Sunday 12 July 2015

4. பகுத்தறிவுவாதமும் மதமும்

லெனின்:-
மனிதகுலம் மதமெனும் நுகத்தடியின்கீழ் வதைபடுவது, சமுதாயத்திலுள்ள பொருளாதார நுகத்தடியின் விளைவும் பிரதிபலிப்புமே ஆகுமென்பதை மறப்பது முதலாளித்துவக் குறுகிய பார்வையையே குறிக்கும். முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் தானே போராடுவதன்மூலம் அது அறிவொளி பெறத வரை, எத்தனைப் பிரசுரங்களை வெளியிட்டாலும், எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் அதை அறிவொளி பெறச் செய்துவிட முடியாது.
-சோஷலிசமும் மதமும்
லெனின்:-
மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து மக்களைத் தட்டியெழுப்புவதற்கு மிகப் பல சந்தர்ப்பங்களிலும் இவை, மார்க்சியத்தின் உப்புச்சப்பில்லாத, சலிப்பூட்டும் பொழிப்புரைகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கூடுதலாய் ஏற்றவையாய் இருக்கும். திறம்படத் தெரிந்தெடுக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டமைந்த எடுத்துக்காட்டுகள் வாயிலான விளக்கங்கள் அனேகமாய் எவையுமில்லாத இப்படிப்பட்ட பொழிப்புரைகள்தான் நமது வெளியீடுகளில் மிகவும் மலிந்திருக்கின்றன. இவையும் (இவ்வுண்மையை மறைத்துப் பயனில்லை) அடிக்கடி மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவனவாகவே இருக்கின்றன. மார்க்ஸ், எங்கெல்சின் பிரதான நூல்கள் யாவற்றின் மொழிபெயர்ப்புகளும் நம்மிடம் இருக்கின்றன, ஆகவே பழைய நாத்திகமும், பழைய பொருள்முதல்வாதமும், மார்க்சும், எங்கெல்சும் அவற்றில் புகுத்திய திருத்தங்களால் சரிசெய்யப்பட்டுச் செம்மையாக்கப்படாமல் இருந்து விடுமென்று அஞ்சக் காரணம் சிறிதும் இல்லை.
-போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து

லெனின்:-
“  .. பதினெட்டாம் நூற்றாண்டின் பழைய நாத்திக இலக்கியம் பழமைப்பட்டுவிட்டது. விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் ஆகிவிட்டது என்றெல்லாம் காரணம் கூறப்படுகிறது. இத்தகைய போலியான விஞ்ஞானக் குதர்க்கத்தைக் காட்டிலும் மோசமானது எதுவும் இல்லை. பகட்டுப் புலமையை அல்லது மார்க்சியத்தைப் பற்றிய அறவே தவறான உணர்வை மூடி மறைக்கவே இந்தக் குதர்க்கம் பயன்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களுடைய நாத்திக நூல்களில் விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததும் சிறுபிள்ளைத்தனமானதும் நிறைய இருப்பது மெய்தான். ஆனால் இந்நூல்களில் பதிப்பாளர்கள் இவற்றைச் சுருக்கி வெளியிடுவதையும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பிற்பாடு மதங்களைப் பற்றிய விஞ்ஞான விமர்சனத்தில் மனிதகுலம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டியும், இப்பொருள் குறித்து அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள புத்தகங்களைக் குறிப்பிட்டும், இன்ன பிற விவரங்களைக் கூறியும் சுருக்கமான பின்னுரைகளை இந்நூல்களுக்கு அளிப்பதையும் யாரும் தடுத்து நிற்கவில்லை. கோடிக் கணக்கான மக்கள் (முக்கியமாய் விவசாயிகளும் கைத்தொழிலாளர்களும்) நவீன காலச் சமுதாயம் அனைத்தாலும் இருளிலும் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வதையும்படி இருத்தப்பட்டிருக்கும் இவர்கள் கலப்பற்ற தூய மார்க்சிய போதனை என்னும் நேரான பாதையிலேதான் இந்த இருளிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியுமென நினைப்பது, மார்க்சியவாதி ஒருவர் புரியக்கூடிய மிகப் பெரிய, மிகக் கடுந் தவறாகிவிடும். இந்த வெகுஜனங்களை நாட்டங் கொள்ளும்படிச் செய்வதற்காகவும், மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து இவர்களை விழித்தெழச் செய்வதற்காகவும், மிகப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து உசுப்பி விடுவதற்காகவும், இன்ன பிறவற்றுக்காகவும், இவர்களுக்கு நாம் மிகப் பல்வேறுபட்ட நாத்திகப் பிரசார வெளியீடுகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலிருந்துமான உண்மைகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சாத்தியமான எல்லா வழிகளிலும் இவர்களை அணுகியாக வேண்டும்.

-போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து



No comments:

Post a Comment