Tuesday 19 December 2017

தொழிற்சங்கங்களின் பிற்போக்குத் தன்மையும் அதனைப் போக்கும் வழியைப் பற்றி லெனின்

“ருஷ்யாவைக்காட்டிலும் அதிக அளவு முன்னேறிய நாடுகளில், தொழிற் சங்கங்களின் ஒரு வகைப் பிற்போக்குத்தனம் எங்களுடைய நாட்டைவிட மிகவும் கூடுதலான அளவில் வெளிப்பட்டிருக்கிறது, வெளிப்பட்டே ஆக வேண்டியிருந்தது. தொழிற் சங்கங்களின் குறுகிய தேர்ச்சித் துறை மனப்பான்மை, பணித் துறைத் தன்னலம், சந்தர்ப்பவாதம் ஆகியவை காரணமாய், எங்களது மென்ஷிவிக்குகள் தொழிற் சங்கங்களில் ஆதரவு பெற்றனர் (ஒரு சிலவற்றில் இன்னுங்கூட ஒரளவு ஆதரவு பெற்று வருகிறார்கள்). மேலைய நாடுகளின் மென்ஷிவிக்குகள் தொழிற்சங்கங்களில் மேலும் உறுதியான அடிப்படையைப் பெற்றிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் இருந்ததைவிட அங்கு பணித்துறைக் கண்ணேட்டமும் குறுகிய மனப்பான்மையும் தன்னலமுமிக்க, தடிப்பேறிய, பேராசைபிடித்த, ஏகாதிபத்திய மனப்போக்கு கொண்டதும் ஏகாதிபத்தியத்தால் லஞ்சங் கொடுத்துக் கெடுக்கப்பட்டதுமான குட்டிமுதலாளித்துவ “தொழிலாளர் பிரபுக்குலமானது' மிகவும் வலுவுள்ள பிரிவாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இது மறுக்க முடியாததாகும்.

மேற்கு ஐரோப்பாவில் கோம்பர் ஸ்களுக்கும், ழுவோக்கள், ஹெண்டர்சன்கள், மெர்ஹெயிம்கள், லெகின்கள் முதலானோருக்கும் எதிரான போராட்டம், முற்றிலும் ஒருபடித்தான சமூக, அரசியல் ரகத்தவரான எங்களது மென் ஷிவிக்குகளுக்கு எதிரான போராட்டத்தைவிட மிகக் கடுமையானதாகும். இந்தப் போராட்டம் தயவு தாட் சண்யமின்றி நடத்தப்பட்டாக வேண்டும். நாங்கள் செய்தது போலவே, சந்தர்ப்பவாதத்தின், சமூக-தேசியவெறியின் கடைந்தெடுத்த தலைவர்கள் பூரணமாக முகமூடி கிழிக்கப்பட்டுத் தொழிற் சங்கங்களிலிருந்து விரட்டப்படும் நிலைக்கு இந்தப் போராட்டம் தயக்கமின்றி நடத்திச் செல்லப்பட்டாக வேண்டும். போராட்டம் குறிப்பிட்ட கட்டத்தை வந்தடைவதற்கு முன்னல் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது (கைப்பற்றுவதற்கான முயற்சியும் செய்யப்படலாகாது). இந்தக் 'குறிப்பிட்ட கட்டம்' வெவ்வேறு நாடுகளிலும், வெவ்வேறு நிலைமை களிலும் வெவ்வேறனதாய் இருக்கும். அந்தந்த நாட்டி லுள்ள சிந்தனை மிகுந்த, அனுபவம் வாய்ந்த, அறிவு சார்ந்த பாட்டாளி வர்க்கத் தலைவர்களால் மட்டுமே இதனைச் சரியாகக் கணக்கிட்டு நிர்ணயிக்க முடியும்.

தொழிலாளர் வெகுஜனத் திரளினரது பெயரில் தான், அவர்களே நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுதான், நாம் 'தொழிலாளர் பிரபுக்குலத்தை' எதிர்த்துப் போராடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுதான் நாம் சந்தர்ப்பவாத, சமூக-தேசிய வெறித் தலைவர்களை எதிர்த்துப் போராடுகிறோம். மிகவும் சர்வசாதாரணமான, கண்கூடான இந்த உண்மையை மறப்பது மடமையே ஆகும்.

ஆயினும் தொழிற் சங்க உச்சத் தலைவர்கள் பிற்போக்கு, எதிர்ப்புரட்சித் தன்மை கொண்டோராய் இருப்பதைக் காரணமாகக் காட்டி, தொழிற் சங்கங்களைத் துறந்துவிட்டு நாம் வெளியே வந்துவிட வேண்டும், அவற்றில் வேலை செய்ய மறுக்க வேண்டும், தொழிலாளர்களுடைய நிறுவன ஒழுங்கமைப்புக்கான செயற்கையான புதிய வடிவங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகையில் ஜெர்மன் ‘இடதுசாரி' கம்யூனிஸ்டுகள் இதே மடமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்!! கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆற்றக்கூடிய மிகப் பெருஞ் சேவையாகிவிடும் அளவுக்கு இது மன்னிக்க முடியாத மடமையாகும்.”

("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு)

No comments:

Post a Comment