Friday 9 June 2017

ருஷ்ய சோஷலிச அரசின் சீர்திருத்த வழியிலான மாற்றம் குறித்து லெனின்

“பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் “சீர்திருத்த வழியிலான,” படிப்படியான, எச்சரிக்கையான, சுற்றிவளைந்து செல்லும் போக்கு தேவைப்படுவதானது தற்போது நமது புரட்சிக்குப் புதிய ஒன்றாகும். இந்தப் “புதுமையானது” கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டிலும் பல கேள்விகளையும் திகைப்புகளையும் ஐயுறவுகளையும் எழுச் செய்கிறது.

ஒரு கோட்பாட்டுப் பிரச்சினை ஒட்டுமொத்தமாய்ப் புரட்சி வெற்றிகரமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒர நேரத்தில் ஒரே துறையில் மிகமிகப் புரட்சிகரமான வரிசையான பல செயல்களிலிருந்து மிகமிகச் “சீர்திருத்த வழியிலான” செயல்களுக்கு மாறிச் செல்ல வேண்டியிருப்பதற்கு எப்படி நாம் விளக்கம் கூறுவது?

“நிலைகளை விட்டுக் கொடுக்கிறோம்”, “தோல்வியை ஒத்துக் கொள்கிறோம்” அல்லது இதையொத்த ஒன்றினைக் குறிப்பதாய் இருக்குமோ இது? ஆம், அப்படித்தான் என்று கூறுகின்றனர் நமது பகைவர்கள்- அரைப்பிரபுத்துவ வகைப்பட்ட பிற்போக்காளர்களிலிருந்து ஏனைய  வீரர்கள் வரையில்.
1921 வசந்தம் முதலாய் இந்த அணுகலுக்கு, திட்டத்துக்கு, முறைக்கு அல்லது செயல் வழிக்குப் பதிலாய் முற்றிலும் மாறான அனுசரித்து வந்திருக்கிறோம். பழைய சமூக-பொருளாதார அமைப்பை- வர்த்தகம், சிறு உற்பத்தி தனியார் பண்ணை, முதலாளித்துவம் இவற்றை- நொறுக்குவதற்குப் பதிலாய் வர்த்தகத்தை, சிறு உற்பத்தியை, முதலாளித்துவதிதைப் புத்துயிர் பெறச் செய்து அதே போது விழிப்புடனும் படிப்படியாகவும் இவற்றின் மீது மேல் நிலை பெறுதல் அல்லது அவை புத்துயிர் பெறும் அளவுக்கு மட்டும் அவற்றை அரசின் ஒழுங்கியக்கத்துக்கு உட்படுத்த வகை செய்தல் என்னும் ஒரு முறையை அனசரித்து வந்திருக்கிறோம்.

பிரச்சினையை முற்றிலும் புதியதொரு வழியில் அணுகுவதாகும் இது.

முந்தைய, புரட்சிகர முறையிலான அணுகலுடன் ஒப்பிடுகையில் இது சீர்திருத்த முறையிலான அணுகலாகும்.

இங்கு எழும் கேள்வி இதுவே: புரட்சிகர முறைகளைக் கையாண்டு பார்த்து, அவை தோற்றுவிட்டதைக் கண்டு சீர்திருத்த முறைகளை நீங்கள் அனுசரிப்பீர்களாயின், புரட்சி செய்தது பொதுவிலேயே தவறெனப் பிரகடம் செய்கிறீர்கள் என்பதைத்தானே அது நிரூபிக்கிறது? நீங்கள் புரட்சியை ஆரம்பித்திருக்கக் கூடாது, சீர்திருத்தங்களைத் தொடங்கி அவற்றுக்குள்ளேயே உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதை இது நிரூபிக்கவில்லையா?
இதுவே மென்ஷிவிக்குகளும் அவர்களையொத்த ஏனையோரும் வந்தடையும் முடிவு.
….
உண்மையான புரட்சியாளர்கள் “புரட்சியினைக்” கொட்டை எழுத்திட்டு எழுதத் தொடங்கியதும், “புரட்சியை” ஏறத்தாழ தெய்வீகமான ஒன்றின் நிலைக்கு உயர்த்த முற்பட்டதும், நிதானம் தவற ஆரம்பித்ததும், எந்தத் தருணத்தில், எந்தச் சூழ்நிலைமைகளில், எந்தச் செயல் துறைகளில் புரட்சிகர வழியில் செயல்பட வேண்டும் என்பதையும் எந்தத்தருணத்தில், எந்தச் சூழ்நிலைமைகளில், எந்தச் செயல் துறைகளில் சீர்திருத்த செயலில் இறங்க வேண்டும் என்பதையும் மிகமிக அமைதியாகவும் கொஞ்சமும் விருப்புவெறுப்பின்றியும் சிந்தித்துச் சீர்தூக்கி நிர்ணயிப்பதற்கான ஆற்றலை இழக்கத் தொடங்கிதும் பெரும்பாலும் அதேகதியாகியுளளனர்.
நாம் மார்க்சியத்தில் இருந்து பிறழாது செல்வோமாயின் முற்றிலும் கோட்பாட்டின் முதற்கோள்களைக் கொண்டு இதனை நிரூபித்துக் காட்டலாம். நமது புரட்சியின் அனுபவமும் இது போலியான முடிவே ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கோட்பாட்டுக் கண்ணோட்டத்தில் இருந்து முட்டாள்தனமான காரியங்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவது போலவே புரட்சிக் காலத்திலும் செய்யப்படுகின்றன என்று எங்கெல்ஸ் கூறினார்.

அவர் கூறியது முழுக்கவும் சரியானதே. முட்டாள்தனமாக வாரியங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் செய்யமுயல வேண்டும், செய்யப்பட்டவற்றை எவ்வளவு சீக்கிரமாய் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய்ச் சரிசெய்து கொண்டுவிட வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் எந்தப் பிரச்சினைகளுக்குப் புரட்சிகர முறைகளில் தீர்வு காண முடியும், எவற்றுக்கு முடியாது என்பதை நாம் கூடுமான அளவுக்கு நிதானமாய் மதிப்பிட்டாக வேண்டும்.

நமது நடைமுறை அனுபவத்தின் கண்ணோட்டத்திலிருந்து பிரேஸ்த் சமாதானம் எவ்விதத்திலும் புரட்சிகரமல்லாத செயலாகும், இன்னுங்கூட மோசமானதாகும். ஏனெனில் அது பின்வாங்குதலாகும், ஆனால் சீர்திருத்தச் செயலானத பொதவாய் மெல்ல மெல்ல, எச்சரிக்கையோடு, படிப்படியாய் முன்னேறுகிறதே அன்றி பின்னோக்கிச் செல்வதில்லை.”


(தற்போதும் சோஷலிசத்தன் முழுநிறை வெற்றிக்குப் பிற்பாடும் தங்கத்தின் முக்கியத்துவம்- 1921)

No comments:

Post a Comment