Tuesday 14 July 2015

சமூகம் பற்றிய பார்வையில் ஃபாயர்பாக்கின் கருத்துமுதல்வாதம்

ஏங்கெல்ஸ்:-
ஃபாயர்பாக்கின் கருத்துமுதல்வாதம் இங்கே இதிலேதான் உள்ளது: பாலுறவுக் காதல், நட்பு, பரிவு, சுயத்தியாகம் மற்றும் இதுபோன்று மனிதர்களிடையே நிலவும், இருவர்க்கு இடையேயான ஈர்ப்பினை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர உறவுகளை, கடந்த காலத்தைச் சேர்ந்ததென அவர் கருதுகின்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்துப் பார்க்காமல், தம்மளவில் உள்ளபடியே அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மதத்தின் பெயரால் புனித தீட்சை பெறும்போது மட்டுமே அவை தம் முழுமதிப்பை பெறும் என்று அடித்துக் கூறுகிறார்.

அவருக்கு முக்கியமான விஷயமாகப் படுவது. முற்றிலும் மானுட வகைப்பட்ட இந்த உறவுகள் நிலவுகின்றன என்பதல்ல, அவ்வுறவுகள் புதிய, உண்மையான மதமாகக் கருதப்படவேண்டும் என்பதே. ஒரு மதத்தின் முத்திரையைக் கொண்டு குறியிடப்பட்ட பிறகு மட்டுமே அவை முழு மதிப்பு பெற்றவையாக இருக்கும். மதத்தைக் குறிக்கும் religion என்ற சொல் ,religare என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதியில் அதன் பொருள் பிணைப்பு என்பதாகும். எனவே இரண்டு மனிதர்களிடையே நிலவும் ஒவ்வொரு பிணைப்பும் ஒரு மதமாகும். இத்தகைய சொல்லிலக்கணத் தந்திரங்கள் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் கடைசிப் புகலிடமாகும்.

அன்றாட நடைமுறைப் புழக்கத்தில் வரலாற்று ரீதியான வளர்ச்சியின்படி அச்சொல் என்ன பொருளைக் குறிக்கிறது என்பதை முக்கியமாகக் கொள்ளாமல் வேர்ச்சொல்லின்படி அதன் பொருள் என்னவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. எனவே வெறுமனே கருத்துமுதல்வாத நினைவுகளுக்கு மிகவும் பிரியமான மதம் என்னும் சொல் மொழியிலிருந்து மறைந்து போக வேண்டாம் என்பதற்காக, இரு பாலருக்கு இடையேயான பாலுறவுக் காதலும் புணர்ச்சியும் ஒரு மதமாகப் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

லுயீ பிளான் (Louis Blanc) கருத்துப்போக்கைச் சேர்ந்த பாரிஸ் நகரத்துச் சீர்திருத்தவாதிகள் நாற்பதுகளில் [1840-களில்] இதே பாணியில்தான் பேசி வந்தார்கள். மதத்தைச் சாராத மனிதனை ஓர் அரக்கப் பிறவி என்றுதான் அவர்களாலும் கருத முடிந்தது. நம்மைப் பார்த்து அவர்கள், “சரிதான், நாத்திகம் உங்கள் மதமாக்கும்!”என்று சொன்னதுண்டு.”

(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

No comments:

Post a Comment