Saturday 17 February 2018

பணத்திற்கும் மூலதனத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றி மார்க்ஸ்:-


"பணமாக மட்டுமே உள்ள பணத்துக்கும், மூலதனமாக உள்ள பணத்துக்கும் இடையில் நாம் காண்கிற முதல் வேறுபாடு அவற்றின் சுற்றோட்ட வடிவத்திலான மாறுபாட்டுக்கு மேல் ஒன்றும் இல்லை.

சரக்குச் சுற்றோட்டத்தின் மிகவும் சாமானிய வடிவம் C-M-C (சரக்கு-பணம்-சரக்கு), அதாவது சரக்கு பணமாக மாறுவதும் பணம் மீண்டும் சரக்காக மாறுவதும் ஆகும், அல்லது வாங்கும் பொருட்டு விற்பதாகும். ஆனால் இந்த வடிவத்தோடு கூடவே நாம் காண்கிற இன்னொரு முற்றிலும் வேறுபட்ட வடிவம் M-C-M (பணம்-சரக்கு-பணம்), அதாவது பணம் சரக்குகளாக மாறுவதும், சரக்குகள் மீண்டும் பணமாக மாறுவதும் ஆகும், அல்லது விற்கும் பொருட்டு வாங்குவதாகும். பின்சொன்ன விதத்தில் சுற்றோட்டத்தில் செல்கிற பணம் இவ்வழியில் மூலதனமாக மாறுகிறது, மூலதனம் ஆகிறது. உள்ளாற்றலில் ஏற்கெனவே மூலதனமாகவும் இருக்கிறது.
..
..C-M-C (சரக்கு-பணம்-சரக்கு) என்ற சுற்றுக்கும் M-C-M (பணம்-சரக்கு-பணம்) என்ற சுற்றுக்கும் இடையிலான முதல் முக்கிய வேறுபாடு இரு கட்டங்களினதும் நேர்மாறான வரிசையமைப்பே ஆகும். சரக்குகளின் சாமானியச் சுற்றோட்டம் விற்றலுடன் தொடங்கி வாங்கலுடன் முடிவடைகிறது, மூலதனம் என்ற விதத்தில பணத்தின் சுற்றோட்டமோ வாங்கலுடன்  தொடங்கி விற்றலுடன் முடிவடைகிறது. ஒன்றில் தொடக்கநிலை, இலக்கு ஆகிய இரண்டுமே சரக்குகளாகும், மற்றதில் அவை இரண்டுமே பணமாகும். முதல் வடிவத்தில் பணத்தின் குறுக்கீட்டாலும். இரண்டாவதில் சரக்கின் குறுக்கீட்டாலும் இயக்கம் நிகழ்த்தப்படுகிறது."
(மூலதனம் I பக்கம் 204-205)