Wednesday, 2 October 2024

அகவியம் பற்றி (அகநிலைவாதம் பற்றி) மாவோ

    அகவியம் (அகநிலைவாதம்) சில கட்சி உறுப்பினர்களிடையே தீவிரமான அளவில் இருப்பதோடு அரசியல் சூழலை பகுப்பாய்வு செய்வதற்கும் வேலைக்கான வழிகாட்டுதல்களிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் காரணம் அரசியல் சூழல் பற்றிய அகவயப் பகுப்பாய்வும் பணியில் அகவய வழிகாட்டுதலும் தவிர்க்க இயலாமல் வாய்ப்பியமாகவோ திடீர் புரட்சியியமாகவோ விளைகிறது. அகவய விமர்சனத்தைப் பொருத்தவரை தளர்வான அடிப்படையற்ற பேச்சு அல்லது சந்தேகம் கொள்கிற தன்மை போன்ற நடைமுறைகள் கட்சிக்குள் அடிக்கடி கொள்கையற்ற தகராறுகளை தோற்றுவித்து கட்சியமைப்பை அடியோடு தகர்க்கிறது.

மற்றொரு விசயமானது, உட்கட்சி விமர்சனத்தோடு இணைந்து சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அதாவது சில தோழர்கள் தாங்கள் விமர்சனம் செய்யும் போது பெரிய விசயங்களைப் புறக்கணித்து, சிறிய விசயங்களில் தங்களின் கவனத்தைக் குவிக்கின்றனர். அவர்கள் விமர்சனத்தின் முக்கிய கடமை, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வில்லை.

தனிநபர் குறைபாடுகளைப் பொருத்தவரை அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தவறுகளோடு தொடர்பு கொண்டிருக்காவிடில் அதிக விமர்சனப்பூர்வமாக இருக்கத் தேவையில்லை. சம்மந்தப்பட்ட தோழர்களை திக்குமுக்காடவைக்கவும் தேவை இல்லை. மேலும் அது போன்ற விமர்சனம் ஒருமுறை வளருமானால் கட்சி உறுப்பினர்கள் முழுவதுமாக சிறு தவறுகளில் கவனம் செலுத்துவதும் ஒவ்வொருவரும் அஞ்சியொடுங்கி அதீத எச்சரிக்கையினைக் கொள்வதோடு கட்சியின் அரசியல் கடமை களை மறக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதனைச் சரிசெய்யும் முதன்மை வழிமுறையானது, கட்சி உறுப்பினர்களின் சிந்தனை மற்றும் கட்சி வாழ்க்கையில் அரசியல் மற்றும் அறிவியல் பூர்வ மனப்பாங்கு ஊடுருவி பரவுவதற்கு அவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். இதனை அடைய நாம் கட்டாயம்:

 

1. கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் சூழலைப் பகுப்பாய்வு செய்வதிலும், வர்க்க சக்திகளை மதிப்பீடு செய்வதிலும் அகவியப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக மார்க்சிய - லெனினிய வழிமுறையைப் பொருத்தவும் கற்பிக்கவும் வேண்டும்.

 

2. கட்சி உறுப்பினர்களின் கவனத்தை போராட்ட செயலுத்திகளையும், வேலை முறைகளையும் நிர்ணயித்து மற்றும் உண்மையான நிலைமைகளை ஆய்வு செய்யாமல் கற்பனாவியம் மற்றும் திடீர் புரட்சியிய குழியில் வீழ்வர் என அத் தோழர்களுக்கு புரிந்து கொள்ள உதவும் வகையில், சமூகப் பொருளாதார ஆய்விற்கும், படிப்பிற்கும் கட்சி உறுப்பினர்களின் கவனத்தை திசைப்படுத்த வேண்டும்.

 

3. உட்கட்சி விமர்சனத்தில் அகவியம், விமர்சனத்தைக் கொச்சைப்படுத்துதல் மற்றும் தான்தோன்றித் தனத்துக்கும் (arbitrariness) எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். அறிக்கைகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் விமர்சனம் அரசியலை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும்.

(கட்சியிலுள்ள தவறான கருத்துகளைச் சரிசெய்தல் பற்றி

டிசம்பர்- 1929

தொகுதி – 1: பக்கம் 155-156)

 

No comments:

Post a Comment