Wednesday 22 December 2021

03) தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன? - ஜே.வி. ஸ்டாலின்

 

ஜே.வி. ஸ்டாலின்:-

“தேசிய ஒடுக்குமுறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டும் மற்றும் கொள்ளையிடும் அமைப்பு முறையாகும், ஒடுக்கப் பட்ட தேசிய இனங்களின் உரிமைகளை வலுக்கட்டாயமாகக் கட்டுப் படுத்துவதற்கு ஏகாதிபத்திய வட்டாரங்களால் கடைபிடிக்கப் படும் நடவடிக்கைகள் ஆகும். இந்த நடவடிக்கைகள் ஒன்றாகச் சேர்ந்து பொதுவாக தேசிய ஒடுக்குமுறை என்று அறியப்பட்ட கொள்கையைக் குறிப்பதாகும்.

முதலாவது கேள்வி, எந்த ஒரு குறிப்பிட்ட அரசாங்கமும் அதன் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த வர்க்கங்களைச் சார்ந்திருக்கிறது என்பதாகும்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பு, வேறுபட்ட அரசுகளில் ஏன் வேறுபட்ட ஒடுக்குமுறை வடிவங்கள் நிலவுகின்றன என்பதை, ஓர் அரசை விட இன்னொரு அரசில் தேசிய ஒடுக்குமுறை ஏன் கடுமையாகவும் கொடூரமாகவும் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரிட்டனிலும் ஆஸ்திரிய ஹங்கேரியிலும் தேசிய ஒடுக்குமுறை திட்டமிட்ட படு கொலை வடிவத்தை ஒருபோதும் எடுக்கவில்லை, மாறாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய உரிமைகள் மீது கட்டுப் பாடுகளின் வடிவத்தில் நிலவிவருகிறது. அதற்கு மாறாக, ரசியாவில், அது அடிக்கடி திட்டமிட்ட படுகொலைகள் வடிவத்தை எடுக்கிறது. மேலும், ஒரு சில குறிப்பிட்ட அரசுகளில், தேசிய சிறுபான்மை இனங் களுக்கு எதிராக எந்தக் குறிப்பான நடவடிக்கைகளும் இருப்பதில்லை . எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் தேசிய ஒடுக்குமுறை இல்லை, அங்கு பிரெஞ்சுக்காரர்கள், இத்தாலியர்கள், மற்றும் ஜெர்மானியர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்கின்றனர்.

… … … …

ஒரு தேசம் எந்த ஒரு குறிப்பிட்ட தருணத்திலும் அவசியமாகப் பிரிந்து போக வேண்டுமா என்ற கேள்வியுடன், சுதந்திரமாகப் பிரிந்து போவதற்கான தேசங்களின் உரிமைப் பிரச்சனையைக் குழப்பிக் கொள்வது அனுமதிக்க முடியாததாக இருக்கும். இந்தப் பிந்தைய பிரச்சனை, ஒவ்வொரு குறிப்பான நிகழ்விலும் சூழ்நிலைகளுக்கேற்பப் பாட்டாளிவர்க்கத்தின் கட்சியால் முற்றிலும் தனித்தனியான முறையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு தேசத்தின் பிரிந்து போகும் உரிமையை நான் அங்கீகரிக்கலாம், ஆனால் அதன் பொருள் நான் அதைச் செய்யக் கடமைப்பட்டவன் என்பதல்ல. ஒரு மக்களினத்திற்கு பிரிந்து போகும் உரிமை உண்டு, ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப அந்த உரிமையைப் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறாக பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலன்களுக்கேற்ப பிரிந்து போவதற்கு ஆதரவாக அல்லது எதிராகக் கிளர்ச்சி செய்வதற்கு நமக்குச் சுதந்திரம் உண்டு. அதனால், பிரிந்து போவது பற்றிய பிரச்சனை ஒவ்வொரு குறிப் பான நேர்விலும், நிலவும் சூழலுக்கேற்பச் சுதந்திரமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும், மேலும் இந்தக் காரணத்துக்காகப், பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிப்பது எந்த ஒரு குறிப்பிட்ட சூழ் நிலைமையிலும் பிரிந்து போவதை முடிந்த முடிவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.”

(ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் (போ) கட்சியின் எழாவது மாநாடு,

ஏப்ரல் 24/29,1917.ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,

தொகுதி 3, பக். 64-65-67)

அட்டவணை

02) கட்சியின் நெருக்கடியும் நமது கடமைகளும்- ஜே.வி. ஸ்டாலின்

ஜே.வி. ஸ்டாலின்:-

“நமது கட்சி மிகவும் மோசமானதொரு நெருக்கடியினூடாக செய்ல்பட்டு வருகிறது என்பதொன்றும் ரகசியமான விஷயமல்ல. உறுப்பினர்களை இழந்து வருவது; நமது அமைப்புகள் சுருங்குவது பலவீனமாகி வருவது; அமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தனிமைப்பட்டு நிற்பது; ஒருங்கிணைந்த கட்சி செயல்பாடு இல்லாத நிலை ஆகிய இவை அனைத்துமே கட்சி நோய்வாய்ப்பட்டுள்ளதையும், மிக மோசமான நெருக்கடியினூடாக அது சென்று கொண்டிருக்கிறது என்பதையுமே எடுத்துக் காட்டுகின்றன.

கட்சியை சோர்வடையச் செய்யும் முதல் விஷயம் என்பது அதன் அமைப்புகள் விரிவான மக்கள் திரளிடமிருந்து தனிமைப் பட்டு நிற்பதே ஆகும். ஒரு நேரத்தில் நமது அமைப்பின் அணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர். அவர்கள் லட்சக்கணக்கான மக்களுக்குத் தலைமை தாங்கி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் என்பதற்குப் பதிலாக இப்போது டஜன் கணக்கில் அல்லது அதிகபட்சமாக நூற்றுக் கணக்கில்தான் நமது அமைப்பில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். லட்சக்கணக்கிலான மக்களுக்குத் தலைமை தாங்குவது என்பதைப் பொறுத்தவரை பேசாமல் இருப்பதே உத்தமம். நமது கட்சி விரிவான அளவில் மக்களிடையே தத்துவார்த்த ரீதியான செல்வாக்கை செலுத்தி வருகிறது என்பதும், மக்களுக்குக் கட்சியைப் பற்றித் தெரியும் என்பதும் மக்கள் அதை மதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான், அடிப்படையில் அதுவே 'புரட்சிக்கு முந்தைய' கட்சியிலிருந்து 'புரட்சிக்குப் பிந்தைய’ கட்சியை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால் நடைமுறையிலோ அது மட்டுமே கட்சியின் செல்வாக்காக இருக்கிறது.

எனினும் தத்துவார்த்த செல்வாக்கு மட்டுமே போதுமானதல்ல; அமைப்பு ரீதியாக எவ்வளவு குறுகிய அளவில் மக்களை அணி திரட்டுகிறோமோ அது தத்துவார்த்த ரீதியான அகலத்தை சமனப்படுத்தி விடுகிறது. இதுவே நமது அமைப்புகள் விரிவான மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பதற்கான காரணமாகும்.

....      ....       ....            

பொதுவான கட்சி நடவடிக்கையின் அடிப்படையில் மட்டுமே ருஷ்யா முழுவதிலும் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளை ஒன்றிணைக்க முடியும். எனினும் உள்ளூர் அமைப்புகளின் அனுபவங்கள் அனைத்தையும் பொதுவான மையமொன்றில் சேகரித்து, அங்கிருந்து பொதுவான கட்சி அனுபவத்தை உள்ளூர் அமைப்புகள் அனைத்திற்கும் பகிர்ந்தளிக்காமல் பொதுவானதொரு கட்சி நடவடிக்கை என்பது இயலாத ஒன்றாகும்.

....      ....       ....            

டூமாவின் மன்றத்திலிருந்து, தொழிற்சங்கங்களிலிருந்து, கூட்டுறவு சங்கங்கள், சவ அடக்கத்திற்கான நிதிகள் வரையில் தன்னைச் சுற்றியுள்ள சட்டபூர்வமான அனைத்து வாய்ப்புகளையும் கட்சி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நெருக்கடியை எவ்வளவு விரைவாக நாம் வெற்றி கொள்கிறோமோ, அவ்வளவு விரைவாக ருஷ்ய சமூக - ஜனநாயகக் தொழிலாளர் கட்சியின் மீட்சிக்கும் புனரமைப்பிற்குமான கடமையை நம்மால் நிறைவேற்ற முடியும்.”

(கட்சியின் நெருக்கடியும் நமதுகடமையும்- ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,

தொகுதி 2, பக். 170-179-182 (1909))

அட்டவணை

ஸ்டாலின் படைப்புகளைப் படிப்போம் புதிய சமூகத்தைப் படைப்போம்


****************************************************************

01) பாட்டாளி வர்க்கமானது என்ன செய்ய வேண்டும்

02) கட்சியின் நெருக்கடியும் நமது கடமைகளும்

03) தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன?