Friday 17 July 2015

பாட்டாளி வர்க்க சர்வதேசியப் பார்வை- லெனின்

லெனின்:-
1, (சர்வதேச மூலதனத்தை எதிர்த்து)

 “தேசியப் பகைமையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுபடுத்தி, நிறுவன வழியாக திரட்டி பிறகு அத்தகைய தேசிய அளவிலுள்ள தொழிலாளி வர்க்க நிறுவனங்களைச் சர்வதேச மூலதனத்தை எதிர்த்துப் போராடக் கூடிய சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தனியொரு படையாக ஒன்றுபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை ….”
“மக்களின் நண்பவர்கள்” எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் சமூக-ஜனநாயகவாதிகளை எதிர்த்துப் போராடுவது எப்படி?
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 14-15)

2, (தொழிலாளர்கள் மீது ஆட்சி செய்யும் முதலாளிகள், தமது ஆட்சியை ஒரு நாட்டோடு நிறுத்துவதில்லை, இந்த உண்மையில் தான் எல்லா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாகிறது.)

“தொழிலாளி வர்க்க நிறுவனமும் ஒருமைப்பாடும் ஒரு நாடு அல்லது ஒரு தேசிய இனத்தோடு நின்றுவிடவில்லை. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர் கட்சிகள் உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் நோக்கங்களின் முழுமையான ஒன்றிணைப்பை (ஒருமைப்பாட்டை) உரத்த குரலில் அறிவிக்கின்றன.

அவை கூட்டாக நடத்தப்படுகின்ற காங்கிரசுகளில் ஒன்றுகூடுகின்றன, எல்லா நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் பொதுவான கோரிக்கைகளை வைக்கின்றன, விடுதலைக்காகப் போராடி வருகின்ற, நிறுவன வழியில் திரட்டப்பட்ட மொத்த பாட்டாளி வர்க்கத்துக்கும் ஒரு சர்வதேசக் கொண்டாட்ட நாளை (மே தினத்தை) ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றின் மூலம் எல்லா நாடுகளையும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒரு மாபெரும் தொழிலாளர் இராணுவமாக இணைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் மீது ஆட்சி செய்கின்ற முதலாளி வர்க்கம் தன்னுடைய ஆட்சியை ஒரு நாட்டோடு நிறுத்திக் கொண்டுவிடவில்லை. இந்த உண்மையில் இருந்துதான் எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாகத் தோன்றுகிறது.
..
முதலாளித்துவ நிறுவனங்களை- ஒரு நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில் ஒரே நேரத்தில்- ஏற்படுத்துவதற்காகப் பெரும் கூட்டுப்பங்கு கம்பெனிகளின் சர்வதேச சங்கங்கள் தலையைக் காட்டத் தொடங்கி இருக்கின்றன. மூலதனத்தின் ஆதிக்கம் சர்வதேச வழியிலானது. ஆகவே சர்வதேச மூலதனத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் கூட்டாகப் போராடினால் மட்டுமே எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்களுடைய விடுதலைக்காக நடத்துகின்ற போராட்டம் வெற்றி பெற முடியும்.”
சமூக-ஜனநாயகக் கட்சிக்கு ஒரு செயல்திட்டத்துக்கான நகலும் விளக்கமும்
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 16-17)

3, (கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரம் சர்வதேசியக் கலாச்சாரம், அது ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு தனித்த “தேசிய-கலாச்சார சுயாட்சி” என்பது முதலாளிகள் அல்லது குட்டி முதலாளிகள் ஆகியோரின் கலாச்சாரமேயாகும்.)

தேசியப் பிரச்சினை

“சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) எப்பொழுதும் சர்வதேசியவாதக் கருத்து நிலைக்காக நின்றிருக்கிறார்கள், இப்பொழுதும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். பண்ணையடிமை சொந்தக்காரர்களையும், போலீஸ் அரசையும் எதிர்த்து எல்லா தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாக்கும் பொழுது நாம் – “தேசியக் கலாச்சாரத்தை” அல்ல- ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியை மட்டுமே, ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிற சர்வதேசியக் கலாச்சாரத்தை ஆதரிக்கிறோம்.

“தேசிய-கலாச்சார சுயாட்சி” என்ற முழுக்கம் தேசங்களின் கலாச்சார ஒற்றுமை என்ற மாயத் தோற்றத்தைக்காட்டித் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது, ஆனால் நடைமுறையில் இன்று ஒவ்வொரு தேசத்திலும் நிலவுடைமையாளர்களின், முதலாளிகளின் அல்லது குட்டி முதலாளிகளின் “கலாச்சாரமே” மேலாதிக்கம் வகிக்கிறது.

முதலாளிய தேசியவாதத்தின் முழக்கங்களில் ஒன்று என்ற வகையில் நாம் தேசியக் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம். ஒரு முழுமையான ஜனநாயக, சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரத்துக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம்.

தேசிய இனங்களின் மிக முழுமையான சமத்துவம், அதிகமான அளவுக்கு முரணில்லாத ஜனநாயக அரசு அமைப்பு- இவற்றோடு எல்லா தேசிய இனங்களின் தொழிலார்களின் ஒற்றுமை- இதுவே நமது முழக்கம். இதுவே சர்வதேச, அனைத்துப புரட்சி சமூக-ஜனநாயகத்தின் முழுக்கம். இந்த உண்மையான பாட்டாளி வர்க்க முழக்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் “தேசிய” ஒற்றுமை என்ற போலியான தோற்றத்தையும் பிரமையையும் ஏற்படுத்தாது, ஆனால் “தேசிய-கலாச்சார சுயாட்சி” என்ற முழக்கம் இந்த மாயத் தோற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி ஏற்படுத்துகிறது, உழைக்கும் மக்களிடம் அந்தப் பிரமையை ஊன்றுகிறது.”
(லாத்வியன் பிராந்தியத்தின் சமூக-ஜனநாயகவாதிகளின்
 நான்காவது காங்கிரசின் நகல் திட்டம்)
                              (பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 82-83)

4, (தொழிலாளிக்கு தேசம் கிடையாது, ஏன் என்றால் அவனது விடுதலையின் நிலைமைகள் தேசியத்தோடு சுருங்கிக் காணப்படவில்லை. தொழிலாளியின் வர்க்க எதிரியும் சர்வதேசத் தன்மையானதாக இருக்கிறது. தொழிலாளியின் பொருளாதார நிலையும் தேசிய வழியிலானது கிடையாது, சர்வதேசியத் தன்மையானதேயாகும்)

 “”தொழிலாளிக்கு ஒரு தேசமும் கிடையாது”- இதற்கு பொருள்,

(அ) தொழிலாளியின் பொருளாதார நிலை தேசிய வழியிலானதல்ல- சர்வதேசிய வழியிலானது,

(ஆ) அவன் வர்க்க எதிரியும் சர்வதேசிய வழியிலானதே,

(இ) அவனுடைய விடுதலையின் நிலைமைகளும் அப்படிப்பட்டவையே.

(ஈ) தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமை அதிக முக்கியமானது- தேசியஇன ஒற்றுமையைக் காட்டிலும்”           
(இனேஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதம்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 238)


5. (பிற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரோடு பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது “தாய் நாட்டைப்” பற்றித் தேன்கலந்த அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துகிற தங்களின் முதலாளிகளின் சூழ்ச்சிகளினால், தேசியவாதக் முழக்கங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்)

“சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் அளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிவினை அவசியமானதுதானா என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமானதாகும்.
...
… சமூக-ஜனநாயகம் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் மற்றும் இதர் உழைக்கும் மக்களிடம் “தங்களுடைய சொந்த” முதலாளித்துவ வர்க்கத்தினரின்- அவர்கள், மறற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரோடும் ஜாரிஸ்ட் முடியாட்சியுடனும் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது “தாய் நாட்டைப்” பற்றித் தேன்கலந்த அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் தங்களுடைய முதலாளிகளின் சூழ்ச்சிகளில் இருந்து அதன் கவனத்தைத் திருப்புவதற்கும் முயற்சி செய்கிறார்கள்- தேசியவாதக் முழக்கங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்
.. எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தோடு முழுமையான ஒற்றுமையைக் காட்டிலும் “தங்களுடைய சொந்த” தேசிய இன முதலாளித்துவ வர்க்கத்தோடு அரசியல் ஒற்றுமையை முக்கியமாகக் கருதும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நலன்களுக்கு எதிராக, சோஷலிசத்தின் நலன்களுக்கு எதிராக, ஜனநாயகத்தின் நலன்களுக்கு எதிராகப் பாடுபடுகிறார்கள் என்பது பெறப்படும்.”
(தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 89-91)

6. (தேசியக் கலாச்சாரம் என்கிற முழக்கம் பூர்ஷ்வா ஏமாற்று வித்தை,  கம்யூனிஸ்டுகளின் முழக்கம்: ஐனநாயகத்தினுடையதும், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடையதும் ஆன சர்வதேசியக் கலாச்சாரம்)

 “.. எல்லா மிதவாத-பூர்ஷ்வாத் தேசியவாதமும் தொழிலாளர்களுக்கும் இடையில் மிகப்பெரும் ஊழலைப் பரப்புகிறது, சுதந்திர இயக்கத்துக்கும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கும் மிகப்பெரும் தீமையைச் செய்கிறது என்பதுதான். இந்த பூர்ஷ்வா (அதோடு பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவப்) போக்கு “தேசியக் கலாச்சாரம்” என்ற கோஷத்துக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் மிகவும் ஆபத்தானது.

தேசியக் காலாச்சாரம்- மாக ருஷ்ய, போலிஷ், யூத, உக்ரேனிய இன்னும் பலவித தேசியக் காலாச்சாரங்கள்- என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுதான் கறுப்பு நூற்றுவர்களும் குருமார்களும், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பூர்ஷ்வாக்களும் கூட, தங்களது நீசத்தனமான, பிற்போக்கு வேலையைச் செய்து கொண்டிருக்கிறன்றனர்.

மார்க்சியக் கோணத்தில் இருந்து, அதாவது வர்க்கப் போராட்டம் என்ற நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், வர்க்கங்களின் நலன்களுடனும் கொள்கைகளுடனும்- வெறும் பொருளற்ற “பொதுக் கோட்பாடுகளுடனும்” கவர்ச்சிகரமான உரைகளுடனும் சொற்றொடர்களுடனும் அல்ல- முழக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய தேசிய வாழ்வின் உண்மைகள் இவைதான்.

தேசியக் கலாச்சாரம் என்கிற கோஷம் ஒரு பூர்ஷ்வா (அடிக்கடி கறுப்பு நூற்றுவர்களுடையது குருமார்களுடைதும் கூட) ஏமாற்று வித்தை. நமது முழக்கம்: ஐனநாயகத்தினுடையதும், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடையதும் ஆன சர்வதேசியக் கலாச்சாரம் என்பதுதான்.”
(தேசியப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)
(பாட்டாளி வார்க்க சர்வதேசியவாதம் பக்கம் – 110-111)

7. தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளின் பால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலை

(ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக்க வேண்டியது பற்றியும், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவது பற்றியும் கூறுகிறார் லெனின்.)

 “1) புரட்சியின் கால வரிசையில் ருஷ்யாவிலுள் எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி வாக்கமும் பொதுப் போராட்டத்தில் மென்மேலும் ஒன்றுபட்டு வருவதால்,

2) இந்தப் பொதுப போராட்டம் ருஷ்யாவின் பல்வேறு தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளை முன்பு இருநததைக் காட்டிலும் நெருக்கமாகக் கொண்டு வருவதால்,

3) பல நகரங்களிலும், முன்பு இருந்த கூட்டமைப்புக் கமிட்டிகளுக்குப் பதிலாக, அந்தக் குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கும் எல்லா தேசிய சமூக-ஜனநாயக நிறுவனங்களையும் கொண்ட இணைப்புக் கமிட்டிகள் ஏற்பட்டு வருவதால்,

4) தேசிய சமூக-ஜனநாயகக் கட்சிகளில் பெருமபான்மையானவை ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் காங்கிரசால் சரியானபடி நிராகரிக்கப்பட்ட கூட்டாட்சிக் கொள்கையை இனி வற்புறுத்தாமல் இருப்பதால்,

நாங்கள் பின்கண்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் இவற்றுக்கு உடன்பட வேண்டும் என்று முனமொழிகிறோம்:

1) ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய சமூக-ஜனநாகக் கட்சிகளையும் ஒன்றுபட்ட ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக விரைவில் இணைப்பதற்கு மிகச் சுறுசுறுப்பான நடிவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்,

2) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள எல்லா சமூக-ஜனநாயக நிறுவனங்களும் முழுமையாக இணைவதே இந்த இணைப்பின் அடிப்படையாக இருக்கும்.

3) ஒவ்வொரு தேசிய இனத்தின் சமூக-ஜனநாயகப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி நலன்களும் தேவைகளும் நிறைவு செய்வது – அதன் பண்பாட்டு, வாழ்க்கை முறையின் பிரத்யேகமான அம்சங்களுக்கு உரிய மதிப்பளித்து- உண்மையாக நிறைவேற்றப்படும் என்று கட்சி உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட தேசிய இனத்தின் சமூக-ஜனநாகவாதிகளின் விசேஷ மாநாடுகளை நடத்தி, கட்சியின் ஸ்தல, பிராந்திய, மத்திய அமைப்புகளில் தேசியச் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது, எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், கிளர்ச்சிப் பிரச்சாரகர்கள், முதலியோரின் விசேஷக் குழுக்களை அமைப்பது, இதரவற்றின் மூலம் இதை உறுதிப்படுத்த வேண்டும்.”
(ரு.ச.ஜ.தொ. கட்சியின் ஒற்றுமை காங்கிரசுக்கு ஒரு போர்தந்திர நிலை)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 56-57)

8. (பாட்டாளி வர்க்கக் கட்சி பெரியதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. ஏன் என்றால் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது.)

 “பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப்படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவிப்புகளும் பிரிகடங்கம் அறிக்கைகம் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புகளே அல்லது குட்டி முதலாளித்துவத் தன்மையான வெற்றி விருப்பங்களே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரியதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படிச் செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.

ருஷ்யக் குடியரசு எந்தளவுக்கு அதிகமாக ஜனநாயகத் தன்மை பெற்றிருக்கிறதோ, எந்தளவுக்கு அதிக வெற்றிகரமாக அது தன்னைத்தானே தொழிலாளர், விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துக்களின் குடியரசாக ஒழுங்கமைத்துக கொள்கிறதோ, அந்த அளவுக்கு அனைத்து தேசங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களை அத்தகைய குடியரசு தன் பால் சுயவிருப்பமான முறையில் ஈர்க்கும் சக்தியுடன் அதிக வலிமையுள்ளதாக இருக்கும்.

முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 251-252)

9. (மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. அதைத் தோற்கடிப்பதற்கு ஒரு சர்வதேசத் தொழிலாளர் நேச அணி, சர்வதேசத் தொழிலாளர் சகோதரத்துவம் அவசியம்.)

“.. தொழிலாளர் நலன்கள் பல்வேறு நாடுகள் மற்றும் மக்கள் இனங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள் மத்தியில் முற்ற முழுமையான நம்பிக்கையையும் மிகவும் நெருக்கமான இணக்க உறவையும் கோருகின்றன. நிலப்பிரபுக்கள், முதலாளிகள் மற்றும் பூர்ஷ்வா வகைப்பட்டோரின் ஆதரவாளர்கள் தொழிலாளர்களைப் பலிவீனப்படுத்தவும், மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தவும் வேண்டித் தொழிலாளர்களைப் பிளவுறுத்த முயல்வார்கள், தேசியப் பிணக்குகளையும் பகைமையையும் தீவிரப்படுத்த முயல்வார்கள்.

மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. அதைத் தோற்கடிப்பதற்கு ஒரு சர்வதேசத் தொழிலாளர் நேச அணி, சர்வதேசத் தொழிலாளர் சகோதரத்துவம் அவசியம்.

நாம் தேசியப் பகைமை மற்றும் பிணக்கு, தேசியத் தனி விதிவிலக்குத் தன்மை ஆகியவற்றை எதிர்க்கிறோம். நாம் சர்வதேசியவாதிகள். நாம் ஒரே உலக சோவியத் குடியரசில் எல்லா உலக தேசங்களையும் சேர்ந்த தொழிலாளர், விவசாயிகளினது நெருக்கமான ஒற்றுமையை, முழுமையான இணைப்பை ஆதரிக்கிறோம்.”

(தெனீக்கினை எதிர்த்த வெற்றிகளைக் குறித்து உக்ரேனிய தொழிலாளர், விவசாயிகளுக்கு எழுதிய கடிதம்)
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 397)

10 (உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்ற உலகத்துக்கு எதிராக, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற புதிய உலகத்தை நிறுத்துகிறார்கள்)

“தேசியக் கலாச்சாரம், “தேசிய-கலாச்சார சுயாட்சி” பற்றிய இனிப்பான பேச்சுக்கள் தங்களைப் பிரித்து வைத்திருப்பதற்குத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட  முயற்சியின் மூலம் நிறுவனங்களில் முழு சுதந்திரத்தையும் முழுமையான சமத்துவ உரிமைகளையும் காப்பாற்றி நிற்கிறார்கள்- அதுவே உண்மையான கலாச்சாரத்துக்கு உத்தரவாதம்.

உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்- சுதந்திரத்துக்கு ஆதரவாக, ஒடுக்குமுறைக்கு எதிராக இருப்பவர்கள் நெடுங்காலமாக இதற்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய உலகத்துக்கு, தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்ற உலகத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒரு புதிய உலகத்தை, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற உலகத்தை, எவ்விதமான தனி உரிமைகளும் அல்லது மிகச் சிறிய அளவுக்கு மனிதனை மனிதன் ஒடுக்குவது கூட இல்லாத உலகத்தை எதிரே நிறுத்துகிறார்கள்.”

(தொழிலாளி வர்க்கமும் தேசியப் பிரச்சினையும்)

(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் பக்கம் 80)

No comments:

Post a Comment