Friday 18 December 2015

மூலதனம் நூலினுடைய முதல் தொகுதியின் பிரெஞ்சுப் பதிப்புக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரை (கடிதம்)

பிரஜை மோரிஸ் லஷாத்துக்கு.

அன்புடையீர்.

“மூலதனம்” மொழிபெயர்ப்பைத் தொடர் வெளியீடாகப் பிரசுரிப்பதென்ற தங்கள் கருத்தை மெச்சுகிறேன்.  இந்த வடிவத்தில் புத்தகம் தொழிலாளி வர்க்கத்துக்கு மேலும் எளிதாக கிடைக்கக் கூடியதாய் இருக்கும், இந்த நோக்கம் வேறு எதையும் விட எனக்கு முக்கியமானதாகும்.

தங்கள் ஆலோசனையின் நல்ல பக்கம் அது, ஆனால் நாணயத்தின் மறுபக்கம் இதோ: நான் கையாண்டுள்ள, இதுகாறும் பொருளாதார விவகாரங்களுக்குப் பிரயோகிக்கப்படாத பகுப்பாய்வு முறையினால் ஆரம்ப அத்தியாயங்கள் படிப்பதற்குக் கடினமாயுள்ளன. பிரெஞ்சுப் பொதுமக்கள் எப்போதுமே ஒரு முடிவுக்கு வர அவசரப்படக் கூடியவர்கள், பொதுவான கோட்பாடுகளுக்கும், தங்களது உணர்ச்சிகளைக் கிளறி விட்டுள்ள உடனடிப் பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பை அறியத் துடிப்பவர்கள். ஆகவே தாங்கள் உடனே தொடர்ந்து படிக்க இயலவில்லை என்பதால் அவர்கள் ஆர்வமிழக்கலாம் என அஞ்ச வேண்டியுள்ளது.

உண்மையைக் காணத் துடிக்கிற வாசகர்களை முன்கூட்டியே எச்சரித்து, முன்கூட்டியே ஆயத்தப்படுத்துவதன் மூலம் அல்லாமல் சங்கடத்தை சமாளிக்கச் சக்தியற்றவனாய் இருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை ஏதுமில்லை, அதன் களைப்பூட்டும் செங்குத்துப பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு.

அன்புடையீர்! தங்கள் நம்பிக்கைக்குரிய,

தங்கள் உண்மையுள்ள

காரல் மார்க்ஸ்