Monday 8 May 2017

ஏப்ரல் ஆய்வுரைகளைப் புரிந்து கொள்வதற்கான லெனினது கருத்துக்கள்

ருஷ்ய சோஷலிசப் புரட்சிக்கான அடிப்படைகள்

லெனின்:- (1917 ஏப்ரல் 10 (23))
“ருஷ்யாவில் அரசு அதிகாரம் புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைந்துவிட்டது”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 45)

(ருஷ்யப் புரட்சி சோஷலிசப் புரட்சியாக மாறியதற்கு லெனினது இந்தக் கருத்தோடு பலர் முடங்கிக்கிடக்கின்றனர். ருஷ்யாவில் தோன்றிய இரட்டை ஆட்சி முறை என்கிற பிரத்யேக நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் இதன் முழுப்பொருளைப் புரிந்து கொள்ள முடியாது. அன்றையச் சூழ்நிலைமையை ஒருங்கணைந்துப் புரிந்து கொள்ள வேண்டும். சிலப்பகுதியை மட்டும் படித்துவிட்டு முடிவெடுக்கக்கூடாது. ஒருங்கிணைந்து புரிந்து கொள்வதற்கு லெனின்னது கருத்துக்கள் இங்கே தொகுக்கப்படுகிறது.)

தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள்
(1917- மார்ச் -7)

“இயற்கையிலேயோ வரலாற்றிலேயோ அற்புதங்கள்கிடையா. ஆனால் வரலாற்றின் ஒவ்வொரு திடீர் திருப்பமும் அத்தகைய செழுமையான உள்ளடக்கத்தினை வழங்குகின்றது. போராட்ட வடிவங்கள் மற்றும் போராடும் தரப்புக்களின் சக்திகளது அணி சேர்க்கையில் இத்தகைய எதிபாராத பிரத்தியேக இணைப்புக்களை வெளிப்படுத்துகின்றது. இது ஒவ்வொரு புரட்சிக்கும் பொருந்தும். எனவே சாமான்யர் மனதில் அற்புதமாகத் தோற்றமளிப்பவை நிறைய இருக்கும்.” (பக்கம் 12)

இரட்டை ஆட்சியைப் பற்றி

“ருஷ்யா முழுதிலுமுள்ள தொழிலாளர்களைப் போலவே பெத்ரோகிராத் தொழிலாளர்களும் ஜாரிச முடியாட்சியை எதிர்த்துத் தன்னல மறுப்புடன் போராடினார்கள். சுதந்திரத்திற்காகவும், விவசாயிகளுக்கு நிலம் கோரியும், ஏகாதிபத்தியப் படுகொலையை எதிர்த்து சமாதானத்திற்காகவும் போராடினார்கள். அந்தப் படுகொலையைத் தொடர்ந்து நடத்தவும் அதைத் தீவிரப்படுத்தவும் வேண்டி ஆங்கில-பிரெஞ்சு ஏகாதிபத்திய முதலாளிகள் அரசபரிவாரச் சதிகளைத் தொடுத்தார்கள், காவற்படை அதிகாரிகளுடன் கூடிச் சதிபுரிந்தார்கள், குச்கோவ்களையும், முழுமையான புதிய அரசாங்கம் ஒன்றை (முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம்) அமைத்தார்கள். இது பாட்டாளி வர்க்கம் ஜாரிசத்தை எதிர்த்து முதல் தாக்குதலைத் தொடுத்ததும் உடனடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. (தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 21)
..
இதனுடன் அக்கம்பக்கமாக முக்கியமான, அதிகாரப்பூர்வமல்லாத, இன்னும் வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது.  அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் ஏழைகள் பகுதி முழுமையின்  நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஆகும். இது படையாளிகள் விவசாயிகளுடனும், விவசாயித் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளிடத்தில் விட மேலதிகமாக விவசாயித் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.

மெய்யான அரசியல்  நிலைமை இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறவயமான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயலல் வேண்டும். அதன் வழி, மார்க்சியப் போர்த்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளம் – மெய்நடப்புகளின் அடித்தளம் – மீது நிறுவப்படலாம்.

ஜாரின் முடியாட்சி நொறுக்கப்பட்டது, ஆனால் இறுதியாக அழிக்கப்படவில்லை” (பக்கம்- 22-23)

(இரட்டை ஆட்சிமுறையின் அடிப்படையில் தான் லெனின் செயற்தந்திரத்தை (tactics) அமைத்துக்கொண்டார் என்பதை இந்த கடிதங்களில் தெளிவாக காணப்படகிறது.

அடுத்துவரும் லெனினது கருத்து மேலும் தெளிவுபடுத்துகிறது.)

“இந்த அரசாங்கத்தின் (முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின்)” பாலான எமது உடனடி உறவுநிலையின் செயற்தந்திரப் (tactics) பிரச்சினைகள் இன்னொரு கட்டுரையில் விளக்கப்படும். அக்கட்டுரையில் நாம் புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்திற்கான மாற்றமாக இருக்கும் இன்றைய நிலைமையின் பிரத்தியேகத் தன்மையை விளக்குவோம். இந்தத் தருணத்தில் “இந்நாள் கடமை” என்ற முழுக்கம்: தொழிலாளர்களே, ஜாராட்சியை எதிர்த்த உள்நாட்டுப் போரில் நீங்கள் பாட்டாளி வர்க்கச் செயல் வீரத்தின் மக்களின் செயல் வீரத்தின் அற்புதங்களைப் புரிந்திருக்கிறீர்கள், நீங்கள் முழுமையின் ஸ்தாபனங்களின் அற்புதங்களைப் புரிய வேண்டும், புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் உங்களது வெற்றிக்கு வழிகோலுங்கள் என்பதாக இருக்கவேண்டும். இது எதற்கு என்பதையும் நாம் விளக்குவோம்.” (தேர்வு நூல்கள் 5  -பக்கம்27)

இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்
(1917 ஏப்ரல் - 4-5)

“ 5)தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். தேர்வு செய்யப்படவும் எந்த நேரமும் திரும்பி அழைக்கப்படக் கூடியவர்களுமான பிரதிநிதிகளடங்கிய, அடிமுதல் முடிவரை தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் ஆகியோர்களைக் கொண்ட சோவியத்துகளின் குடியரசு வேண்டும். இவர்களின் ஊதியம் ஒரு தொழிலாளியின் சாராசரி ஊதியத்தைவிடக் கூடுதலாக இருக்கக் கூடாது.

8)“சோஷலிசத்தைப் “புகுத்துவது எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்.
(தேர்வு நூல்கள் 5 – பக்கம் 33 & 34)


இரட்டை ஆட்சி
(1917 – ஏப்ரல் - 9)

“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் கிரகித்துக் கொள்ள வேண்டும், இது புரிந்து கொள்ளப்படா விட்டால் நாம் முன்னேற முடியாது. பழைய “சூத்திரங்களை உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் ஸ்தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது. ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.”
(தேர்வு நூல்கள் 5 – பக்கம் 38)

நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்
(1917 – ஏப்ரல் - 10)

“ருஷ்யாவில் அரசு அதிகாரம் புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைந்துவிட்டது
(தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 45)
 “சோஷலிச்ப் புரட்சியின் அவசியத்தை மக்கள் தொகையின் மிகப் பெரிய பெரும்பானமை தெளிவாக உணராத காலம் வரையில், ஒரு விறு விவசாயகளின் நாட்டில் சோஷலிசத்தைப் “புகுத்தும்” நோக்கத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையின் கீழும் முன்வைக்கக் கூடாது.”
(தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 71)

செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்
(1917 ஏப்ரல் - 8-13)
“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.

இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.

இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.”



“போல்ஷிவிக்கு முழக்கங்களும் கருத்துகளும் பொதுப்படையாய் வரலாறு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஸ்தூலமான விவகாரங்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன, அவை யாரும் எதிர்ப்பாத்திருக்கக் கூடிய அளவுக்கு மேலாகத் தனிமாதிரியாகவும், சிறப்பாகவும் பலவாறாகவும் உருவாகியுள்ளன.

இந்த உண்மையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்கத் தவறுவது என்பதற்கு பொருள், புதிய உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் பிரத்தியேக இயல்புகளைப் பயில்வதற்குப் பதிலாகப் பொருள் விளங்காமல் மனப்பாடம் செய்து கொண்ட சூத்திரத்தை திருப்பிச் சொல்லி, நம் கட்சியின் வரலாற்றில் ஏற்கெனவே ஒரு தடமைக்கு மேலாகவே எவ்வளவோ வருந்தத்தக்க பாத்திரம் வகித்த அந்தப் “பழைய போல்ஷிவிக்குகளைப் பின்பற்றிச் செல்வதேயாகும்.”


“ஒரு மார்க்சியவாதி உண்மையான வாழ்க்கையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும், நேற்றைய கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது (not cling to a theory of yesterday). அது எல்லாக் கோட்பாடுகளையும் போல் அதிகபட்சமாக போனால் பிரதானமானதையும் பொதுவானதையும் மட்டுமே குறிக்கக் கூடியது, வாழ்க்கையை அதன் எல்லாச் சிக்கலோடும் முழுமையாய்க் காட்டும் நிலையை நெருங்குவதோடு நின்றுகொள்வது- என்கிற மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
..
பூர்ஷ்வாப் புரட்சியின் “நிறைவேற்றம் என்கிற பிரச்சினையைப் பழைய வழியிலே அணுகுவதானது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்.” 

No comments:

Post a Comment