Friday 19 August 2022

பாட்டாயினுடைய உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும் பற்றி மார்க்ஸ்

பணவுடைமையாளர் சந்தையில் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக இருக்கக் காண்பதற்கு இரண்டாவது அத்தியாவசிய நிபந்தனை, உழைப்பாளி தன் உழைப்பாலான சரக்குகளை விற்கிற நிலையில் இருப்பதற்குப் பதிலாக உயிரும் உடலுமான அவரையே உறைவிடமாய்க் கொண்ட அவ்வுழைப்புச் சக்தியையே ஒரு சரக்காக விலைக்குக் கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும். 

ஒருவர் உழைப்புச் சக்தி தவிர ஏனைய சரக்குகளை விற்க வேண்டுமானால், அவரிடம் கச்சாப் பொருட்கள், கருவிகள் முதலான உற்பத்திச் சாதனங்கள் இருந்தாக வேண்டும். தோலில்லாமல் செருப்பு தைக்க முடியாது. வாழ்வுச் சாதனங்களும் அவருக்குத் தேவைப்படுகின்றன. யாருமே- "எதிர்காலத்தின் இசைவாணர் கூட"- வருங்கால உற்பத்திப் பண்டங்களைக் கொண்டோ, அல்லது இறுதி வடிவளிக்கப்படாத நிலையிலுள்ள பயன்-மதிப்புகளைக் கொண்டோ வாழ முடியாது.

மனிதன் உலக அரங்கத்தில் தோன்றிய கணம் முதலே, அவன் உற்பத்தி செய்வதற்கு முன்னரும், உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போதும், எப்போதுமே நுகர்வாளனாக இருந்திருக்கிறான், இனியும் இருந்தாக வேண்டும். எல்லா உற்பத்திப் பண்டங்களும் சரக்குகளின் வடிவம் எடுக்கிற ஒரு சமுதாயத்தில், அவை உற்பத்தி செய்யப்பட்ட பிறகு விற்கப்பட்டாக வேண்டும்; விற்கப்பட்ட பிறகுதான் அவை தமது உற்பத்தியாளரின் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பயன்பட முடியும். அவற்றின் விற்றலுக்கு அவசியமான நேரம் அவற்றின் உற்பத்திக்கு அவசியமான நேரத்தோடு கூட்டிச் சேர்க்கப்படுகிறது. 

எனவே, பணவுடைமையாளர் அவரது பணத்தை மூலதமாக மாற்றிக் கொள்ள சந்தையில் சுதந்தர உழைப்பாளியைச் சந்திக்க வேண்டும். சுதந்தர மனிதர் என்ற விதத்தில் தன் உழைப்புச் சக்தியை தன் சொந்தச் சரக்காக விற்கக் கூடியவர் ஆவார், மறுபுறம் விற்பதற்கு வேறு சரக்கேதும் இல்லாதவரும் தன் உழைப்புச் சக்தியை ஈடேற்றிக் கொள்வதற்கு அவசியமான எதுவுமே இல்லாதவரும் ஆவார் என்ற இரட்டை அர்த்தத்தில் இந்த உழைப்பாளியை சுதந்தர உழைப்பாளி என்கிறோம். 

இந்தச் சுதந்தர உழைப்பாளி சந்தைக்கு வந்து பணவுடைமையாளரை எதிர்கொள்வது ஏன் என்ற கேள்வி குறித்து உழைப்புச் ந்தையைச் சரக்குகளுக்கான பொதுச் சந்தையின் கிளையாகக் கருதுபவரான அந்தப் பணவுடைமையாளருக்கு அக்கறையில்லை. இப்போதைக்கு அது குறித்து நமக்கும் அக்கறையில்லை. இந்த உண்மையை அவர் நடைமுறையில் ஏற்பதைப் போலவே நாம் தத்துவத்தில் ஏற்கிறோம். ஆயினும் ஒன்று தெளிவு--இயற்கை ஒரு பக்கத்தில் பணம் அல்லது சக்குகளின் உடைமையாளர்களையும் மறு பக்கத்தில் தம் சொந்த உழைப்புச் சக்தி தவிர வேறேதும் இல்லாதவர்களையும் படைப்பதில்லை. இந்த உறவுக்கு இயற்கையான அடிப்படை ஏதுமில்லை. அதன் சமூக அடிப்படையும் எல்லா வரலாற்றுக் காலங்களுக்கும் பொதுவானதன்று. அது கடந்த கால வரலாற்று வளர்ச்சியின் விளைவு, பல பொருளாதாரப் புரட்சிகளின் -பழமைப்பட்ட சமுதாயப் பொருளுற்பத்தி வடிவங்களது முழுத் தொடர் ஒன்று இல்லாதொழிந்ததன்-பலன் என்பது தெளிவு. 

(மூலதனம் 1 பக்கம் 233-234)

உழைப்பாளியின் உழைப்புச் சக்தி ஒரு சரக்கு ஆகும் என்பது பற்றி மார்க்ஸ்

சரக்கு உழைக்கும் திறன் அல்லது உழைப்புச் சக்தியின் உருவில் ந்தையில் இருக்கக் காண்கிறார். 

உழைப்புச் சக்தி அல்லது உழைக்கும் திறன் என்று சொல்லும் போது ஒரு மனிதனிடமுள்ள மூளையாற்றல்கள், உடலாற்றல்கள் ஆகியவற்றின் - ஏதேனும் ஒரு வகைப் பயன்-மதிப்பை உற்பத்தி செய்யும் போதெல்லாம் அவன் பயன்படுத்துகிற இந்த ஆற்றல்களின் -ஒட்டுமொத்தம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால் நம்து பணவுடைமையாளர் ஒரு சரக்காக விலைக்கு வரும் உழைப்புச் சக்தியைக் காண வேண்டுமானால் முதற்கண் பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சரக்குளின் பரிவர்த்தனை தன்னளவில், தன் சொந்த இயல்பிலிருந்தே விளைகின்றவற்றைத் தவிர வேறு எந்தச் சார்பு உறவையும் குறிப்பதில்லை. இந்த அனுமானத்தின் பேரில், உழைப்புச் சக்தியைப் பெற்றிருப்பவர்- உழைப்புச் சக்தி யாருடையதோ அந்தத் தனியாள் -அந்த உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விற்பனைக்கு முன்வைக்கவோ விற்கவோ செய்தால்தான் - அப்படிச் செய்கிற அளவில் தான் - உழைப்புச் சக்தி ஒரு சரக்காக சந்தைக்கு வர முடியும்.

அவர் இதைச் செய்ய வேண்டுமானால், அதைத் தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், தன் உழைக்கும் திறனின், அதாவது தன் சரீரத்தின் வில்லங்கமற்ற உடைமையாளராக இருக்க வேண்டும். அவரும் பணவுடைமையாளரும் சந்தையில் சந்தித்து, ஒருவர் வாங்குபவர், மற்றவர் விற்பவர் என்ற ஒரே ஒரு வேறுபாடு மட்டும் நிலவ சம உரிமைகளின் அடிப்படையில் ஒருவரோடு ஒருவர் பேரம் செய்கின்றனர்; எனவே இருவரும் சட்டத்தின் பார்வையில் சமம் ஆகின்றனர்.

இந்த உறவு தொடர்வதற்கு, திட்டமான காலத்துக்கு மட்டுமே உழைப்புச் சக்தியின் உடைமையாளர் அதை விற்க வேண்டுமென்பது அவசியமாகிறது. ஏனெனில் அவர் அதை மொத்தமாக, ஒரேயடியாக விற்று விடுவதானால் அவர் தன்னையே விற்பதாகும்; சுதந்தமனிதன் என்பதிலிருந்து அடிமையாக, சரக்கின் உடைமையாளர் என்பதிலிருந்து சக்காகத் தன்னை மாற்றிக் கொள்வதாகும். அவர் இடையறாது தன் உழைப்புச் சக்தியை, தன் சொந்த உடைமையாக, தன் சொந்தச் சரக்காகக் கருத வேண்டும்; அதை அவர் வாங்கு வோரிடம் தற்காலிகமாகத் திட்டமான கால அளவுக்கு ஒப்புக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். இந்த வழியில் மட்டுமே அவர் அதன் உடைமையாளர் என்ற தன் உரிமைகளைத் துறக்காதிருக்க முடியும்.

(மூலதனம் 1 பக்கம் 232-233)

பாட்டாளியினுடைய உழைக்கும் சக்தியின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுவதைப் பற்றி மார்க்ஸ்:-

 

“ஒவ்வொரு சரக்கின் மதிப்பையும் போலவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் இந்தத் தனிவகைப் பண்டத்தின் உற்பத்திக்கும், ஆகவே மறுவுற்பத்திக்கும் [reproduction] - கூட அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அது மதிப்பைப் பெற்றுள்ளதென்ற அளவில் அதில் சேர்ந்துள்ள சராசரி சமுதாய உழைப்பின் திட்டமான அளவையன்றி வேறு எதையும் குறிப்பதில்லை.

 உழைப்புச் சக்தி இருப்பது உயிருள்ள தனியாளின் ஆற்றல் அல்லது சக்தியாகவே. ஆதலால் அவர் இருந்தாலன்றி அதன் உற்பத்தி சாத்தியமன்று. தனியாள் இருக்க, உழைப்புச் சக்தியின் உற்பத்தி அவர் தன்னையே மறுவுற்பத்தி செய்து கொள்வதில், அதாவது அவரது பராமரிப்பில் அடங்கியுள்ளது. அவரது பராமரிப்புக்கு குறிப்பிட்ட அளவிலான வாழ்வுச் சாதனங்கள் அவருக்குத் தேவைப்படுகின்றன. எனவே உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் என்பது அந்த வாழ்வுச் சாதனங்களின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரமாகி விடுகிறது; வேறு விதமாகச் சொன்னால், உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது உழைப்பாளியின் பராமரிப்புக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மதிப்பே. ஆயினும் உழைப்புச் சக்தி எதார்த்தமாவது அதன் பிரயோகத்தின் வாயிலாகவே. அது தன்னைச் செயல்படுத்திக் கொள்வது வேலை செய்வதன் மூலமே. ஆனால், இவ்வழியில் மனிதத் தசை, நரம்பு, மூளை முதலானவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு செலவழிகிறது; செலவழிந்த இவற்றை மீட்டமைக்க வேண்டும். இவ்வகையில் செலவு கூடினால் வருமானமும் கூட வேண்டும்.

உழைப்புச் சக்தியின் உடைமையாளர் இன்று வேலை செய்கிறார் என்றால், ஆரோக்கியம், வலிமை ஆகியவை தொடர்பான அதே நிலைமைகளில் அதே நிகழ்முறையை நாளை மீண்டும் நிகழ்த்த அவருக்கு சக்தியிருக்க வேண்டும். எனவே, அவரது வாழ்வுச் சாதனங்கள் தொடர்ந்து அவர் உழைப்பாளிக்குரிய இயல்பான நிலையில் இருப்பதற்குப் போதுமானவையாக இருக்க வேண்டும்.

உணவு, உடை, எரிபொருள், உறைவிடம் போன்ற அவரது இயற்கைத் தேவைகள் அவரது நாட்டின் வெப்பதட்ப நிலைமைகளுக்கும் பௌதிக நிலை மைகளுக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. மறு புறம் அவரது அவசியத் தேவைகள் என்பவற்றின் தொகையும் அளவும், அதே போல் அவற்றை நிறைவு செய்கிற முறைகளும் வரலாற்று வளர்ச்சியிலிருந்து விளைகிறவை; எனவே, அவை பெருமளவுக்கு நாடு நாகரிக வளர்ச்சியில் எந்நிலையை அடைந்துள்ளது என்பதையும், இன்னும் குறிப்பாக, எப்படிப்பட்ட நிலைமைகளிலும் ஆகவே எம்மாதிரியான பழக்க வழக்கங்களுடனும் வசதிகளின் வளர்ச்சி நிலையுடனும் சுதந்தரத் தொழிலாளர்களின் வர்க்கம் உருவெடுத்தது என்பதையும் பொறுத்தவை. எனவே, ஏனைய சரக்குகளின் மதிப்பு நிர்ணயத்தில் போலல்லாமல், உழைப்புச் சக்தியின் மதிப்பு நிர்ணயத்தில் வரலாற்று-தார்மிகக் கூறு ஒரு காரணியாக இடம் பெறுகிறது. எனினும் குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட காலத்தில், உழைப்பாளிக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் சராசரி அளவு நடைமுறை வாயிலாகத் தெரிந்து விடுகிறது.”

(மூலதனம் 1 பக்கம்236-237)

Tuesday 12 July 2022

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்- கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

(அறிக்கையில் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பும் மேற்கட்டமைப்பும் தீர்மானிக்கிறது என்று கூறுவது அபத்தமானது, ஆபத்தானதும்கூட. மேல்கட்டமைப்பும் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது என்ற கருத்து, மார்க்சிய அடிப்படையை திரிபில்லாமல் புரிந்து கொள்வதற்கு தடையை ஏற்படுத்துகிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவரை பிரச்சினையே மிஞ்சும். மார்க்சிய வழியில் செயல்பட முடியாது.

 

வாழ்நிலைதான் சிந்தனைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இந்த அடிப்படையையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாடு விளக்குகிறது.)

 

மார்க்ஸ்-எங்கெல்ஸ்:-

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் -- சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக் கின்றன.

சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டுவிட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.”

(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அத்தியாயம் 2)