Sunday 4 June 2017

இலக்கிய சார்பைப் பற்றி லெனின்:-

கட்சி இலக்கியம் என்னும் கோட்பாடு என்பதென்ன? சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்துக்கு, இலக்கியமானது தனியாட்கள் அல்லது குழுக்கள் செல்வம் திரட்டிக் கொள்வதற்குரிய ஒரு சாதனமாய் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல இக்கோட்பாடு, உண்மையில் இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தின் பொதுக்குறிக்கோளைச் சாராத ஒன்றாய், தனியாள் முயற்சியாய் இருக்க முடியாது என்பதும் ஆகும். கட்சி சார்பில்லா மனப்பாங்குடைய எழுத்தாளர்கள் ஒழிக!! இலக்கியத்துறை மீமனிதர்கள் ஒழிக! (Down with literary supermen!) இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தினது பொதுக்குறிக்கோளின் ஒரு பகுதியாக வேண்டும், தொழிலாளி வர்க்கம் அனைத்தின் அரசியல் உணர்வு கொண்ட முன்னணிப் படை அனைத்தாலும் இயக்கப்படும் தனியொரு மாபெரும் சமூக-ஜனநாயகப் பொறியமைவைச் சேர்ந்தபல் சக்கரமும் திருகும்ஆகிவிட வேண்டும். ஒழுங்கமைந்த, திட்டமிடப்பட்ட, ஒருமித்த சமூக-ஜனநாயகக் கட்சிப் பணியில் இலக்கியம் ஒரு கூறாகிவிட வேண்டும்

முதலாளித்துவத் தனிநபர் மனப்பான்மையோராகிய உங்களுக்கு இதை நாங்கள் சொல்லியாக வேண்டும், அறுதியான சுதந்திரம் (absolute freedom) என்பதாய் நீங்கள் பேசுவது முழுக்க முழுக்க கபடமான புரட்டே ஆகும். பணத்தின் வல்லமையை அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், உழைக்கும் திரளான மக்கள் வறுமையில் வாட, ஒரு சில செல்வந்தர்கள் புல்லுருவிகளாய் வாழும் ஒரு சமூகத்தில் மெய்யான, பயனுள்ளசுதந்திரம்இருக்கவே முடியாது.
..
..அறுதியான இந்தச் சுதந்திரம் முதலாளித்துவ அல்லது அராஜகவாதத் தொடராகும் (உலகக் கண்ணோட்டம் என்ற முறையில் அராஜகவாதமானது உட்புறம் வெளிப்புறமாய் மாற்றப்பட்ட முதலாளித்துவ தத்துவமாகும்). யாராலும் சமூகத்தில் இருந்து கொண்டு, அதேபோதில் சமுகத்தில் இருந்து சுதந்திரமாயும் இருப்பது முடியாத காரியம். முதலாளித்துவ எழுத்தாளர் அல்லது கலைஞர் அல்லது நடிகையின் சுதந்திரம் எல்லாம், பண மூட்டைக்கு, லஞ்ச ஊழலுக்கு, விபசாரத்துக்குக் கீழ்ப்படியும் முகமூடி பூண்ட (அல்லது கபடமாய் முகமூடி இடப்பட்ட) சார்புநிலையே அன்றி வேறல்ல.”

 (கட்சி அமைப்பும் கட்சி இலக்கியமும்)

No comments:

Post a Comment