார்கள்- தேசியவாதக் முழக்கங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்
.. எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தோடு முழுமையான ஒற்றுமையைக் காட்டிலும் “தங்களுடைய சொந்த” தேசிய இன முதலாளித்துவ வர்க்கத்தோடு அரசியல் ஒற்றுமையை முக்கியமாகக் கருதும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நலன்களுக்கு எதிராக, சோஷலிசத்தின் நலன்களுக்கு எதிராக, ஜனநாயகத்தின் நலன்களுக்கு எதிராகப் பாடுபடுகிறார்கள் என்பது பெறப்படும்.”
(தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 89-91)

6. (தேசியக் கலாச்சாரம் என்கிற முழக்கம் பூர்ஷ்வா ஏமாற்று வித்தை,  கம்யூனிஸ்டுகளின் முழக்கம்: ஐனநாயகத்தினுடையதும், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடையதும் ஆன சர்வதேசியக் கலாச்சாரம்)

 “.. எல்லா மிதவாத-பூர்ஷ்வாத் தேசியவாதமும் தொழிலாளர்களுக்கும் இடையில் மிகப்பெரும் ஊழலைப் பரப்புகிறது, சுதந்திர இயக்கத்துக்கும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கும் மிகப்பெரும் தீமையைச் செய்கிறது என்பதுதான். இந்த பூர்ஷ்வா (அதோடு பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவப்) போக்கு “தேசியக் கலாச்சாரம்” என்ற கோஷத்துக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் மிகவும் ஆபத்தானது.

தேசியக் காலாச்சாரம்- மாக ருஷ்ய, போலிஷ், யூத, உக்ரேனிய இன்னும் பலவித தேசியக் காலாச்சாரங்கள்- என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுதான் கறுப்பு நூற்றுவர்களும் குருமார்களும், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பூர்ஷ்வாக்களும் கூட, தங்களது நீசத்தனமான, பிற்போக்கு வேலையைச் செய்து கொண்டிருக்கிறன்றனர்.

மார்க்சியக் கோணத்தில் இருந்து, அதாவது வர்க்கப் போராட்டம் என்ற நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், வர்க்கங்களின் நலன்களுடனும் கொள்கைகளுடனும்- வெறும் பொருளற்ற “பொதுக் கோட்பாடுகளுடனும்” கவர்ச்சிகரமான உரைகளுடனும் சொற்றொடர்களுடனும் அல்ல- முழக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய தேசிய வாழ்வின் உண்மைகள் இவைதான்.

தேசியக் கலாச்சாரம் என்கிற கோஷம் ஒரு பூர்ஷ்வா (அடிக்கடி கறுப்பு நூற்றுவர்களுடையது குருமார்களுடைதும் கூட) ஏமாற்று வித்தை. நமது முழக்கம்: ஐனநாயகத்தினுடையதும், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடையதும் ஆன சர்வதேசியக் கலாச்சாரம் என்பதுதான்.”
(தேசியப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 110-111)

7. தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளின் பால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலை

(ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக்க வேண்டியது பற்றியும், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவது பற்றியும் கூறுகிறார் லெனின்.)

 “1) புரட்சியின் கால வரிசையில் ருஷ்யாவிலுள் எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி வாக்கமும் பொதுப் போராட்டத்தில் மென்மேலும் ஒன்றுபட்டு வருவதால்,

2) இந்தப் பொதுப போராட்டம் ருஷ்யாவின் பல்வேறு தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளை முன்பு இருநததைக் காட்டிலும் நெருக்கமாகக் கொண்டு வருவதால்,

3) பல நகரங்களிலும், முன்பு இருந்த கூட்டமைப்புக் கமிட்டிகளுக்குப் பதிலாக, அந்தக் குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கும் எல்லா தேசிய சமூக-ஜனநாயக நிறுவனங்களையும் கொண்ட இணைப்புக் கமிட்டிகள் ஏற்பட்டு வருவதால்,

4) தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளில் பெருமபான்மையானவை ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் காங்கிரசால் சரியானபடி நிராகரிக்கப்பட்ட கூட்டாட்சிக் கொள்கையை இனி வற்புறுத்தாமல் இருப்பதால்,

நாங்கள் பின்கண்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் இவற்றுக்கு உடன்பட வேண்டும் என்று முனமொழிகிறோம்:

1) ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்,

2) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவதே இந்த இணைப்பின் அடிப்படையாக இருக்கும்.

3) ஒவ்வொரு தேசிய இனத்தின் சமூக-ஜனநாயகப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி நலன்களும் தேவைகளும் நிறைவு செய்வது – அதன் பண்பாட்டு, வாழ்க்கை முறையின் பிரத்யேகமான அம்சங்களுக்கு உரிய மதிப்பளித்து- உண்மையாக நிறைவேற்றப்படும் என்று கட்சி உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட தேசிய இனத்தின் சமூக-ஜனநாகவாதிகளின் விசேஷ மாநாடுகளை நடத்தி, கட்சியின் ஸ்தல, பிராந்திய, மத்திய அமைப்புகளில் தேசியச் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது, எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், கிளர்ச்சிப் பிரச்சாரகர்கள், முதலியோரின் விசேஷக் குழுக்களை அமைப்பது, இதரவற்றின் மூலம் இதை உறுதிப்படுத்த வேண்டும்.”
(ரு.ச.ஜ.தொ. கட்சியின் ஒற்றுமை காங்கிரசுக்கு ஒரு போர்தந்திர நிலை)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 56-57)

8. (பாட்டாளி வர்க்கக் கட்சி பெரியதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. ஏன் என்றால் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது.)

 “பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப்படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவிப்புகளும் பிரிகடங்கம் அறிக்கைகம் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புகளே அல்லது குட்டி முதலாளித்துவத் தன்மையான வெற்றி விருப்பங்களே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரியதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படிச் செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.

ருஷ்யக் குடியரசு எந்தளவுக்கு அதிகமாக ஜனநாயகத் தன்மை பெற்றிருக்கிறதோ, எந்தளவுக்கு அதிக வெற்றிகரமாக அது தன்னைத்தானே தொழிலாளர், விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துக்களின் குடியரசாக ஒழுங்கமைத்துக கொள்கிறதோ, அந்த அளவுக்கு அனைத்து தேசங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களை அத்தகைய குடியரசு தன் பால் சுயவிருப்பமான முறையில் ஈர்க்கும் சக்தியுடன் அதிக வலிமையுள்ளதாக இருக்கும்.

முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 251-252)

9. (மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. அதைத் தோற்கடிப்பதற்கு ஒரு சர்வதேசத் தொழிலாளர் நேச அணி, சர்வதேசத் தொழிலாளர் சகோதரத்துவம் அவசியம்.)

“.. தொழிலாளர் நலன்கள் பல்வேறு நாடுகள் மற்றும் மக்கள் இனங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள் மத்தியில் முற்ற முழுமையான நம்பிக்கையையும் மிகவும் நெருக்கமான இணக்க உறவையும் கோருகின்றன. நிலப்பிரபுக்கள், முதலாளிகள் மற்றும் பூர்ஷ்வா வகைப்பட்டோரின் ஆதரவாளர்கள் தொழிலாளர்களைப் பலிவீனப்படுத்தவும், மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தவும் வேண்டித் தொழிலாளர்களைப் பிளவுறுத்த முயல்வார்கள், தேசியப் பிணக்குகளையும் பகைமையையும் தீவிரப்படுத்த முயல்வார்கள்.

மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. அதைத் தோற்கடிப்பதற்கு ஒரு சர்வதேசத் தொழிலாளர் நேச அணி, சர்வதேசத் தொழிலாளர் சகோதரத்துவம் அவசியம்.

நாம் தேசியப் பகைமை மற்றும் பிணக்கு, தேசியத் தனி விதிவிலக்குத் தன்மை ஆகியவற்றை எதிர்க்கிறோம். நாம் சர்வதேசியவாதிகள். நாம் ஒரே உலக சோவியத் குடியரசில் எல்லா உலக தேசங்களையும் சேர்ந்த தொழிலாளர், விவசாயிகளினது நெருக்கமான ஒற்றுமையை, முழுமையான இணைப்பை ஆதரிக்கிறோம்.”

(தெனீக்கினை எதிர்த்த வெற்றிகளைக் குறித்து உக்ரேனிய தொழிலாளர், விவசாயிகளுக்கு எழுதிய கடிதம்)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 397)

10 (உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்ற உலகத்துக்கு எதிராக, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற புதிய உலகத்தை நிறுத்துகிறார்கள்)

“தேசியக் கலாச்சாரம், “தேசிய-கலாச்சார சுயாட்சி” பற்றிய இனிப்பான பேச்சுக்கள் தங்களைப் பிரித்து வைத்திருப்பதற்குத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட  முயற்சியின் மூலம் நிறுவனங்களில் முழு சுதந்திரத்தையும் முழுமையான சமத்துவ உரிமைகளையும் காப்பாற்றி நிற்கிறார்கள்- அதுவே உண்மையான கலாச்சாரத்துக்கு உத்தரவாதம்.

உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்- சுதந்திரத்துக்கு ஆதரவாக, ஒடுக்குமுறைக்கு எதிராக இருப்பவர்கள் நெடுங்காலமாக இதற்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய உலகத்துக்கு, தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்ற உலகத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒரு புதிய உலகத்தை, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற உலகத்தை, எவ்விதமான தனி உரிமைகளும் அல்லது மிகச் சிறிய அளவுக்கு மனிதனை மனிதன் ஒடுக்குவது கூட இல்லாத உலகத்தை எதிரே நிறுத்துகிறார்கள்.”

(தொழிலாளி வர்க்கமும் தேசியப் பிரச்சினையும்)

(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 80)