Wednesday 22 December 2021

01) பாட்டாளி வர்க்கமானது என்ன செய்ய வேண்டும் - ஜே.வி. ஸ்டாலின்

 (ஸ்டாலின் இங்கே கூறுகிற அடிப்படைத் தெளிவு, ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்தக் காரணத்தினால்தான் அங்கே புரட்சி நடத்த முடிந்திருக்கிறது. வேலை நிறுத்தம், ஆர்ப்பட்டாங்கள், பாராளுமன்றம் போன்ற, வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களை இங்கே ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார். இந்த வழிமுறைகள் மட்டுமே முதலாளித்துவத்தை தூக்கி எறிந்திட போதுமானது அல்ல. இந்த வழிமுறைகள் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு அவசியமான சில நிபந்தனைகளையும் தயாரிப்பையும் மட்டுமே உருவாக்கும். சோசலிசப் புரட்சியினால் தான் முதலாளித்துவத்தை தூக்கி எறியமுடியும்.  அதைப் பற்றி ஸ்டாலின் கூறியுள்ளார்)

 ஜே.வி. ஸ்டாலின்:-

“பாட்டாளி வர்க்கமானது என்ன செய்ய வேண்டும், தனது கிட்டத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுக்க அது எந்தப் பாதையில் செல்ல வேண்டும், சோசலிசத்தைக் கட்டியமைக்க அது எந்தப் பாதையில் சென்று முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய வேண்டும்?

இதற்கு விடை தெளிவாக உள்ளது: முதலாளித்துவத்துடன் சமாதானமாக இருந்து கொண்டு அதனால் சோசலிசத்தை சாதிக்க முடியாது - இது நிலைத்து நிற்கக்கூடிய வகையில் போராட்டப் பாதையை மேற்கொள்ள வேண்டும். இப்போராட்டமானது ஒட்டு மொத்த முதலாளி வர்க்கத்தை எதிர்த்து ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமாக, ஒரு வர்க்கப் போராட்டமாக இருக்க வேண்டும். இப்போராட்டத்தினால் ஒன்று முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும் இருக்க வேண்டும் அல்லது பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும் இருக்க வேண்டும்! பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கும் அதன் வர்க்கப்போராட்டத்துக்கும் இதுவே அடிப்படையாக இருக்க வேண்டும்.

ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப்போராட்டம் எண்ணற்ற வடிவங்களை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு வேலை நிறுத்தம் - ஒன்று பகுதியளவிலானதாக இருக்கலாம் அல்லது பொது வானதாக இருக்கலாம், அது வர்க்கப் போராட்டமே என்பதில் வேறுபாடு எதுவும் இல்லை . புறக்கணித்தலும், நாசவேலையும் கூட வர்க்கப் போராட்டமே என்பதில் ஐயமில்லை. பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொது பிரதிநிதித்துவ உறுப்புகளில் செயல்படுதல் போன்ற இதரவையும் அவை தேசியப் பாராளுமன்றமோ அல்லது உள்ளூர் அரசாங்க உறுப்புகளோ - அதில் எந்த வேறுபாடும் இல்லை - அவை அனைத்தும் கூட வர்க்கப் போராட்டமே. இவையனைத்தும் ஒரே வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள் ஆகும்.

தனது வர்க்கப்போராட்டத்தில் பாட்டாளிவர்க்கத்துக்கு எந்த வடிவிலான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை, இங்கு நாம் ஒவ்வொன்றும் உரிய காலத்திலும், களத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வையும், அமைப்பையும் வளர்த்தெடுப்பதற்கு அத்தியாவசியமான வழிமுறைகளாகப் பாட்டாளிகளுக்குத் தேவைப்படுகிறது என்பதில் ஐயமில்லை என்று வெறுமனே நாம் கருத்துரைக்கிறோம்.

உயிர்மூச்சு எப்படி தேவைப்படுவதாக உள்ளதோ அது போன்றே பாட்டாளி வர்க்கத்துக்கான வர்க்க உணர்வும், அமைப்பும் தேவைப்படுகிறது. எனினும் பாட்டாளி வர்க்கத்துக்கு அந்த அனைத்துப் போராட்ட வடிவங்களும் வெறுமனே தயாரிப்பு, வழிமுறைகள்தான், அதில் ஒன்றை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால் அதனால் முதலாளித்துவத்தைத் தீர்மானகரமாக தகர்த்துவிட முடியும் என்று சொல்லமுடியாது என்பதையும் கூட கவனிக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தத்தால் மட்டுமே முதலாளித்துவத்தைத் தகர்த்துவிட முடியாது: முதலாளித்துவத்தை தகர்ப்பதற்கு அவசியமான சில நிலைமைகளை மட்டுமே பொது வேலைநிறுத்தத்தால் உருவாக்க முடியும். முதலாளித்துவத்தை வெறுமனே தனது பாராளுமன்ற செயல்பாட்டினால் பாட்டாளி வர்க்கம் தூக்கியெறிய முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான சில நிபந்தனைகளை மட்டும் பாராளுமன்றத்தினால் உருவாக்க முடியும்.

பின்னர் முதலாளித்துவக் கட்டமைப்பை எந்தத் தீர்மானகரமான வழிமுறைகளைக் கொண்டு பாட்டாளி வர்க்கம் தூக்கியெறியும்?

சோசலிசப் புரட்சிதான் அந்த வழிமுறைகளாக உள்ளன.

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, பாராளுமன்றம், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியன அனைத்தும் பாட்டாளிவர்க்கத்தைத் தயார்ப்படுத்தும், அமைப்பாக்கும் சிறந்த போராட்ட வடிவங்கள் ஆகும். ஆனால் நிலவும் ஏற்றத்தாழ்வை இவ் வழிமுறைகள் ஒன்றினால் மட்டும் ஒழித்துக்கட்டி விட முடியாது. இந்த அனைத்து வழிமுறைகளும் ஒரு தலையாயதும், தீர்மானகரமானதுமான வழிமுறையில் ஒன்று குவிக்கப்பட வேண்டும்; முதலாளித்துவத்தை அதன் அடித்தளங்களில் இருந்து தகர்த்து தரைமட்டமாக்கிட முதலாளிய வர்க்கத்தின் மீது ஒரு தீர்மானகரமானத் தாக்குதலை நடத்திட பாட்டாளிவர்க்கம் விழித்தெழ வேண்டும். இந்தத் தலையாயதும், தீர்மானகரமானதுமான வழிமுறைகள்தான் சோசலிசப் புரட்சியாகும்.

சோசலிசப் புரட்சி என்பதை ஒரு குறுகிய திடீர் தாக்குதல் என்று கருதிக் கொள்ள வேண்டாம், சோசலிசப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்க மக்கள் திரளினரால் முதலாளி வர்க்கத்தை தோல்வியுறச் செய்து அதன் நிலைகளைக் கைப்பற்றிக் கொள்ள நடத்தப்படும் ஒரு தொடர்ச்சியான போராட்டமாகும். பாட்டாளி வர்க்கத்துக்கு வெற்றி என்பது முறியடிக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் மீது அதே காலத்தில் நடத்தப்படும் ஆதிக்கம் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு மோதலில், ஒரு வர்க்கத்தின் தோல்வி என்பது அதன் மீதான மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. சோசலிசப்புரட்சியின் முதல்கட்டத்தில் முதலாளித்துவத்தின் மீது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் இருக்கும்.

பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது - இதிலிருந்துதான் சோசலிசப் புரட்சி தொடங்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கம் முழுவதுமாக முறியடிக்கப்படும் வரை, அதன் செல்வம் பறிமுதல் செய்யப்படும் வரை, பாட்டாளி வர்க்கமானது, ஒரு இராணுவப்படையை தவறாது கொண்டிருக்க வேண்டும், அது தவறாது தனது “பாட்டாளிவர்க்கக் காவல் படை'' யைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அதன் துணையோடுதான் அது உயிரை விட்டுக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தின், எதிர்ப் புரட்சிகரத் தாக்குதலை, கம்யூனின்போது பாரீசு நகரப் பாட்டாளி வர்க்கம் செய்ததைப்போன்று அப்படியே எதிர்க்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் அப்புறப்படுத்தலை சாத்தியமாக்க வேண்டுமென்பதற்காக, நிலத்தை, வனத்தை, ஆலைகளையும், தொழிற்சாலைகளையும், ரயில்வே மற்றும் இதரவற்றையும் ஒட்டுமொத்த முதலாளி வர்க்கத்திடம் இருந்து பாட்டாளிவர்க்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதற்காக, பாட்டாளிவர்க்கத்துக்கு சோசலிச சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.

முதலாளி வர்க்கத்தை அப்புறப்படுத்துவதுதான் சோசலிசப் புரட்சி நிறைவேற்ற வேண்டியதாகும்.

தற்போதைய முதலாளித்துவக் கட்டமைப்பை பாட்டாளி வர்க்கம் தூக்கியெறிவதற்கு இதுவே தலையாயதும், தீர்மானகரமானதுமான வழிமுறையாக உள்ளது”

(அராஜகவாதமா சோசலிசமா? - ஜே.வி. ஸ்டாலின்:- படைப்புகள்,

                                                                                                                                               தொகுதி 1, பக். 361-364 (1907))

அட்டவணை



No comments:

Post a Comment