Tuesday 9 January 2018

31. பெண்கள் - மா சே துங்

சீனாவில் உள்ள ஒர் ஆண் வழக்கத்தில் மூன்று அதிகார (அரசியல் அதிகாரம், வம்ச அதிகாரம், மத அதிகாரம்) அமைப்புகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகின்றான் …. பெண்களைப் பொறுத்தவரை, இம்மூன்று ஆதிக்கத்தற்கு உட்படுவதுடன் ஆண்களாலும் (கணவனின் அதிகாரத்தாலும்) ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர்.

அரசியல், வம்சம், மதம், ஆண் – இந்த நான்கு அதிகாரங்களும் முற்றாக பிரபுத்துவ – தந்தை வழி சித்தாந்தத்தினதும அமைப்பினதும் உருவாக்கமாகும். இவை சீன மக்களை, குறிப்பாக விவசாயிகளைப் பிணைத்திருக்கும் நான்கு பெரும் தளைகளாகும். விவசாயிகள் நாட்டுப்புறத்தில் நிலப்பிரபுக்களின் அரசியல் அதிகாரத்தை எப்படி தூக்கி எறிந்தார்கள் என்பது மேலே விளக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுக்களின் அரசியல் தான் இதர எல்லா அதிகார அமைப்புகளினதும் முதுகெலும்பாகும். இது தூக்கியெறியப்பட்டதும் வம்ச அதிகாரம், மத அதிகாரம், கணவன் அதிகாரம் எல்லாம் சரிந்து விழத் தொடங்குகின்றன…

கணவனின் அதிகாரத்தைப் பொறுத்தவரை, ஏழை விவசாயிகள் மத்தியில் இது எப்பொழுதம் பலவீனமாகவே இருந்து வருகின்றது. ஏனென்றால் பொருளாதாரத் தேவையினால் அப்பெண்கள், செல்வந்த வீட்டுப் பெண்களிலும் பார்க்கக் கூடுதலான உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கின்றது.. எனவே இவர்களுக்குக் குடும்ப விசயங்களில் பேச்சுரிமையும், முடிவுகள் எடுக்கும் உரிமையும் கூடுதலாக உண்டு.

அண்மை ஆண்டுகளில் கிராமியப் பொருளாதாரம் பெரிதும் ஓட்டாண்டித் தனமாகி வருவதுடன், பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான அடிப்படையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு விட்டது. அண்மையில் விவசாயி இயக்கத்தின் தோற்றத்துடன் பல இடங்களில் உள்ள பெண்கள் கிராமிய மகளிர் சங்கங்களை நிறுவத் தொடர்ங்கியுள்ளனர், அவர்களுக்குத் தலைமை நிமிர்த்தும் சந்தர்ப்பம் வந்துவிட்டது, கணவனின் அதிகாரம் நாளுக்கு நாள் ஆட்டம் கண்டு வருகின்றது. ஒரு வார்த்தையில் சொன்னால் ஒரு பிரபுத்துவ – தந்தை வழிச் சித்தாந்தமும் அமைப்பும் விவசாயிகளின் அதிகார வளர்ச்சியுடன் தகர்ந்து விழுகின்றன.
(ஹீனான் விவசாயி இயக்க பரிசீலனை பற்றிய அறிக்கை – மார்ச் 1927)

ஒரு பெரும் சோஷலிச சமூகத்தைக் கட்டி வளர்ப்பதற்கு உற்பத்தி நடவடிககையில் பங்குபெற பரந்துபட்ட பெண்களைத் தட்டி எழுப்புவது மிக முக்கியமான விசயமாகும். ஆண்களும் பெண்களும் உற்பத்தியில் சமவேலைக்குச் சமஊதியம் பெற வேண்டும். சமூகத்தின் முழுமையான சோஷலிச மாற்றப் போக்கில்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உண்மையான சமத்துவம் நிலவ முடியும்.
(பெண்கள் உற்பத்தி முன்னணிக்குச் சென்று விட்டனர் –
என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு 1955)

விவசாயக் கூட்டுறவு, முடிவுற்றதும், பல கூட்டுறவுகளுக்கு உழைப்பு சக்தி குறைவாக இருக்கின்றது. முன்பு வயல்களில் வேலை செய்யாத பரந்துபட்ட பெண்களை உழைப்பு முன்னணியில் பங்கு ஆற்றுவதற்குத் தட்டி எழுப்புவது தேவையாகி விட்டது...... சீனப் பெண்கள் உழைப்புச் சக்தியின் பிரம்மாண்டமான துணைச் சக்தியாக விளங்குகின்றனர். ஒரு மகத்தான சோஷலிச நாட்டைக்கட்டி வளர்க்கும் போராட்டத்தில் இந்த சேமப்படை பாவிக்கப்பட வேண்டும்
(உற்பத்தியில் சேரப் பெண்களைத் தட்டி எழுப்புவதன் மூலம்
உழைப்பு சக்தியின் பற்றாக்குறையைத் தீர்ப்பது –
என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு 1955)


No comments:

Post a Comment