Sunday 10 December 2017

தேசியஇனப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய நிலைமைகளைப் பற்றி ஸ்டாலின்

“சுயநிர்ணய விதியின்படி (பிரிந்து செல்ல) இவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் இவ்வாறு அவர்கள் செய்வது தாத்தர் இன உழைக்கும் மக்களின் நலனுக்காகவா? தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு என்ற முறையில் பேய்ஸ் மற்றும் முல்லா இனத்தவர், தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வதைச் சமூக-ஜனநாயகம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? சமூக-ஜனநாயகமானது (கம்யூனிசமானது) இதிலே குறுக்கிட்டு, தேசிய நலனைச் சரியான பாதையில் திசைதிருப்ப வேண்டாமா? தாத்தர் இன மக்களுக்கு பெரும்பயன் அளிக்கக் கூடிய வகையில், இப்பிரச்சனைக்கு தீர்வாக ஒரு சரியான திட்டத்தோடு சமூக-ஜனநாயகம் முன் வர வேண்டாமா?

ஆனால் எது மாதிரியான தீர்வு உழைக்கும் மக்களின் நலனுக்குச் சாதகமாக இருக்கும்; தன்னாட்சியா? கூட்டமைப்பாட்சியா? பிரிந்து செல்லுதலா?

இந்த எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வு என்பது, குறிப்பிட்ட தேசிய இனத்தின் பருண்மையான வரலாற்று நிலைமைகளைப் பொறுத்தே அமையும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சூழ்நிலைகள் என்பது மற்ற எதையும் போல மாறக்கூடியது ஆகும். எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு, இன்னொரு தருணத்தில் முற்றிலும் பொருந்தாமல் போகலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்ய போலந்து தனியாகப் பிரிந்து செல்லுதலை மார்க்ஸ் ஆதரித்தார். அந்நேரத்தில் அது சரியாக இருந்தது.

ஏனெனில், ஒரு கீழ்மட்டக் கலாச்சாரம் ஒன்றில் சிக்கி அழிந்து கொண்டிருப்பதிலிருந்து ஒர் உயர் மட்டக் கலாச்சாரம் விடுதலை பெற நினைத்த பிரச்சனையாக இருந்தது அது. இந்தப் பிரச்சனை என்பது அப்போது கோட்பாட்டுப் பிரச்சனையாகவும் அறிவுப்பூர்வமான பிரச்சனையாகவும் அப்போது நிலவியிருந்த யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனையாகவும் இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோ, ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்து செல்வதற்கு எதிராக போலந்து மார்க்சியவாதிகள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் நிலைப்பாடும் சரியானதாகவே இருந்தது. ஏனெனில் கடந்து போன ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள் ரஷ்யாவையும் போலந்தையும் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் நெருக்கமாகக் கொண்டுவந்திருந்தது. மேலும் அந்தக் குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் பிரிந்து செல்வது என்கின்ற இப்பிரச்சனையானது நடைமுறைப் பிரச்சனை என்பதிலிருந்து அறிவுப்பூர்வமான விவாதமாக மாற்றப்பட்டு, உலகில் மற்ற யாரையும் இப்பிரச்சனை கவராவிட்டாலும், உலகெங்கிலுமுள்ள அறிவுஜீவிகளை இப்பிரச்சனை கவர்ந்தது.
இவ்வாறு சொல்வதன் மூலம், மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைப்பாடுகளில் மாறுதல் ஏற்பட்டு போலந்து தனியாகப்டபிரிந்து செல்லும் நிலை உருவாகாது என்பதல்ல.

ஒரு தேசத்தின் வளர்ச்சியில் ஏற்படும் வரலாற்று ரீதியான நிலைமைகளை உரிய முறையில் கவனம் செலுத்துவதன் மூலமாகவே, தேசியஇனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று இதன் மூலம் தெரிகிறது”
(மார்க்சியமும் தேசியஇனப் பிரச்சினையும் பக்கம் 41 -43)


No comments:

Post a Comment