Wednesday 15 July 2015

தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?

(கம்யூனிஸ்டுகளை வன்முறையாளர்கள் என்று தவறாக புரிந்து வைத்திருப்பதற்கு பதிலாக பதினாறாம் கேள்விக்கான பதில் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்) அமைந்துள்ளது. வன்முறையைக் கையாள வேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்துத் திரிபவர்களல்ல கம்யூனிஸ்டுகள். வன்முறையினால் விளைகின்ற கேடுகளை கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கின்றனர். வன்முறை தன்னிச்சையாக புரட்சியின் போது கையாளப்படுவதில்லை. அந்த நிலைமையினைத் தீர்மானிப்பது புறநிலைமைகளே. அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கம் இறுதியில் வன்முறையை நோக்கித் தள்ளப்படுமாயின், சொல் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு, செயல் மூலமும் கொடுக்கப்படும் என்று உறுதியாக எங்கெல்ஸ் அளிக்கிறார்.)

(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?

ஏங்கெல்ஸ்:-

“தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.”

(கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

No comments:

Post a Comment