Tuesday 12 July 2022

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்- கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

(அறிக்கையில் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பும் மேற்கட்டமைப்பும் தீர்மானிக்கிறது என்று கூறுவது அபத்தமானது, ஆபத்தானதும்கூட. மேல்கட்டமைப்பும் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது என்ற கருத்து, மார்க்சிய அடிப்படையை திரிபில்லாமல் புரிந்து கொள்வதற்கு தடையை ஏற்படுத்துகிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவரை பிரச்சினையே மிஞ்சும். மார்க்சிய வழியில் செயல்பட முடியாது.

 

வாழ்நிலைதான் சிந்தனைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இந்த அடிப்படையையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாடு விளக்குகிறது.)

 

மார்க்ஸ்-எங்கெல்ஸ்:-

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் -- சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக் கின்றன.

சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டுவிட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.”

(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அத்தியாயம் 2)

 


No comments:

Post a Comment