Tuesday 9 January 2018

மா சே துங் - மேற்கோள்கள் (Red Book - செவ்வேடு)

(சில பகுதிகள் மட்டும்)
முழுமையாக “கீழைக்காற்று வெளியீட்டகம்” வெளியிட்டுள்ளது.










33. படிப்பு - மா சே துங்

ஒரு பின் தங்கிய விவசாய நாடாக விளங்கும் சீனாவை ஒரு முன்னேறிய தொழில்துறை நாடாக மாற்றும் போது, நாம் கடினமான கடமைகளை எதிர் நோக்குகின்றோம், நமது அனுபவம் போதுமானதல்ல, எனவே நாம் நன்றாகப் படிக்க வேண்டும்
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 8வது தேசிய மாநாட்டின்
ஆரம்ப உரை – 15 செப்டம்பர் 1956)

நிலைமைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையைப் புதிய சிந்தனையைப் புதிய நிலைமைகளுக்கு இசைவாக்க வேண்டுமானால், நாம் படிக்க வேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து, தமது பாட்டாளி வர்க்க நிலைமைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புதியவற்றைக் கிரகித்துக் கொள்ள வேண்டும், புதிய  பிரச்சினைகளை ஆராய வேண்டும்.
(சீனக் கம்யூனிஸ்ட் கடசியின் பிரச்சார வேலை பற்றிய
தேசிய மாநாட்டு உரை -12 மார்ச் 1957)

படிப்பில் இரண்டு விதமான கண்ணோட்டங்கள் உண்டு. ஒன்று நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, அனைத்தையும் அப்படியே எடுத்து நடும் வறட்டுக் கண்ணோட்டம். இது நல்லதல்ல. மற்றது, நமது மூளையைப் பாவித்து, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது நமக்கு பயனுள்ள அனுபவங்களைக் கிரகித்துக் கொள்கின்ற கண்ணோட்டம். இதுதான் நாம கடைப்பிடிக்க வேண்டிய கண்ணோட்டம்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடு அனைத்தையும் தழுவியதாக பிரயோகிக்கப்படக் கூடியது. நாம் அதை வறட்டுக் கோட்பாடாக அல்ல, செயலுக்கு ஒரு வழிகாட்டியாகக் கருத வேண்டும். மார்க்சியம் – லெனினியத்தைப் படிப்பது என்பது வெறும் சொற்களையும் சொற்றொடர்களையும் படிக்கும் விசயமல்ல. பதிலுக்கு அதைப் புரட்சியின் விஞ்ஞானமாகப் படிக்க வேண்டும். அது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் யதார்த்த வாழ்வையும், புரட்சி அனுபவத்தையும் விரிவாகப் படித்து, அதிலிருந்து வகுத்துத் தந்த பொது  விதிகளைப் புரிந்து கொள்ளும் ஒரு விசயம் மட்டுமல்ல. பிரச்சினைகளை ஆராய்வதிலும் தீர்ப்பதிலும் அவர்களுடைய நிலைப்பாட்டையும், வழிமுறையையும் கிரகித்துக் கொள்ளும் ஒரு விசயமுமாகும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

மார்க்சியக் கோட்பாட்டைப் பொறுத்த வரையில், அதில் தேர்ச்சி பெற வேண்டும், அதைப் பயன்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதன் நோக்கம், அதைப் பன்படுத்தத்தான். ஒன்று அல்லது இரண்டு நடைமுறைப் பிரச்சினைகளைத் தெளிவு படுத்துவதில் மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தை உங்களால் பிரயோகிக்க முடியுமானால், நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ஓரளவு சாதனைகளை ஈட்டியவர்கள் ஆவீர்கள். எவ்வளவுக்கு அதிகமான பிரச்சினைகளை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்களோ, எவ்வளவுக்கு முற்றாகவும் ஆழமாகவும் தெளிவு படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் சாதனையும் பெரிதாய் இருக்கும்.
(கட்சி வேலை நடையைச் சீர்செய்வோம் – 1 பிப்ரவரி 1942)

வேலையில் அனுபவம் உடையவர்கள் கோட்பாட்டுப் படிப்பை மேற்கொள்ள வேண்டும், பாரதூமாகப் படிக்க வேண்டும். அப்பொழுது தான் அவாகள் தமது அனுபவத்தை ஒழுங்கு படுத்தி, தொகுத்து, அதைக் கோட்பாடு மட்டத்துக்கு உயர்த்தக் கூடியவர்களாய் இருப்பர். அப்பொழுது தான் தமது அரைகுறை அனுபவத்தை பொது உண்மை என்று கருதாமல், அனுபவவாதத் தவறுகளை இழைக்காமல் இருக்க முடியும்.
(கட்சி வேலை நடையைச் சீர்செய்வோம் – 1 பிப்ரவரி 1942)

பொருளாதார வேலையில் தேர்ச்சி பெற்ற எல்லோருடம் இருந்து (அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை) நாம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களை ஆசிரியர்களாக மதித்து, அவர்களிடம் இருந்து மாரியாதையாகவும் நேர்மையாகவும் கற்க வேண்டும், நாம அறியாதவற்றை அறிந்தது போல் நடிக்கக் கூடாது.
(மக்கள் ஜனநாயக சர்வாதிகரம் பற்றி – ஜீன் 1949)

சுய-திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய-திருப்தி உணர்வை நம்மிடம் இருந்து நீக்கினால் ஒழிய, நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்த வரையில் “படிப்பில் தெவிட்டாமை” என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்கு “கற்றுக் கொடுப்பதில் சளையாமை” என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

மார்க்சியத்தை உண்மையில் ஒருவர் கிரகித்துக் கொள்ள வேண்டுமானால், அதை அவர் நூல்களில் இருந்து மாத்திரம் அல்ல, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், நடைமுறை வேலை, பரந்துபட்ட தொழிலாளர் – விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும். மார்க்சிய நூல்கள் சிலவற்றைப் படிப்பதோடு, நமது அறிவுத்துறையினர் பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்புகள் மூலமும், தமது சொந்த நடைமுறை வேலை மூலமும் சிறிது விளக்கம் பெற்ற போது, நாம் எல்லோரும் ஒரே மொழியைப் பேசுவது சாத்தியம், தேச பக்தி என்ற பொது மொழியையும், சோஷலிசம் என்ற பொது மொழியையும் பேசுவது மாத்திரம் அல்ல, கம்யூனிச உலக நோக்கு என்ற பொது மொழியைக் கூடப் பேசுவது சாத்தியம். இப்படி ஏற்பட்டால், நாம் எல்லோரும் இன்னும் நன்றாக வேலை செய்வது நிச்சயம்.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய
 தேசிய மாநாட்டு உரை – 12 மார்ச் 1957)


32. கலையும் கலாச்சாரமும் - மா சே துங்

இன்றைய உலகில் கலாச்சாரம் அனைத்தும், கலை இலக்கியம் அனைத்தும் குறிப்பிட்ட வர்க்கங்களுக்குச் சொந்தமானவை, குறிப்பிட்ட அரசியல் திசைவழிகளில் முடுக்கி விடப்படுகின்றன. கலை கலைக்காக, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட கலை, அரசியலில் இருந்து பிரிந்த அல்லது விடுதலை பெற்ற கலை என ஒன்று உண்மையில் கிடையாது. பாட்டாளி வர்க்க கலை இலக்கியம் என்பது முழுப் பாட்டாளி வாக்கப் புரட்சி இலட்சியத்தின் ஒரு பகுதி. அவை லெனின் கூறுவது போல், முழுப் புரட்சி இயந்திரத்தின் “பல்லும் சில்லு”மாக விளங்குகின்றன.
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

புரட்சிகர கலாச்சாரம் பரந்துபட்ட மக்களின் ஒரு சக்தி மிக்க புரட்சிகர ஆயுதமாகும். புரட்சி வெடித்தெழுவதற்கு முன் அது சித்தாந்த ரீதியில் புரட்சிக்கான தளத்தைத் தயார் செய்கிறது. புரட்சி வெடித்ததும் பொதுப் புரட்சி முன்னணியில் அது ஒரு முக்கியமான, அத்தியாவசியமான போர் முனையாகின்றது.
(புதிய ஜனநாயகம் பற்றி – ஜனவரி 1940)

நமது கலை இலக்கியம் எல்லாம் பரந்துபட்ட மக்களுக்கு, முதன்முதலாக தொழிலாளர், விவசாயிகள், படையினருக்கு உரியவை, அவை தொழிலாளர், விவசாயிகள், படையினருக்காக படைக்கப்படுகின்றன, அவர்களின் பயன்பாட்டிற்கு உரியவை.
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

நமது கலை இலக்கிய ஊழியர்கள் இந்தக் கடமையை கண்டிப்பாக நிறைவேற்றி, தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள் தொழிலாளர், விவசாயிகள், படையினர் மத்தியில், யதார்த்தப் போராட்டங்களில் மத்தியில் ஆழமாகச் செல்லும் போக்கில் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினரின் பக்கத்துக்கு, பாட்டாளி வர்க்கத்தின் பக்கத்துக்கு, தமது நிலைப்பாட்டை படிப்படியாக நகர்த்த வேண்டும். இவ்வாறுதான் உண்மையில் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினருக்கு உரிய கலை இலக்கியத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியத்தை நாம் பெற முடியும்.
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

கலை இலக்கியம் முழுப் புரட்சி இயந்திரத்தினதும் ஒரு பகுதியாக நன்கு அமைய வேண்டும், மக்களை ஐக்கியப் படுத்தி, கற்பித்து, எதிரியைத் தாக்கி அழிக்கும் சக்தி மிக்க ஆயுதமாகச் செயல்பட வேண்டும். மக்கள் ஒரே சிந்தனையுடனே ஒரே உள்ளத்துடன் எதிரியை எதிர்க்கத் துணை புரிய வேண்டும்
(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே 1942)

நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பது கலை வளர்ச்சியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நமது நாடடின் சோஷலிச கலாச்சாரத்தின் செழித்தோங்குவதும் மேம்படுத்துவதற்குரிய கொள்கையாகும். கலையில் பல்வேறு வடிவங்களும் பல்வேறு நடைகளும் சுதந்திரமாக வளரலாம். அறிவியலில் பல்வேறு கருத்துக்களும் சுதந்திரமாக முட்டி மோதலாம். கலையின் குறிப்பிட்ட ஒரு நடையை அல்லது ஒரு சிந்தனை முறையைத் திணித்து, இன்னொன்றைத் தடை செய்ய நிர்வாக நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டால், அது கலை, அறிவியல வளர்ச்சிக்குத தீங்கு பயக்கும் என நாம் கருதுகின்றோம். கலைகள், அறிவியல்களில் சரியும் பிழையும் சம்பந்தமான பிரச்சினைகள், கலை அறிவியல் வட்டாரங்களில் சுதந்திரமான விவாதங்கள் மூலமும், இந்தத் துறைகளில் நடைமுறை வேலை மூலமும் தீர்க்கப்பட வேண்டும். எளியமுறையில் தீர்ககப்படக் கூடாது.

(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி – 27 1957)

31. பெண்கள் - மா சே துங்

சீனாவில் உள்ள ஒர் ஆண் வழக்கத்தில் மூன்று அதிகார (அரசியல் அதிகாரம், வம்ச அதிகாரம், மத அதிகாரம்) அமைப்புகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகின்றான் …. பெண்களைப் பொறுத்தவரை, இம்மூன்று ஆதிக்கத்தற்கு உட்படுவதுடன் ஆண்களாலும் (கணவனின் அதிகாரத்தாலும்) ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர்.

அரசியல், வம்சம், மதம், ஆண் – இந்த நான்கு அதிகாரங்களும் முற்றாக பிரபுத்துவ – தந்தை வழி சித்தாந்தத்தினதும அமைப்பினதும் உருவாக்கமாகும். இவை சீன மக்களை, குறிப்பாக விவசாயிகளைப் பிணைத்திருக்கும் நான்கு பெரும் தளைகளாகும். விவசாயிகள் நாட்டுப்புறத்தில் நிலப்பிரபுக்களின் அரசியல் அதிகாரத்தை எப்படி தூக்கி எறிந்தார்கள் என்பது மேலே விளக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுக்களின் அரசியல் தான் இதர எல்லா அதிகார அமைப்புகளினதும் முதுகெலும்பாகும். இது தூக்கியெறியப்பட்டதும் வம்ச அதிகாரம், மத அதிகாரம், கணவன் அதிகாரம் எல்லாம் சரிந்து விழத் தொடங்குகின்றன…

கணவனின் அதிகாரத்தைப் பொறுத்தவரை, ஏழை விவசாயிகள் மத்தியில் இது எப்பொழுதம் பலவீனமாகவே இருந்து வருகின்றது. ஏனென்றால் பொருளாதாரத் தேவையினால் அப்பெண்கள், செல்வந்த வீட்டுப் பெண்களிலும் பார்க்கக் கூடுதலான உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கின்றது.. எனவே இவர்களுக்குக் குடும்ப விசயங்களில் பேச்சுரிமையும், முடிவுகள் எடுக்கும் உரிமையும் கூடுதலாக உண்டு.

அண்மை ஆண்டுகளில் கிராமியப் பொருளாதாரம் பெரிதும் ஓட்டாண்டித் தனமாகி வருவதுடன், பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான அடிப்படையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு விட்டது. அண்மையில் விவசாயி இயக்கத்தின் தோற்றத்துடன் பல இடங்களில் உள்ள பெண்கள் கிராமிய மகளிர் சங்கங்களை நிறுவத் தொடர்ங்கியுள்ளனர், அவர்களுக்குத் தலைமை நிமிர்த்தும் சந்தர்ப்பம் வந்துவிட்டது, கணவனின் அதிகாரம் நாளுக்கு நாள் ஆட்டம் கண்டு வருகின்றது. ஒரு வார்த்தையில் சொன்னால் ஒரு பிரபுத்துவ – தந்தை வழிச் சித்தாந்தமும் அமைப்பும் விவசாயிகளின் அதிகார வளர்ச்சியுடன் தகர்ந்து விழுகின்றன.
(ஹீனான் விவசாயி இயக்க பரிசீலனை பற்றிய அறிக்கை – மார்ச் 1927)

ஒரு பெரும் சோஷலிச சமூகத்தைக் கட்டி வளர்ப்பதற்கு உற்பத்தி நடவடிககையில் பங்குபெற பரந்துபட்ட பெண்களைத் தட்டி எழுப்புவது மிக முக்கியமான விசயமாகும். ஆண்களும் பெண்களும் உற்பத்தியில் சமவேலைக்குச் சமஊதியம் பெற வேண்டும். சமூகத்தின் முழுமையான சோஷலிச மாற்றப் போக்கில்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உண்மையான சமத்துவம் நிலவ முடியும்.
(பெண்கள் உற்பத்தி முன்னணிக்குச் சென்று விட்டனர் –
என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு 1955)

விவசாயக் கூட்டுறவு, முடிவுற்றதும், பல கூட்டுறவுகளுக்கு உழைப்பு சக்தி குறைவாக இருக்கின்றது. முன்பு வயல்களில் வேலை செய்யாத பரந்துபட்ட பெண்களை உழைப்பு முன்னணியில் பங்கு ஆற்றுவதற்குத் தட்டி எழுப்புவது தேவையாகி விட்டது...... சீனப் பெண்கள் உழைப்புச் சக்தியின் பிரம்மாண்டமான துணைச் சக்தியாக விளங்குகின்றனர். ஒரு மகத்தான சோஷலிச நாட்டைக்கட்டி வளர்க்கும் போராட்டத்தில் இந்த சேமப்படை பாவிக்கப்பட வேண்டும்
(உற்பத்தியில் சேரப் பெண்களைத் தட்டி எழுப்புவதன் மூலம்
உழைப்பு சக்தியின் பற்றாக்குறையைத் தீர்ப்பது –
என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு 1955)


Monday 8 January 2018

30. இளைஞர்கள் - மா சே துங்

நமது நாடு இன்னும் மிக வறிய ஒரு நாடாக இருக்கின்றது. ஒரு குறுகிய காலத்தில் இந்த நிலைமையை எம்மால் அடிப்படையில் மாற்ற முடியாது. நமது இளைய தலைமுறையினரும், நமது மக்கள் அனைவரும் தமது சொந்தக் கைகளால் வேலை செய்து கூட்டு முயற்சிகள் எடுப்பதன் மூலம் தான், சீனாவை சில பத்தாண்டுகளில் ஒரு பலம் வாய்ந்த, வளம் கொழிக்கும் நாடாக ஆக்க முடியும் என்பதை நமது இளைஞர்கள் அனைவரும் புரிந்து கொள்ள நாம் உதவி செய்ய வேண்டும். நமது சோஷலிச அமைப்பின் உருவாக்கம் எதிர் காலத்தின் இலட்சிய சமுதாயத்துக்குச் செல்லும் பாதையைத் திறந்ததிருக்கின்றது. ஆனால் இந்தக் கனவை நனவாக மாற்ற கடின உழைப்பு அவசியம்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்பரவரி 1957)

அறிவுத்துறையினர் மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களில் உள்ளமும் உயிருமாக ஈடுபடாத வரையில் மக்களின் நலன்களுக்காகத் தொண்டு செய்யத் தீர்மானித்து, மக்களோடு இரண்டறக் கலக்காத வரையில், அவர்கள் அடிக்கடி அகநிலைப் போக்கு, தனிநபர்வாத இயல்பு, சிந்தனையில் நடைமுறை சாத்தியப்பாடின்மை உடையவர்களாகவும் செயலில் உறுதிப்பாடு இல்லாதவர்களாகவும் இருப்பதுண்டு. ஆகவே, சீனாவில் பரந்துபட்ட புரட்சிகர அறிவுத்துறையினர் ஒரு முன்னணிப் படையின் பாத்திரத்தை வகித்த அல்லது மக்களுடன் ஓர் இணைப்புப் பாலமாகச் சேவை செய்த போதிலும், இறுதிவரை எல்லாரும் புரட்சியாளராக இருப்பர் எனச் சொல்ல முடியாது. நெருக்கடியான தருணங்களில் சிலர் புரட்சி அணிகளை விட்டு விலகிச் செயலற்ற நிலையில் ஆழ்ந்துவிடுவர். அதே வேளையில் ஒரு சிலர் புரட்சியின் எதிரிகளாகக்கூட மாறி விடுவர். ஒரு நீண்டிகால மக்கள் திரள் போராடடங்களில் தான் அறிவுத்துறையினர் தமது இந்தக் குறைபாடுகளை வெற்றி கொள்ள முடியும்.

(சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் – டிசம்பர் 1939)

Sunday 7 January 2018

29. ஊழியர்கள் - மா சே துங்

நமது கட்சி அமைப்புகள் நாடு முழுவதிலும் விரிவாக்கப்பட வேண்டும், நாம் பல பத்தாயிரம் ஊழியர்களை உணர்வுபூர்வமாக பயிற்றுவிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான தலை சிறந்த மக்களின் தலைவர்களைப் பெற்றிருக்க வேண்டும். அந்த ஊழியர்களும் தலைவர்களும்,  மார்க்சிய – லெனினியத்தில் தேர்ச்சியும், அரசியல் ரீதியில் தொலைநோக்குப பார்வையும், வேலையில் திறமையும், முற்றான சுய-தியாக உணர்வும், பிரச்சினைகளைச் சுதந்திரமாகத் தீக்கும் ஆற்றலும், கஷ்டங்கள் மத்தியில் நிதானமும், தேசம், வர்க்கம், கட்சி இவற்றுக்குத் தொண்டு செய்வதில் விசுவாசமும் அர்ப்பண சிந்தையும் உடையவர்களாக இருக்க வேண்டும.

உறுப்பினர்களுடனும் மக்களுடனும் கொள்ளும் அதன் தொடர்புகளுக்கு கட்சி அவர்களைத் தான் சார்ந்திருக்கின்றது. மக்கள்திரளுக்கு அவர்கள் அளிக்கும் உறுதியான தலைமையைச் சார்வதன் மூலம், எதிரியைத் தோற்கடிப்பதில் கட்சி வெற்றி பெற முடியும். இத்தகைய ஊழியர்களும் தலைவர்களும் சுயநலம், தனிநபர் வீரவாதம், வெளிப்பகட்டு, சோம்பல், செயலற்றநிலை, செருக்குடைய குறுங்குழுவாதம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற்ற, சுயநலமற்ற தேதிய வீரர்களாகவும், வர்க்க வீரர்களாகவும் திகழ வேண்டும். நமது கட்சியின் உறுப்பினர்கள், ஊழியர்கள், தலைவர்களுக்குத் தேவையான பண்புகளும் வேலை நடையும் இத்தகையவையே.
(ஜப்பானிய – எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணிக்கு மக்கள்
கோடிக் கணக்கில் வென்றெடுப்போம் – 7 மே 1937)

ஊழியர்களை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஆராய்ந்து பார்த்தால், தலைமைக்கு கருத்துக்களை முன்வைப்பது, ஊழியர்களை பயன்படுத்துவது என்ற இரண்டு பொறுப்புகள் உண்டு. திட்டங்கள் வகுப்பது, தீர்மானங்கள் எடுப்பது, கட்டளைகள், உத்தரவுகள் பிறப்பிப்பது போன்றவை “கருத்துகளை முன்வைக்கும்” வகையைச் சேர்ந்தவை. கருத்துகளை செயல்படுத்த வேண்டுமானால், நாம் ஊழியர்களை ஐக்கியப்படுத்தி, செயலில் இறங்கும்படி அவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும். இது “ஊழியர்களை நன்கு பயன்படுத்துவ”தைச் சேர்ந்ததாகும்.
(தேசிய யுத்தத்தல் சீனக் கம்யூனீஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

ஊழியர்கள் நல்வழியில் ஈடுபடுத்துவது எப்படி என்பதை நாம் அறிய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு பலவழிகள் உள்ளன

முதலாவதாக, அவர்களுக்கு வழிகாட்டுவது. இதன் பொருள், அவர்கள் பொறுப்புகளை ஏற்கும் துணிவு பெறுவதற்காக, அவர்களுடைய வேலையில் அவர்களைச் சுதந்திரமாய் விடுவதாகும். அதே வேளையில் கட்சியின் அரசியல் திசைவழியின் வழி காட்டுதலில் தமது முன் முயற்சியை முற்றாக வெளிப்படுத்துவதற்காக, அவர்களுக்கு காலா காலத்தில் அறிவுரை கூறவேண்டும்.

இரண்டாவதாக, அவர்களுடைய தரத்தை உயர்த்துவது. இதன் பொருள், அவர்கள் தமது தத்துவ விளக்கத்தையும், வேலை ஆற்றலையும் விரிவு படுத்துவதற்காக, அவர்களுக்குப் படிக்கும் வாய்ப்பை அளித்து, அவர்களைக் கற்பிப்பதாகும்.

மூன்றாவதாக, அவர்களுடைய வேலையை சரிபார்த்து, தமது அனுபவத்தைத் தொகுக்கவும் தமது சாதனைகளைப் பெருக்கவும், பிழைகளைத் திருத்தவும் அவர்களுக்கு உதவி செய்வது. சரிபார்க்காமல் அவர்களுக்கு வேலை வழங்குவது. பாரதூரமான தவறுகள் ஏற்பட்ட பின்னர் மாத்திரம் கவனம் செலுத்துவது – இது ஊழியர்கள் மீது அக்கறை செலுத்தும் முறையல்ல.

நான்காவதாக, தவறுகள் இழைத்த ஊழியர்களைப் பொறுத்தவரையில், பொதுவாக அறிவுறுத்தி இணங்கச் செய்யும் முறையை பயன்படுத்தி, தமது பிழைகளைத் திருத்த அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டும். பாரதூரமான தவறுகள் இழைத்த பின்பும், வழிகாட்டலை ஏற்க மறுக்கும் ஊழியர்களுக்கு மட்டும் போராட்ட முறையை உபயோகிக்க வேண்டும். இங்கு பொறுமை அவசியமானது. ஆட்களுக்கு “சந்தர்ப்பவாதிகள்” என்று சுலபமாக முத்திரை குத்துவதும், அவர்களை எதிர்த்து இலேசமாகப் “போராட்டங்கள் தொடுக்க” தொடங்குவதும் தவறு ஆகும்.

ஐந்தாவதாக, அவர்களுடைய கஷ்டங்களில் கவனம் செலுத்துவது. நோய், வாழ்வு, குடும்பம் முதலியவற்றின் தொல்லைகள் காரணமாக ஊழியர்கள் கஷ்டப்படும் போது, நாம் நிச்சயம் அவர்கள் மீது சாத்தியமான அளவு கவனம் செலுத்த வேண்டும். ஊழியர்களை நன்றாகக் கவனிப்பது என்பது இதுவேயாகும்.
(தேசிய யுத்தத்தல் சீனக் கம்யூனீஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

கட்சி ஊழியர்கள் மீது மாத்திரம் அல்ல, கட்சியில் இல்லாத ஊழியர்கள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் புறக்கணிக்க முடியாத திறமைசாலிகள் பலர் கட்சிக்கு வெளியில் இருக்கின்றனர். தனிமை, செருக்கு – இவற்றில் இருந்து தன்னை விடுவித்து. கட்சியில் இல்லாத ஊழியர்களுடன் நன்றாக வேலை செய்து அவர்களுக்கு விசுவாசமான உதவியளித்து, அவர்கள் மீது ஒர் ஆர்வம் நிறைந்த, தோழமைக் கண்ணோட்டத்தை மேற்கொண்டு, ஜப்பானை எதிர்த்து, தேசத்தைப் புனரமைக்கும் மாபெரும் இலட்சியத்தில் அவர்களை முன்முயற்சி எடுக்கச் செய்வது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)


28. கம்யூனிஸ்டுகள் - மா சே துங்

ஒரு கம்யூனிஸ்ட் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர் போல் கருத வேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்கக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாடைக் கடைபிடித்து, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராகச் சளையாத போராட்டம் நடத்த வேண்டும், இவ்வாறு, கட்சியின் கூட்டு வாழ்வை உறுதிப்படுத்தி, கட்சிக்கும் மக்கள்திரளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனிநபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறையும், தன்னைவிடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கருத முடியும்
(தாராளவாத்தை எதிர்ப்போம் – 7 செப்டம்பர் 1937)

ஒரு கம்யூனிஸ்ட்டின் சொற்களையும், செயல்களையும் உறைத்துப் பார்க்கும் அதி உயர்ந்த முறை யாதெனில், அவை ஏகப் பெரும்பான்மையான மக்களின் அதி உயர்ந்த நலன்களுக்கு இசைவாக இருக்கின்றனவா, இல்லையா, அவர்களுடைய ஆதரவைப் பெறுகின்றனவா, இல்லையா என்று பார்ப்பதாகும். இதை நமது தோழர்கள் எல்லோரும் உணரும்படி செய்ய வேண்டும்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

கம்யூனிஸ்டுகள் மிகத் தொலைநோக்குப் பார்வையுடையவர்களாகவும், மிகுதியும் சுய உணர்வு உடையவர்களாகவும், மிக உறுதியானவர்களாகவும், நிலைமைகளைக் கணிப்பதில் பாரபட்சம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பான்மை மக்களைச் சார்ந்து, அவர்களுடைய ஆதரவை வென்றெடுக்க வேண்டும்.
(ஜப்பான் – எதிர்ப்பு யுத்த காலத்தில் சீனக் கம்யூனிஸ்டுக்
கட்சியின் கடமைகள் – 3 மே 1937)

கம்யூனிஸ்டுகளாகிய நாம் விதை போன்றவர்கள், மக்கள் மண் போன்றவர்கள், செல்லும் இடமெங்கும், நாம் மக்களுடன் ஐககியப்பட்டு, அவர்கள் மத்தியில் வேர் ஊன்றி, மலர வேண்டும்.
(சுங்கிங் பேச்சுவார்த்தைகள் பற்றி – 17 ஆக்டோபர் 1945)

கம்யூனிஸ்டு ஒருவர், தான் மட்டும் எல்லாவற்றிலும் மேலானவர், பிறர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற அகங்கார எண்ணம் படைத்தவராகவோ அல்லது இறுமாப்பு உடையவராகவோ இருக்கக் கூடாது. அவர் தனது சிறிய அறையில் முடங்கிக் கிடக்கவோ அல்லது ஜம்பம் அடிக்கவோ, பீற்றிக்கொள்ளவோ அல்லது பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது.
(ஷென்சி – கான்சு – நிங்ஷியா எல்லைப் பிரதேச பிரதிநிதிகள்
அவைச் சொற்பொழிவு – 21 நவம்பர் 1941)

கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும கட்சிக்கு வெயிலுள்ள மக்களின் கருத்தோட்டங்களை கவனமாகக் கேட்க, அவர்களுக்குத் தமது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், நாம் அதை வரவேற்க வேண்டும். அவர்களுடைய பலமான அம்சங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது தவறாக இருந்தால், அவர்கள் சொல்வதை முழுவதுமாக்கச் சொல்லவிட்டு, பின்னர் அவ்விசயங்கள் பற்றி அவர்களுக்குப் பொறுமையோடு விளக்க வேண்டும்.
(ஷென்சி – கான்சு – நிங்ஷியா எல்லைப் பிரதேச பிரதிநிதிகள்
அவைச் சொற்பொழிவு – 21 நவம்பர் 1941)


27. விமர்சனமும் சுய – விமர்சனமும் – மா சே துங்

கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்சியவாதிகள், உண்மை நம் பக்கத்தில் இருக்கிறது, அடித்தள மக்களான தொழிலாளரும், விவசாயிகளும் நம் பக்கத்தில் இருக்கின்றனர்.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை – 12 மார்ச் 1957)

முற்றான பொருள்முதல்வாதிகள் அச்சமற்றவர்கள். நமது சக போராளிகள் எல்லாரும் துணிகரமாகத் தமது பொறுப்புகளுக்குத் தோள்கொடுப்பர், இடர்பாடுகள் அனைத்தையும் கடந்து செல்வர், பின்னடைவுகளுக்கோ அல்லது ஏளனங்களுக்கோ அஞ்ச மாட்டார்கள். கம்யூனிஸ்டுகளாகிய எங்களை விமர்சனம் செய்வதற்கும், தமது ஆலோசனைகளைக் கொடுப்பதற்கும் தயங்க மாட்டார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். “ஆயிரம் வெட்டுகளாலும் இறப்பதற்கு அஞ்சாத ஒருவன் தான், சக்ரவர்த்தியைக் குதிரையிலிருந்து இழுத்து வீழ்த்தும் துணிவுடையவன்”- இதுவே சோஷலிசத்தையும் கம்யூனிசத்தையும் கட்டி வளர்க்கும் நமது போராட்டத்தற்குத் தேவையான தளராத உணர்வு.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை – 12 மார்ச் 1957)

நாம் ஊக்கமான சீத்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். காரணம், அது நமது போராட்டத்திற்கு உதவியாக, கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கும் ஓர் ஆயுதமாக விளங்குகிறன்றது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஒவ்வொரு புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தாராளவாதம் சித்தாந்தப் போராட்டத்தை நிராகரித்து, போட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது, இதன் விளைவாக உளுத்துப்போன, பண்பற்ற கண்ணோட்டம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலும் உள்ள சில பிரிவுகளையும் தனிநபர்களையும் அரசியல் ரீதியில் சீர்குலைக்கின்றது.
(தாராளவாத்த்தை எதிர்போம் – 7 செப்டம்பர் 1957)

உட்கட்சி விமர்சனம் சம்பந்தமாகக் குறிப்பிட வேண்டிய இன்னொரு குறிப்பும் இருக்கின்றது. அதாவது சில தோழர்கள விமர்சனம் செய்யும் போது முக்கிய பிரச்சினைகளை மறந்து சிறிய விசயங்களில் தமது கவனத்தைச் செலுத்துகின்றனர். விமர்சனத்தில் பிரதான கடமை அரசியல், அமைப்புத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே என்பதை அவர்கள் கொள்ளவில்லை.

தனிப்பட்ட குறைபாடுகளை பொறுத்தவரையில், அவை அரசியல், அமைப்புத் தவறுகளுடன் தொடாபுடையவையாய் இருந்தால் ஒழிய, கூடுதலாக விமர்சனம் செய்வது அவசியம் இல்லை. அப்படிச் செய்தால் சம்பந்தப்பட்ட தோழர்கள் என்ன செய்வது என்று அறியாமல் தடுமாறிவிடுவர். இன்னும் இத்தகைய விமர்சனம் ஒருகால் வளர்ந்தால், கட்சிக்குள் சிறிய தவறுகளில் பிரத்தியேகக் கவனம் செலுத்தப்படும், ஒவ்வொருவரும் அஞ்சி, மிதமிஞ்சிய எச்சரிக்கையால், கட்சியின் அரசியல் கடமைகள் மறந்து விடுவர். இது மிகப் பெரிய அபாயமாகும்.
(கட்சியில் நிலவும் தவறான கருத்துகளைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

உட்கட்சி விமர்சனத்தில், அகநிலைவாதம், மனம் போன போக்கு, விமர்சனத்தை இழிவு படுத்தும் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கூற்றுகள் எப்பொழுதும் சான்றுகள் அடிப்படையாய்க் கொள்ள வேண்டும். விமர்சனம் அரசியல் அம்சத்தை வலியுறுத்த வேண்டும்.

உட்கட்சி விமர்சனம் என்பது கட்சி அமைப்பை பலப்படுத்தி, அதன் போராட்ட ஆற்றலைப் பெருக்கும் ஒரு ஆயுதம். இருந்தும் செம்படைக் கட்சி அமைப்பில், விமர்சனம் எப்பொழுதும் இப்படி இருப்பதில்லை. சில வேளைகளில் அது தனிநபர் தாக்குதலாக மாறிவிடுகின்றது. இதன் விளைவாக தனிநபருக்கு மாத்திரமல்ல, கட்சி அமைப்புக்கும் கேடு விளைவிக்கப்படுகின்றது. இது குட்டி முதலாளித்துவ வர்க்க தனிநபர்வாதத்தின் ஒரு வெளிப்பாடாகும். இதை திருத்தும் முறை யாதெனில், விமர்சனத்தின் நோக்கம் வர்க்கப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்காகக் கட்சியின் போராட்ட ஆற்றலைப் பெருக்குவதே என்றும், அதைத் தனிநபர் – தாக்குதலுக்கான ஒரு கருவியாய் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குவதாகும்.
(கட்சியில் நிலவும் தவறான கருத்துகளைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

எம்மிடம் குறைபாடுகள் இருந்தால், அவை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்படுவதற்கு நாம் அஞ்சவில்லை. ஏனெனில் நாம் மக்களுக்காகத் தொண்டு செய்கின்றோம். எவராயினும், அவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை, நமது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டலாம். அவரது விமாசனம் சரியானதாய் இருந்தால், நாம் அவற்றைத் திருத்திக்கொள்வோம். அவர் முனமொழிவது மக்களுக்கு நன்மை பயப்பதாயிருந்தால் நாம் அவற்றைச் செயல் படுத்துவோம்.
(மக்களுக்குத் தொண்டு செய்க – 8 செப்டம்பர் 1944)

விமர்சனத்தைப் பொறுத்தவரையில், அது சரியான சமயத்தில் செய்யப்பட வேண்டும். சம்பவம் நிகழ்ந்த பின்னர் மாத்திரம் விமர்சனம் செய்வதைப் பழக்கமாக்கி விடக்கூடாது.
(விசசாயத்தைக் கூட்டுறவுமயமாக்கும் பிரச்சினை பற்றி – 31 ஜீலை 1955)