Tuesday 14 July 2015

எங்கெல்சின் "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" என்ற கேள்வி பதில் பகுதியில் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியைப் பற்றி

(முதலாளித்துவ உள்முரண்பாட்டின் வெளிப்பாடாக பொருளாதார நெருக்கடி வெடிக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு சமூக உற்பத்தி முறையாக வளர்ச்சியடைந்தவுடன், அந்த உற்பத்தி முறைக்கு, தனிச்சொத்துடமையின் வினியோக முறை தடையாகப் போகிறது. பழைய முதலாளித்துவ சமூகமுறை பொருத்தமற்றுப் போகிறது. இந்த சமூக நெருக்கடிக்கு தீர்வாக, புதிய சோஷலிச உற்பத்தி முறை அதனை மாற்றீடு செய்கிறது. அந்த புதிய சமூகத்தில் தனிச்செத்துடைமை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதையும் இங்கே எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார்.)

எங்கெல்ஸ்:-
13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை?

முதலாவது:

பெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது;

இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.

பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.

எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும்.

இரண்டாவது:

பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும்.

இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.

தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது:

1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும்,

(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்.

(14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.

வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.

மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது.

உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்.

(கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

No comments:

Post a Comment