Monday 4 December 2017

புரட்சியின் அடிப்படை விதி பற்றி லெனின்

“இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மூன்று ருஷ்யப் புரட்சிகளும் அடங்கலாய் எல்லாப் புரட்சிகளாலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கும் அடிப்படைப் புரட்சி விதி வருமாறு:

புரட்சி நடைபெற வேண்டுமானல், சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வெகுஜனங்கள் பழைய வழியில் தாம் வாழ்வது சாத்தியமல்ல என்பதை உணர்ந்து மாற்றங்கள் வேண்டுமெனக் கோரினால் மட்டும் போதாது. புரட்சி நடைபெற வேண்டுமானல், சுரண்டலாளர்கள் பழைய வழியில் வாழவும் ஆட்சி நடத்தவும் முடியாமற்போவது அவசியமாகும். பழைய வழியில் வாழ "அடிமட்டத்து வர்க்கங்கள்’ விரும்பவில்லை, ’’மேல் வர்க்கங்களால்’’ பழைய வழியில் நடத்திச் செல்ல முடியவில்லை என்கிற நிலை ஏற்படும்போது மட்டும்தான் புரட்சி வெற்றி பெற முடியும். இந்த உண்மையை வேறுவிதமாகவும் கூறலாம்: தேசம் தழுவிய நெருக்கடி (சுரண்டப்படுவோர், சுரண்டுவோர் ஆகிய இரு சாராரையும் பாதிக்கும் நெருக்கடி) இல்லாமல் புரட்சி சாத்தியமன்று. இதிலிருந்து தெளிவாவது என்னவெனில், புரட்சி நடைபெறுவதற்கு, முதலாவதாக, பெரும்பான்மையான தொழிலாளர்கள் (அல்லது குறைந்தது, வர்க்க உணர்வு கொண்ட, சிந்தனை ஆற்றலுடைய, அரசியல் செயலாற்றல் வாய்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர்) புரட்சி இன்றியமையாதது என்பதை நன்கு உணர்ந்திருப்பதும், புரட்சிக்காக உயிர்விடத் தயாராயிருப்பதும் அவசியமாகும்;

இரண்டாவதாக, ஆளும் வர்க்கங்கள் அரசாங்க நெருக்கடிக்கு-மிகவும் பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனங்களையும் அரசியல் அரங்குக்குக் கவர்ந்திழுக்கும் (இதுவரை செயலின்றி உறக்கத்தில் இருந்த உழைப்பாளர்களும் ஒடுக்கப்பட்டோருமான வெகுஜனங்களில் அரசியல் போராட்டம் நடத்தக் கூடியவர்களது தொகை விரைவில் பத்து மடங்கும், ஏன் நூறு மடங்கும் கூட பெருகிவிடுவது மெய்யான எந்தப் புரட்சிக்குமுரிய அறிகுறியாகும்), அரசாங்கத்தைப் பலவீனமாக்கும், புரட்சியாளர்கள் விரைவில் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வகை செய்யும் அரசாங்க நெருக்கடிக்கு-இலக்காகிவிடுவது அவசியமாகும்.”
(“இடதுசாரி" கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு)


No comments:

Post a Comment