Wednesday 15 July 2015

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - மார்க்ஸ், ஏங்கெல்ஸ்
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-1
முதலாளிகளும் பாட்டாளிகளும்

முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் - இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும், நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது; ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற விற்பனைப் பொருள்களைப் போன்று ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.

பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்கு தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாக ஆகிவிடுகிறார். அவரது வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால் ஒரு பண்டத்தின் விலை – ஆகவே உழைப்பின் விலை[36] – அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்கு கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது. நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழில்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீர்ர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் (officers and sergeants) கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமல்ல, நாள்தோறும் மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக, மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.

உடலுழைப்புக்கான திறமை மற்றும் உடல் வலிமை எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்வித தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.

ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், மற்றும் இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.

நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுவாகப் பரந்த வணிகத் தொடர்புகளின்றிக் குறுகிய அளவில் வணிகம் செய்வோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறைமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகி விடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.


ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

No comments:

Post a Comment