Thursday 21 December 2017

டூமா புறக்கணிப்பு மற்றும் பங்கேற்பு என்கிற செயற்தந்திரத்தை (tactics ) ருஷ்யாவில் பயன்படுத்தியதுப் பற்றி லெனின்

மாறிமாறிக் கையாளப்பட்ட நாடாளுமன்றப் போராட்ட முறைகளும் நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், நாடாளு மன்றத்தைப் புறக்கணிப்பு செய்யும் செயற்தந்திரமும் (tactics ) நாடாளுமன்றத்தில் பங்கு கொள்ளும் செயற்தந்திரமும், சட்டபூர்வமான போராட்ட முறைகளும் சட்டத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், மற்றும் இவற்றுக் கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் அளவு கடந்த உள்ளடக்கப் பொருள் வளம் மிக்கதாய்த் திகழ்ந்தன. வெகுஜனங்களும் தலைவர்களும், அதேபோல வர்க்கங்களும் கட்சிகளும் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகளில் போதனை பெறுவதைப் பொருத்தவரை, இந்தக் காலத்தின் ஒவ்வொரு மாதமும் '‘சமாதான பூர்வமான'', ''அரசியலமைப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்கு உட்பட்டதான’’ வளர்ச்சிக்குரிய ஒரு முழு ஆண்டுக்கு ஈடானதாய் இருந்தது. 1905 ஆம் ஆண்டின் "ஒத்திகை'' நடந்திருக்கா விட்டால் 1917ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி சாத்தியமாய் இருந்திருக்காது.
...
போல்ஷிவிக்குகள் சட்ட விரோதமான வேலைகளைச் செய்வதுடன் 'சட்டபூர்வமான வாய்ப்புகளைத்' தவறாமல் பயன்படுத்திக் கொள்வதையும் இணைத்திடுவதென்ற பிழையற்ற செயற்தந்திரத்தைப் பின்பற்றி இராவிடில், மென்ஷிவிக்குகளைப் பின்னுக்குத் தள்ளுவதில் அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது. பழுத்த பிற்போக்குவாத டூமாவுக்கு நடந்த தேர்தல்களில் போல்ஷிவிக்குகள் தொழிலாளர் தொகுதியின் முழு ஆதரவையும் வென்று கொண்டனர்.
...
நாடாளுமன்றத்தில்-மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றம்தான் என்றாலுங்கூட ஒருவர் எதிர்க் கட்சி ஒன்றின் தலைவராய் இருந்தார் என்ற உண்மையானது, பிற்பாடு புரட்சியில் அவர் பங்காற்று வதற்கு வசதியாக இருந்தது.
...
பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிக முக்கிய மான சில பிரச்சினைகளில் எல்லா நாடுகளுமே ருஷ்யா என்ன செய்துள்ளதோ அதையே தவிர்க்க முடியாத வகையில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை, அனுபவம் தெளிவு படுத்தியிருக்கிறது.
...
குறிப்பிடப்பட்ட இக்கட்டத்தின் தொடக்கத்தில், நாங்கள் அரசாங்கத்தை வீழ்த்தும்படி அறைகூவல் விடுக்கவில்லை. முதலில் சோவியத்துகளின் அமைப்பையும் மனநிலையையும் மாற்றமல், அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென விளக்கி வந்தோம். முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணிக்கும்படி நாங்கள் அறைகூவல் விடுக்கவில்லை; அதற்குப் பதில் -எங்கள் கட்சியின் ஏப்ரல் (1917) மாநாட்டைத் தொடர்ந்து, கட்சியின் பெயரிலேயே அதிகார பூர்வமாய் இதைக் கூற முற்பட்டோம்- அரசியல் நிர்ணய சபையைக் கொண்ட முதலாளித்துவக் குடியரசானது, அரசியல் நிர்ணய சபை இல்லாத முதலாளித்துவக் குடியரசைக் காட்டிலும் சிறந்ததாய் இருக்கும் என்றும், ஆனல் தொழிலாளர்கள், விவசாயிகளது' குடியரசானது -அதாவது ஒரு சோவியத் குடியரசானது - எந்த முதலாளித்துவ -ஜனநாயக, நாடாளுமன்றக் குடியரசைக் காட்டிலும் சிறப்பாய் இருக்கும் என்றும் கூறினோம். இது போன்ற முழுநிறையான, எச்சரிக்கை மிக்க, நீண்ட தயாரிப்புகள் இல்லாமல், எங்களால் 1917 அக்டோபரில் வெற்றி பெற்றிருக்கவோ, அந்த வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கவோ முடிந்திருக்காது.”
("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-3)



No comments:

Post a Comment