Tuesday 27 March 2018

புரட்சிகரமான போராட்டத்தை முன்வைத்து ஜனநாயகப் போராட்டத்தை மறுக்கிற இடதுதிரிபையும், ஜனநாயகப் போராட்டத்தில் முடங்கி புரட்சிகரமான போராட்டத்தை மறுக்கிற வலதுதிரிபையும் எதித்து- லெனின்


“...சோஷலிசப் புரட்சி தனி ஒரு செய்கை அல்ல, ஒரே ஒரு முனையில் நடக்கும் ஒரே ஒரு போர் அல்ல, அது கடுமையான வர்க்க மோதல்களைக் கொண்ட முழுமையான ஒரு சகாப்தம். எல்லா முனைகளிலும் அதாவது, எல்லாப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் மீதும் நடக்கும் நீண்ட போர்களின் தொடராகும், முதலாளி வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதிலேதான் இந்தப் போர்கள் போய் முற்றுப்புள்ளி பெற முடியும். ஜனநாயகத்திற்கான போராட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சோஷலிசப் புரட்சியிலிருந்து திசை திருப்பிவிடவோ, அதை மறைத்து மூடிவிடவோ வல்லது என்று நினைப்பது கொடிய பிழையாகும்.

அதற்கு மாறாக, முழுமையான ஜனநாயகத்தைச் செயல் படுத்தாத வெற்றிகரமான சோஷலிசம் எப்படி இருக்க முடியாதோ அதே போல் ஜனநாயகத்திற்காக ஒரு முழு வடிவான, முரணற்ற, புரட்சிகரமான போராட்டம் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் மீது தான் வெற்றி பெறுவதற்குத் தயார் செய்ய முடியாது.”
(சோஷலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்”-
1918 ஜனவரி-பிப்ரவரியில் எழுதியது(75).
நூல் தொகை, தொகுதி 22, ஆங்கிலம் பக்கம் 144.)

Friday 23 March 2018

சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள் பற்றி லெனின்


வர்க்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஆதரித்தல், சோஷலிசப் புரட்சி, புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல், முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல்,  தேசிய இன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபக்தியுடன் வழிபடுதல், “மக்கள் தொகையில் விரிவான திரள்கள்” (குட்டி முதலாளிகள்தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்- சந்தேகத்துக்கு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்.
(சோஷலிஸ்ட் அகிலத்தின் நிலையும் கடமைகளும் – நவம்பர் 1, 1914,-
சர்வதேசத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி – லெனின் பக்கம் -171-172)

Monday 19 March 2018

உற்பத்தியும் மறுவுற்பத்தியும்- குலமரபுக் குழுக்களின் சிதறல்- பற்றி எங்கெல்ஸ்


“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி - கடைசியாகப் பார்க்கும் பொழுது - உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு, உடை, வீடு ஆகிய வற்றையும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செய்வது; மறு பக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது - அதாவது மனித இனத்தைப் பெருக்குவது. ஒரு திட்டவட்டமான வரலாற்றுச் சகாப்தத்தைச் சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச் சேர்ந்த மக்கள் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின் இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் மறு பக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

எந்த அளவுக்கு உழைப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறதோ, எந்த அளவுக்கு உழைப்பின் உற்பத்தியளவு குறுகியதாகவும் அதன் காரணமாக சமூகத்தின் செல்வமும் குறுகியதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சமூக அமைப்பின் மீது குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றும். எனினும் குலமரபு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகக் கட்டுக் கோப்புக்குள்ளாகவே உழைப்பின் உற்பத்தித் திறன் மேன்மேலும் வளர்கிறது; அத்துடன் கூடவே தனிச்சொத்தும் பரிவர்த்தனையும் வளர்கின்றன; செல்வத்தில் வேற்றுமைகளும் மற்றவர்களுடைய உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும், அதன் மூலம் வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையும் வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்; இவை தலைமுறைக்குப் பின் தலைமுறையாக பழைய சமூகத்தின் கட்டுக்கோப்பைப் புதிய நிலைமைகளுக் கேற்பத் திருத்தியமைக்க முயல்கின்றன. முடிவில், அவ்விரண் டிற்கும் இடையிலுள்ள பொருந்தா நிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச் செல்கிறது.

புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின் மோதலில் குலமரபுக் குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்த பழைய சமூகம் வெடித்துச் சிதறி விடுகிறது. அந்தப் பழைய சமூகத்தின் இடத்தில் அரசாக அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய சமூகம் தோன்றுகிறது. அந்த அரசின் கீழ் நிலை அங்கங்களாக குலமரபுக் குழுக்கள் (kinship groups) இனி இல்லை, வட்டார அடிப்படையில் அமைந்த குழுக்களே இருக்கின்றன. இந்தப் புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இந்த சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களும் இப்பொழுது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்லா வரலாற்றுக்கும் உள்ளடக்கமாக இருக்கின்றன.

நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்திய அடிப்படையின் முக்கியமான அம்சங்களைக் கண்டு பிடித்து மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்தது தான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். மேலும் மிகவும் தொன்மையான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய வரலாற்றின் இதுவரை விடுவிக்க முடியாதிருந்த மிகவும் முக்கியமான புதிர்களை விடுவிப்பதற்குரிய வழியை வட அமெரிக்க செவ்விந்தியர்களின் குல உறவுகளில் கண்டுபிடித்ததும் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். எனினும் அவருடைய நூல் ஒரே நாள் வேலையல்ல. அவர் தன்னுடைய விவரத் தொகுப்பைப் புரிந்து கொள்வதற்கு நாற்பது ஆண்டுகள் போராடிக் கடைசியில் முழு வெற்றி பெற்றார். அதனால் தான், நம் காலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற, சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களில் அவருடைய நூலும் இடம் பெற்றிருக்கிறது..
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை 1885)