Sunday 28 May 2017

சமூகமும் மக்கள் செயல்பாடும் பற்றி மார்க்ஸ்

(மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பதை மிகவும் எளிமையாகப் பலர் புரிந்துகொள்கின்றனர். ஆனால் மார்க்ஸ் அவ்வாறு கூறவில்லை. அவர் தமது கருத்தை தெளிவாகவே முன்வைத்துள்ளார்)

என்ன வடிவத்தில் இருந்தாலும் சரியே, சமூகம் என்பது என்ன? மக்களின் பரஸ்வரச் செய்கையின் விளைபொருள். மனிதர்கள் தாங்களாகவே எதாவதொரு சமூகத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாக  இல்லை.

மனிதர்களின் உற்பத்திச் சக்திகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அனுமானித்துக கொள்ளுங்கள், வர்த்தகம் நுகர்வு பற்றிய ஒரு குறிப்பிட்ட வடிவம் உங்களுக்குக் கிடைக்கும். உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் நுகர்விலும் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களை அனுமானித்துக கொள்ளுங்கள், அவற்றிற்குப் பொருத்தமான ஒரு சமூக அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பும் படிப்பிரிவுகளின் அல்லது வர்க்கங்களின் அமைப்பும் – சுருங்கச் சொன்னால், ஒரு பொருத்தமான குடியுரிமைச் சமூகம்- உங்களுக்குக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட குடியுரிமைச் சமூகத்தை அனுமானித்துக கொள்ளுங்கள். அந்தக் குடியுரிமைச் சமூகத்தின் வெறும் அதிகாரபூர்வமான வெளிபாடாக இருக்கிற குறிப்பிட்ட அரசியல் அமைப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

இதைத் திரு.புரூதோன் என்றைக்கும் புரிந்து கொள்ளமாட்டார் ஏனெனில் அரசு எனும் நிலையில் நின்று கொண்டு சமூகத்துக்கு – அதாவது, சமூகத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான பொழிப்பின் நிலையில் நின்றுகொண்டு அதிகாரபூர்வமான சமூகத்துக்கு- வேண்டுகோள் விடுப்பதில் தாம் பெரிதாக ஏதோ செய்வதாக அவர் நினைத்துக் கொள்கிறார்.

தமது வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரம் உள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை. ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும். முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும், ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்களுக்கு முன்பே- அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு- இருந்துவரும் சமூக வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னிட்டு வரும் ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையால் பெறப்பட்ட உற்பத்திச் சக்திகளைக் கைவரப் பெறுகிறது, அது புதிய உற்பத்திக்குரிய மூலப்பொருளாக அதற்குப் பயன்படுகிறது.

இந்த எளிய உண்மையின் காரணமாக மனித வரலாற்றிலே ஒரு கூட்டுப்பொருத்தம் உண்டாகிறது, மனித குலத்தின் வரலாறு உருப்பெறுகிறது, மனிதனின் உற்பத்திச் சக்திகளும் எனவே அவனுடைய சமூக உறவுகளும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வளர்க்கப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு வரலாறானது மனிதகுல வரலாறாக அமைகிறது. எனவே, மனிதர்களின் சமூக வரலாறு எனப்பட்டது எப்போதும் அவர்களின் தனிநபர் வளர்ச்சியின்- அதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் இராவிட்டாலும் சரி- வரலாறு தவிர வேறில்லை. அவர்களின் பொருளயத உறவுகளே அவர்களின்உறவுகளனைக்கும் அடிப்படை. இந்தப் பொருளாதார உறவுகள் அவசியகரமான வடிவங்கள் மட்டுமே, அவற்றில் அவர்களுடைய பொருளாயத மற்றும் தனிநபர் வகைப்பட்ட செயல்கள் நடக்கின்றன.
(மார்க்ஸ், பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய கடிதம் 1846)

Saturday 27 May 2017

தமது கண்டுபிடிப்புகளைப் பற்றி மார்க்ஸ்


“… என்னைப் பொருத்தவரையிலும், நவீன சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ அல்லது அவர்களுக்கிடையே நடைபெறுகின்ற போராட்டத்தையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேர்ந்ததல்ல. எனக்கு வெகு காலத்துககு முன்பே முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுரீதியான வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்ளமைப்பையும் வர்ணித்திருக்கிறார்கள்.

நான் புதியதாக என்ன செய்தேன் என்றால், அது கீழ்க் கண்டவற்றை விளக்கியது தான்:

1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.

3) இந்த சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும், வர்க்கபேதமற்ற சமூகத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தை மட்டுமல்லாமல் வர்க்கங்கள் இருப்தைக் கூட மறுக்கின்ற ஹைன்ஸென் போன்ற அறிவில்லாத முட்டாள்கள் – அவர்கள் என்னதான் இரத்தம் சுண்டக் கூக்குரல் போட்டாலும், தங்களுக்கு மனிதாபினாத் தோற்றத்தைக் கொடுத்துக் கொண்ட போதிலும்- முதலாளித்துவ வர்க்கம் ஆட்சி செய்கின்ற சமூக  நிலைமைகளை வரலாற்றின் கடைசிப் பொருளாக, அடையக் கூடிய உச்சநிலை ஆகக் கருதுகிறார்கள் என்பதையும் அவர்கள் முதலாளிகளின் ஊழியர்கள் என்பதை மட்டுமே நிரூபிக்கிறார்கள். முதலாளித்துவ ஆட்சியின் கட்டாயமான தற்காலிகத் தன்மையையும் அதன் அளவையும் இந்த முட்டாள்கள் எவ்வளவு குறைவாகப் புரிந்து கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுடைய குற்றேவல் அதிக அருவருபபுடையதாக இருக்கிறது".
(யோசிஃப் வெய்டமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து – மார்ச் 5, 1852)

Friday 26 May 2017

தொழிற்சங்கப் போராட்டம் ஒர் அரசியல் போராட்டமே. அரசியல் போராட்டம் வர்க்கப் போராட்டமே. வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே புரட்சி – மார்க்ஸ்

(தத்துவத்தின் வறுமை- 1847)

தொழிலாளர்கள் தங்கள் ஒன்றுபடுத்துவதற்காக எடுக்கும் முதன்முதலான முயற்சிகள் எப்போதும் சங்கங்கள் வடிவத்தில் நடக்கின்றன.

ஒருவரையொருவருவர் முன்பின்னறியாதவர்களான திரளான மக்களைப் பெருமளவான தொழில்துறை ஒரே இடத்தில் சேர்த்துக் குவிக்கிறது. போட்டி அவர்களின் நலன்களைப் பிரிக்கிறது. எனினும் தமது எஜமானனுக்கு எதிராக அவர்களுக்குப் பொதுவான நலனாக விளங்கும் கூலியைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களைச் சங்கம் எனும் ஒரு பொதுவான எதிர்ப்புச் சிந்தனையிலே ஒன்றுபடுத்துகிறது. ஆக, சங்கத்துக்கு எப்போதும் ஓர் இரட்டை நோக்கு உண்டு-தொழிலாளர்களிடையேயுள்ள போட்டியை நிறுத்துவது, அதன் வழியே அவர்கள் முதலாளியை எதிர்த்துப் பொதுவான போட்டியை நடத்திச் செல்லச் செய்வது, என்று. கூலியைப் பாதுகாப்பது மட்டுமே எதிர்ப்பின் முதல் நோக்காக இருந்தது என்றால், அடக்கியொடுக்கும் நோக்குடன்  முதலாளிகள் தம் முறைக்கு ஒன்றுபடுகிற பொழுது, முதலில் தனித்தனியே இருந்த சங்கங்கள் குழுக்களாக அமைத்துக் கொள்கின்றன. மேலும் கூலியைப் பாதுகாப்பதைக் காட்டிலும் எப்போதும் ஒன்று பட்டிருக்கும் மூலதனத்தை எதிர்ப்பதில் சங்கத்தைப் பாதுகாப்பது அவர்களது அதிக அவசியமாகிவிடுகிறது. கூலிக்கா மட்டுமே இந்தச் சங்கங்கள் நிறுவப்பட்டதாகக் கருதிக் கொள்ளும் ஆங்கிலேயப் பொருளாதாரவாதிகள் தொழிலாளர்கள் தமது சங்கத்துக்காகக் கூலியில் கணிசமான பகுதியைத் தியாகம் செய்கிறதைப் பார்த்துத் திகைத்துவிடும். அளவுக்கு இது ஒரு உள்நாட்டுப் போர் ஆகும் – வரவிருக்கும் சண்டைக்காக எல்லாக் கூறுகளும் ஒன்றுபட்டு வளர்கின்றன. இந்த முனையை எட்டியவுடன் சங்கம் ஓர் அரசியல் தன்மையைப் பெறுகிறது.
வாக்கங்களின் பகைமை மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது உயிர்நிலையான நிபந்தனையாகும். எனபே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை என்பது அவசியமான முறையிலே ஒரு புதிய சமூகத்தைப் படைப்பதை உட்கிடையாகக் கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியத் தேவை, ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும் உற்பத்திச் சக்திகளும் இருந்து வரும் சமூக உறவுகளும் மேலும் அக்கம் பக்கமாக இருந்துவர முடியாதவையாக ஆகவேண்டும். உற்பத்திக் கருவிகனைத்திலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்திச் சக்தி புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமாகும். வர்க்கம் என்கிற வகையில் புரட்சிகரமான நபர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்துதல் பழைய சமூகத்திலுள்ள வளர்க்கப்படக்கூடிய உற்பத்திச் சக்திகள் அனைத்தும் இருப்பதை அனுமானிக்கிறது.

இதற்குப் பொருள் பழைய சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு புதிய வர்க்கத்தின் ஆதிக்கம் ஏற்பட்டு அது ஒரு புதிய அரசியல் அதிகாரத்தில் போய் முடியும் எனபதா? இல்லை.

எல்லாப் படிப்பிரிவுகளையும் சிறப்புரிமைக் குழுக்களையும் ஒழித்துவிடுவது மூன்றாவது படிப்பிரிவின், முதலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு நிபந்தனையாக இருந்தது போலவே, எல்லா வர்க்கங்களையும் ஒழித்துவிடுவது தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு நிபன்தனையாகும்.

தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே முதலாளித்துவச் சமூகத்துக்குப் பதிலாக எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை  அமைக்கும், முழு அர்த்தத்தில் அரசியல் அதிகாரம் இனிமேல் இராது, ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவ சமூகத்திலுள்ள பகைமையின் அதிகார பூர்வமான வெளிப்பாடாகும்.

இதற்கிடையே தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள பகைமை வர்க்கத்துககு எதிராக வர்க்கம் நடத்தும் ஒரு போராட்டாகும், அதன் உச்சநிலை வெளிப்பாடு ஒரு முழுமையான புரட்சியே. உண்மையிலே பார்த்தால், வர்க்கங்களின் எதிர்ப்பின் மீது நிறுபப்பட்ட ஒரு சமூகம் அதன் இறுதி விளைவாக மூர்க்கத்தனமான முரண்பாட்டிலே, உடலோடு உடல் மோதிக் கொள்ளும் அதிர்ச்சியிலே, போய் முடிவதில் வியப்புண்டா?

சமூக இயக்கம் அரசியல் இயக்கத்தை விலக்கி வைக்கிறது என்று சொல்லாதீர்கள். ஒரு அரசியல் இயக்கம் அதே நேரத்தில் சமூக இயக்கமாக அல்லாமல் என்றைக்கும் இருந்ததில்லை.

வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் மேற்கொண்டு இல்லாதிருக்கும் ஒர் அமைப்பு முறையிலேதான் சமூகப் பரிணாமங்கள் அரசியல் புரட்சியாக இருப்பது நின்றுவிடும். அதுவரை, சமூகத்தின் ஒவ்வொரு பொதுவான மாற்றத்தின் தருவாயிலும் சமூக விஞ்ஞானத்தின் இறுதி மொழி இவ்வாறுதான் எப்போதும் இருந்து வரும்:

“சண்டை அல்லது சாவு, இரத்தஞ்சிந்தும் போராட்டம் அல்லது அழிவு. பிரச்சினை இப்படித்தான் ஈவிரக்கமின்றி கோராப்படுகிறது.”

(ழார்ழ் சாண்டு)

Thursday 25 May 2017

மூலதனம் என்றால் என்ன? – எங்கெல்ஸ்

(மூலதனம், உழைப்பு சக்தி பற்றி எங்கெல்ஸ் மிகவும் சுருக்கமாக விளக்குகிறார்)

மூலதனம் என்றால் என்ன? பணமாக இருப்பதைப் பண்டமாக மாற்றி, அப்பண்டத்தை மீண்டும் பணமாக மாற்றி முன்னைவிட அதிகப் பணமாகக் கொள்வதற் கான பணம் அது நான் பருத்தியை 100 தேலர்களுக்கு வாங்கி 10 தேலர்களுக்கு விற்கும்போது என்னுடைய 100 தேலர்களை மூலதனமாக பெருகுகிற மதிப்பாகவே இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறேன். நான் லாபமாகப் பெறும் இந்த 10 தேலர்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி கிளம்புகிறது. இரு சாதாரண பரிவர்த்தனைகளின் விளைவாக 100 தேலர்கள் 110 தேலர்களாக ஆவது எப்படி? எல்லா பரிவர்த்தனைகளிலும் சம மதிப்புகள்தானே மாற்றப்படும் என்று அரசியல் பொருளாதாரம் வரையறுத்துக் கூறுகிறது. ஆரம்பத்திலிருந்த 100 தேலர்களிலிருந்து 10 தேலர்களை உபரி மதிப்பாக உண்டாக்க பொருளியலாளர் பாவனை மேற்கொள்ளும் நிலைமைகளில் சாத்தியமில்லை என்பதை நிரூபிக்கும் பொருட்டு (பண்டங்களின் விலைகளின் ஏற்ற இறக்கம் போன்ற) எல்லா சாத்தியமான உதாரணங்களையும் மார்க்ஸ் பரிசீலிக்கிறார் என்றாலும் இந்த நடைமுறை தினசரி நிகழ்கிறது. ஆனால் பொருளியலாளர் நமக்கு இதற்கான விளக்கத்தைத் தரவில்லை. மார்க்ஸ் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்: பரிமாற்ற மதிப்பை உற்பத்தி செய்யும் தன்மையுடைய பயன்பாட்டு மதிப்பு வாய்ந்த அறவே பிரத்தியேகமான பண்டம் ஒன்றை மார்க்கெட்டில் காண முடிந்தால் தான் இப்புதிரை விடுவிக்க முடியும். அந்தப் பண்டம் நிலவி வருகிறது, அதுதான் உழைப்பு சக்தி முதலாளி உழைப்பு சக்தியை மார்க்கெட்டில் விலைக்கு வாங்குகிறான். அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருளை விற்பதன் பொருட்டுத் தனக்காக அந்த உழைப்பு சக்தியை வேலை செய்யும்படி செய்கிறான். எனவே முதன்முதலில் நாம் உழைப்பு சக்தியைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும்.

உழைப்பு சக்தியின் மதிப்பு என்ன? பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விதியின்படி, ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வரலாற்று சகாப்தத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்று முறையில் நிலைநாட்டப்பட்டுவிட்ட வழியில் தன்னைப் பராமரித்துக் கொள்ளவும், மேலும் இனவிருத்தி செய்து கொள்வதற்கும் தேவையான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்புதான் அது. தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பு சக்தியின் மதிப்பு முழுவதற்குமான ஊதியம் கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். மேலும் இம்மதிப்பு தினசரி 6 மணி நேர வேலை அல்லது அரைநாள் வேலை உழைப்பிற்குச் சமம் என்றும் வைத்துக் கொள்வோம். ஆனால் முதலாளியோ தான் ஒரு வேலைநாள் முழுவதற்குமாக உழைப்பு சக்தியை வாங்கி விட்டதாக வாதாடுகிறான். தொழிலாளியைப் பன்னிரெண்டு மணியும் அதற்கும் அதிகமான நேரமும் வேலை செய்ய வைக்கிறான். எனவே பன்னிரெண்டு மணி நேரம் கொண்ட வேலைநாளில் ஆறு மணி நேரத்தில் உற்பத்தியான பொருளை, அதற்கான கூலியைக் கொடுக்காமலேயே, முதலாளி தனதாக்கிக் கொள்கிறான். முதலாளியின் லாபம், நில வாடகை வரிகள் இத்தியாதி என்னும் எல்லாவிதமான உபரி மதிப்பும் விலை கொடுக்கப்படாத உழைப்புதான் என்று இதிலிருந்து மார்க்ஸ் முடிவு கட்டுகிறார்

(மார்க்ஸ் மூலதனம் முதல் தொகுதி பற்றி மதிப்புரை- அக்டோபர் 12, 1867.)

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்தியில் முதலாளி தேவையற்ற வர்க்கமாகிறார் – எங்கெல்ஸ்

(சமூகத்தின் அவசியமான வர்க்கங்களும் மிகையான வர்க்கங்களும் (1881)- பகுதி)

சமூகத்திலுள்ள வெவ்வேறு வர்க்கங்கள் எந்த அளவுக்கு உபயோகமாக- அல்லது அவசியமாகக்கூட- இருக்கின்றன என்ற கேள்வி அடிக்கடி கேட்ககப்படுகிறது. இதற்கு பதில் சரித்திர ரீதியில் ஒவ்வொரு வேறுபட்ட சகாப்தத்துக்கும் ஒவ்வொரு விதமாக இருந்தது இயற்கையே. பிரதேச ரீதியான பிரபுக்குலம் சமூகத்தின் தவிர்க்க முடியாத, அவசியமான பகுதியாக இருந்த காலம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது மிகமிக நெடுங்கலத்துக்கு முந்தியது.

அதன் பிறகு முதலாளித்துவ மத்திய தர வர்க்கம் – அதைப் பிரெஞ்சுக்காரர்கள் பூர்ஷ்வா என்று குறிப்பிடுகின்றனர்- அதே அளவுக்குத் தவிர்க்க முடியாத அவசியத்துடன் ஒரு காத்தில் தோன்றியது. அது பிரதேசரீதியான பிரபுக்குலத்தை எதிர்த்துப் போராடி அதன் அரசியல் சக்தியை முறியடைத்துப பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மேலாதிக்கத்தைப் பெற்றது. ஆனால் வர்க்கங்கள் தோன்றிய காலத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் இல்லாமல் சமூகம் இயங்கக்கூடிய காலம் ஒருபோதும் இருக்கவில்லை. அந்த வர்க்கத்தின் பெயர், சமூக அந்தஸ்து மாறிவந்திருக்கிறது, அடிமையின் இடத்தைப் பண்ணையடிமை பெற்றான், பிறகு அவனிடத்துக்கு சுதந்திரமான உழைக்கும் மனிதன் வந்தான். அவன் அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரமானவன் என்பது மட்டுமல்ல, தன்னுடைய சொந்த உழைப்புச் சக்தியைத் தவிர மற்ற பூமிக்குரிய எல்லா உடைமைகளில் இருந்தும் சுதந்திரமானவன். ஆனால் ஒன்று தெளிவானதாகும். எல்லா விதமான சந்தர்ப்பங்களிலும் இந்த வர்க்கம் அவசியமானதாக இருக்கிறது. ஆனால் அது இனியும் வர்க்கமாக இல்லாத முழுச் சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் காலம் நிச்சயம் வரும்.
முதலாளித்துவ மத்தியதர வர்க்கத்தின் பொருளாதாரச் செயல் நீராவித் தொழில்களையும் நீராவிச் செய்திப் போக்குவரத்துக்களையும் கொண்ட நவீன அமைப்பைப் படைத்து அந்த அமைப்பின் வளர்ச்சியைத் தாமதப்படுத்கின்ற அல்லது தடை செய்கின்ற ஒவ்வொரு பொருளாதார மற்றும் அரசியல் தடையையும் அழிப்பது என்பது மெய்யே. முதலாளித்துவ மத்தியதர வர்க்கம் இந்தச் செயலை நிறைவேற்றிய மட்டில் – அந்த சந்தர்ப்பங்களின் கீழ்- அது அவசியமான வர்க்கமாக இருநதது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது இனியும் அவசியமான வர்க்கமா? பரந்த சமூகத்தின் நன்மைக்காக நடைபெறுகின்ற சமூக உற்பத்தியை நிர்வகித்து விரிவுபடுத்துகின்ற அவசியமான செயலை அது தொடர்ந்து நிறைவேற்றுகிறதா? இதைப் பற்றி ஆராய்வோம்.

முதலில் செய்தித் தொடர்புச் சாதனங்களை எடுத்துக் கொள்வோம். தந்தித் தொடர்புச் சாதனம் அரசாங்கத்தின் கைகளில் இருப்பதைப் பார்க்கிறோம். இரயில்வே அமைப்புக்களும் நீராவிக் கப்பல்களில் பெரும்பகுதியும் தங்களுடைய சொந்தத் தொழிலைத் தாங்களே நிர்வகிக்கின்ற தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தமானவை அல்ல. அவை கூட்டுப்பங்குக் கம்பெனிகளுக்குச் சொந்தமானவை. அத்தொழிலை ஊதியம் பெறுகின்ற ஊழியர்களை நிர்வகிக்கிறார்கள், இவர்கள் அநேகமாக உயர்வபான, அதிகமான ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களாகவே இருப்பார்கள். இயக்குநர்களையும் பங்குதாரர்களையும் பொறுத்தவரை முதலாவதாகச் செல்லப்பட்டவர்கள் நிர்வாகத்திலும் இரண்டாவதாகச் சொல்லப்பட்டவர்கள் நிர்பாகத்திலும் இரண்டாவதாகச் சொல்லப்பட்டவர்கள் மேற்பார்வையிலும் எவ்வளவு குறைவாகத் தலையிடுகின்றார்களோ அவ்வளவு அந்தக் கம்பெனிக்கு நன்மையைத் தரும் என்பது இருவருக்குமே தெரியும்.

கண்டிப்பில்லாத, முற்றிலும் மேலெழுந்தவாரியான மேற்பார்வை மட்டுமே தொழிலின் உடைமையாளர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வேலை என்பது உண்மையே. இந்த மாபெரும்  நிறுவனங்களின் முதலாளிகளுக்கு அரை வருடாந்தர லாப ஈவுச்சீட்டுகளைக் காட்டிப் பணம் பெறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் அவற்றைப் பொறுத்த மட்டில் இல்லை என்பது உண்மை என்பதை நாம் பார்க்கிறோம். முதலாளிகளின் சமூகச் செயல் இங்கே கூலி பெறுகின்ற ஊழியர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் அவர் தன்னுடைய லாப ஈவுத் தொகைகளை, அவர் நிறைவேற்றாத வேலைகளுக்கான ஊதியத்த் தொடர்ந்து பெற்றுக்கொள்கிறார்.

இங்கே குறிப்பிடப்பட்ட பெரிய நிறுவனங்களின் அளவு காரனமாக அவற்றின் நிர்வாத்திலிருந்து “ஒய்வெடுக்கும்படி” நிர்பந்திக்கப்பட்ட முதலாளிக்கு மற்றொரு செயல் இன்னும் எஞ்சியிருக்கிறது. பங்குச் சந்தையில் தன்னுடைய பங்குகளைக் கொண்டு சூதாடுவது இந்தச் செயலாகும். இதைக் காட்டிலும்  சிறப்பான வேறு வேலை இல்லாத காரணத்தால் நம் “ஓய்வுபெற்ற” அல்லது அகற்றப்பட்ட முதலாளிகள் இந்தப் பணக்கடவுளின் ஆலயத்தில் விரும்பிய அளவுக்குச் சூதாடுகிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதாகப் பாசாங்க செய்தார்களே, அந்தப் பணத்தை எடுக்கின்ற திட்டவட்டமான உத்தேசத்தோடு அங்கே போகிறார்கள்.

எல்லா உடைமைகளுக்கும் உழைப்பு மற்றும்  சிக்கனமே தோற்றுவாய் என்று அவர்கள் கூறினாலும் – ஒரு வேளை தோற்றுவாயாக இருக்கலாம், ஆனால் நிச்சயமாக முடிவு அல்ல. கோடிக்கணக்கான ரூபாய்கள் தோற்கப்படுகின்ற அல்லது வெற்றியடையப்படுகின்ற மாபெரும் சூதாட்ட நிலையம் நம்முடைய முதலாளித்துவ சமூகத்துககு அவசியமாக இருக்கின்ற பொழுது அற்பமான சூதாடுமிடங்களைக் கட்டாயமாக மூடுவது எவ்வளவு போலித்தனம்! “ஓய்வு பெற்ற”, பங்குமூலதனம் வைத்திருக்கின்ற முதலாளி இருப்பது இங்கே மிகையானது மட்டுமல்ல- அது முற்றிலும் தீமை என்பது உண்மையே.
முதலாளியினுடைய உற்பத்தி முறையின் வளர்ச்சி கைத்தறி நெசவாளியை அகற்றுவதைப் போலவே நிச்சயமாக முதலாளியையும் அகற்றிவிடுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இரண்டுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கின்றது. கைத்தறி நெசவாளி பட்டினியாக இருந்து மெதுவாகச் சாகிறார். அகற்றப்பட்ட முதலாளி அதிகமாகச் சாப்பிட்டு மெதுவாகச் சாகிறார். இந்த விஷயத்தில் இருவரும் பொதுவாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். என்ன செய்வதென்று இருவருக்கும் தெரியவில்லை.

ஆகவே முடிவு இதுதான்: இன்றைய எதார்த்தமான சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி மேன்மேலும் ஒன்று குவித்தலை, தனி முதலாளிகளால் இனிமேல் நிர்வகிக்கப்பட முடியாத மாபெரும் நிறுவனங்களாக உற்பத்தியை சமூகமாயமாக்குதலை நோக்கிச் செல்கிறது. ஒரு  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைந்ததும் “முதலாளியின் நேரடியான பார்வை” மற்றும் அது ஏற்படுத்தும் அதிசயங்களைப் பற்றிய கதைகள் அனைத்தும் வெறும் பிதற்றலாக மாறிவிடுகின்றன. லண்டன் மற்றும் வட மேற்கு ரயில்வேயின் “முதலாளியின் பார்வையைப்” பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் முதலாளி செய்ய முடியாததைத் தொழிலாளி, கம்பெனியின் கூலி வாங்கும் ஊழியர்கள் செய்ய முடியும், அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

ஆகவே முதலாளி தன்னுடைய லாபம் “மேற்பார்வை செய்ததற்குக் கூலி” என்று இனி உரிமை கோர முடியாது. ஏனென்றால் அவர் எதையும் மேற்பார்வை செய்யவில்லை. மூலதனத்தை ஆதரித்துப பேசுபவர்கள் அந்த ஓட்டைச் சொற்றொடரை நம் காதுகளுக்குள் டமாரமடிக்கின்ற பொழுது நாம் அதை  நனைவுபடுத்திக் கொள்வோம்.

Tuesday 23 May 2017

குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் மீதான தொழிலாளர் கட்சியின் அணுகுமுறையைப் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ்

(கம்யூனிஸ்டுக் கழகத்துக்கு மத்தியக் கமிட்டியின் வேண்டுகள்- 1950 - பகுதி)

“குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பாலான புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் உறவுநிலை இதுவே: அது எந்தப் பிரிவை வீழ்த்த எண்ணியுள்ளதோ அந்தப் பிரிவுக்கு எதிராக அவர்களுடன் சேர்ந்து நடைபோடுகிறது, தமது சொந்த நலன்களுக்காகத் தமது நிலையை கெட்டிப்படுத்த எங்கெல்லாம் அவர்கள் முயல்கிறார்களோ அம்முயற்சிகைள் அனைத்திலும் அவர்களை எதிர்க்கிறது.


புரட்சிகரப் பாட்டளிகளுக்கு வேண்டிய சமூகம் முழுவதையும் புரட்சிமயமாக்க விழைவதற்கு மாறாக, ஜனநாயக குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் சமூக நிலைமைகளில் ஒர மாற்றத்துக்குப் பாடுபட்டு, அதன் வழி நடப்பிலுள்ள சமூக அமைப்பைத் தமக்குப் போதுமானவரை தாங்கக் கூடியதாயும் வசதியானதாயும் செய்துகொள்ள முயல்கின்றனர். எனவே அவர்கள் முக்கியமாயும் அரசின் செலவினங்களைக் குறைத்தல், அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பிரதான வரிகளை பெரிய நிலவுடைமையாளர் முதலாளிகள் மீது மாற்றிச் சுமத்துவது ஆகியவற்றைக் கோருகிறார்கள்.”

முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம் பற்றி லெனின்

(ஏகாதிபத்தியம்- முதலாளித்துத்தின் உச்சக்கட்டம் என்ற நூலில் இருந்து)

பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மைக் குறிப்புகளின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த ஒரு கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது, இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படைத் தன்மைக் குறிப்புகள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன, முதலாளித்துவத்தில் இருந்து மேலானதொரு சமூக-பொருளாதார அமைப்புக்கு மாறிச்செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.

பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லாத முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைச் சரக்கு உற்பத்திக்கும் உரிய அடிப்படை இயல்பு, ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாற்றப்படக் கண்டோம், பெருவீதத் தொழில்துறையைத் தோற்றுவித்துச் சிறு தொழிலை நெரித்து வெளியேற்றவும், பெருவீதத் தொழில்துறையின் இடத்தில் மேலும் பெரியதாதான பெருவீதத் தொழில துறை அமரவும் கண்டோம். இவ்விதம் உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்று குவிப்பு அந்த அளவுக்கு அதிகமாக்கப்பட்டு அதிலிருந்து ஏகபோகம் வளர்ந்தெழுந்துள்ளது, தொடர்ந்து வளர்ந்தெழுந்து வருகிறது, கார்ட்டல்களும், சிண்டிக்கேட்டுகளும் டிரஸ்டுகளும் இவற்றுடன் ஒன்றுகலந்துவிடும் பத்துப பதினைந்து வங்கிகளின், நூறு கோடிக் கணக்கிலான தொகைகளைத் தம்பிடியில் கொண்டு காரியமாற்றும் வங்கிகளின் மூலதமுமாகிய ஏகபோகமாகும் இது.

தடையில்லாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதே போது போட்டியை அகற்றிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப்பல முருண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன. ஏகபோகமானது முதலாளித்துவத்தில் இருந்து அதைவிட மேலானதோர் அமைப்புக்கு மாறிச் செல்வதாகும்.

ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவுக்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும். இத்தகைய இலக்கணம் யாவற்றிலும் முக்கியமானதை தன்னுள் கொண்டதாக இருக்கும். ஏனெனில் ஒரு புறத்தில், நிதிமூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுகளின் மூலதனத்துடன் ஒன்றுகலந்துவிட்ட ஒருசில  மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் வங்கி மூலதனமாகும், மறுபுறத்தில்,  உலகின் பங்கீடானது எந்த முதலாளித்துவ அரசாலும் கைப்பற்றப்படாத பிரதேசங்களுக்குத் தடையின்றிப் பரவிச் செல்லும் காலனியாதிக்கக் கொள்கையில் இருந்து, முற்றிம் பங்கிடப்பட்டுக் கொண்டுவிட்ட உலக நிலப்பரப்பை ஏகபோக உடைமையாக கொண்டிருப்பதற்குரிய காலனியாதிக்கக் கொள்கைக்கு மாறிச் செல்வதாகும்.

ஆனால் மிகவும் சுருக்கமான இலக்கணங்கள் முக்கிய அம்சங்களைத் தொகுத்துத் தருவதால் வசதியாக இருந்தாலும்கூட அவை பற்றாக் குறையானவையே, ஏனெனில் வரையறை செய்யப்பட வேண்டிய நிகழ்வின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை அவற்றில் இருந்து வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே பொதுவான எல்லா இலக்கணங்களும் நிபந்தனைக்குட்பட்ட, சார்புநிலையிலான மதிப்பே கொண்டவை, நிகழ்வினது முழு வளர்ச்சியிலும் அதன் தொடர்புடைமைகள் யாவும் அடங்கியனவாய் ஒருபோதும் இருக்க முடியாது என்பதை மறக்காமல் மனதிற் கொண்டு, ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்: 1) பொருளாதாரம் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல், 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதல், 3) சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல், 4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல், 5) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பங்கிடப்படுதல் நிறைவுறுகிறது.


முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள், நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுகளுக்கு இடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியம்

Monday 22 May 2017

ஏகாதிபத்தியமும் சந்தர்ப்பவாதமும் பற்றி லெனின்

(ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும் என்ற நூலில் இருந்து)

ஏகாதிபத்தியத்துக்கும் ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் (சமூக-தேசியவெறியின் வடிவில்) கண்டிருக்கும் ஈனத்தனமான, அருவருக்கத்தக்க வெற்றிக்கும் ஒட்டுறவு உண்டா?

இது நவீனகால சோஷலிசத்துக்குரிய அடிப்படைப் பிரச்சினையாகும். முதலாவதாக, நாம் வாழும் இச்சகாப்தமும் தற்போது நடைபெறும் யுத்தமும் ஏகாதிபத்தியத் தன்மைவாய்ந்தவை என்பதையும், இரண்டாவதாக, சமூக-தேசிய வெறியும் சந்தர்ப்பவாதமும் பிரிக்க முடியாதவாறு வரலாற்று வழியில் இணைந்திருக்கின்றன என்பதையும், மற்றும் அரசியல் சித்தாநதத்தில உள்ளார்ந்த முறையில் இவை ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன என்பதையும் நமது கட்சி வெளியீடுகளில் முழு அளவுக்கு நிலைநாட்டிவிட்ட நாம், இந்த அடிப்படைப் பிரச்சினையைப் பகுத்தாராய முற்படலாம், அவசியம் முற்பட்டாகவும் வேண்டும்.

ஏகாதிபத்தியம் குறித்து எவ்வளவு  முடியுமோ அவ்வளவு துல்லியமான, முழுமையான இலக்கணத்தை அளித்து நாம் இந்தப் பகுத்தாய்வைத் தொடங்க வேண்டும். ஏகாதிபத்தியமானது முதலாளித்துவத்தின் தனியொரு வரலாற்றுக் கட்டமாகும். அதன் தனித்தன்மை மூன்று வகைப்பட்டது, ஏகாதிபத்தியமானது

(1) ஏகபோக முதலாளித்துவமாகும்,
(2) புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்,
(3) அந்திமக்கால முதலாளித்துவமாகும்.

தடையற்ற போட்டி நீக்கப்பெற்று அதற்குப் பதிலாய் ஏகபோகம் வளர்ச்சியுறுவதானது ஏகாதிபத்தியத்தின் அடிப்படைப் பொருளாதார இயல்பு, அதன் சாரப்பொருள். ஏகபோகத் தன்மை பிரதானமான ஐந்து வடிவங்களில் வெளிப்படுகிறது,

(1) கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் – முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்குப் பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுகிறது,

(2) பெரிய வங்கிகளின் ஏகபோக நிலை- அமெரிகிகா, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் மூன்று, நான்கு அல்லது ஐந்து பகாசுர வங்கிகள் நாட்டின் பொருளாதார வாழ்வு அனைத்தையுமே தம் பிடியில் இருத்திக் கொண்டு ஆட்டிப் படைக்கின்றன,

(3) மூலப்பொருள்களுக்கான ஆதாரங்களை முதலாளித்து டிரஸ்டுகளும் நிதி ஆதிக்ககும்பலும் கைப்பற்றிக் கொண்டுவிடுகின்றன (நிதி மூலதனம் என்பது வங்கி மூலதனத்துடன் இணைந்த ஏகபோகத் தொழில் துறை மூலதனமாகும்),

(4) சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே (பொருளாதாரக்) கூறுபோட்டுப் பாகப் பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது. இவ்வகைச் சர்வதேசக் கார்ட்டல்கள் ஏற்கனவே ஒரு நூறுக்கு மேற்பட்டவை உள்ளன, இவை உலகச் சந்தை அனைத்தையுமே தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்திக் கொண்டு, அதனை “இணக்கமுடன்” தம்மிடையே பாகப்பிரிவினை செய்து கொள்கின்றன- யுத்தத்தின் மூலம் அது மறுபிரிவினை செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு நீடிக்கிறது. ஏகபோகமல்லாத முதலாளித்துவத்தில் நடைபெற்று வந்த சரக்கு ஏற்றுமதியைப் போலல்லாது இப்பொழுது மூலதமே ஏற்றுமதி செய்யப்படுவதானது இக்கட்டத்துக்குரிய தனி விசேஷமாகும், இது பொருளாதார வழியிலும் பிரதேச-அரசியல் வழியிலும் உலகின் பாகப் பிரிவினையுடன் நெருங்கிய முறையில் இணைந்த நிகழ்ச்சியாகும்,

(5) உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.

முதலாளித்துவத்தின் உச்ச கட்டமான ஏகாதிபத்தியம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்,  பிற்பாடு ஆசியாவிலும் 1898க்கும் 1914க்கும் இடையில் இறுதி உருப்பெற்றது. ஸ்பானிய-அமெரிக்கப் போர் (1898), ஆங்கிலோ-போயர் போர் (1899-1902), ருஷ்ய-ஐப்பானியப் போர் (1904-05), 1900ல் ஐரோப்பாவில் வெடித்த பொருளாதார நெருககடி ஆகிய இவை, உலக வரலாற்றின் இந்தப் புதிய சகாப்தத்துக்குரிய முக்கிய மைல்கற்களாகும்.

புல்லுருவித்தனம் உடையதாகிவிட்ட அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமே ஏகாதிபத்தியம் என்பது உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடைமை நிலவும் அமைப்பில் ஒவ்வொரு ஏகபோகத்துக்கும் உரிய குண விசேஷமாய் அமைந்துவிடும் அழுகல் போக்கில் யாவற்றுக்கும் முதலாய் வெளியாகிறது. ஜனநாயக-குடியரசுவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும், பிற்போக்கு-முடியரசுவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவருகிறது, இரு வகையினருமே உயிருள்ள நிலையிலேயே அழுகத் தொடங்கிவிட்டதே இதற்குக் காரணம் (ஆனால் தொழில் துறையின் தனிப்பட்ட கிளைகளிலும், தனிப்பட்ட சில நாடுகளிலும், தனிப்பட்ட சில காலங்களிலும் முதலாளித்துவம் அசாதாரண வேகத்தில் வளர முடியாது என்பதல்ல இதன் அர்த்தம்).

இரண்டாவதாக, தமது மூலதனத்தைக் கொண்டு சுகஜீவிகளாய்ச் “சீட்டுக் கத்தரித்து” ஜீவிக்கும் முதலாளிகளின் ஒரு பெரும் பிரிவு தோதற்றுவிக்கப்படுவதில் முதலாளித்துவத்தின் அழுகல் தன்மை வெளியாகிறது. இங்கிலாந்து,  அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு, ஜெர்மனி – தலைமையான இந்நான்கு ஏகாதிபத்திய நாடுகளில் ஒவ்வொன்றிலும் பணவுறுதிச் சீட்டுகளில் 10,000 அல்லது 15,000 கோடி பிராங்கு வரை மூலதனம் போடப்பட்டிருக்கிறது, இதிலிருந்து இந்நாடு ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஐந்நூறு கோடியிலிருந்து எண்ணூறு கோடிக்குக் குறையாமல் வருமானம் பெறுகிறது.

மூன்றாவதாக, மூலதன ஏற்றுமதியானது புல்லுருவித்தனம் உச்சநிலைக்கு உயர்ந்துவிடுவதைக் குறிக்கிறது.

நான்காவதாக, “நிதி மூலதனம், ஆதிக்கத்துககாகப் பாடுபடுகிறதேயன்றி சுதந்திரத்துக்கா அல்ல”. அரசியல் பிற்போக்கு சர்வவியாபகம் ஆகிவிடுவது ஏகாதிபத்தியத்துக்குரிய குண விசேஷமாகும். பிரம்மாண்ட அளவிலான லஞ்சமும் ஊழலும் எல்லா வகையான பனாமா விவகாரங்களும் மலிந்துவிடுகின்றன.

ஐந்தாவதாக, ஒடுக்கப்படுகிற தேசங்கள் மீதான சுரண்டல்- இது நாடுபிடித்து இணைக்கும் முயற்சிகளுடன் இரண்டறக் கலந்ததாகும்- இன்னும் முக்கியமாய் ஒருசில “பேரரசுகளின்” சுரண்டல், “நாகரிக” உலகினைக் கோடானு கோடியான பின்தங்கிய தேசத்தவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் புல்லுருவியாக மேலும்மேலும் மாற்றிவருகிறது.

ரோமானியப் பாட்டாளி சமூகத்தின் செலவில் வாழ்ந்தான், ஆனால் நவீன காலச் சமூகம் நவீனகாலப் பாட்டாளியின் செலவில் வாழ்கிறது. சிஸ்மொண்டீயின் பொருட் செறிவுள்ள இந்த காக்கியத்தை மார்க்ஸ் வலியுத்திக் குறிப்பிட்டார். ஏகாதிபத்தியமானது இந்நிலைமையை ஓரளவு மாற்றியுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தில் சலுகை படைத்த மேல்தட்டுப் பகுதி ஓரளவுக்கு, கோடானு கோடியான பின்தங்கிய தேசத்தவர்களின் செலவில் வாழ்கிறது.

ஏகாதிபத்தியமானது அந்திமக்கால முதலாளித்துவமாய், சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய முதலாளித்துவமாய் இருப்பது ஏனென்பது நன்கு விளங்குகிறது, முதலாளித்துவத்தில் இருந்து முளைக்கும் ஏகபோகமானது ஏற்கனவே மரிக்கத் தொடங்கிவிட்ட முதலாளித்துவத்தை, சோஷலிசத்துக்கு அது மாறிச் செல்வதற்கான கட்டத்தின் துவக்கத்தைக் குறிப்பதாகும். ஏகாதிபத்தியத்தால் உழைப்பு மகத்தான அளவிக்கு சமூகமயமாக்கப்படுவதாலும் (ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களான முதலாளித்துவப் பொருளியலாளர்கள் இதனைப் “பின்னிப்பிணைதல்” என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்) இதே விளைவு உண்டாகிறது.

ஏகாதிபத்தியத்துக்கு நாம் அளித்திடும் இந்த இலக்கணம் தம்மைக் காரல் காவுத்ஸ்கியிற்கு நேர்முரணான நிலைக்குக் கொண்டு வருகிறது. ஏகாதிபத்தியத்தை “முதலாளித்துவத்தின் ஒரு கட்டமாகக்” கருதக் காவுத்ஸ்கி மறுக்கிறார்,  நிதி மூலதனத்தால் “உகந்ததென விரும்பி ஏற்கப்படும்” ஒரு கொள்கை என்று, “தொழிற்துறை” நாடுகள்  “விவசாய” நாடுகளைப் பிடித்துத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்குரிய ஒரு போக்கு என்று அதற்கு அவர் இலக்கணம் கூறுகிறார். காவுத்ஸ்கி கூறம் இலக்கணம் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில் முழுக்க பொய்யானது ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழில் துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல. நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும், குறிப்பாய்  விவசாய நாடுகளை மட்டும் அல்ல, எல்லா வகையான நாடுகளையும் பிடித்துத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியே ஆகும்.

“படைக் கலைப்பு”, “அதீத-ஏகாதிபத்தியம்” இத்தியாதி அபத்தங்களைப் போன்ற கொச்சையான அவரது முதலாளித்துவச் சீர்திருத்தவாதத்துக்குப் பாதையைச் செப்பனிடும் பொருட்டு காவுத்ஸ்கி ஏகாதிபத்திய அரசியலை ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தில் இருந்து பிரித்து விலக்குகிறார், அரசியல் துறை ஏகபோகத்தைப் பொருளாதார துறை ஏகபோகத்தில் இருந்து  பிரித்து விலக்குகிறார். இந்தத் தத்துவார்த்தப் பொய்க் கூற்றுகளின் நோக்கம் எல்லாம், அவற்றின் உட்பொருள் எல்லாம், ஏகாதிபத்தியத்தின் மிகவும் ஆழமான முருணபாடுகளை மூடிமறைத்து, அதன்மூலம் ஏகாதிபத்திய ஆதரவாளர்களான அப்பட்டமான சமூக-தேசிய வெறியர்களுடனும் சந்தர்ப்பவாதிகளுடனும் “ஒன்றுபடுவ”தென்ற கோட்பாட்டுக்கு (theory) நியாயம் கற்பிப்பதுதான்.


இவ்விவகாரத்தில் காவுத்ஸ்கி மார்க்சியத்தில் இருந்து முறித்துக் கொண்டு சென்றுவிடுவது குறித்து சொத்தியால்-டெமக்ராத், கம்முனீஸ்த் இதழ்களில் போதுமான அளவுக்கு விவரமாய் எடுத்துரைத்து இருக்கிறோம்.

Thursday 18 May 2017

மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் – லெனின் (பகுதி)

அராஜகவாதிகளைப் போலல்லாது மார்க்சியவாதிகள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை, அதாவது ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலே உழைப்பாளி மக்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வதற்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர். ஆனால் அதே போதில் மார்க்சியவாதிகள் சீர்திருத்தவாதிகளை எதிர்த்து மிகவும் வைராக்கியமீரன ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர். சீர்திருத்தவாதிகள் தொழிலாளி வர்க்கத்தின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் கீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதுடன் நின்றுவிடும்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படத்திவிடுகிறவர்கள். மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கிற வரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்படினும், எப்பொழுதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம்.
...
தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் பலமிழந்தவர்களாகி விடுகிறார்கள், முதலாளித்துவ வர்க்கத்தை அண்டி வாழ வேண்டிய அவர்களது சார்பு நிலை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிவிடுகிறது, முதலாளித்துவ வர்க்கம் பல்வேறு தக்கடி வித்தைகளைக் கையாண்டுச் சீர்திருத்தங்களைத் தள்ளுபடி செய்வது அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாகிவிடுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு சுயேச்சையாய் இருக்கிறதோ, அதன் குறிக்கோள்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளனவோ, சீர்திருத்தவாதக் குறுநோக்கிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு விடுபடடிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் மேம்பாடுகளை விடாது இருத்திக் கொள்வதும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும் எளிதாகிவிடுகிறது.
...
நாங்கள் சீர்திருத்தவாதிகளல்ல, ஏனெனில் சீர்திருத்தங்களே யாவுட், இறுதிக் குறிக்கோள் ஒரு பொருட்டல்ல என்று நாங்கள் சொல்லவில்லை, இறுதிக் குறிக்கோளுக்கான இயக்கத்தைப் பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம், நாம் வகுத்துக் கொண்ட குறிக்கோளை முழுமையாய் அடைய சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதன் வாயிலாய் முன்னேறிச் செல்வது குறித்து பேசியிருக்கிளோம் என்பதாய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கலைப்புவாதிகள் எழுதினர்.
...

..சீர்திருத்தங்களை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வதிலும், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதிலும் மார்க்சியவாதிகள் பின்னிலையில் தங்கிவிடவில்லை, மாறாக நிச்சயமாய் முன்னிலையில் தான் இருக்கின்றனர் என்பதைத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு அரங்கிலும் நிகழ்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன. தொழிலாளர் தொகுதிகளில் டூமாத் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுங்கள். டூமாவின் உள்ளேயும் வெளியேயும் நமது பிரதிநிதிகளின் சொற்பொழிவுகள், தொழிலாளர் பத்திரிகைகளையும் இன்ஷீரன்ஸ் சீர்திருத்தத்தையும் பயன்படுத்திக் கொள்ளுதல், யாவற்றிலும் பெரிய சங்கமான உலோகத் தொழிலாளர் சங்கம், இன்னபலவற்றிலும் - எங்கும் கிளர்ச்சி புரிதல், நிறுவன ஒழுங்கமைப்பு செய்தல், சீர்திருத்தங்களுக்காகவும் போராடுதல் ஆகிய நேரடியான, உடனடியான, அன்றாடச் செயற்பாட்டில் மார்க்சியவாதிகளான தொழிலாளர்கள் கலைப்புவாதிகளை முந்திக் கொண்டு முன்னிலையிலே இருக்கிறார்கள்.

சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமான "சாத்தியப்பாடு" ஒன்றையேனும் தவறவிடாமல் மார்க்சியவாதிகள் அயராது வேலை செய்கின்றனர். பிரசாரத்திலும் கிளர்ச்சியிலும் வெகுஜனப் பொருளாதாரப் போராட்டத்திலும் பிறவற்றிலும் சீர்திருத்தவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டித்தல்ல, அதற்கு ஆதரவாய், அது முன்னேற்றம் அடைய அரும்பாடுபட்டு மார்க்சியவாதிகள் வேலை செய்கின்றனர். ஆனால் மார்க்சியத்தைத் துறந்துவிட்ட கலைப்புவாதிகள் இதற்கு மாறாய், மார்க்சிய நிறுவன அமைப்பு ஒன்று இருப்பதையே எதிர்த்துத் தாக்குதல்கள் கொடுப்பதன் மூலமும், மார்க்சியக் கட்டுப்பாட்டை அழிப்பதன் மூலமும், சீர்திருத்தவாதத்தையும் மிதவாதத் தொழிலாளர் கொள்கையையும் ஆதரித்து நிற்பதன் மூலமும் தொழிலாளி வர்க்க இயக்கத்தைச் சீர்குலைத்து வருகிறார்கள்.
...
ஐரோப்பாவில் சீர்திருத்தவாதம், உண்மையில் மார்க்கியம் துறக்கப்பட்டு அதற்குப் பதிலாய் முதலாளித்துவச் "சமூகக் கொள்கை" கைக் கொள்ளப்படுவதைக் குறிக்கிறது. ருஷ்யாயில் கலைப்புவாதிகளுடைய சீர்திருத்தவாதம் குறிப்பது அது மட்டுமல்ல, மார்க்சிய நிறுவனம் அழிக்கப்படுவதையும் தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக் கடமைகள் துறக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாய் மிதவாதத் தொழிலாளர் கொள்கை கைக்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது.


1913 செப்டம்பர் 12