Friday 19 August 2022

பாட்டாயினுடைய உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும் பற்றி மார்க்ஸ்

பணவுடைமையாளர் சந்தையில் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக இருக்கக் காண்பதற்கு இரண்டாவது அத்தியாவசிய நிபந்தனை, உழைப்பாளி தன் உழைப்பாலான சரக்குகளை விற்கிற நிலையில் இருப்பதற்குப் பதிலாக உயிரும் உடலுமான அவரையே உறைவிடமாய்க் கொண்ட அவ்வுழைப்புச் சக்தியையே ஒரு சரக்காக விலைக்குக் கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும். 

ஒருவர் உழைப்புச் சக்தி தவிர ஏனைய சரக்குகளை விற்க வேண்டுமானால், அவரிடம் கச்சாப் பொருட்கள், கருவிகள் முதலான உற்பத்திச் சாதனங்கள் இருந்தாக வேண்டும். தோலில்லாமல் செருப்பு தைக்க முடியாது. வாழ்வுச் சாதனங்களும் அவருக்குத் தேவைப்படுகின்றன. யாருமே- "எதிர்காலத்தின் இசைவாணர் கூட"- வருங்கால உற்பத்திப் பண்டங்களைக் கொண்டோ, அல்லது இறுதி வடிவளிக்கப்படாத நிலையிலுள்ள பயன்-மதிப்புகளைக் கொண்டோ வாழ முடியாது.

மனிதன் உலக அரங்கத்தில் தோன்றிய கணம் முதலே, அவன் உற்பத்தி செய்வதற்கு முன்னரும், உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போதும், எப்போதுமே நுகர்வாளனாக இருந்திருக்கிறான், இனியும் இருந்தாக வேண்டும். எல்லா உற்பத்திப் பண்டங்களும் சரக்குகளின் வடிவம் எடுக்கிற ஒரு சமுதாயத்தில், அவை உற்பத்தி செய்யப்பட்ட பிறகு விற்கப்பட்டாக வேண்டும்; விற்கப்பட்ட பிறகுதான் அவை தமது உற்பத்தியாளரின் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பயன்பட முடியும். அவற்றின் விற்றலுக்கு அவசியமான நேரம் அவற்றின் உற்பத்திக்கு அவசியமான நேரத்தோடு கூட்டிச் சேர்க்கப்படுகிறது. 

எனவே, பணவுடைமையாளர் அவரது பணத்தை மூலதமாக மாற்றிக் கொள்ள சந்தையில் சுதந்தர உழைப்பாளியைச் சந்திக்க வேண்டும். சுதந்தர மனிதர் என்ற விதத்தில் தன் உழைப்புச் சக்தியை தன் சொந்தச் சரக்காக விற்கக் கூடியவர் ஆவார், மறுபுறம் விற்பதற்கு வேறு சரக்கேதும் இல்லாதவரும் தன் உழைப்புச் சக்தியை ஈடேற்றிக் கொள்வதற்கு அவசியமான எதுவுமே இல்லாதவரும் ஆவார் என்ற இரட்டை அர்த்தத்தில் இந்த உழைப்பாளியை சுதந்தர உழைப்பாளி என்கிறோம். 

இந்தச் சுதந்தர உழைப்பாளி சந்தைக்கு வந்து பணவுடைமையாளரை எதிர்கொள்வது ஏன் என்ற கேள்வி குறித்து உழைப்புச் ந்தையைச் சரக்குகளுக்கான பொதுச் சந்தையின் கிளையாகக் கருதுபவரான அந்தப் பணவுடைமையாளருக்கு அக்கறையில்லை. இப்போதைக்கு அது குறித்து நமக்கும் அக்கறையில்லை. இந்த உண்மையை அவர் நடைமுறையில் ஏற்பதைப் போலவே நாம் தத்துவத்தில் ஏற்கிறோம். ஆயினும் ஒன்று தெளிவு--இயற்கை ஒரு பக்கத்தில் பணம் அல்லது சக்குகளின் உடைமையாளர்களையும் மறு பக்கத்தில் தம் சொந்த உழைப்புச் சக்தி தவிர வேறேதும் இல்லாதவர்களையும் படைப்பதில்லை. இந்த உறவுக்கு இயற்கையான அடிப்படை ஏதுமில்லை. அதன் சமூக அடிப்படையும் எல்லா வரலாற்றுக் காலங்களுக்கும் பொதுவானதன்று. அது கடந்த கால வரலாற்று வளர்ச்சியின் விளைவு, பல பொருளாதாரப் புரட்சிகளின் -பழமைப்பட்ட சமுதாயப் பொருளுற்பத்தி வடிவங்களது முழுத் தொடர் ஒன்று இல்லாதொழிந்ததன்-பலன் என்பது தெளிவு. 

(மூலதனம் 1 பக்கம் 233-234)

No comments:

Post a Comment