Sunday 14 May 2017

முதலாளித்துவத்திலிருந்து சோஷலிச சமூகத்திற்கு மாறுவதின் தவிர்க்க முடியாத் தன்மையைப் பற்றி எங்கெல்ஸ்

(பல காலமாக சோஷலிச சமூகத்தைக் கனவு கண்ட நிலையில் அதனை அடைவது தவிர்க்க முடியாதது என்பதை விஞ்ஞான அடிப்படையில் மார்க்சியம் விளக்குவதை மிகச் சுருக்கமாக எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைப் பலமுறைப் படித்தால் தெளிவு பெறலாம்)

“முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் முதற்கொண்டே, உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் சமுதாயமே கையகப்படுத்த வேண்டும் என்பது, தனிமனிதர்களும், குறுங்குழுக்களும் வருங்காலத்துக்குரிய இலட்சியம் என, அனேகமாகத் தெளிவான புரிதலின்றி, அடிக்கடி கண்டுவந்த கனவாக இருந்து வந்துள்ளது. ஆனால், அதன் நிறைவேற்றத்துக்கான எதார்த்த நிலைமைகள் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியம் ஆகமுடியும்; வரலாற்றுக் கட்டாயமாகவும் ஆகமுடியும். ஏனைய சமூக முன்னேற்றம் ஒவ்வொன்றையும் போன்றே, இதுவும் வர்க்கங்கள் நிலவுவது நீதிக்கும் சமத்துவத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் முரணாகுமென மனிதர்கள் புரிந்து கொள்வதாலோ, இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டுமென வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியம் ஆகிவிடாது.

குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகள் ஏற்படுவதால் மட்டுமே நடைமுறை சாத்தியம் ஆக முடியும். சமுதாயம், சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் எனவும், ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கம் எனவும் பிளவுபட்டதானது, முந்தைய காலகட்டங்களில் நிலவிய பற்றாக்குறையான, கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பும் ஈட்டுகின்ற உற்பத்திப் பொருள்கள், அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக் காட்டிலும் சற்றே கூடுதலாக மட்டுமே இருக்கும் வரையில், அதன் காரணமாகச் சமுதாய உறுப்பினர்களில் மிகப் பெரும்பான்மையினர் அவர்களின் முழு நேரத்தையும் அல்லது ஏறத்தாழ முழு நேரத்தையும் உழைப்பில் செலுத்த வேண்டியிருக்கும் காலம் வரையில், இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும். பிரத்தியேகமாய் உழைப்புக்குக் கொத்தடிமைகளாக விளங்கும் மிகப் பெரும்பான்மையின் அருகருகிலேயே, நேரடியான உற்பத்தி சார்ந்த உழைப்பிலிருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் உதித்தெழுந்துள்ளது.

இவ்வர்க்கம், உழைப்பை நெறிப்படுத்தல், அரசு நிர்வாகம், சட்டம், விஞ்ஞானம், கலை, இதுபோன்ற இன்னபிற சமுதாயப் பொது விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறது. எனவே, உழைப்புப் பிரிவினை விதிதான், வர்க்கப் பாகுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. ஆனால் இவ்வாறு கூறுவது, இந்த வர்க்கப் பாகுபாடு, வன்முறையாலும் வழிப்பறியாலும், தந்திரத்தாலும் மோசடியாலும் நிலைநாட்டப்பட்டது என்று கூறுவதைத் தடுக்கவில்லை. ஆதிக்க நிலை பெற்றவுடன் ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தின் செலவில், தன் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டது என்றோ, அதன் சமூகத் தலைமைப் பதவியைச் சாதாரண மக்களைக் கொடூரமாகச் சுரண்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது என்றோ கூறுவதைத் தடுக்கவில்லை.

ஆனால், வர்க்கப் பாகுபாட்டுக்கு, மேலே காட்டியவாறு, ஓரளவு வரலாற்று நியாயம் உண்டு என்றபோதிலும், அதுகூடக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும்தான், குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் மட்டும்தான். உற்பத்திப் பற்றாக்குறையே இதன் அடிப்படையாக இருந்தது. நவீன உற்பத்தி சக்திகளின் முழுமையான வளர்ச்சியால் வர்க்கப் பாகுபாடு துடைத்தெறியப்படும். உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருப்பது முன்நிபந்தனை ஆகும். பரிணாம வளர்ச்சியின் அந்தக் கட்டத்தில், குறிப்பிட்ட ஏதோவோர் ஆளும் வர்க்கம் அல்ல, ஆளும் வர்க்கம் என்பதாக ஏதேனும் ஒரு வர்க்கம் நிலவுவதும், அதன் காரணமாக, வர்க்கப் பாகுபாடேகூட நிலவுவதும், காலாவதி ஆகிப்போன, காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகிவிடும். எனவே, உற்பத்திச் சாதனங்களையும், உற்பத்திப் பொருள்களையும், அதன்மூலம் அரசியல் ஆதிக்கம், கலாச்சார ஏகபோகம், அறிவுத்துறைத் தலைமை ஆகியவற்றையும், சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் கையகப்படுத்திக் கொள்வது தேவைப்படாததாய் ஆவது மட்டுமின்றி, அது பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, அறிவுத்துறை ரீதியாக, வளர்ச்சிக்கு இடையூறாகவும் ஆகிவிடும் அளவுக்கு, உற்பத்தியின் வளர்ச்சியைக் கொண்டு செல்வது, வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கான முன்நிபந்தனை ஆகும்.

இந்த வளர்ச்சிநிலை தற்போது எட்டப்பட்டுவிட்டது. அரசியல் துறையிலும் அறிவுத்துறையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கையாலாகாத்தனம் அவர்களுக்கே இனிமேலும் ஓர் இரகசியமாக இருக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரத் திவால்நிலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப தவறாமல் வெளிப்படுகிறது. ஒவ்வொரு நெருக்கடியிலும், சமுதாயம் தன்சொந்த உற்பத்தி சக்திகள், உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்த முடியாமல் அவற்றின் சுமையின்கீழ் சிக்கி மூச்சுத் திணறுகிறது. போதுமான நுகர்வோர் இல்லாத காரணத்தால், உற்பத்தியாளர்கள் நுகர்வதற்கு ஏதுமில்லை என்னும் இந்த அபத்தமான முரண்பாட்டைச் சமுதாயம் நேருக்குநேர் எதிர்கொண்டு, செய்வதறியாது நிற்கிறது. உற்பத்திச் சாதனங்களின் விரிவாக்கச் சக்தி, அவற்றின்மீது முதலாளித்துவ உற்பத்தி முறை சுமத்தியுள்ள கட்டுகளை உடைத்தெறிகிறது. உற்பத்திச் சாதனங்கள் இந்தக் கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவது, உற்பத்தி சக்திகள் இடையறாது தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட வேகத்தில் வளர்ச்சி பெறவும், அதன் விளைவாக, நடைமுறையில் உற்பத்தி, வரம்பின்றி அதிகரிக்கவும் ஒரேயொரு முன்நிபந்தனையாகும். இது மட்டுமல்ல. உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் முழுமையும் கையகப்படுத்திக் கொள்வதானது, உற்பத்தி மீதான தற்போதைய செயற்கைக் கட்டுப்பாடுகளை ஒழித்துக் கட்டுகிறது. அதோடு மட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் உற்பத்தியின் தவிர்க்க முடியாத உடன்நிகழ்வுகளாகத் தோன்றி, நெருக்கடிகளின்போது அவற்றின் உச்சத்தை எட்டுகின்ற, உற்பத்தி சக்திகள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் நேரடியான விரயத்தையும், நாசத்தையும் ஒழித்துக்கட்டும். மேலும், இன்றைய ஆளும் வர்க்கங்கள், அவற்றின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் முட்டாள்தனமான ஊதாரிச் செலவுகளுக்கு முடிவு கட்டுவதன் மூலம், சமுதாயம் முழுமைக்குமாகத் திரளான உற்பத்திச் சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கும். [உற்பத்திச் சாதனங்களின் சமுதாய உடைமை] சமூகமயமான உற்பத்தியைப் பயன்படுத்தி, சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும், பொருளாயத ரீதியில் முற்றிலும் போதுமான, நாளுக்குநாள் மேலும் நிறைவானதாகிவரும் வாழ்க்கையை மட்டுமின்றி, அனைவருக்கும், அவர்களின் உடல் ஆற்றல்களையும், உள்ளத்து ஆற்றல்களையும் தங்குதடையின்றி மேம்படுத்தவும் செயல்படுத்தவும் உத்தரவாதம் அளிக்கின்ற வாழ்க்கையையும் பெற்றுத் தருவதற்கான சாத்தியப்பாடு இப்போது முதன்முதலாக இங்கே இருக்கிறது. ஆம், அது இங்கே இருக்கிறது.

உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதுமே, பண்ட உற்பத்திக்கு முடிவு கட்டப்படுகிறது. கூடவே, உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒழிக்கப்படுகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் அகற்றப்பட்டு, அதனிடத்தில், முறைப்படுத்தப்பட்ட, திட்டவட்டமான, ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனிமனிதனின் பிழைப்புக்கான போராட்டம் மறைகிறது. அதன்பின், மனிதன், குறிப்பிட்ட பொருளில், [வரலாற்றில்] முதன்முதலாக விலங்கின உலகிலிருந்து துண்டிக்கப்படுகிறான். வெறும் விலங்கின வாழ்க்கை நிலைமைகளிலிருந்து வெளியே வந்து, உண்மையாகவே மனித வாழ்க்கை நிலைமைகளினுள் பிரவேசிக்கிறான். மனிதனின் சுற்றுச்சார்பாக அமைந்து இதுநாள்வரை மனிதனை ஆட்சி புரிந்துவந்த வாழ்க்கை நிலைமைகளின் ஒட்டுமொத்தக் கூறுகளும், இப்போது மனிதனின் ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் வந்துள்ளது. முதன்முதலாக மனிதன், இயற்கையின் உண்மையான, உணர்வுபூர்வமான தலைவனாய் ஆகிறான். காரணம், இப்போது அவன் தன்சொந்த சமூக நிறுவன அமைப்பின் எஜமானன் ஆகிவிடுகிறான். இதுநாள்வரை, மனிதனுடைய சொந்தச் சமூகச் செயல்பாடுகளின் விதிகள், இயற்கையின் விதிகளைப் போன்று, அவனுக்கு நேருக்குநேர் எதிராக நின்று, அவனுக்கு அந்நியமாக இருந்து, அவனை ஆதிக்கம் செலுத்தி வந்தன. இனிமேல் அவ்விதிகளை அவன் முழுமையான புரிதலுடன் பயன்படுத்திக் கொள்வான். எனவே, மனிதன் அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுவான். இதுநாள்வரை, இயற்கையாலும் வரலாற்றாலும் சுமத்தப்பட்ட கட்டாயமாக, மனிதனுக்கு நேருக்குநேர் சவாலாக இருந்துவந்த அவன்சொந்தச் சமூக நிறுவன அமைப்பு, இப்போது அவனுடைய சுதந்திரமான சொந்தச் செயல்பாட்டின் விளைவாய் ஆகிப்போனது.

இதுநாள்வரை வரலாற்றை வெளியிலிருந்து ஆட்சிபுரிந்த புறநிலைச் சக்திகள் மனிதனுடைய நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன. அந்த நேரம் முதற்கொண்டுதான் மனிதன் மென்மேலும் உணர்வுபூர்வமாகத் தன்சொந்த வரலாற்றைத் தானே படைத்திடுவான். அந்த நேரம் முதற்கொண்டுதான், அவன் தொடங்கிவைக்கும் சமூக இயக்கங்கள் முழுமையாகவும், தொடர்ந்து பெருகிச் செல்லும் அளவிலும், அவன் கருதிய பலன்களை அளித்திடும். நிர்ப்பந்தத்தின் ஆட்சியிலிருந்து சுதந்திரத்தின் ஆட்சிக்கு மனிதன் முன்னேறிச் செல்வதை இது குறிக்கிறது.

வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறித்து நாம் வரைந்து காட்டியதைச் சுருக்கமாகத் தொகுத்தளிப்போம்.

I. மத்திய காலச் சமுதாயம்தனிநபர்களின் சிறிய அளவிலான உற்பத்தி [நடைபெறுகிறது]. உற்பத்திச் சாதனங்கள் தனிநபரின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட்டுள்ளன. எனவே, முதிர்ச்சியற்ற, செப்பமற்ற, சின்னஞ்சிறிய, செயலில் திறன்குன்றிய சாதனங்களாக இருக்கின்றன. உற்பத்தியானது, உற்பத்தியாளரின் அல்லது அவருடைய நிலவுடைமைப் பிரபுவின் உடனடி நுகர்வுக்காக நடைபெறுகிறது. இந்த நுகர்வுக்கும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்போது மட்டுமே, அத்தகைய உபரியானது விற்பனைக்கு வைக்கப்பட்டு, பரிவர்த்தனைக்கு வருகிறது. எனவே, பண்ட உற்பத்தி என்பது, மழலைப் பருவத்திலேதான் இருக்கிறது. ஆனால் சமுதாயம் முழுமைக்குமான உற்பத்தியில் அராஜகத்தை, ஏற்கெனவே அது தன்னுள்ளே கருவடிவில் கொண்டுள்ளது.

II. முதலாளித்துவப் புரட்சிதொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழிற்கூடங்களாக ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாக இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கையகப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கையகப்படுத்திக் கொண்டு அவற்றைப் பண்டங்களாக மாற்றுகிறார்.

உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கையகப்படுத்தலும் தனிப்பட்ட செயல்களாக, தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கையகப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.

() உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுதல். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுதல். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை.

() பண்ட உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கமும் பயனுறுதியும் அதிகரித்தல். கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயமான ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக அராஜகத்துக்கும் இடையேயான முரண்பாடு.

() ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாக, தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [விளைவு?] தொழில்துறை ரிசர்வ் பட்டாளம். மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம், ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகப் பண்டங்களின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகைஅங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்துசக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்தி சக்திகளை, முதலில் அவை மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்களைப் புழங்கவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்தி சக்திகளின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாக மாற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாக வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்தி சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

() உற்பத்தி சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்குக் குழுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.

III.            பட்டாளி வர்க்கப் புரட்சிமுரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுவரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. இதுமுதற்கொண்டு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமூகமயமான உற்பத்தி சாத்தியம் ஆகிறது. அதுமுதற்கொண்டு, உற்பத்தியின் வளர்ச்சி, சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள் நிலவுவதை காலத்துக்கு ஒவ்வாததாய் ஆக்குகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது. முடிவில், தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோஷலிசத்தின் பணியாகும்.”
(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் –

3. விஞ்ஞான சோஷலிசம்)

No comments:

Post a Comment