Sunday 15 July 2018

கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது பி. எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை


(மார்க்சின் மாபெரும் கண்டுபிடிப்புகளாக எங்கெல்ஸ் இங்கு இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று வரலாறு பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று உபரி மதிப்பு பற்றிய கோட்பாடு. உபரி மதிப்பு என்பது பொருளாதாரத்தோடு தொடர்புடையது, இது பற்றி அதிகம் பேசப்படுவதில்லை, ஆனால் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை பலர் திரித்துரைக்கின்றனர். மக்களின் செயற்பாட்டையே மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாத்தில்  குறிப்பிட்டுள்ளார், ஆனால் சிலர் வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார் என்று தவறாக கூறிவருவதாக இத்தகையினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எங்கெல்ஸ் இங்கு “மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்” என்று நேரடியாகவே கூறியுள்ளார். விதி என்று கூறினால் அது இயக்கவியலுக்கு மாறானது என்று இந்தத் திரிபாளர்கள் கூறுகின்றனர். விதிவாதமான நிர்ணயவாதத்தை எதிர்ப்பதாக கூறி இவ்வகையினர் மார்க்சின் கருத்தையே எதிர்க்கின்றனர்.)

“மார்ச் 14ஆம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம் மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருக்கின்ற இடை வெளியை நாம் சீக்கிரமாகவே உணருவோம்.

அங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார். மனிதன் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும் இருக்க இருப்பிடத்தையும் உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது; ஆகவே உடனடியான பொருளாயத வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருதுகோள்கள், கலை மற்றும் மதக் கருத்துகள் கூட வளர்ச்சியடைகின்றன; ஆகவே அதன் ஒளியில்தான் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அதுமட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அந்த உற்பத்தி முறை தோற்றுவித்துள்ள இயக்கத்தின் விசேஷ விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது; அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டு பிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால் கூட அந்த மனிதர் அதிர்ஷ்ட முடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் - அவர் பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில்கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை - கணிதத்தில்கூட சுயேச்சையான கண்டு பிடிப்புகளைச் செய்தார்.

அத்தகைய புலமைப்பாடுமிக்க மனிதர் அவர். ஆனால் இது அவருடைய சாதனையில் அரைப் பங்கு கூட அல்ல. மார்க்ஸ் புலமைப் பாட்டை இயக்காற்றலுடைய, புரட்சிகரமான சக்தியாகக் கண்டார், ஏதாவதொரு கொள்கை சார்ந்த அறிவுத் துறையில் ஒரு புதிய கண்டு பிடிப்பை - அதன் செயல்முறைப் பிரயோகம் எப்படியிருக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத நிலையில் - அக்கண்டுபிடிப்பு, தொழில்துறையிலும் மற்றும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியிலும் உடனடியாக வரும் மாற்றங்களைத் தூண்டுமானால் முற்றிலும் மகிழ்ச்சி அடைந்தார். உதாரணமாக, மின்சாரத் துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை அவர் துணுக்கமாகக் கவனித்தார். சமீபகாலத்தில் மார்செல் டெப்ரேயின் ஆராய்ச்சிகளைப் பற்றியும்அப்படியே செய்தார்.

ஏனென்றால் மார்க்ஸ் முதலில் ஒரு எல்லாவற்றையும்விட புரட்சிக்காரர்; ஏதாவதொரு வழியில் முதலாளித்துவ சமூகத்தை மற்றும் அது உருவாக்கியிருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கு, நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் - அதன் செரிந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படிச் செய்த முதல் நபர் அவரே - விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர். அவரைப் போல உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது. முதல் RIheirnischie Zeitung (1842), 'பாரிஸ் Vorwards (1844),” Deutsche-Brusseler - Zeitung (1847), Neue Rheinische Zeitung (1848-1849), New-York Daily Tribune (1852 181) இதழ்களிலும் போர்க் குணமிக்க பிரசுரங்களிலும், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஸ்தாபனங்களிலும், அவருடைய பணி; இறுதியாக, எல்லாவற்றுக்கும் சிகரமாக சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அவர் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்தச் சாதனையைப் பற்றி மட்டுமே நிச்சயமாகப் பெருமை அடைய முடியும்.

ஆகவே மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சாதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத் தம்முடைய நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர் - அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதிதீவிர ஜனநாயகவாதிகளோ - மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் அவர் ஒட்டடையை போல ஒதுக்கித் தள்ளினார், அவற்றைப் புறக்கணித்தார்; இன்றியமையாத அவசியம் நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் பதிலளித்தார். சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர சகதொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அவர் மரணமடைந்த பொழுது, அவர்கள் கண்ணீரைச் சொரிந்தார்கள். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்!”

(மார்ச் 17, 1883இல் லண்டன். ஹைகேட் இடுகாட்டில் பி. எங்கெல்ள்பு ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை Der Sozialdemokrat பத்திரிகை, எண் 13 மார்ச் 22, 1883 என்ற இதழில் ஜெர்மன் மொழியில் வெளியிடப் பட்டது. மூலம் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது. பத்திரிகை வாசகப்படி கையெழுத்துப் பிரதியின் ஆங்கில வாசகத்துடன் சரிபார்த்து அச்சிடப்பட்டது)


(மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 9/20 – பக்கம் -255-257-என் சி பி எச்)


Friday 13 July 2018

சமுதாயம் என்பது என்ன?- மார்க்ஸ்


(மக்களின் செயற்பாடே வரலாற்றைப் படைக்கிறது என்கிற மார்க்சிய கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, இதற்கு அடுத்துக் கூறப்பட்டுள்ளதை, சிலர் பார்க்கத் தவறுகின்றனர்.. தமது வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்தரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் மார்க்சியம் வலியுறுத்துகிறது. மனிதர்களின் செயற்பாடு, இருக்கக் காண்கிற சூழ்நிலைமைளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்ளுக்கு முன்பே இருந்து வரும் சமுதாய வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் செயற்பாடு எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்பதையும் மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இதில் தான் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் அடங்கியிருக்கிறது.

புறநிலையின் நிர்ணய பாத்திரத்தையும், மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது செலுத்தும் தாக்கத்தையும் மார்க்சியம் கணக்கில் கொண்டே “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டை அமைத்துள்ளது. அடித்தளம் என்றால் வாழ்நிலை, மேற்கட்டமைப்பு என்றால் சிந்தனை வடிவங்கள். வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே மார்க்சியத்தின் வரலாறு (சமூகம்) பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகும்.

ஆனால், பலர் புறநிலையின் தீர்மானகரத் தன்மையைப் பற்றி பேசினால், இயக்கமறுப்பியல் என்று கூறுகின்றனர். இந்தக் கூற்று மார்க்சின் இயக்கவியலை புரிந்து கொள்ளாமையின் வெளிப்படாகும்.)

“என்ன வடிவத்திலிருந்தாலும் சரியே, சமுதாயம் என்பது என்ன?

மக்களின் பரஸ்பரச் செய்கையின் விளைபொருள். மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமுதாயத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்தரம் பெற்றிருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை. மனிதர்களின் உற்பத்தி சக்திகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அனுமானித்துக் கொள்ளுங்கள், வர்த்தகம் நுகர்வு பற்றிய ஒரு குறிப்பிட்ட வடிவம் உங்களுக்குக் கிடைக்கும். உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் நுகர்விலும் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களை அனுமானித்துக் கொள்ளுங்கள், அவற்றிற்குப் பொருத்தமான ஒரு சமுதாய அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பும் படிப்பிரிவுகளின் அல்லது வர்க்கங்களின் அமைப்பும் - சுருங்கச் சொன்னால், ஒரு பொருத்தமான குடியுரிமைச் சமுதாயம் - உங்களுக்குக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட குடியுரிமைச் சமுதாயத்தை அனுமானித்துக் கொள்ளுங்கள். அந்தக் குடியுரிமைச் சமுதாயத்தின் வெறும் அதிகாரபூர்வமான வெளிப்பாடாக இருக்கிற குறிப்பிட்ட அரசியல் அமைப்பு உங்களுக்குக் கிடைக்கும். இதைத் திரு. புரூதோன் என்றைக்கும் புரிந்து கொள்ள மாட்டார். ஏனெனில் அரசு எனும் நிலையில் நின்றுகொண்டு சமுதாயத்துக்கு - அதாவது, சமுதாயத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான பொழிப்பின் நிலையில் நின்று கொண்டு அதிகாரபூர்வமான சமுதாயத்துக்கு – வேண்டுகோள் விடுப்பதில் தாம் பெரிதாக ஏதோ செய்வதாக அவர் நினைத்துக் கொள்கிறார்.

தமது வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்தரம் உள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை, ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும், முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும்; ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்ளுக்கு முன்பே - அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு - இருந்து வரும் சமுதாய வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னிட்டு வரும் ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையால் பெறப்பட்ட உற்பத்திச் சக்திகளைக் கைவரப் பெறுகிறது, அது புதிய உற்பத்திக்குரிய மூலப் பொருளாக அதற்குப் பயன்படுகிறது, இந்த எளிய உண்மையின் காரணமாக மனித வரலாற்றிலே ஒரு கூட்டுப்பொருத்தம் உண்டாகிறது, மனித குலத்தின் வரலாறு உருப்பெறுகிறது, மனிதனின் உற்பத்திச் சக்திகளும் எனவே அவனுடைய சமுதாய உறவுகளும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வளர்க்கப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு வரலாறானது மனிதகுல வரலாறாக அமைகிறது. எனவே, மனிதர்களின் சமுதாய வரலாறு எனப்பட்டது எப்போதும் அவர்களின் தனிநபர் வளர்ச்சியின் - அதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் உணராவிட்டாலும் சரி - வரலாறு தவிர வேறில்லை. அவர்களின் பொருளாயத உறவுகளே அவர்களின் உறவுகளனைத்துக்கும் அடிப்படை. இந்தப் பொருளாயத உறவுகள் அவசியகரமான வடிவங்கள் மட்டுமே, அவற்றில் அவர்களுடைய பொருளாயத மற்றும் தனிநபர் வகைப்பட்ட செயல்கள் நடக்கின்றன.”
(பா.வ.ஆன்னெகவுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்- டிசம்பர் 28 - 1846)

Saturday 7 July 2018

இடது , வலது திரிபுகளுக்கு மாறான சட்ட மன்ற வேலைகள் மற்றும் பலப்பிரயோகம் பற்றி லெனின்:-


இன்று புரட்சிகரச் சூழ்நிலை இருக்கவில்லை, மக்கள் பெருந்திரளினரிடையே அமைதியின்மையை உண்டாக்கும், அல்லது அவர்களுடைய செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நிலைமைகள் இருக்கவில்லை. இன்று உங்களிடம் ஓட்டுச் சீட்டு தரப்படுகிறது – அதை வாங்கிக் கொள்ளுங்கள், அதை உங்கள் பகைவர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் பொருட்டு – சிறைக்குச் செல்லப் பயந்து தமது நாடாளுமன்ற இருக்கைகளில் ஒட்டிக் கொள்ளும் ஆட்களுக்குச் சொகுசான சட்டமன்ற வேலைகள் கிடைப்பதற்கான சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டல்ல – ஒழுங்கமைப்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். நாளைக்கு உங்களது ஓட்டுச் சீட்டு உங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு, துப்பாக்கியோ மிக நவீன தொழில்நுணுக்கத்தின் சாதனையாகிய அதிவேகப் பீரங்கியோ உங்களிடம் தரப்படுகிறது – சாவையும் அழிவையும் பொழியும் இந்த ஆயுதத்தை வாங்கிக் கொள்ளுங்கள், யுத்ததைக் கண்டு அஞ்சும் பிணி கொண்ட அழுமூஞ்சிகளது உணர்ச்சிப் பசப்புக்குச் செவி சாய்க்காதீர்கள், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகச் சுட்டுப் பொசுக்கியும் வெட்டி வீழ்த்தியும் நிச்சயமாய் ஒழிக்கப்பட்டாக வேண்டியதை இன்னமும் உலகில் மிகப் பலவும் இருக்கின்றன, மக்கட் பெருந்திரளினரிடத்தே ஆத்திரமும் ஆவேசமும் வளர்ந்திடுமாயின், புரட்சிகரச் சூழ்நிலை எழுமாயின், புதிய நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்காகத் தயார் செய்யுங்கள், சாவுக்கும் அழிவுக்குமான இந்தப் பயன்தரும் ஆயுதங்களை உங்களது சொந்த அரசாங்கத்துக்கும் உங்களது சொந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிராக உபயோகியுங்கள்
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு - பக்கம்- 82-83)