Sunday 12 July 2015

1.மதம் தோன்றாக்காலமும், மதத்தின் தோற்றமும்

லெனின்:-
காட்டு மிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான தனது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும் சைத்தான்களிலும் அற்புதங்களிலும் பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறதோ அதே போல, சுரண்டப்படும் வர்க்கங்கள் சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவையாய் இருக்கும் அவல நிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறது."
சோஷலிசமும் மதமும்

எங்கெல்ஸ்:-
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன...

ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாயச் சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்த சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன.
-டூரிங்குக்கு மறுப்பு

சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப  மதக் கருத்துக்களின் மாற்றம் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை எங்கெல்ஸ் கூறுகிறார்:-

“ .. அது (மதம்) பொருளாயத வாழ்க்கையிலிருந்து மேலும் விலகி நிற்கிறது, அதற்கு மிகவும் அயலானதாகத் தோன்றுகிறது. மனிதர்கள் தங்களுடைய சொந்த இயல்பு பற்றியும் தங்களைச் சூழ்ந்து நிற்கும் புறநிலையிலுள்ள இயற்கை பற்றியும் கொண்டிருந்த அறிவீனமான, தவறான, பழைய கருத்துக்களிலிருந்து மிகவும் ஆதியான காலங்களில் மதம் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு சித்தாந்தமும் தோன்றிய உடனே, நிலவும் கருத்தோட்டங்களுக்கு ஏற்ப, அந்தக் கருத்தோட்டங்களைத் திரும்பத் திரும்ப மறுபரிசீலனை செய்தபடி வளர்கிறது, அந்தக் கருத்தோட்டங்களை மேலும் வளர்க்கிறது. அப்படிச் செய்யாவிட்டால், அது ஒரு சித்தாந்தமாக இராது. அதாவது சுதந்திரமான வளர்ச்சிக்கும் அவ்வளர்ச்சிக்கு உரிய விதிகளுக்கும் மட்டுமே உட்பட்டிருக்கும் சுதந்திரமான சிந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் கொண்டதாக இராது. கடைசிப் பரிசீலனையில் பார்க்கும்பொழுது, எந்த மனிதர்களின் தலைகளுக்குள்ளே இந்தச் சிந்தனை நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த மனிதர்களின் பொருளாயத வாழ்க்கை நிலைமைகளே அந்நிகழ்வுப் போக்கின் ஓட்டத்தை நிர்ணயிப்பது தவிர்க்க இயலாதவாறு இந்த மனிதர்களுக்குத் தெரியாமலே இருந்து விடுகிறது, அப்படி இல்லாவிட்டால், சித்தாந்தம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

லுத்விக் ஃபாயர்பாககும்் செம்மை ஜெர்மன் தத்துவவியலின் முடிவும்,மா.எ. தே,நூ.10 பக்கம் 271- 272


No comments:

Post a Comment