Tuesday 1 August 2023

முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு பாட்டாளி வர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஸ்டாலின்.


முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?

எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும்?

இதற்கான விடை மிகத் தெளிவானது. முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானம் செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைவதைச் சாதிக்க முடியாது. தவறாமல் போராட்டப் பாதையை அது மேற்கொள்ள வேண்டும்; இந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாக இது இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும்! அல்லது, இன்னொரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும்! இரண்டில் எது என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கம் எப்போதும் முன்வைக்க வேண்டும். இதுதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.

இருப்பினும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் எண்ணற்ற வடிவங்களை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, வேலை நிறுத்தம் என்பது வர்க்கப் போராட்டமே. அது பகுதியளவிலான வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, அல்லது, பொதுவேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே இது பொருந்தும். இதுதவிர, புறக்கணிப்புகள், உற்பத்தியைச் சீர்குலைத்தல் ஆகியனவும் சந்தேகத்துக்கிடமின்றி வர்க்கப் போராட்டங்களேயாகும்.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போராட்டமே. பொது மக்கள் பிரதிநிதித்துவ அவைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வர்க்கப் போராட்ட நடவடிக்கைகளே. அந்த அவைகள் தேசிய நாடாளுமன்றங்களாக இருந்தாலும் சரி, அல்லது, உள்ளூராட்சி மன்றங்களாக இருந்தாலும் சரி, இதில் ஒன்றும் வேறுபாடு இல்லை. இவை அனைத்துமே ஒரே வர்க்கப் போராட்டத்தின் வெவ்வேறான வடிவங்களே ஒழிய வேறல்ல. பாட்டாளி வர்க்கத்துக்கு, அதனுடைய வர்க்கப் போராட்டத்தில், எந்த வடிவிலான போராட்டம் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் பரிசீலிக்கப் போவது இல்லை. பாட்டாளி வர்க்கமானது தனது வர்க்க உணர்வையும் அமைப்பு ரீதியிலான பலத்தையும் அதிகமாக்கிக் கொள்வதற்கான சாதனம் என்ற முறையில், காலத்துக்கும் இடத்துக்கும் பொருத்தமாக, ஒவ்வொன்றும் பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியமாகிறது என்பதையே நாம் கவனித்தாக வேண்டும். உயிர்வாழ காற்று எவ்வளவு அவசியமாகத் தேவைப்படுகிறதோ, அதே போல பாட்டாளி வர்க்கத்துக்கு, வர்க்க உணர்வும் அமைப்புரீதியிலான பலமும் தேவைப்படுகிறது.

இருப்பினும் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்துமே வெறும் தயாரிப்புக்கான போராட்ட வடிவங்களே. இருந்த போதிலும் எந்த தனிப்பட்டதொரு போராட்ட வடிவத்தையும் எடுத்துக் கொண்டு பார்த்தால், இவற்றில் எந்த ஒரு வடிவமும், முதலாளித்துவ வர்க்கத்தை அடித்து நொறுக்குவதற்கான தீர்மானகரமான வழி முறைச் சாதனமாக பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்காது.

பொது வேலை நிறுத்தத்தால் மட்டுமே, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கிவிட முடியாது. முதலாளித்துவத்தை அடித்து நொறுக்குவதற்கான சூழ்நிலைகளில் அவசியமான ஒரு சிலவற்றை வேண்டுமானால், பொது வேலை நிறுத்தமானது உருவாக்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்துவிட முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான நிலைமைகளில் சிலவற்றை மட்டுமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் தயாரிக்க முடியும்.(அராஜகவாதமா? சோஷலிசமா?)

No comments:

Post a Comment