Sunday 12 July 2015

3. மதத்தைப் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை

லெனின்:-
சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் கழகமாகும். இப்படிப்பட்ட ஒரு கழகம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

மதத்தின் இருளை முற்றிலும் சித்தாந்த ஆயுதங்களைக் கொண்டு, சித்தாந்த ஆயுதங்களை மட்டுமே கொண்டு, நம்முடைய எழுத்தும் பேச்சுமாகிய பிரச்சாரத்தைக் கொண்டு போராடும் பொருட்டு, மதச்சபையானது அரசால் நிறுவப்பட்டதாய் இருக்கும் நிலை அறவே நீக்கப்பட வேண்டுமெனக் கோருகிறோம். மதத்தின் மூலமான எல்லாவித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகிய நமது கழகத்தை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய விவகாரமாகும்.
சோஷலிசமும் மதமும்

லெனின்:-
 “மிகப் பெருந்திரள்களான மக்களை, ஏனையோருக்காகத் தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும் இம்மக்களை, எங்கும் அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
..
மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது. மதம் ஒரு வகையான ஆன்மீக பெரும் போதை கொண்டது. அதில் மூலதனத்தின் அடிமைகள் மூழ்கி அவர்களுடைய மனித உருவத்தையும், மனிதப் பிறப்புக்குகந்த முறையிலான வாழ்க்கை நடத்துவதற்கான உணர்வையும் கோரிக்கைகளையும் மழுங்கடித்து மூழ்கடித்து வருகிறார்கள்.
-சோஷலிசமும் மதமும்

மார்க்ஸ்:-
மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஜீவனற்ற நிலைகளின் ஜீவனாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு அபினியாக இருக்கிறது.
- ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு- முன்னுரை

லெனின்:-
ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகள் சீரழிந்து மேலும் மேலும் சந்தர்ப்பவாதிகளாகிய போதுமதம் தனிநபரின் விவகாரமென்று அறிவிக்கப்படுகிறது  என்னும் புகழ்பெற்ற சூத்திரத்துக்கு அற்பத்தனமான முறையில் பொய்யான வியாக்கியானம் தரும் நிலைக்கு மேன்மேலும் சரிந்து சென்றது தெரிந்ததே. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குங்கூட மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய்ப் பொருள்படும்படி இந்தச் சூத்திரம் திரித்துக் கூறப்பட்டுவிட்டது!! பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்துக்கு இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான துரோகத்தை எங்கெல்ஸ் வன்மையாய்க் கண்டித்தார். 1891ல் அவர் தமது கட்சியில் சந்தர்ப்பவாதத்தின் மிக பலவீனமான துவக்கம் மட்டுமே தலைதூக்கக் கண்டார். ஆகவே அவர் தமது கருத்தை மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்துரைத்தார்:

 .. முற்றிலும் கோழைத்தனம் காரணமாய்க் குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கம் முன்பு செய்யத் தவறிவிட்ட சீர்திருத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இன்றியமையாத அடித்தளத்தை அமைத்திடும் சீர்திருத்தங்கள் -அரசைப் பொறுத்தமட்டில் மதம் முற்றிலும் தனிநபரின் விவகாரமாகும் என்ற கோட்பாடு செயல்ப்படுத்தப்படுவது போன்றவை- செயல்படுத்தப்பட கம்யூனின் தீர்மானங்கள் ஆணையிட்டன..

வேண்டுமென்றேதான் எங்கெல்ஸ்  அரசைப் பொறுத்தமட்டில்  என்னும் சொற்களுக்கு அழுத்தமிட்டுக் காட்டினார், கட்சியைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய்ப் பிரகடனம் செய்துவிட்ட ஜெர்மன் சந்தர்ப்பவாதம் இவ்வாறு புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியைச் சமயச் சார்பற்ற நிலைக்கு இடமளிக்கத் தயாராயிருக்கும், ஆனால் மக்களை மதிமயங்கச் செய்யும் மதமெனும் அபினியை எதிர்த்துக் கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தைக் கைவிட்டுவிடும் மிகக் கொச்சையான  கட்டற்ற சிந்தனைக்குரிய  குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் இழிநிலைக்குச் சீரழியும்படிச் செய்துவிட்டது
-அரசும் புரட்சியும்

லெனின்:-
நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் அனைத்துப் பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள்முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும், அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள்முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது.

மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப்போராட்டம் இணைக்கப்பட வேண்டும். நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினரிடமும் அரைப் பாட்டாளி வர்க்கத்தின் விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான விவசாயிகளிடமும் மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்குக் காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளி வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே, மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்ல, இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடை கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லை. அவற்றைப் பொருள்முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை.
மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை - லெனின்

லெனின்:-
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், ஒரு குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் உள்ள பாட்டாளிகள் இரண்டு பிரிவாகக் கீழ்க்கண்டவாறு பிரிந்து நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பிரிவு முன்னேற்றமான, நல்ல வர்க்க உணர்வு பெற்றுள்ள சமூக ஜனநாயகாவாதிகள், அவர்கள் நாத்திகர்கள் என்று வைத்துக் கொள்வோம். முற்றொரு பகுதி பின் தங்கிய தொழிலாளர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், மாதா கோவிலுக்குச் செல்பவர்கள் அல்லது ஸ்தல மதகுருவின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் கூட [அவர் ஒரு கிறிஸ்தவத் தொழிலாளர்களின் சங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்] இருப்பவர்கள் - என்று பிரிந்திருப்பதாகக் கருதுவோம். இந்த ஸ்தலத்தின் பொருளாதாரப் போராட்டத்தின் விளைவாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் கருதுவோம். மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேலை நிறுத்த இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியத்துவமளிப்பது, இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களை நாத்திகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று பிரிப்பதை உறுதியாக மட்டுப்படுத்துவது, அத்தகைய பிரிவினையைச் சுறுசுறுப்பாக எதிர்ப்பது ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும். இத்தகைய சூழ்நிலையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதாகவும் தீமையளிப்பதாகவும் இருக்க முடியும். பின்தங்கிய பகுதியினரை விரட்டி விடலாம், தேர்தல்களில் ஒரு மாண்டேட்டை இழந்து விடலாம் என்ற ஃபிலிஸ்டீனிய அச்சம், இதரவை காரணமாக இப்படிக் கூறவில்லை, மொட்டையான நாத்திகப் பிரச்சாரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறப்பான முறையில் கிறிஸ்தவத் தொழிலாளர்களைச் சமூக - ஜனநாகத்துக்கும் நாத்திகத்துக்கும் மாற்றக் கூடிய நவீன முதலாளித்துவச் சமூகத்தின் நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தின் உண்மையான முன்னேற்றத்தை மனதில் கொண்டு இதைக் கூறுகிறோம்.
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை

லெனின்:-
“..அடிக்கடி ஒரு பிரச்சினை எழுப்பப்படுகிறது. ஒரு மதகுரு சமூக-ஜனநாயகக் கட்சியில் உறுப்பினராக இருக்கலாமா, கூடாதா என்பது. இந்தக் கேள்விக்குப் பொதுவாகவே ஒரு நிபந்தனையற்ற முறையில் ஆம் என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
..
..எனவே, எந்தவித நிபந்தனையுமற்ற முறையில்  ஆம் என்னும் விடை, இந்த இடத்தில் சரியாக இருக்காது.  சமூக-ஜனநாயகக் கட்சியில் பாதிரிமார்கள் எப்போதுமே உறுப்பினர்களாக வர முடியாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் அதற்கு எதிரிடையான விதியையும் கடைப்பிடிக்க முடியாது. ஒரு மதகுரு நம்மிடம் வந்து நமது பொதுவான அரசியல் வேலையில் பங்குகொண்டு, கட்சியின் திட்டத்தையும் எதிர்க்காமல் இருந்தால் அவர் சமூக-ஜனநாயகவாதிகளின் அணியில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால் நமது கட்சியின் வேலைத் திட்டத்தின் உணர்வுக்கும் கோட்பாடுகளுக்கும் மறுபக்கம் அந்த மதகுருவின் மத உணர்வுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. அது அந்தச் சந்தர்ப்பச் சூழ்நிலையில் அந்த மதகுருவை மட்டும் பொருத்த விஷயமாகவும் அது அவருடைய சொந்தத் தனிப்பட்ட முரண்பாடாகவும் இருக்கும்.
..
.. ஆனால், அவ்வாறு ஒரு மதகுரு, உதாரணத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்துவிட்டால், அவ்வாறு சேர்ந்து கட்சிக்குள் மதக் கருத்துக்களைச் செயலூக்கமாகப் பிரச்சாரம் செய்வதை தனது பிரதான வேலையாக, அநேகமாக அது ஒன்றே வேலையாக எடுத்துக் கொண்டால், பின்னர் கேள்விக்கிடமில்லாமல் அவரைக் கட்சியின் அணியிலிருந்து நீக்கித்தானாக வேண்டும். கடவுள்மீது நம்பிக்கை கொண்டிக்கக் கூடிய தொழிலாளர்களைச் சமூக ஜனநாயகக் கட்சியில் அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் திட்டமிட்டு அத்தகைய தொழிலாளர்களைக் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அவர்களுடைய மத உணர்வுகளைக் கொஞ்சங்கூட புண்படுத்தக் கூடாது. அவர்களை நாம் நமது கட்சிக்குள் சேர்ப்பது அவர்களை நமது கட்சியின் வேலைத் திட்டத்தினது உணர்வின் அடிப்படையில் கல்வி புகட்டிப் பயில்விப்பதாகும். அதற்கு எதிரான போராட்டத்தை நடத்த அனுமதிப்பதற்காகவன்று, கட்சிக்குள் நாம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கிறோம். ஆனால், அதற்கு ஓர் எல்லையுண்டு. அது குழுசேரும் சுதந்திரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. கட்சியில் பெரும்பான்மையோரால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களைத் தொடர்ச்சியாக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களுடன் நாம் சேர்ந்தே செல்லவேண்டிய அவசியமில்லை.
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை

லெனின்:-

“கடவுள்மீது நம்பிக்கை கொண்ட தொழிலாளர்களைக் கண்டிப்பாகக் கட்சியின் அணிகளுக்குள் கொண்டுவரவேண்டும். அவரது கடவுள் நம்பிக்கையைப் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவரைக் கட்சியில் சேர்ப்பதென்பது கட்சித் திட்டத்தின் அடிப்படையில் அவருக்குக் கல்வி புகட்டுவதற்கேயாகும். கட்சியில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பது என்பது ஓர் எல்லைக்குட்பட்டது. கட்சியின் பெரும்பான்மையோர் நிராகரிக்கும் கருத்தைச் செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவருடன் சேர்ந்து செல்லவேண்டிய தேவையில்லை என்று லெனின் விளக்கியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தளவில் மதத்தை தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை என்பது பற்றி லெனினின் கூற்றை நேரடியாகப் பார்ப்போம்:-
மதம் தனிப்பட்ட விவகாரம் என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று பாட்டாளி வர்க்கத்தின் கட்சி கோருகிறது. ஆனால் மக்களுடைய அபினுக்கு எதிரான போராட்டம், மதச் சார்பான மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம், இதரவற்றைத் "தனிப்பட்ட விவகாரம்" என்று அது கருதுவதில்லை. சமூக - ஜனநாயகக் கட்சி மதத்தைத் தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறது என்று அர்த்தப்படும்படியாக இந்தப் பிரச்சினையைச் சந்தர்ப்பவாதிகளே திரித்துக் கூறுகிறார்கள்!    
                                                    -மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை

லெனின்:-
மதம் தனிநபரின் சொந்த விவகாரமாய்ப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் - இச்சொற்களின் வாயிலாய், சோஷலிஸ்டுகள் மதத்தின்பால் தமக்குள்ள போக்கை வழக்கமாய்ப் பிரகடனம் செய்கின்றனர். ஆனால் எவ்விதமான தப்பு அபிப்பிராயமும் ஏற்படாமல் தடுப்பதற்காக, இச்சொற்களின் பொருளைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக்கப்பட வேண்டுமென நாம் கோருகிறோம். ஆனால் நமது கட்சியைப் பொறுத்தமட்டில் எவ்விததிலும் நாம் மதத்தைத் தனிநபரின் சொந்த விவகாரமாய்க் கருத முடியாது. மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது, மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோஷலிஸ்டும் இருந்து வருவதுபோல, நாத்திகராய் இருக்கவும் - முழுமையான உரிமை பெற்றிருக்க வேண்டும். குடிமக்களின் மத நம்பிக்கைகைள் காரணமாய் அவர்களிடையே எவ்விதமான பாகுபாட்டுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கப் பத்திரங்களில் குடிமகனுடைய மதத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதுங்கூட நிச்சயமாய் விட்டொழிக்கப்பட வேண்டும். அரசாங்க மதச்சபைக்கு மான்யங்கள் வழங்கப்படலாகாது, மதச்சபை, சமயக் கழகங்களுக்கு அரசாங்க உதவித் தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவை யாவும் அரசைச் சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும். ஒத்த மனத்தோராகிய குடிமக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் பூரணமாய் நிறைவேற்றப்படும் போதுதான், அவமானகரமான, கேடுகெட்ட அந்தக் கடந்த காலத்துக்கு முடிவு கட்ட முடியும்
-சோஷலிசமும் மதமும்
லெனின்:-
நாம் நாத்திகர்கள் என்று நமது வேலைத்திட்டத்தில் நாம் ஏன் அறிவிக்கவில்லை? கிறிஸ்தவர்களும் தெய்வ நம்பிக்கையுடைய ஏனையோரும் நமது கட்சியில் சேரக்கூடாதென்று நாம் ஏன் தடை போடவில்லை?”
-சோஷலிசமும் மதமும் 
லெனின்:-
 “தொழிலாளி வெகுஜனங்கள் முடிவின்றித் தொடர்ந்து ஒடுக்கப்படுவதையும் நயம் கெடுக்கப்படுவதையும் அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், மத மூடநம்பிக்கைகளை வெறும் நுகத்தடியின்கீழ் வதைபடுவது, சமுதாயத்திலுள்ள பொருளாதார நுகத்தடியின் விளைவும் பிரதிபலிப்புமே ஆகுமென்பதை மறப்பது முதலாளித்துவக் குறுகிய பார்வையையே குறிக்கும். முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் தானே போராடுவதன் மூலம் அது அறிவொளி பெறாத வரை, எத்தனைப் பிரசுரங்களை வெளியிட்டாலும், எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் அதை அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. மண்ணுலகில் ஒரு சுவர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினுடைய மெய்யான இந்தப் புரட்சிப் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது, விண்ணுலகச் சுவர்க்கம் குறித்துப் பாட்டாளி வர்க்கத்தோரிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்கியமானது.

எனவேதான்  நாத்திகத்தை நமது வேலைத்திட்டத்தில் நாம் அறிவிக்கவில்லை, அறிவிக்கவும் கூடாது, எனவேதான் தமது பழைய தப்பெண்ணங்களில் இன்னமும் மீதமிச்சங்கள் சிலவற்றை விட்டொழிக்காது வைத்திருக்கும் பாட்டாளிகள் நமது கட்சியுடன் வந்து இணைவதற்கு நாம் தடைபோடவில்லை, போடவும் கூடாது. எப்பொழுதும் நாம் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தையே பிரசாரம் செய்வோம். பல்வேறு "கிறிஸ்தவப் பிரிவினரது" முரணான கருத்துக்களை நாம் எதிர்த்துப் போராடுவது அவசியமே. ஆனால் மதப் பிரச்சினையை அதற்குச் சிறிதும் உரித்தாய் இராத முதல் நிலைக்கு முன்கொண்டுவர வேண்டுமென்று ஒருபோதும் இதற்கு அர்த்தமல்ல. மூன்றாம் தர அபிப்பிராயங்கள் அல்லது மூடக் கருத்துக்களை முன்னிட்டு, வேகமாய் அரசியல் முக்கியத்துவத்தை அறவே இழந்து, பொருளாதார வளர்ச்சியின் போக்கினாலேயே வேகமாய்க் குப்பை குழியிலே ஒதுக்கித் தள்ளப்பட்டு வரும் இவற்றை முன்னிட்டு, மெய்யாகவே புரட்சிகரமான பொருளாதார, அரசியல் போராட்டத்தின் சக்திகள் பிளவுபடுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டுமென்றும் இதற்கு அர்த்தமல்ல.

பிற்போக்குவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் மதப்  பூசலைத் தூண்டிவிடுவதில் எங்குமே கருத்துச் செலுத்தி வந்துள்ளனர் ..
-சோஷலிசமும் மதமும் 

லெனின்:-
அரசு சம்பந்தப்பட்ட மட்டில் மதத்தை மெய்யாகவே தனிநபரது சொந்த விவகாரமாக்குவதில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் வெற்றி வாகை சூடும். மத்திய காலத்தியப்  பூசணம் துடைத்து அகற்றப்பட்டு சுத்தமாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பில், பாட்டாளி வர்க்கமானது மதத்தின் மாய்மாலத்தால் மனிதகுலம் ஏய்க்கப்படுவதற்கு மெய்யான மூல காரணமாகிய பொருளாதார அடிமை நிலையை ஒழிப்பதற்காக விரிவான, பகிரங்கமான போராட்டம் நடத்தும்.
-சோஷலிசமும் மதமும் 

லெனின்:-
ஃபாயர்பாக்கைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ள கட்டுரையில், அவர் ஃபாயர்பாக்கை இடித்துக் கூறுகிறார். காரணம் ஃபாயர்பாக் மதத்தை எதிர்த்துப் போராடுவது அதை ஒழிப்பதற்காக அல்ல? ஆனால் மதத்தைப் புதுப்பிக்கவும், ஒரு புதிய  மேன்மையான  மதத்தைக் கண்டுபிடிக்கவும் போன்றவற்றுக்கே. மதம் மக்களுக்கு அபின்   என்ற காரல் மார்க்சின் இந்த ஆணை மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் முழுவதற்கும் அடித்தளமாகும். எல்லா நவீன கால மதங்களையும் சர்ச்சுகளையும், அனைத்து மதநிறுவனங்களையும் பூர்ஷ்சுவாப் பிற்போக்கின் கைக்கருவிகளாக, சுரண்டலைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகவே மார்க்சியம் எப்போதும் கருதியது 
-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை

லெனின்:-
எந்த மதக்கருத்தும், எந்தவிதக் கடவுள் பற்றிய எந்த விதமான கருத்தும், கடவுளைப் பற்றிய லேசான கண் சிமிட்டலும்கூட ஒரு சொல்ல முடியாத அளவிலான அருவறுக்கத் தக்க பொருளாகும். குறிப்பிட்ட வகையில் பொறுத்துக் கொள்ளக் கூடிய வகையில் (சில சமயங்களில் சாதகமான முறையில்) ஜனநாயக பூர்சுவாக்களால் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. அந்த ஒரு காரணத்திற்காகவே இது மிகவும் ஆபத்தான ஓர் அருவறுக்கத்தக்க பொருளாக, மிகவும் வெட்கக்கேடான ஒரு (நோய்)  தொற்று  (infection) இருக்கின்றது. ஒரு கோடி நேரடியான பாவங்கள், அசிங்கமான சூழ்ச்சிகள், வன்முறைச் செயல்கள், (நோய்) தொற்று (infections) மக்களால் ஓரளவு சுலபமாகக் கண்டு பிடிக்கப்படுகின்றன. எனவே அவை மிகவும் கவர்ச்சிகரமான  சித்தாந்த  ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளைப் பற்றிய சூட்சுமமான ஆன்மீகக் கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் குறைவான ஆபத்துகளைக் கொண்டதேயாகும்.
1913  நவம்பர் (மாக்சிம் கார்க்கிக்கு எழுதிய கடிதம்)

லெனின்:-
அராஜகவாதிகள் வறட்டுத் தனமான, அருவமான, பேச்சளவிலான, ஆனால் உண்மையில் வெத்துவேட்டுப்  புரட்சிக் கூச்சல்களுக்கோ, குட்டி பூர்ஷ்வாக்கள் அல்லது மிதவாதப் படிப்பாளிகள் மதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கண்டு பயந்து சாகிறார்கள். இது தன்னுடைய கடமை என்பதை மறந்து விடுகிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் சமரசப்படுத்திக் கொள்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தின் நலவுரிமைகளை வழிகாட்டியாகக் கொள்ளவில்லை. ஆனால் யார் மனதும் புண்பட்டுவிடக் கூடாது, யாரையும் வெறுத்து ஒதுக்கக் கூடாது, யாரையும் பயமுறுத்தி விரட்டக் கூடாது  வாழு, வாழவிடு  என்னும் சாமியார்களின் மந்திரத்தைக் கூறுவது போன்ற மிகக் குறுகிய மனப் போக்குடன் நடந்துகொள்ளும் இந்த நபர்களுக்கு மார்க்சிய வாதிகள் இடமளித்துவிடக் கூடாது

-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை

No comments:

Post a Comment