Thursday 29 June 2017

அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றி ஸ்டாலின்

“சமூக வாழ்வில்கூட, முதலில் புறச்சூழ்நிலைகள் மாறுகின்றன, முதலில் பொருளாயத நிலைமைகள் மாறுகின்றன, அதன் பின்னர் இந்த மாறிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மக்களுடைய உலக கண்ணோட்டம் ஆகியவையும் மாறுகின்றன.

இதனால் தான், பின்வருமாறு கூறுகிறார் மார்கஸ்:-
“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. ஆனால், இதற்க மாறாக, அவர்களது சமூக வாழ்க்கையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது,”

பொருளாயத நிலைமையை, புறச் சூழ்நிலைகளை வாழ்க்கையை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, நாம் “உள்ளடக்கம்” என்று சொல்வோமானால், கருத்தியல் ரீதியானதை, உணர்வை, இன்னும் இதே வகையைச் சேர்ந்த நிகழ்ச்சிப்போக்கை, “வடிவம்” என்றுதான் நாம் சொல்ல முடியும்.  எனவே, வளர்ச்சி என்ற நிகழ்ச்சிப் போக்கில், உள்ளடக்கமானது வடிவத்தை முந்திக் கொண்டு செல்கிறது, வடிவமானது உள்ளடக்கத்துக்குப் பின்தங்கி நிற்கிறது. இந்த உண்மையில் இருந்துதான், பிரபலமான பொருள்முதல்வாதக் கருத்துரைப்பு தோன்றுகிறது.

மார்க்சின் கருத்துப்படி பொருளாதார வளர்ச்சிதான் சமூக வாழ்வின் “பொருளாயத அடித்தளமாக” சமூகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது, அதே நேரத்தில், சட்ட-அரசியல் மற்றும் மதவியல்-தத்துவவியல் வளர்ச்சியானது, இந்த உள்ளடக்கத்தின் “சித்தாந்த வடிவமாக”, அந்த உள்ளடக்கத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது. இதிலிருந்து பின்வரும் முடிவை மார்க்ஸ் வந்தடைகிறார். “பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்துடன் முழு பிரமாண்டமான மேற்கட்டுமானமும் அதிகமான அல்லது குறைவான வேகத்தில் (more or less rapidly) மாறுதலடைகிறது.
பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதார சூழ்நிலைகள் பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும். எந்த இலட்சியங்கள் பொருளாதார சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக் கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.”

(அராஜகவாதமா? சோஷலிசமா? -பக்கம்- 34 & 37-38)

1 comment: