Tuesday 1 August 2023

முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்கு வலிமைமையான பாட்டாளி வர்க்கக் கட்சியைப் பற்றி ஸ்டாலின்

 (ஸ்டாலின் இங்கே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையையும் அதன் பணியையும் தெளிவாகக் கூறியுள்ளார். வலது-இடது திரிபற்ற மார்க்சியத்தை விளக்கி உள்ளார்)



பாட்டாளி வர்க்க அமைப்புகள் எந்தெந்த வடிவங்களை மேற்கொள்ள வேண்டும் ?

தொழிற்சங்கங்களும், தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களும் (பிரதானமாக உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் கூட்டுறவு சங்கங்கள்), ஆகமிகப் பரந்த மக்கள்திரள் அமைப்புகளாகும். தொழிற்சங்கங்களின் நோக்கம் என்ன? இப்போதைய முதலாளித்துவக் கட்டமைவின் வரம்புகளுக்குள், தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு, பிரதானமாக தொழில் மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதாகும். கூட்டுறவுச் சங்கங்களின் நோக்கம் என்ன? இதுவும் இப்போதைய முதலாளித்துவக் கட்டமைவின் வரம்புகளுக்கு உட்பட்டு, பிரதானமாக வணிக மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதாகும். அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளைக் குறைப்பதன் மூலம், தொழிலாளர்கள் மத்தியில் நுகர்வு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும். திரளான பரந்துபட்ட பாட்டாளிகளை அமைப்பாக்குவதற்கான, ஒரு வழிமுறைச் சாதனம் என்ற முறையில், தொழிற் சங்கங்களும் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் பாட்டாளி வர்க்கத்துக்கு சந்தேகத்துக்கு இடமின்றி தேவைப்படுகின்றன.

எனவே, மார்க்ஸ், எங்கெல்சின் பாட்டாளி வர்க்க சோசலிசக் கண்ணோட்டத்தின்படி, இவ்விரு வகையான அமைப்பு வடிவங்களையும், பாட்டாளி வர்க்கமானது தவறாமல் பயன்படுத்தி, தனது வலுவைக் கூட்டி தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைய அரசியல் சூழ்நிலைகளின் கீழ் எவ்வளவு சாத்தியமோ, அந்த அளவுக்குச் செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

இருப்பினும், தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச்சங்கங்களும் போர்க்குணமிக்கப் பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பு ரீதியிலான தேவைகளை நிறைவுசெய்ய முடியாது. இது ஏன்?

ஏனென்றால், நாம் குறிப்பிடும் இந்த அமைப்புகள் இப்போதுள்ள முதலாளித்துவ கட்டமைவின் வரம்புகளை மீறிச் செல்ல முடியாது. இருப்பினும் தொழிலாளர்கள் விரும்புவது என்ன?

முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து தம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ள தொழிலாளர்கள் விரும்புகின்றனர். முதலாளித்துவத்தின் இந்த வரம்புகளை அடித்து நொறுக்க அவர்கள் விரும்புகின்றனரே ஒழிய, முதலாளித்துவத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு மட்டுமே செயல்பட அவர்கள் விரும்பவில்லை. எனவே, இவற்றுக்கும் மேலாக, வேறொரு அமைப்பு பாட்டாளி, வர்க்கத்துக்குத் தேவைப்படுகிறது. அந்த அமைப்பானது, எல்லா தொழில்களிலுமுள்ள வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களை தன்னைச் சுற்றிலும் அணிதிரட்டிக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கத்தை வர்க்க உணர்வுமிக்கதாக மாற்றக் கூடியதாக அது இருக்க வேண்டும்; முதலாளித்துவக் கட்டமைவை அடித்து நொறுக்குவதை பாட்டாளி வர்க்கம் தனது நோக்கமாக ஏற்கச் செய்வதாக அந்த அமைப்பு இருக்க வேண்டும். பாட்டாளி வர்க்கத்தை சோசலிசப் புரட்சிக்குத் தயாரிப்பதாக அது இருக்க வேண்டும்.

இத்தகையதொரு அமைப்புதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியாகும்.

இந்தக் கட்சி ஒரு வர்க்க கட்சியாக, பிற கட்சிகளிடமிருந்து விடுபட்டு முற்றிலும் சுயேச்சையானதொரு கட்சியாகவே இருந்தாக வேண்டும். ஏன் இப்படி இருக்க வேண்டுமென்றால், இது பாட்டாளி வர்க்கத்தின் கட்சியாகும்; ஏனென்றால், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது, அந்த வர்க்கத்தாலேயே கொண்டுவரப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இந்தக் கட்சி ஒரு புரட்சிகரமான கட்சியாகவே இருந்தாக வேண்டும். அது ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஏனென்றால், புரட்சிகரமான வழிமுறைச் சாதனங்களால்தான், சோசலிச புரட்சி என்ற சாதனத்தால்தான் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட முடியும்.

இந்தக் கட்சி ஒரு சர்வதேசக் கட்சியாகவே இருந்தாக வேண்டும்; எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த வர்க்க உணர்வுமிக்கப் பாட்டாளிகளுக்கு இந்தக் கட்சியின் கதவுகள் திறந்திருக்க வேண்டும். இது ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஏனென்றால், தொழிலாளர்களின் விடுதலை என்பது ஒரு சமூகப் பிரச்சினையே ஒழிய, ஒரு தேசியப் பிரச்சினை அல்ல. இந்த சமூகப் பிரச்சினையானது, ஜார்ஜியப் பாட்டாளிகள், ரசியப் பாட்டாளிகள், இன்னும் பிற தேசங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் அனைவருக்குமே சமமான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும்.

எனவே தெளிவாகத் தெரியும் விசயம் என்னவென்றால், பல்வேறு தேசங்களின் பாட்டாளிகள் மேலும் மேலும் நெருக்கமாக ஒன்றுபட ஒன்றுபட, அவர்களுக்கு இடையில் எழுப்பப்பட்டுள்ள தேசியத் தடைகள் மேலும் மேலும் உடைபட உடைபட, பாட்டாளி வர்க்கத்தின் கட்சி மேலும் மேலும் பலமடையும்; பாட்டாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத ஒரே கட்சியாக, கட்சி அமைவதற்கு வழிவகை செய்யும்.

எனவே, எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கு, பாட்டாளி வர்க்கத்தின் அமைப்புகளில், கட்சி, தொழிற்சங்கம், கூட்டுறவுச் சங்கம் என்று எதுவாக இருந்தாலும் அவற்றில், தொளதொளப்பான கூட்டிணைவுக் கோட்பாட்டுக்கு மாறாக, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வருவது அவசியமாகும்.

இன்னொரு விசயமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எந்த அளவுக்கு அரசியல் நிலைமைகள் அல்லது பிற நிலைமைகள் குறுக்கிட்டுத் தடுக்காமல் இருக்கின்றனவோ, அதுவரையில், அந்த அளவுக்கு இந்த அமைப்புகள் அனைத்துமே, ஜனநாயகக் கோட்பாட்டு அடிப்படையில் கட்டியமைக்கப்பட வேண்டும்.

ஒரு பக்கத்தில் கட்சிக்கும், மற்றொரு பக்கத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உள்ள உறவுகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண் டும்? தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் கட்சி சார்பான வையாக இருக்க வேண்டுமா? அல்லது கட்சி சார்பற்றவையாக இருக்க வேண்டுமா?

எந்த இடத்தில், எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியுள்ளது என்பதைச் சார்ந்தே இந்தக் கேள்விக்கான பதில் இருக்கும். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் உள்ளது. எந்த அளவுக்கு தொழிற்சங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் பாட்டாளி வர்க்கத்தினுடைய சோசலிஸ்டுக் கட்சியுடன் நட்புறவாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு, ஒரு பக்கத்தில் கட்சியும் இன்னொரு பக்கத்தில் தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் கூடுதலாக முழு அளவில் வளர்ச்சியுற்று வலுப்பெறும். இதில் எவ்வித ஐயப்பாடும் இருக்க முடியாது.

இதை ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங் கள் என்ற இரண்டுமே பொருளாதார அமைப்புகள்தான். ஒரு பல மிக்க சோசலிஸ்டுக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை இவை கொண்டிராவிட்டால், என்ன நடக்கும்? அவற்றில் அற்ப விசயங்கள், குறுகிய தொழில் நலன்கள், கோரிக்கைகள் முன்னணிக்கு வரும். இவை பாட்டாளி வர்க்கத்தின் பொதுநலன்களைப் பின்னுக்குத் தள்ளி இதன் மூலம், பாட்டாளி வர்க்க நோக்கத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா வழக்குகளிலும், தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும், கட்சியின் சித்தாந்த அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதை உத்திரவாதம் செய்வது அவசியம். இதைச் செய்யும்போது மட்டும்தான், நாம் குறிப் பிட்ட அமைப்புகள் சோசலிசப் பயிற்சிப் பள்ளியாக மாற்றப்படும். அப்போதுதான் இவை, இப்போது தனித்தனி குழுக்களாகப் பிளவுண்டு இருக்கும் பாட்டாளி வர்க்கத்தை, வர்க்க உணர்வுமிக்க வர்க்கமாக ஒழுங்கமைக்கும்.

மார்க்ஸ்-எங்கெல்சினுடைய, பாட்டாளி வர்க்க சோசலிசத்தின் பொதுவான தனித்தன்மை வாய்ந்த கூறுகள் இத்தகையவைதான்.

(அராஜகவாதமா? சோஷலிசமா?)

 

பாட்டாளி வர்க்கம் எந்த சாதனத்தைக் கொண்டு முதலாளித்துவ கட்டமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்பது பற்றி ஸ்டாலின்


 

எந்த தீர்மானகரமான சாதனத்தைக் கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவக் கட்டைமைவைத் தூக்கி எறியும்?

சோசலிசப் புரட்சிதான் இந்த வழிமுறைச் சாதனமாக இருக்கும்.

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்ற வடிவங்கள் அனைத்துமே, பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்துவதற்கும் அமைப்பாக்குவதற்குமான நல்ல சாதனங்கள்தான். ஆனால், இவற்றுள் எந்த ஒரு சாதனமும் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் ஆற்றல் உடையது அல்ல, இந்தச் சாதனங்கள் அனைத்தும் தலையாயதும் தீர்மானகரமானதுமான ஒரே வழிமுறைச் சாதனத்தில் கட்டாயமாக ஒன்று குவிக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி, அதன் அடித்தளத்தையே தகர்க்கும்படியான, தீர்மானகரமான தாக்குதலை தொடுப்பதற்காக பாட்டாளி வர்க்கம் ஆவேசத்துடன் தவறாமல் எழுந்தாக வேண்டும். இந்தத் தலையாயதும் தீர்மானகரமானதுமான, வழி முறைச் சாதனமே சோசலிசப் புரட்சியாகும்.

சோசலிசப் புரட்சியை, திடுதிப்பென்றும், ஒரே அடியில் முடிந்து விடுவதுமான ஒன்றாக எண்ணவே கூடாது; அது ஒரு நீண்டகாலப் போராட்டமாகும்; அப்போராட்டம் பரந்துபட்ட பாட்டாளி மக்களால் தொடுக்கப்படுவதாகும்; முதலாளித்துவத்தை தோல்வியுறச் செய்து, அதன் ஆதிக்க நிலைகளைக் கைப்பற்றுவதற்காக, போராட்டம் தொடுக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி என்பது, அதே நேரத்தில், தோற்கடிக்கப்பட்ட முதலாளிகளின் மீதான ஆதிக்கம் என்று பொருள்படுவதால்; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலில், ஒரு வர்க்கத்தின் தோல்வியானது பிறிதொரு வர்க்கத்தின் ஆதிக்கமாகவே அமையும் என்பதால்; சோசலிசப் புரட்சியின் முதல் கட்டமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கமாக இருந்தே தீரும்.

சோசலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுவது - இத்துடன்தான் சோசலிசப் புரட்சி கட்டாயம் துவக்கப்பட வேண்டும்.

இதன் பொருள் என்ன? முதலாளித்துவ வர்க்கம் முற்றாகத் தோற் கடிக்கப்படும் வரையில், அதனுடைய செல்வம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் வரையில், தவறாமல் ஒரு இராணுவத்தை பாட்டாளி வர்க்கம் தனக்கெனச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்; தனது சொந்த 'பாட்டாளிகளின் படையை" தவறாமல் கொண்டிருக்க வேண்டும். இந்தப் படையின் உதவியைக் கொண்டுதான், மடிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் எதிர்ப் புரட்சித் தாக்குதல்களை முறியடிக்க அதனால் முடியும்; பாரிஸ் கம்யூன் நாட்களில், பாரிசின் பாட்டாளி வர்க்கம் எதைச் செய்ததோ அதையேதான் மிகச்சரியாகச் செய்ய வேண்டியிருக்கும்.

சோசலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏன் தேவைப்படு கிறது?

பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்குத் தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவ வர்க்கம் முழுவதினிடமிருந்து நிலம், காடுகள், தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள், இயந்திரங்கள், இரயில்வேக்கள் இன்னும் பிறவற்றைக் கைப்பற்றுவதற்குத் தேவைப்படுகிறது.

பறிமுதலாளர்களான முதலாளிகளைப் பறிமுதல் செய்வது- இதற்குத்தான் சோசலிசப் புரட்சி இட்டுச் செல்லும், இட்டுச் செல்ல வேண்டும்.

இந்தத் தலையாயதும் தீர்மானகரமானதுமான வழிமுறைச் சாதனத்தைக் கொண்டுதான், பாட்டாளி வர்க்கமானது, இப்போதைய முதலா ளித்துவக் கட்டமைவைத் தூக்கியெறியும்.

இதனால்தான், வெகுகாலத்துக்கு முன்னர், 1847-ஆம் ஆண்டி லேயே மார்க்ஸ் பின்வருமாறு சொன்னார்:

 

“....... தொழிலாளர் வர்க்கத்தால் நடத்தப்படும் புரட்சியில் முதல் நடவடிக்கை பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்த்துவதாகவே இருக்கும்..... பாட்டாளி வர்க்கமானது, தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி, முதலா ளித்துவ வர்க்கத்திடமிருந்த மூலதனம் எல்லாவற்றையும் படிப் படியாகப் பறித்தெடுக்கும்; ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந் துள்ள..... பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் ஒன்று குவிக்கும்......"

(கம்யூனிஸ்டு அறிக்கை).

பாட்டாளி வர்க்கமானது, சோசலிசத்தைக் கொண்டு வருவதில் நாட்டம் கொண்டிருக்குமானால், இப்படித்தான் தொடங்கி முன்னேறியாக வேண்டும்.

இந்தப் பொதுக் கோட்பாட்டிலிருந்துதான், செயல்தந்திரம் பற்றிய எல்லா கருத்தோட்டங்களும் உருப்பெற்று எழுகின்றன. சோசலிசப் புரட்சியைச் சாதிப்பதற்காக பாட்டாளி வர்க்கம் தன்னை ஒழுங்கமைத் துக் கொள்வதற்கும், தன்னுடைய அமைப்புகளை வலுப்படுத்தி விரிவு படுத்திக் கொள்வதற்கும், எந்த அளவுக்கு உதவுகிறதோ அந்த அளவுக் குத்தான், வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, ஆர்ப்பாட்ட கிளர்ச்சி கள், நாடாளுமன்றப் பங்கேற்பு ஆகிய போராட்ட வடிவங்கள் முக்கி யத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.

இவ்வாறாக, சோசலிசத்தைக் கொண்டு வருவதற்கு, சோசலிசப் புரட்சி தேவைப்படுகிறது; சோசலிசப் புரட்சியானது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துடன்தான் தொடங்கப்பட்டாக வேண்டும். அதாவது, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சாதனமாக இதைப் பயன்படுத்த வேண்டும்.

இருப்பினும், இவை அனைத்தையும் சாதிப்பதற்கு, பாட்டாளி 'வர்க்கம் அமைப்பாக்கப்பட வேண்டும்; பாட்டாளி வர்க்க அணிகள் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டும் ஐக்கியப்பட்டும் இருக்க வேண்டும்; பலமிக்க பாட்டாளி வர்க்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; இவையனைத்தும் இடையறாது வளர்ந்து வலுப்பெற வேண்டும்.

(அராஜகவாதமா? சோஷலிசமா?)

முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு பாட்டாளி வர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஸ்டாலின்.


முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?

எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும்?

இதற்கான விடை மிகத் தெளிவானது. முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானம் செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைவதைச் சாதிக்க முடியாது. தவறாமல் போராட்டப் பாதையை அது மேற்கொள்ள வேண்டும்; இந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாக இது இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும்! அல்லது, இன்னொரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும்! இரண்டில் எது என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கம் எப்போதும் முன்வைக்க வேண்டும். இதுதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.

இருப்பினும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் எண்ணற்ற வடிவங்களை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, வேலை நிறுத்தம் என்பது வர்க்கப் போராட்டமே. அது பகுதியளவிலான வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, அல்லது, பொதுவேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே இது பொருந்தும். இதுதவிர, புறக்கணிப்புகள், உற்பத்தியைச் சீர்குலைத்தல் ஆகியனவும் சந்தேகத்துக்கிடமின்றி வர்க்கப் போராட்டங்களேயாகும்.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போராட்டமே. பொது மக்கள் பிரதிநிதித்துவ அவைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வர்க்கப் போராட்ட நடவடிக்கைகளே. அந்த அவைகள் தேசிய நாடாளுமன்றங்களாக இருந்தாலும் சரி, அல்லது, உள்ளூராட்சி மன்றங்களாக இருந்தாலும் சரி, இதில் ஒன்றும் வேறுபாடு இல்லை. இவை அனைத்துமே ஒரே வர்க்கப் போராட்டத்தின் வெவ்வேறான வடிவங்களே ஒழிய வேறல்ல. பாட்டாளி வர்க்கத்துக்கு, அதனுடைய வர்க்கப் போராட்டத்தில், எந்த வடிவிலான போராட்டம் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் பரிசீலிக்கப் போவது இல்லை. பாட்டாளி வர்க்கமானது தனது வர்க்க உணர்வையும் அமைப்பு ரீதியிலான பலத்தையும் அதிகமாக்கிக் கொள்வதற்கான சாதனம் என்ற முறையில், காலத்துக்கும் இடத்துக்கும் பொருத்தமாக, ஒவ்வொன்றும் பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியமாகிறது என்பதையே நாம் கவனித்தாக வேண்டும். உயிர்வாழ காற்று எவ்வளவு அவசியமாகத் தேவைப்படுகிறதோ, அதே போல பாட்டாளி வர்க்கத்துக்கு, வர்க்க உணர்வும் அமைப்புரீதியிலான பலமும் தேவைப்படுகிறது.

இருப்பினும் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்துமே வெறும் தயாரிப்புக்கான போராட்ட வடிவங்களே. இருந்த போதிலும் எந்த தனிப்பட்டதொரு போராட்ட வடிவத்தையும் எடுத்துக் கொண்டு பார்த்தால், இவற்றில் எந்த ஒரு வடிவமும், முதலாளித்துவ வர்க்கத்தை அடித்து நொறுக்குவதற்கான தீர்மானகரமான வழி முறைச் சாதனமாக பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்காது.

பொது வேலை நிறுத்தத்தால் மட்டுமே, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கிவிட முடியாது. முதலாளித்துவத்தை அடித்து நொறுக்குவதற்கான சூழ்நிலைகளில் அவசியமான ஒரு சிலவற்றை வேண்டுமானால், பொது வேலை நிறுத்தமானது உருவாக்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்துவிட முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான நிலைமைகளில் சிலவற்றை மட்டுமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் தயாரிக்க முடியும்.(அராஜகவாதமா? சோஷலிசமா?)

Friday 19 August 2022

பாட்டாயினுடைய உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும் பற்றி மார்க்ஸ்

பணவுடைமையாளர் சந்தையில் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக இருக்கக் காண்பதற்கு இரண்டாவது அத்தியாவசிய நிபந்தனை, உழைப்பாளி தன் உழைப்பாலான சரக்குகளை விற்கிற நிலையில் இருப்பதற்குப் பதிலாக உயிரும் உடலுமான அவரையே உறைவிடமாய்க் கொண்ட அவ்வுழைப்புச் சக்தியையே ஒரு சரக்காக விலைக்குக் கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும். 

ஒருவர் உழைப்புச் சக்தி தவிர ஏனைய சரக்குகளை விற்க வேண்டுமானால், அவரிடம் கச்சாப் பொருட்கள், கருவிகள் முதலான உற்பத்திச் சாதனங்கள் இருந்தாக வேண்டும். தோலில்லாமல் செருப்பு தைக்க முடியாது. வாழ்வுச் சாதனங்களும் அவருக்குத் தேவைப்படுகின்றன. யாருமே- "எதிர்காலத்தின் இசைவாணர் கூட"- வருங்கால உற்பத்திப் பண்டங்களைக் கொண்டோ, அல்லது இறுதி வடிவளிக்கப்படாத நிலையிலுள்ள பயன்-மதிப்புகளைக் கொண்டோ வாழ முடியாது.

மனிதன் உலக அரங்கத்தில் தோன்றிய கணம் முதலே, அவன் உற்பத்தி செய்வதற்கு முன்னரும், உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போதும், எப்போதுமே நுகர்வாளனாக இருந்திருக்கிறான், இனியும் இருந்தாக வேண்டும். எல்லா உற்பத்திப் பண்டங்களும் சரக்குகளின் வடிவம் எடுக்கிற ஒரு சமுதாயத்தில், அவை உற்பத்தி செய்யப்பட்ட பிறகு விற்கப்பட்டாக வேண்டும்; விற்கப்பட்ட பிறகுதான் அவை தமது உற்பத்தியாளரின் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பயன்பட முடியும். அவற்றின் விற்றலுக்கு அவசியமான நேரம் அவற்றின் உற்பத்திக்கு அவசியமான நேரத்தோடு கூட்டிச் சேர்க்கப்படுகிறது. 

எனவே, பணவுடைமையாளர் அவரது பணத்தை மூலதமாக மாற்றிக் கொள்ள சந்தையில் சுதந்தர உழைப்பாளியைச் சந்திக்க வேண்டும். சுதந்தர மனிதர் என்ற விதத்தில் தன் உழைப்புச் சக்தியை தன் சொந்தச் சரக்காக விற்கக் கூடியவர் ஆவார், மறுபுறம் விற்பதற்கு வேறு சரக்கேதும் இல்லாதவரும் தன் உழைப்புச் சக்தியை ஈடேற்றிக் கொள்வதற்கு அவசியமான எதுவுமே இல்லாதவரும் ஆவார் என்ற இரட்டை அர்த்தத்தில் இந்த உழைப்பாளியை சுதந்தர உழைப்பாளி என்கிறோம். 

இந்தச் சுதந்தர உழைப்பாளி சந்தைக்கு வந்து பணவுடைமையாளரை எதிர்கொள்வது ஏன் என்ற கேள்வி குறித்து உழைப்புச் ந்தையைச் சரக்குகளுக்கான பொதுச் சந்தையின் கிளையாகக் கருதுபவரான அந்தப் பணவுடைமையாளருக்கு அக்கறையில்லை. இப்போதைக்கு அது குறித்து நமக்கும் அக்கறையில்லை. இந்த உண்மையை அவர் நடைமுறையில் ஏற்பதைப் போலவே நாம் தத்துவத்தில் ஏற்கிறோம். ஆயினும் ஒன்று தெளிவு--இயற்கை ஒரு பக்கத்தில் பணம் அல்லது சக்குகளின் உடைமையாளர்களையும் மறு பக்கத்தில் தம் சொந்த உழைப்புச் சக்தி தவிர வேறேதும் இல்லாதவர்களையும் படைப்பதில்லை. இந்த உறவுக்கு இயற்கையான அடிப்படை ஏதுமில்லை. அதன் சமூக அடிப்படையும் எல்லா வரலாற்றுக் காலங்களுக்கும் பொதுவானதன்று. அது கடந்த கால வரலாற்று வளர்ச்சியின் விளைவு, பல பொருளாதாரப் புரட்சிகளின் -பழமைப்பட்ட சமுதாயப் பொருளுற்பத்தி வடிவங்களது முழுத் தொடர் ஒன்று இல்லாதொழிந்ததன்-பலன் என்பது தெளிவு. 

(மூலதனம் 1 பக்கம் 233-234)

உழைப்பாளியின் உழைப்புச் சக்தி ஒரு சரக்கு ஆகும் என்பது பற்றி மார்க்ஸ்

சரக்கு உழைக்கும் திறன் அல்லது உழைப்புச் சக்தியின் உருவில் ந்தையில் இருக்கக் காண்கிறார். 

உழைப்புச் சக்தி அல்லது உழைக்கும் திறன் என்று சொல்லும் போது ஒரு மனிதனிடமுள்ள மூளையாற்றல்கள், உடலாற்றல்கள் ஆகியவற்றின் - ஏதேனும் ஒரு வகைப் பயன்-மதிப்பை உற்பத்தி செய்யும் போதெல்லாம் அவன் பயன்படுத்துகிற இந்த ஆற்றல்களின் -ஒட்டுமொத்தம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால் நம்து பணவுடைமையாளர் ஒரு சரக்காக விலைக்கு வரும் உழைப்புச் சக்தியைக் காண வேண்டுமானால் முதற்கண் பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சரக்குளின் பரிவர்த்தனை தன்னளவில், தன் சொந்த இயல்பிலிருந்தே விளைகின்றவற்றைத் தவிர வேறு எந்தச் சார்பு உறவையும் குறிப்பதில்லை. இந்த அனுமானத்தின் பேரில், உழைப்புச் சக்தியைப் பெற்றிருப்பவர்- உழைப்புச் சக்தி யாருடையதோ அந்தத் தனியாள் -அந்த உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விற்பனைக்கு முன்வைக்கவோ விற்கவோ செய்தால்தான் - அப்படிச் செய்கிற அளவில் தான் - உழைப்புச் சக்தி ஒரு சரக்காக சந்தைக்கு வர முடியும்.

அவர் இதைச் செய்ய வேண்டுமானால், அதைத் தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், தன் உழைக்கும் திறனின், அதாவது தன் சரீரத்தின் வில்லங்கமற்ற உடைமையாளராக இருக்க வேண்டும். அவரும் பணவுடைமையாளரும் சந்தையில் சந்தித்து, ஒருவர் வாங்குபவர், மற்றவர் விற்பவர் என்ற ஒரே ஒரு வேறுபாடு மட்டும் நிலவ சம உரிமைகளின் அடிப்படையில் ஒருவரோடு ஒருவர் பேரம் செய்கின்றனர்; எனவே இருவரும் சட்டத்தின் பார்வையில் சமம் ஆகின்றனர்.

இந்த உறவு தொடர்வதற்கு, திட்டமான காலத்துக்கு மட்டுமே உழைப்புச் சக்தியின் உடைமையாளர் அதை விற்க வேண்டுமென்பது அவசியமாகிறது. ஏனெனில் அவர் அதை மொத்தமாக, ஒரேயடியாக விற்று விடுவதானால் அவர் தன்னையே விற்பதாகும்; சுதந்தமனிதன் என்பதிலிருந்து அடிமையாக, சரக்கின் உடைமையாளர் என்பதிலிருந்து சக்காகத் தன்னை மாற்றிக் கொள்வதாகும். அவர் இடையறாது தன் உழைப்புச் சக்தியை, தன் சொந்த உடைமையாக, தன் சொந்தச் சரக்காகக் கருத வேண்டும்; அதை அவர் வாங்கு வோரிடம் தற்காலிகமாகத் திட்டமான கால அளவுக்கு ஒப்புக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். இந்த வழியில் மட்டுமே அவர் அதன் உடைமையாளர் என்ற தன் உரிமைகளைத் துறக்காதிருக்க முடியும்.

(மூலதனம் 1 பக்கம் 232-233)

பாட்டாளியினுடைய உழைக்கும் சக்தியின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுவதைப் பற்றி மார்க்ஸ்:-

 

“ஒவ்வொரு சரக்கின் மதிப்பையும் போலவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் இந்தத் தனிவகைப் பண்டத்தின் உற்பத்திக்கும், ஆகவே மறுவுற்பத்திக்கும் [reproduction] - கூட அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அது மதிப்பைப் பெற்றுள்ளதென்ற அளவில் அதில் சேர்ந்துள்ள சராசரி சமுதாய உழைப்பின் திட்டமான அளவையன்றி வேறு எதையும் குறிப்பதில்லை.

 உழைப்புச் சக்தி இருப்பது உயிருள்ள தனியாளின் ஆற்றல் அல்லது சக்தியாகவே. ஆதலால் அவர் இருந்தாலன்றி அதன் உற்பத்தி சாத்தியமன்று. தனியாள் இருக்க, உழைப்புச் சக்தியின் உற்பத்தி அவர் தன்னையே மறுவுற்பத்தி செய்து கொள்வதில், அதாவது அவரது பராமரிப்பில் அடங்கியுள்ளது. அவரது பராமரிப்புக்கு குறிப்பிட்ட அளவிலான வாழ்வுச் சாதனங்கள் அவருக்குத் தேவைப்படுகின்றன. எனவே உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் என்பது அந்த வாழ்வுச் சாதனங்களின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரமாகி விடுகிறது; வேறு விதமாகச் சொன்னால், உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது உழைப்பாளியின் பராமரிப்புக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மதிப்பே. ஆயினும் உழைப்புச் சக்தி எதார்த்தமாவது அதன் பிரயோகத்தின் வாயிலாகவே. அது தன்னைச் செயல்படுத்திக் கொள்வது வேலை செய்வதன் மூலமே. ஆனால், இவ்வழியில் மனிதத் தசை, நரம்பு, மூளை முதலானவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு செலவழிகிறது; செலவழிந்த இவற்றை மீட்டமைக்க வேண்டும். இவ்வகையில் செலவு கூடினால் வருமானமும் கூட வேண்டும்.

உழைப்புச் சக்தியின் உடைமையாளர் இன்று வேலை செய்கிறார் என்றால், ஆரோக்கியம், வலிமை ஆகியவை தொடர்பான அதே நிலைமைகளில் அதே நிகழ்முறையை நாளை மீண்டும் நிகழ்த்த அவருக்கு சக்தியிருக்க வேண்டும். எனவே, அவரது வாழ்வுச் சாதனங்கள் தொடர்ந்து அவர் உழைப்பாளிக்குரிய இயல்பான நிலையில் இருப்பதற்குப் போதுமானவையாக இருக்க வேண்டும்.

உணவு, உடை, எரிபொருள், உறைவிடம் போன்ற அவரது இயற்கைத் தேவைகள் அவரது நாட்டின் வெப்பதட்ப நிலைமைகளுக்கும் பௌதிக நிலை மைகளுக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. மறு புறம் அவரது அவசியத் தேவைகள் என்பவற்றின் தொகையும் அளவும், அதே போல் அவற்றை நிறைவு செய்கிற முறைகளும் வரலாற்று வளர்ச்சியிலிருந்து விளைகிறவை; எனவே, அவை பெருமளவுக்கு நாடு நாகரிக வளர்ச்சியில் எந்நிலையை அடைந்துள்ளது என்பதையும், இன்னும் குறிப்பாக, எப்படிப்பட்ட நிலைமைகளிலும் ஆகவே எம்மாதிரியான பழக்க வழக்கங்களுடனும் வசதிகளின் வளர்ச்சி நிலையுடனும் சுதந்தரத் தொழிலாளர்களின் வர்க்கம் உருவெடுத்தது என்பதையும் பொறுத்தவை. எனவே, ஏனைய சரக்குகளின் மதிப்பு நிர்ணயத்தில் போலல்லாமல், உழைப்புச் சக்தியின் மதிப்பு நிர்ணயத்தில் வரலாற்று-தார்மிகக் கூறு ஒரு காரணியாக இடம் பெறுகிறது. எனினும் குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட காலத்தில், உழைப்பாளிக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் சராசரி அளவு நடைமுறை வாயிலாகத் தெரிந்து விடுகிறது.”

(மூலதனம் 1 பக்கம்236-237)

Tuesday 12 July 2022

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்- கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

(அறிக்கையில் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பும் மேற்கட்டமைப்பும் தீர்மானிக்கிறது என்று கூறுவது அபத்தமானது, ஆபத்தானதும்கூட. மேல்கட்டமைப்பும் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது என்ற கருத்து, மார்க்சிய அடிப்படையை திரிபில்லாமல் புரிந்து கொள்வதற்கு தடையை ஏற்படுத்துகிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவரை பிரச்சினையே மிஞ்சும். மார்க்சிய வழியில் செயல்பட முடியாது.

 

வாழ்நிலைதான் சிந்தனைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இந்த அடிப்படையையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாடு விளக்குகிறது.)

 

மார்க்ஸ்-எங்கெல்ஸ்:-

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் -- சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக் கின்றன.

சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டுவிட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.”

(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அத்தியாயம் 2)