Thursday 25 May 2017

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்தியில் முதலாளி தேவையற்ற வர்க்கமாகிறார் – எங்கெல்ஸ்

(சமூகத்தின் அவசியமான வர்க்கங்களும் மிகையான வர்க்கங்களும் (1881)- பகுதி)

சமூகத்திலுள்ள வெவ்வேறு வர்க்கங்கள் எந்த அளவுக்கு உபயோகமாக- அல்லது அவசியமாகக்கூட- இருக்கின்றன என்ற கேள்வி அடிக்கடி கேட்ககப்படுகிறது. இதற்கு பதில் சரித்திர ரீதியில் ஒவ்வொரு வேறுபட்ட சகாப்தத்துக்கும் ஒவ்வொரு விதமாக இருந்தது இயற்கையே. பிரதேச ரீதியான பிரபுக்குலம் சமூகத்தின் தவிர்க்க முடியாத, அவசியமான பகுதியாக இருந்த காலம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது மிகமிக நெடுங்கலத்துக்கு முந்தியது.

அதன் பிறகு முதலாளித்துவ மத்திய தர வர்க்கம் – அதைப் பிரெஞ்சுக்காரர்கள் பூர்ஷ்வா என்று குறிப்பிடுகின்றனர்- அதே அளவுக்குத் தவிர்க்க முடியாத அவசியத்துடன் ஒரு காத்தில் தோன்றியது. அது பிரதேசரீதியான பிரபுக்குலத்தை எதிர்த்துப் போராடி அதன் அரசியல் சக்தியை முறியடைத்துப பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மேலாதிக்கத்தைப் பெற்றது. ஆனால் வர்க்கங்கள் தோன்றிய காலத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் இல்லாமல் சமூகம் இயங்கக்கூடிய காலம் ஒருபோதும் இருக்கவில்லை. அந்த வர்க்கத்தின் பெயர், சமூக அந்தஸ்து மாறிவந்திருக்கிறது, அடிமையின் இடத்தைப் பண்ணையடிமை பெற்றான், பிறகு அவனிடத்துக்கு சுதந்திரமான உழைக்கும் மனிதன் வந்தான். அவன் அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரமானவன் என்பது மட்டுமல்ல, தன்னுடைய சொந்த உழைப்புச் சக்தியைத் தவிர மற்ற பூமிக்குரிய எல்லா உடைமைகளில் இருந்தும் சுதந்திரமானவன். ஆனால் ஒன்று தெளிவானதாகும். எல்லா விதமான சந்தர்ப்பங்களிலும் இந்த வர்க்கம் அவசியமானதாக இருக்கிறது. ஆனால் அது இனியும் வர்க்கமாக இல்லாத முழுச் சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் காலம் நிச்சயம் வரும்.
முதலாளித்துவ மத்தியதர வர்க்கத்தின் பொருளாதாரச் செயல் நீராவித் தொழில்களையும் நீராவிச் செய்திப் போக்குவரத்துக்களையும் கொண்ட நவீன அமைப்பைப் படைத்து அந்த அமைப்பின் வளர்ச்சியைத் தாமதப்படுத்கின்ற அல்லது தடை செய்கின்ற ஒவ்வொரு பொருளாதார மற்றும் அரசியல் தடையையும் அழிப்பது என்பது மெய்யே. முதலாளித்துவ மத்தியதர வர்க்கம் இந்தச் செயலை நிறைவேற்றிய மட்டில் – அந்த சந்தர்ப்பங்களின் கீழ்- அது அவசியமான வர்க்கமாக இருநதது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது இனியும் அவசியமான வர்க்கமா? பரந்த சமூகத்தின் நன்மைக்காக நடைபெறுகின்ற சமூக உற்பத்தியை நிர்வகித்து விரிவுபடுத்துகின்ற அவசியமான செயலை அது தொடர்ந்து நிறைவேற்றுகிறதா? இதைப் பற்றி ஆராய்வோம்.

முதலில் செய்தித் தொடர்புச் சாதனங்களை எடுத்துக் கொள்வோம். தந்தித் தொடர்புச் சாதனம் அரசாங்கத்தின் கைகளில் இருப்பதைப் பார்க்கிறோம். இரயில்வே அமைப்புக்களும் நீராவிக் கப்பல்களில் பெரும்பகுதியும் தங்களுடைய சொந்தத் தொழிலைத் தாங்களே நிர்வகிக்கின்ற தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தமானவை அல்ல. அவை கூட்டுப்பங்குக் கம்பெனிகளுக்குச் சொந்தமானவை. அத்தொழிலை ஊதியம் பெறுகின்ற ஊழியர்களை நிர்வகிக்கிறார்கள், இவர்கள் அநேகமாக உயர்வபான, அதிகமான ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களாகவே இருப்பார்கள். இயக்குநர்களையும் பங்குதாரர்களையும் பொறுத்தவரை முதலாவதாகச் செல்லப்பட்டவர்கள் நிர்வாகத்திலும் இரண்டாவதாகச் சொல்லப்பட்டவர்கள் நிர்பாகத்திலும் இரண்டாவதாகச் சொல்லப்பட்டவர்கள் மேற்பார்வையிலும் எவ்வளவு குறைவாகத் தலையிடுகின்றார்களோ அவ்வளவு அந்தக் கம்பெனிக்கு நன்மையைத் தரும் என்பது இருவருக்குமே தெரியும்.

கண்டிப்பில்லாத, முற்றிலும் மேலெழுந்தவாரியான மேற்பார்வை மட்டுமே தொழிலின் உடைமையாளர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வேலை என்பது உண்மையே. இந்த மாபெரும்  நிறுவனங்களின் முதலாளிகளுக்கு அரை வருடாந்தர லாப ஈவுச்சீட்டுகளைக் காட்டிப் பணம் பெறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் அவற்றைப் பொறுத்த மட்டில் இல்லை என்பது உண்மை என்பதை நாம் பார்க்கிறோம். முதலாளிகளின் சமூகச் செயல் இங்கே கூலி பெறுகின்ற ஊழியர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் அவர் தன்னுடைய லாப ஈவுத் தொகைகளை, அவர் நிறைவேற்றாத வேலைகளுக்கான ஊதியத்த் தொடர்ந்து பெற்றுக்கொள்கிறார்.

இங்கே குறிப்பிடப்பட்ட பெரிய நிறுவனங்களின் அளவு காரனமாக அவற்றின் நிர்வாத்திலிருந்து “ஒய்வெடுக்கும்படி” நிர்பந்திக்கப்பட்ட முதலாளிக்கு மற்றொரு செயல் இன்னும் எஞ்சியிருக்கிறது. பங்குச் சந்தையில் தன்னுடைய பங்குகளைக் கொண்டு சூதாடுவது இந்தச் செயலாகும். இதைக் காட்டிலும்  சிறப்பான வேறு வேலை இல்லாத காரணத்தால் நம் “ஓய்வுபெற்ற” அல்லது அகற்றப்பட்ட முதலாளிகள் இந்தப் பணக்கடவுளின் ஆலயத்தில் விரும்பிய அளவுக்குச் சூதாடுகிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதாகப் பாசாங்க செய்தார்களே, அந்தப் பணத்தை எடுக்கின்ற திட்டவட்டமான உத்தேசத்தோடு அங்கே போகிறார்கள்.

எல்லா உடைமைகளுக்கும் உழைப்பு மற்றும்  சிக்கனமே தோற்றுவாய் என்று அவர்கள் கூறினாலும் – ஒரு வேளை தோற்றுவாயாக இருக்கலாம், ஆனால் நிச்சயமாக முடிவு அல்ல. கோடிக்கணக்கான ரூபாய்கள் தோற்கப்படுகின்ற அல்லது வெற்றியடையப்படுகின்ற மாபெரும் சூதாட்ட நிலையம் நம்முடைய முதலாளித்துவ சமூகத்துககு அவசியமாக இருக்கின்ற பொழுது அற்பமான சூதாடுமிடங்களைக் கட்டாயமாக மூடுவது எவ்வளவு போலித்தனம்! “ஓய்வு பெற்ற”, பங்குமூலதனம் வைத்திருக்கின்ற முதலாளி இருப்பது இங்கே மிகையானது மட்டுமல்ல- அது முற்றிலும் தீமை என்பது உண்மையே.
முதலாளியினுடைய உற்பத்தி முறையின் வளர்ச்சி கைத்தறி நெசவாளியை அகற்றுவதைப் போலவே நிச்சயமாக முதலாளியையும் அகற்றிவிடுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இரண்டுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கின்றது. கைத்தறி நெசவாளி பட்டினியாக இருந்து மெதுவாகச் சாகிறார். அகற்றப்பட்ட முதலாளி அதிகமாகச் சாப்பிட்டு மெதுவாகச் சாகிறார். இந்த விஷயத்தில் இருவரும் பொதுவாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். என்ன செய்வதென்று இருவருக்கும் தெரியவில்லை.

ஆகவே முடிவு இதுதான்: இன்றைய எதார்த்தமான சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி மேன்மேலும் ஒன்று குவித்தலை, தனி முதலாளிகளால் இனிமேல் நிர்வகிக்கப்பட முடியாத மாபெரும் நிறுவனங்களாக உற்பத்தியை சமூகமாயமாக்குதலை நோக்கிச் செல்கிறது. ஒரு  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைந்ததும் “முதலாளியின் நேரடியான பார்வை” மற்றும் அது ஏற்படுத்தும் அதிசயங்களைப் பற்றிய கதைகள் அனைத்தும் வெறும் பிதற்றலாக மாறிவிடுகின்றன. லண்டன் மற்றும் வட மேற்கு ரயில்வேயின் “முதலாளியின் பார்வையைப்” பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் முதலாளி செய்ய முடியாததைத் தொழிலாளி, கம்பெனியின் கூலி வாங்கும் ஊழியர்கள் செய்ய முடியும், அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

ஆகவே முதலாளி தன்னுடைய லாபம் “மேற்பார்வை செய்ததற்குக் கூலி” என்று இனி உரிமை கோர முடியாது. ஏனென்றால் அவர் எதையும் மேற்பார்வை செய்யவில்லை. மூலதனத்தை ஆதரித்துப பேசுபவர்கள் அந்த ஓட்டைச் சொற்றொடரை நம் காதுகளுக்குள் டமாரமடிக்கின்ற பொழுது நாம் அதை  நனைவுபடுத்திக் கொள்வோம்.

No comments:

Post a Comment