Monday 13 July 2015

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் - எங்கெல்ஸ்

“அனைத்துத் தத்துவங்களின், குறிப்பாக மிகவும் அண்மைக் காலத்தைய தத்துவத்தின், மிகப்பெரும் அடிப்படைக் கேள்வி, சிந்தனைக்கும் இருத்தலுக்கும் இடையே உள்ள உறவு பற்றியதாகும்.
மிகப் பழங்காலம் தொட்டே, மனிதர்கள் தங்கள் சொந்த உடல்களின் கட்டமைப்பைப் பற்றி இன்னும் எதுவுமே அறிந்திராத நிலையில், கனவுத் தோற்றங்களின் காரணங்கள் புரியாத காரணத்தால், தங்களின் சிந்தனையும் புலனுணர்வும் தங்கள் உடம்பின் செயல்பாடுகள் அல்ல என்றும் உடம்பில் தங்கியிருந்து மரணத்தின்போது உடம்பைவிட்டு வெளியேறுகிற ஒரு தனிவேறான ஆன்மாவின் செயல்கள் என்றும் நம்பத் தொடங்கினர். அன்றுதொட்டு, மனிதர்கள் இந்த ஆன்மாவுக்கும் வெளியுலகுக்கும் இடையே உள்ள உறவு பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். மரணத்தின்போது உடம்பைவிட்டு வெளியேறி ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது எனில் அதற்கென ஒரு தனிவேறான மரணத்தைக் கண்டறிய வேண்டிய அவசியம் நேரவில்லை. இவ்வாறாக ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த கருத்து உருவாயிற்று.
வளர்ச்சியின் அன்றைய கட்டத்தில் இக்கருத்து ஓர் ஆறுதலாக உருவாகவில்லை, எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த தலைவிதியாகவே உருவாகியது. பெரும்பாலும், கிரேக்கர்கள் மத்தியில் நிலவியதைப் போல, ஒரு சாதகமான துரதிர்ஷ்ட மாகவே தோன்றியது எனலாம். ஆன்மா நிலவுகிறது என்பதை ஒப்புக் கொள்வது, தனிநபரின் அழியாநிலை என்ற சலிப்பூட்டும் கருத்துக்கு இட்டுச் செல்கிறது. உடல் மரணித்தபின் இந்த ஆன்மாவை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று விளங்காத, எங்கும் நிலவிய சாதாரண அறியாமையிலிருந்து தோன்றிய தடுமாற்றமே இவ்வாறு இட்டுச் சென்றது; மன ஆறுதலுக்கான மத விருப்பம் அன்று. மிகச் சரியாக, இதே போன்ற முறையில், இயற்கை சக்திகளை உருவகப்படுத்துவதன் மூலமாக முதற் கடவுள்கள் உருவாயின.
மதங்கள் மேலும் வளர்ச்சியடைந்த பொழுது இந்தச் கடவுள்கள் மேலும் மேலும் எதார்த்தத்துக்குப் புறம்பான வடிவத்தைப் பெறத் தொடங்கின. இறுதியாக, ஏறத்தாழ வரம்புக்குட்பட்ட, பரஸ்பரம் வரம்பிட்டுக் கொள்ளும் பல கடவுள்களிலிருந்து, ஒருமைவாத மதங்களின் தனிப்பட்ட ஒரே கடவுள் என்னும் கருத்து மனிதர்களின் மனங்களில் உதித்தது. மனிதனுடைய நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கில் இயற்கையாக நிகழ்கின்ற, அருவமாக்கும் ஒரு நிகழ்வுப்போக்கு (a process of abstraction) மூலமாக இது நிகழ்ந்தது.அதனை வடிகட்டி இறக்கிய நிகழ்வுப்போக்கு என்றுகூடச் சொல்வேன்.
இவ்வாறாக, அனைத்துத் தத்துவங்களின் தலையாய பிரச்சினையான, இருத்தலுடன் சிந்தனைக்குள்ள உறவு, இயற்கையுடன் ஆன்மாவுக்குள்ள உறவு பற்றிய பிரச்சினை, அனைத்து மதங்களுக்கும் சளைக்காத வகையிலே, காட்டுமிராண்டி நிலையின் குறுகிய மனப்போக்கு கொண்ட, மூடத்தனமான எண்ணப் போக்குகளில் வேர் கொண்டுள்ளது. ஆனால், ஐரோப்பாவிலுள்ள மக்கள் சமூகம் கிறித்தவ மத்திய காலங்களின் நீண்ட உறக்க நிலையிலிருந்து விழித்துக் கொண்ட பிறகே, இந்தப் பிரச்சினையை முதல் தடவையாக முழுத் துல்லியமாக முன்வைக்க முடிந்தது; அதன் முழு முக்கியத்துவத்தையும் பெற முடிந்தது. இருத்தலுடன் உறவுபடுத்திப் பார்க்கும்போது சிந்தனை வகிக்கும் நிலைபற்றிய பிரச்சினை, மத்திய கால ஏட்டறிவுவாதத்தில் மாபெரும் பாத்திரம் வகித்த அதே பிரச்சினை, எது முதன்மையானது, ஆன்மாவா இயற்கையா என்னும் பிரச்சினைஅப்பிரச்சினை கிறிஸ்துவத் திருச்சபையைப் பொறுத்தவரை இப்படியொரு கேள்வியாய் கூர்மையாக்கி முன்வைக்கப்பட்டது: கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?
இந்தக் கேள்விக்குத் தத்துவவாதிகள் அளித்த பதில்கள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்தன. இவர்களுள் இயற்கையைவிட ஆன்மாவின் முதன்மையை வலியுறுத்தி, அதன்காரணமாக, இறுதி நிலையில், ஏதோ ஒரு விதத்தில் உலகம் படைக்கப்பட்டது என்று அனுமானித்துக் கொண்டவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகளிடயே, எடுத்துக்காட்டாக ஹெகல் போன்றவர்களிடையே, உலகத்தின் உருவாக்கம் பற்றிய கருத்து கிறிஸ்துவ மதத்தில் இருப்பதைக் காட்டிலும் மேலும் சிக்கலானதாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. இயற்கையை முதன்மையாகக் கருதிய மற்றவர்கள் பொருள்முதல்வாத முகாமின் பல்வேறு கருத்துப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டு கூற்றுகளும் தொடக்கத்தில் இதைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. இந்த நூலிலும் வேறு எந்தப் பொருளிலும் அவை பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்கு வேறு ஏதாவது பொருள் தரும்பொழுது, என்ன குழப்பம் ஏற்படுகிறது என்பதைக் கீழே காண்போம்.”

(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

No comments:

Post a Comment