Saturday 10 June 2017

முதலாளித்துவ தந்திரங்களை புரிந்து கொள்வதற்கும் உழைக்கும் மக்களின் மீது செல்வாக்கு செலுத்த கற்றுக் கொள்ளவதற்கும் நாடாளுமன்றம் பள்ளிப் பயிற்சியாகும்- லெனின்

“முதலாளித்துவப் நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதை எதிர்த்து ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் வ்தங்களில் ஒன்று இன்னும் கொஞ்சம் அதிகக் கவனமாய்ப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். அந்த வாதம் பின்வருமாறு:-

“கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்றம் ஒரு கிளர்ச்சி மேடையாக மட்டுமே முக்கியத்துவமுடையது. ஆஸ்திரியாவிலுள்ள எங்களுக்குத் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஒரு கிளச்சி மேடையாக இருக்கிறது. எனவே, முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் தேர்தல்களில் நாங்கள் பங்கெடுக்க மறுக்கிறோம். ஜெர்மனியில் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் என்று மெய்யாகவே கருதத்தக்கது ஒன்றுமில்லை. அதனாலேதான் ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் மாறான செயற்தந்திரத்தைப் பின்பற்றுகிறார்கள்.”

இந்த வாதம் தவறாகுமெனக் கருதுகிறேன். முலாளித்துவ நாடாளுமன்றத்தை நம்மால் ஒழிக்க முடியாதவரை நாம் அதை எதிர்த்து உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வேலை செய்ய வேண்டும். தொழிலாளர்களை ஏமாற்றுவதக்க முதலாளிகள் பயன்படுத்துகிற முதலாளித்துவ ஜனநாயகக் கருவிகளை உழைக்கும் மக்களில் கணிசமான தொகையினர் நம்புகிறவரை, தொழிலாளர்களின் பிற்பட்ட பகுதியினர் – குறிப்பாகப் பாட்டாளி வர்க்கமல்லாத உழைப்பாளி மக்கள் – அதிமுக்கியமானதாகவும் செல்வாக்கு உள்ளதாகவும் கருதுகிற அதே மேடையிலிருந்து இந்த வஞ்சகத்தை நாம் விளக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றித் தேர்தல்கள் – முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்த் தங்களுடைய சோவியத்துக்களுக்காக உழைப்பாளி மக்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ளும் தேர்தல்கள்- நடத்த முடியாதிருக்கிறவரை, முதலாளித்துவ வர்க்கம் அரசு அதிகாரத்தை வகித்து மக்களின் பல்வேறு வர்க்கங்களைத் தேர்தல்களில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறவரை, அந்தத் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் மட்டுமின்றி எல்லா உழைப்பாளி மக்களிடையேயும் பிரசாரம் செய்யும்பொருட்டு, நாம் பங்கெடுப்பது நமது கடமையாகும்.

முதலாளித்துவ நாடாளுமன்றம், நிதி மோசடிகளையும் எல்லா விதமான வஞ்சங்களையும் மூடிமறைப்பதற்கு “ஜனநாயகத்தைப்” பற்றிய வாய்ச்சொற்களைப் பயன்படுத்தி, தொழிலாளிகளை வஞ்சிப்பதற்குரிய ஒரு சாதனமாக இருந்து வருகிறவரை, இதே நிறுவனத்தில் – அது மக்களின் சித்தத்தை வெளியிடுவதாகக் கருதப்படுகிறது, ஆனால் பணக்காரர்கள் மக்களை ஏய்ப்பதை மூடிமறைப்பதே உண்மையயில் அது ஆற்றும் பணியாகும் – கம்யூனிஸ்டுகளாகிய நாம் இருந்து வஞ்சனையை முரணின்றி அம்பலப்படுத்துவதும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகள் பக்கம் ஓடிப்போகிற ரென்னர்களின் கும்பல் புரியும் ஒவ்வொரு காரியத்தையும் அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகும்.

நாடாளுமன்றத்திலே முதலாளித்துவக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் இடையே உள்ள உறவுகள் மிக அடிக்கடி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, முதுலாளித்துவ சமுகத்திலுள்ள எல்லா வர்க்கங்களிடையேயும் நிலவும் உறவுகளை அவை பிரதிபலிக்கின்றன. எனவேதான், முதலாளித்துவ நாடாளுமன்றத்திலே, அதனுள் இருந்தே கம்யூனிஸ்டுகளாகிய நாம் கட்சிகள் பால் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் போக்கு, பண்ணைத் தொழிலாளிகள்பால் நிலப்பிரபுக்கள் கடைப்பிடிக்கும் போக்கு, ஏழை விவசாயிகள்பால் பணக்கார விவசாயிகள் கடைப்பிடிக்கும் போக்கு, அலுவலக ஊழியர்கள்கால், சிறு உடைமையாளர்கள்பால் பெரு முதலாளிகள் கடைப்பிடிக்கும் போக்கு இப்படியே மற்றவற்றின் உண்மையை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும்.

முதலாளிகளின் கேடுகெட்ட, நாசுக்கான தந்திரங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளவும், குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் மீதும் பாட்டாளி வர்க்கமல்லாத உழைக்கும் மக்கள் திரள்மீதும் செல்வாக்குச் செலுத்தக் கற்றுக் கொள்ளவும், பாட்டாளி வர்க்கம் இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் “பள்ளிப் பயிற்சி” இல்லாமல், பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பொறுப்புகளை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியாது.”

(ஆஸ்ரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம்- 1920, ஆகஸ்டு 15)

No comments:

Post a Comment