Monday 3 January 2022

தனிவுடைமை ஒழித்து பொதுவுடைமை வருவது என்பது எந்த தனி மனிதர்கள் அல்லது குறுங்குழுக்களின் தனிப்பட்ட கனவு அல்ல. அதற்கான பொருளாதார நிலைமைகள் உருவாகும் போது சாத்தியமாக்கப்படுகிறது என்பது பற்றி எங்கெல்ஸ்:-

 “முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் முதற்கொண்டே, உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் சமுதாயமே கையகப்படுத்த வேண்டும் என்பது, தனிமனிதர்களும், குறுங்குழுக்களும் வருங்காலத்துக்குரிய இலட்சியம் என, அனேகமாகத் தெளிவான புரிதலின்றி, அடிக்கடி கண்டுவந்த கனவாக இருந்து வந்துள்ளது. ஆனால், அதன் நிறைவேற்றத்துக்கான எதார்த்த நிலைமைகள் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியம் ஆகமுடியும்; வரலாற்றுக் கட்டாயமாகவும் ஆகமுடியும். ஏனைய சமூக முன்னேற்றம் ஒவ்வொன்றையும் போன்றே, இதுவும் வர்க்கங்கள் நிலவுவது நீதிக்கும் சமத்துவத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் முரணாகுமென மனிதர்கள் புரிந்து கொள்வதாலோ, இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டுமென வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியம் ஆகிவிடாது.

குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகள் ஏற்படுவதால் மட்டுமே நடைமுறை சாத்தியம் ஆக முடியும். சமுதாயம், சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் எனவும், ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கம் எனவும் பிளவுபட்டதானது, முந்தைய காலகட்டங்களில் நிலவிய பற்றாக்குறையான, கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பும் ஈட்டுகின்ற உற்பத்திப் பொருள்கள், அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக் காட்டிலும் சற்றே கூடுதலாக மட்டுமே இருக்கும் வரையில், அதன் காரணமாகச் சமுதாய உறுப்பினர்களில் மிகப் பெரும்பான்மையினர் அவர்களின் முழு நேரத்தையும் அல்லது ஏறத்தாழ முழு நேரத்தையும் உழைப்பில் செலுத்த வேண்டியிருக்கும் காலம் வரையில், இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும்.

பிரத்தியேகமாய் உழைப்புக்குக் கொத்தடிமைகளாக விளங்கும் மிகப் பெரும்பான்மையின் அருகருகிலேயே, நேரடியான உற்பத்தி சார்ந்த உழைப்பிலிருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் உதித்தெழுந்துள்ளது. இவ்வர்க்கம், உழைப்பை நெறிப்படுத்தல், அரசு நிர்வாகம், சட்டம், விஞ்ஞானம், கலை, இதுபோன்ற இன்னபிற சமுதாயப் பொது விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறது. எனவே, உழைப்புப் பிரிவினை விதிதான், வர்க்கப் பாகுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. ஆனால் இவ்வாறு கூறுவது, இந்த வர்க்கப் பாகுபாடு, வன்முறையாலும் வழிப்பறியாலும், தந்திரத்தாலும் மோசடியாலும் நிலைநாட்டப்பட்டது என்று கூறுவதைத் தடுக்கவில்லை. ஆதிக்க நிலை பெற்றவுடன் ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தின் செலவில், தன் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டது என்றோ, அதன் சமூகத் தலைமைப் பதவியைச் சாதாரண மக்களைக் கொடூரமாகச் சுரண்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது என்றோ கூறுவதைத் தடுக்கவில்லை.

ஆனால், வர்க்கப் பாகுபாட்டுக்கு, மேலே காட்டியவாறு, ஓரளவு வரலாற்று நியாயம் உண்டு என்றபோதிலும், அதுகூடக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும்தான், குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் மட்டும்தான். உற்பத்திப் பற்றாக்குறையே இதன் அடிப்படையாக இருந்தது. நவீன உற்பத்தி சக்திகளின் முழுமையான வளர்ச்சியால் வர்க்கப் பாகுபாடு துடைத்தெறியப்படும். உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருப்பது முன்நிபந்தனை ஆகும். பரிணாம வளர்ச்சியின் அந்தக் கட்டத்தில், குறிப்பிட்ட ஏதோவோர் ஆளும் வர்க்கம் அல்ல, ஆளும் வர்க்கம் என்பதாக ஏதேனும் ஒரு வர்க்கம் நிலவுவதும், அதன் காரணமாக, வர்க்கப் பாகுபாடேகூட நிலவுவதும், காலாவதி ஆகிப்போன, காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகிவிடும். எனவே, உற்பத்திச் சாதனங்களையும், உற்பத்திப் பொருள்களையும், அதன்மூலம் அரசியல் ஆதிக்கம், கலாச்சார ஏகபோகம், அறிவுத்துறைத் தலைமை ஆகியவற்றையும், சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் கையகப்படுத்திக் கொள்வது தேவைப்படாததாய் ஆவது மட்டுமின்றி, அது பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, அறிவுத்துறை ரீதியாக, வளர்ச்சிக்கு இடையூறாகவும் ஆகிவிடும் அளவுக்கு, உற்பத்தியின் வளர்ச்சியைக் கொண்டு செல்வது, வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கான முன்நிபந்தனை ஆகும்.

இந்த வளர்ச்சிநிலை தற்போது எட்டப்பட்டுவிட்டது. அரசியல் துறையிலும் அறிவுத்துறையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கையாலாகாத்தனம் அவர்களுக்கே இனிமேலும் ஓர் இரகசியமாக இருக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரத் திவால்நிலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப தவறாமல் வெளிப்படுகிறது. ஒவ்வொரு நெருக்கடியிலும், சமுதாயம் தன்சொந்த உற்பத்தி சக்திகள், உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்த முடியாமல் அவற்றின் சுமையின்கீழ் சிக்கி மூச்சுத் திணறுகிறது. போதுமான நுகர்வோர் இல்லாத காரணத்தால், உற்பத்தியாளர்கள் நுகர்வதற்கு ஏதுமில்லை என்னும் இந்த அபத்தமான முரண்பாட்டைச் சமுதாயம் நேருக்குநேர் எதிர்கொண்டு, செய்வதறியாது நிற்கிறது. உற்பத்திச் சாதனங்களின் விரிவாக்கச் சக்தி, அவற்றின்மீது முதலாளித்துவ உற்பத்தி முறை சுமத்தியுள்ள கட்டுகளை உடைத்தெறிகிறது.

உற்பத்திச் சாதனங்கள் இந்தக் கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவது, உற்பத்தி சக்திகள் இடையறாது தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட வேகத்தில் வளர்ச்சி பெறவும், அதன் விளைவாக, நடைமுறையில் உற்பத்தி, வரம்பின்றி அதிகரிக்கவும் ஒரேயொரு முன்நிபந்தனையாகும். இது மட்டுமல்ல. உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் முழுமையும் கையகப்படுத்திக் கொள்வதானது, உற்பத்தி மீதான தற்போதைய செயற்கைக் கட்டுப்பாடுகளை ஒழித்துக் கட்டுகிறது. அதோடு மட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் உற்பத்தியின் தவிர்க்க முடியாத உடன்நிகழ்வுகளாகத் தோன்றி, நெருக்கடிகளின்போது அவற்றின் உச்சத்தை எட்டுகின்ற, உற்பத்தி சக்திகள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் நேரடியான விரயத்தையும், நாசத்தையும் ஒழித்துக்கட்டும். மேலும், இன்றைய ஆளும் வர்க்கங்கள், அவற்றின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் முட்டாள்தனமான ஊதாரிச் செலவுகளுக்கு முடிவு கட்டுவதன் மூலம், சமுதாயம் முழுமைக்குமாகத் திரளான உற்பத்திச் சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கும். [உற்பத்திச் சாதனங்களின் சமுதாய உடைமை] சமூகமயமான உற்பத்தியைப் பயன்படுத்தி, சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும், பொருளாயத ரீதியில் முற்றிலும் போதுமான, நாளுக்குநாள் மேலும் நிறைவானதாகிவரும் வாழ்க்கையை மட்டுமின்றி, அனைவருக்கும், அவர்களின் உடல் ஆற்றல்களையும், உள்ளத்து ஆற்றல்களையும் தங்குதடையின்றி மேம்படுத்தவும் செயல்படுத்தவும் உத்தரவாதம் அளிக்கின்ற வாழ்க்கையையும் பெற்றுத் தருவதற்கான சாத்தியப்பாடு இப்போது முதன்முதலாக இங்கே இருக்கிறது. ஆம், அது இங்கே இருக்கிறது.”

(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)