Tuesday 23 May 2017

முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம் பற்றி லெனின்

(ஏகாதிபத்தியம்- முதலாளித்துத்தின் உச்சக்கட்டம் என்ற நூலில் இருந்து)

பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மைக் குறிப்புகளின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த ஒரு கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது, இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படைத் தன்மைக் குறிப்புகள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன, முதலாளித்துவத்தில் இருந்து மேலானதொரு சமூக-பொருளாதார அமைப்புக்கு மாறிச்செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.

பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லாத முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைச் சரக்கு உற்பத்திக்கும் உரிய அடிப்படை இயல்பு, ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாற்றப்படக் கண்டோம், பெருவீதத் தொழில்துறையைத் தோற்றுவித்துச் சிறு தொழிலை நெரித்து வெளியேற்றவும், பெருவீதத் தொழில்துறையின் இடத்தில் மேலும் பெரியதாதான பெருவீதத் தொழில துறை அமரவும் கண்டோம். இவ்விதம் உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்று குவிப்பு அந்த அளவுக்கு அதிகமாக்கப்பட்டு அதிலிருந்து ஏகபோகம் வளர்ந்தெழுந்துள்ளது, தொடர்ந்து வளர்ந்தெழுந்து வருகிறது, கார்ட்டல்களும், சிண்டிக்கேட்டுகளும் டிரஸ்டுகளும் இவற்றுடன் ஒன்றுகலந்துவிடும் பத்துப பதினைந்து வங்கிகளின், நூறு கோடிக் கணக்கிலான தொகைகளைத் தம்பிடியில் கொண்டு காரியமாற்றும் வங்கிகளின் மூலதமுமாகிய ஏகபோகமாகும் இது.

தடையில்லாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதே போது போட்டியை அகற்றிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப்பல முருண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன. ஏகபோகமானது முதலாளித்துவத்தில் இருந்து அதைவிட மேலானதோர் அமைப்புக்கு மாறிச் செல்வதாகும்.

ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவுக்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும். இத்தகைய இலக்கணம் யாவற்றிலும் முக்கியமானதை தன்னுள் கொண்டதாக இருக்கும். ஏனெனில் ஒரு புறத்தில், நிதிமூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுகளின் மூலதனத்துடன் ஒன்றுகலந்துவிட்ட ஒருசில  மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் வங்கி மூலதனமாகும், மறுபுறத்தில்,  உலகின் பங்கீடானது எந்த முதலாளித்துவ அரசாலும் கைப்பற்றப்படாத பிரதேசங்களுக்குத் தடையின்றிப் பரவிச் செல்லும் காலனியாதிக்கக் கொள்கையில் இருந்து, முற்றிம் பங்கிடப்பட்டுக் கொண்டுவிட்ட உலக நிலப்பரப்பை ஏகபோக உடைமையாக கொண்டிருப்பதற்குரிய காலனியாதிக்கக் கொள்கைக்கு மாறிச் செல்வதாகும்.

ஆனால் மிகவும் சுருக்கமான இலக்கணங்கள் முக்கிய அம்சங்களைத் தொகுத்துத் தருவதால் வசதியாக இருந்தாலும்கூட அவை பற்றாக் குறையானவையே, ஏனெனில் வரையறை செய்யப்பட வேண்டிய நிகழ்வின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை அவற்றில் இருந்து வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே பொதுவான எல்லா இலக்கணங்களும் நிபந்தனைக்குட்பட்ட, சார்புநிலையிலான மதிப்பே கொண்டவை, நிகழ்வினது முழு வளர்ச்சியிலும் அதன் தொடர்புடைமைகள் யாவும் அடங்கியனவாய் ஒருபோதும் இருக்க முடியாது என்பதை மறக்காமல் மனதிற் கொண்டு, ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்: 1) பொருளாதாரம் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல், 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதல், 3) சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல், 4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல், 5) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பங்கிடப்படுதல் நிறைவுறுகிறது.


முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள், நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுகளுக்கு இடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியம்

No comments:

Post a Comment