Thursday 25 May 2017

மூலதனம் என்றால் என்ன? – எங்கெல்ஸ்

(மூலதனம், உழைப்பு சக்தி பற்றி எங்கெல்ஸ் மிகவும் சுருக்கமாக விளக்குகிறார்)

மூலதனம் என்றால் என்ன? பணமாக இருப்பதைப் பண்டமாக மாற்றி, அப்பண்டத்தை மீண்டும் பணமாக மாற்றி முன்னைவிட அதிகப் பணமாகக் கொள்வதற் கான பணம் அது நான் பருத்தியை 100 தேலர்களுக்கு வாங்கி 10 தேலர்களுக்கு விற்கும்போது என்னுடைய 100 தேலர்களை மூலதனமாக பெருகுகிற மதிப்பாகவே இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறேன். நான் லாபமாகப் பெறும் இந்த 10 தேலர்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி கிளம்புகிறது. இரு சாதாரண பரிவர்த்தனைகளின் விளைவாக 100 தேலர்கள் 110 தேலர்களாக ஆவது எப்படி? எல்லா பரிவர்த்தனைகளிலும் சம மதிப்புகள்தானே மாற்றப்படும் என்று அரசியல் பொருளாதாரம் வரையறுத்துக் கூறுகிறது. ஆரம்பத்திலிருந்த 100 தேலர்களிலிருந்து 10 தேலர்களை உபரி மதிப்பாக உண்டாக்க பொருளியலாளர் பாவனை மேற்கொள்ளும் நிலைமைகளில் சாத்தியமில்லை என்பதை நிரூபிக்கும் பொருட்டு (பண்டங்களின் விலைகளின் ஏற்ற இறக்கம் போன்ற) எல்லா சாத்தியமான உதாரணங்களையும் மார்க்ஸ் பரிசீலிக்கிறார் என்றாலும் இந்த நடைமுறை தினசரி நிகழ்கிறது. ஆனால் பொருளியலாளர் நமக்கு இதற்கான விளக்கத்தைத் தரவில்லை. மார்க்ஸ் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்: பரிமாற்ற மதிப்பை உற்பத்தி செய்யும் தன்மையுடைய பயன்பாட்டு மதிப்பு வாய்ந்த அறவே பிரத்தியேகமான பண்டம் ஒன்றை மார்க்கெட்டில் காண முடிந்தால் தான் இப்புதிரை விடுவிக்க முடியும். அந்தப் பண்டம் நிலவி வருகிறது, அதுதான் உழைப்பு சக்தி முதலாளி உழைப்பு சக்தியை மார்க்கெட்டில் விலைக்கு வாங்குகிறான். அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருளை விற்பதன் பொருட்டுத் தனக்காக அந்த உழைப்பு சக்தியை வேலை செய்யும்படி செய்கிறான். எனவே முதன்முதலில் நாம் உழைப்பு சக்தியைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும்.

உழைப்பு சக்தியின் மதிப்பு என்ன? பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விதியின்படி, ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வரலாற்று சகாப்தத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்று முறையில் நிலைநாட்டப்பட்டுவிட்ட வழியில் தன்னைப் பராமரித்துக் கொள்ளவும், மேலும் இனவிருத்தி செய்து கொள்வதற்கும் தேவையான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்புதான் அது. தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பு சக்தியின் மதிப்பு முழுவதற்குமான ஊதியம் கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். மேலும் இம்மதிப்பு தினசரி 6 மணி நேர வேலை அல்லது அரைநாள் வேலை உழைப்பிற்குச் சமம் என்றும் வைத்துக் கொள்வோம். ஆனால் முதலாளியோ தான் ஒரு வேலைநாள் முழுவதற்குமாக உழைப்பு சக்தியை வாங்கி விட்டதாக வாதாடுகிறான். தொழிலாளியைப் பன்னிரெண்டு மணியும் அதற்கும் அதிகமான நேரமும் வேலை செய்ய வைக்கிறான். எனவே பன்னிரெண்டு மணி நேரம் கொண்ட வேலைநாளில் ஆறு மணி நேரத்தில் உற்பத்தியான பொருளை, அதற்கான கூலியைக் கொடுக்காமலேயே, முதலாளி தனதாக்கிக் கொள்கிறான். முதலாளியின் லாபம், நில வாடகை வரிகள் இத்தியாதி என்னும் எல்லாவிதமான உபரி மதிப்பும் விலை கொடுக்கப்படாத உழைப்புதான் என்று இதிலிருந்து மார்க்ஸ் முடிவு கட்டுகிறார்

(மார்க்ஸ் மூலதனம் முதல் தொகுதி பற்றி மதிப்புரை- அக்டோபர் 12, 1867.)

No comments:

Post a Comment