Monday 4 December 2017

ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதி ஆகவில்லை என்பது பற்றி லெனின்

“ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதி ஆகிவிடவில்லை என்பது தெளிவு. ஜெர்மனியிலுள்ள ''இடதுசாரிகள்’’ தமது விருப்பத்தை, தமது அரசியல்-சித்தாந்தப் போக்கை எதார்த்த உண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டு விட்டனர் என்பது விளங்குகிறது. புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது. ருஷ்யாவில் மிகவும் நீண்ட நெடுங்காலத்துக்கு மிகப் பல்வேறு வடிவங்களில் ஜாரிசத்தின் மிகக் கொடிய காட்டுமிராண்டித்தன மான ஒடுக்குமுறையானது பல்வேறு வகைப்பட்ட புரட் சியாளர்களையும் தோற்றுவித்தது; இப்புரட்சியாளர்கள் வியத்தகு பற்றுறுதியும் ஆர்வமும் வீரமும் நெஞ்சுறுதியும் வெளிப்படுத்தினர்.

ருஷ்யாவில் நாங்கள் புரட்சியாளர்களுடைய இந்தத் தவறை மிகவும் அருகாமையிலிருந்து கவனித்திருக்கிறோம். மிக உன்னிப்பாய் இதனை நாங்கள் ஆராய்ந்து, இதைப்பற்றி நேரடியாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். எனவேதான், ஏனையோரிடத்தும் இது எழும்போது எங்களால் மிகத் தெளிவாய் இதனைப் பார்க்க முடிகிறது. ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற முறை ''அரசியல் வழியில் காலாவதியானது தான்'' ஆனால்-இதுவே இங்குள்ள முக்கிய விஷயம் நமக்குக் காலாவதியாகிவிட்டதால் அது வர்க்கத்துக்கும், வெகுஜனங்களுக்கும் காலாவதியாகிவிட்டதாகும் எனக்கருதக் கூடாது.

"இடதுசாரிகளுக்கு'' ஒரு வர்க்கத்தின் கட்சியாக, வெகுஜனங்களின் கட்சியாகச் சிந்தனை செய்யத் தெரியவில்லை, அவ்வாறு செயல்படத் தெரியவில்லை என்பதையே திரும்பவும் இங்கு காண்கிறோம். வெகு ஜனங்களுடைய நிலைக்கு, வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியின் நிலைக்கு, நீங்கள் சரிந்துவிடக்கூடாது. அதில் சர்ச்சைக்கு இடமில்லை. அவர்களுக்குக் கசப்பான உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். அவர்களுடைய முதலாளித்துவ ஜனநாயக, நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களை, அவை தப்பெண்ணங்கள் என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான் உங்களுடைய கடமை. ஆனல் அதேபோதில் (வர்க்கத்தின் கம்யூனிஸ்டு முன்னணிப் படை மட்டுமின்றி) வர்க்கம் அனைத்தின், (உழைப்பாளி மக்களின் முன்னேறிய பகுதியோர் மட்டுமின்றி) உழைப்பாளி மக்கள் அனைவரின் வர்க்க உணர்வு, தயார் நிலை இவற்றின் எதார்த்த நிலவரத்தை நீங்கள் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட்டாக வேண்டும்.”

(“இடதுசாரி” கம்யூனிசம்-இளம் பருவக்கோளாறு)

No comments:

Post a Comment