Saturday 10 June 2017

நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து கம்யூனிஸ்டுகள் வேலை செய்வது பற்றி லெனின்

தொழிற் சங்கங்களுங்கூட சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டவையே, இவையும் ஓர் அபாயமே என்று கூறுகிறீர்கள். ஆனால் அதே போது தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை விதிவிலக்கு செய்துகொள்ள வேண்டும், ஏனெனில் இவை தொழிலாளர்களுடைய நிறுவனங்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இது ஓரளவுக்கு மட்டுமே உண்மை. தொழிற் சங்கங்களிலுங்கூட மிகவும் பிற்பட்ட பகுதியோர் உள்ளனர், பாட்டாளிகளாகப்பட்ட குட்டி பூர்ஷ்வாக்களில் ஒரு பகுதியோரும் பிற்பட்ட தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் உள்ளனர். இப்பகுதியோர் எல்லோரும் தமது நலன்கள் நாடாளுமன்றத்தில் பிரிதிநிதித்துவப்படுத்தப்பட்டிருப்பதாய் மெய்யாகவே நினைக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து வேலை செய்வதன் மூலம், எது மெய்யென்பதை பொதுமக்களுக்கு காட்டும் வண்ணம் உண்மை விவரங்களை எடுத்துரைப்பதன் மூலம் இந்தக் கருத்தினை எதிர்த்துப் போராடியாக வேண்டும், இவர்களுக்கு நடைமுறை அனுபவம் அவசியமாகும்.
முதலாளித்துவ வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டு வரும் மெய்யாகவே பிற்பட்ட பகுதியோரான பொதுமக்களுக்கு நாடாளுமன்றத்தின் உண்மையான தன்மையை எப்படி நீங்கள் புலப்படச் செய்யப் போகிறீர்கள்? நீங்கள் நாடாளுமன்றத்தில் இல்லையானால், நீங்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் நிற்கப் போகிறீர்கள் என்றால், பல்வேறு நாடாளுமன்ற சூழ்ச்சிகளையும் பல்வே கட்சிகளுடைய நிலைகளையும் எப்படி அம்பலம் செய்யப் போகிறீர்கள்?

நீங்கள் மார்க்சியவாதிகள்தான் என்றால், முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளுக்கும் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் நெருங்கிய இணைப்பு உண்டென்பதை நீங்கள் ஒத்துக்கொண்டாக வேண்டும்.

திரும்பவும் கேட்கிறேன்:- நாடாளுமன்ற உறுப்பினர்களாய் இல்லையேல், நாடாளுமன்ற வழியிலான செயற்பாட்டினை நிராகரிப்பீர்களாயின், இவற்றை எல்லாம் எப்படி புலப்படச் செய்யப் போகிறீர்கள்? தொழிலாளி வர்க்கத்தினர், விவசாயிகள், சிறு அலுவலகச் சிப்பந்திகள் ஆகிய பொதுமக்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் வாயிலாகவே அன்றி, எந்த வாதங்களாலும் உண்மை நிலைமையை உணர்த்திவிட முடியாது என்பதை ருஷ்யப் புரட்சியின் வரலாறு தெளிவாய்க் காட்டியிருக்கிறது.

நாடாளுமன்றப் போர்ட்டத்தில் ஈடுபடுவது வெறும் கால விரயமே என்பதாய் இங்கு வாதாடப்பட்டது. நாடாளுமன்த்தைப் போல, எல்லா வர்க்கங்களும் இந்த அளவுக்குப் பங்கெடுத்துக் கொள்ளும் வேறொரு நிறுவனம் இருப்பதாய் யாரும் நினைக்க முடியுமா? செய்கை முறையிலே இப்படி ஒன்றை படைத்துவிட முடியாது. எல்லா வர்க்கங்களும் நாடாளுமன்றப் போராட்டத்தினுள் கவர்ந்திழுக்கப்படுகின்றன என்றால், வர்க்க நலன்களும் மோதல்களும் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கப்படுவதுதான் காரணம்

(பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது. 1920, ஆகஸ்டு 2)

No comments:

Post a Comment