Tuesday 12 December 2017

மதம் மக்களின் அபின் என்பது மதம் பற்றிய மார்க்சின் கருத்து எதிர்மறையானதே

மார்க்ஸ்:-
“மதத்தின் துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளியீடாகவும், உண்மையான துயரத்துக்கு எதிரான ஆட்சேபணையாகவும் இருக்கிறது. மதம் என்பது எப்படி ஆத்மாவற்ற நிலைமையின் ஆத்மாவாக இருக்கிறதோ, அதேபோன்று இதயமற்ற உலகத்தின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு வாய்த்த அபினி.

மக்களின் யதார்த்தமான ஆனந்தத்துக்காக, மக்களின் மாயையான ஆனந்தமாகவுள்ள மதத்தை ஒழித்தாக வேண்டியிருக்கிறது. அதன் நிலைமையப் பற்றிய மாயைகளை விட்டொழிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாயைகளுக்குத் தேவைப்படும் ஒரு நிலைமையே விட்டொழிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான். எனவே மதத்தின் விமர்சனம் என்பது அதன் கருவிலேயே துயரப்படுகுழியைப் பற்றிய, அதன் ஒளிப்பிரமையாக உள்ள மதத்தைப் பற்றிய விமர்சனம்தான்.

கட்டுத்தளையின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிடுங்கி எறிந்துவிட்டது. எந்தவிதமான மன ஆறுதலும், மனோகற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தத் தளையைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக அவன் அந்தத் தளையை உதறித்தள்ளி, ஜீவனுள்ள மலரைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் மாயையைக் குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்துவத்தை அவனே உருவாக்கவும், மாயை குலைந்த மனிதனாகி அவன் பகுத்தறிவுக்கு மீண்டு வந்து, தன்னைத்தானே அவன் சுற்றிவரவும், அதன் மூலம் அவனது உண்மையான சூரியனைச் சுற்றிவரவும் செய்கிறது. மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது.”
(ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்களித்த மேற்குறிப்பு-முன்னுரை)

மார்க்சின் முதல் பேராவை மட்டும் படித்துவிட்டு, அதன் இறுதி வரியான மதம் மக்களுக்கு அபின் என்பதற்கு தவறான விளக்கத்தைக் பலர் சர்வதேச அளவில் கொடுத்துவருகின்றனர்.

"மதம் மக்களுக்கு அபின் போன்றது" என்று மார்க்ஸ்
கூறினார் என்பதாக மார்க்சியத்தை சரியாகக்
கற்காத அரைகுறைகள் சொல்லிக்கொண்டு
திரிகிறார்கள். இது உண்மையல்ல.”
- என்று தோழர் Ilango Pichandy  போன்றோர்கள் கூறிவருகின்றனர். தோழர் இஎம்எஸ் அவர்களின் கருத்தும் இத்தகையதே.

“ஒடுக்கப்பட்ட வர்க்க சமூகத்தி்ல், புகலற்ற மனிதன் மதத்திடம் கற்பிதமான உதவியை நாடுகிறான். தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது. அந்தத் துன்பத்திற்கு உண்மையான, நிரந்தரமான நிவாரணத்திற்குத் தற்காலிக நிவாரணம் மாற்றாக முடியாது. அதேபோல், மதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றது”

மார்க்சின் அடுத்த பேராவைப் படிக்கும் போது இவர்களின் கருத்து மார்க்சின் கருத்தல்ல என்பது தெளிவாகிவிடுகிறது. “மக்களின் யதார்த்தமான ஆனந்தத்துக்காக, மக்களின் மாயையான ஆனந்தமாகவுள்ள மதத்தை ஒழித்தாக வேண்டியிருக்கிறது” மதம் மக்களுக்கு அபினியே என்பதை தொடர்ந்து மார்க்ஸ் விளக்கியிருக்கிறார். ஆனால் இதனை இவர்கள் மறைத்துவிடுகின்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்கள் மதம் பற்றிய தங்களது கருத்தை தெளிவாகத்தான் முன்வைத்துள்ளனர். மதத்தின் மீதான மயக்கம் உள்ளவர்களுக்கு இத்தெளிவு தென்படுவதில்லை

No comments:

Post a Comment