Saturday 2 December 2017

பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2 – (பகுதி) லெனின்

(வரலாற்று அனுபவத்தை செயற்கையாக படைத்திட முடியாது என்கிறார் லெனின். புரட்சியின் போதோ, புரட்சியின் தருவாயிலோதான் சோவியத்துகளை நிறுவ முடியுமென்று அவர் கூறுகிறார். முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலம் பெறும்வரை அதை அகற்றிவிட முடியாது. தொழிலாளி வர்க்கத்தினர், விவசாயிகள், சிறு அலுவலகச் சிப்பந்திகள் ஆகிய வெகுஜனங்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் வாயிலாகவே அன்றி, எந்த வாதங்களாலும் உண்மை நிலைமையை உணர்த்திவிட முடியாது என்பதை ருஷ்யப் புரட்சியின் வரலாறு தெளிவாய்க் காட்டியிருக்கிறது.)

“தோழர் பொர்டீகா இங்கே இத்தாலிய மார்க்சியவாதிகளின் கருத்தோட்டத்துக்காக வாதாட விரும்பியதாய்த் தெரிகிறது. ஆனால் அவர் பாராளுமன்ற வழியிலான செயற்பாட்டுக்கு ஆதரவாய்ப் பிற மார்க்சியவாதிகள் முன்வைத்த வாதங்களில் எதற்குமே பதிலளிக்கவில்லை.

வரலாற்று அனுபவத்தைச் செயற்கை முறையில் படைப்பித்துவிட முடியாது என்பதை தோழர் பொர்டீகா ஒத்துக் கொள்கிறார். போராட்டத்தைப் பிறிதொரு துறைக்கு எடுத்துச் சென்றாக வேண்டுமென்று அவர் நம்மிடம் கூறுகிறார், புரட்சிகர நெருக்கடி ஒவ்வொன்றுடன் கூடவும் பாராளுமன்ற நெருக்கடியும் தோன்றுவதை அவர் உணரவில்லையா, என்ன? போராட்டத்தைப் பிறிதொரு துறைக்கு, அதாவது சோவியத்துகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனக் கூறுகிறார் என்பது மெய்தான். ஆனல் சோவியத்துகளைச் செயற்கை முறையில் படைப்பித்துவிட முடியாதென்பதை பொர்டீ காவே ஒத்துக் கொள்கிறார், புரட்சியின் போதோ, புரட்சியின் தருவாயிலோதான் சோவியத்துகளை நிறுவ முடியுமென்று ருஷ்யாவின் உதாரணம் காட்டுகிறது. கேரென்ஸ்கியின் காலத்திலுங்கூட சோவியத்துகள் (அவை மென்ஷிவிக் சோவியத்துகளாகவே இருந்தன) பாட்டாளி வர்க்க அதிகாரமாய் அமைய முடியாத முறையிலேதான் நிறுவப்பட்டன.

பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும்; முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும்-முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை-உபயோகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்.
….
எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்தில் பிற்பட்ட நிலையிலுள்ள பகுதியோர் இருக்கிறார்கள் பாராளுமன்றம் மக்களின் மெய்யான பிரதிநிதியாகும் என்று இவர்கள் நம்புகிறார்கள் அங்கே கையாளப்படும் அயோக்கிய முறைகளை இவர்கள் காண்பதில்லை. முதலாளித்துவ வர்க்கம் வெகுஜனங்களை ஏமாற்றத் துணை புரியும் சாதனமாகவே பாராளுமன்றம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனல் உங்களுக்கு எதிராய் எழுப்பப்பட வேண்டிய வாதம் இது. உங்களுடைய முடிவுகளுக்கு எதிராய் இது எழவே செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டு வரும் மெய்யாகவே பிற்பட்ட பகுதியோரான வெகுஜனங்களுக்குப் பாராளுமன்றத்தின் உண்மையான தன்மையை எப்படி நீங்கள் புலப்படச் செய்யப் போகிறீர்கள்? நீங்கள் பாராளுமன்றத்தில் இல்லையானுல், நீங்கள் பாராளுமன்றத்துக்கு வெளியேதான் நிற்கப் போகிறீர்கள் என்றால், பல்வேறு பாராளுமன்ற சூழ்ச்சிகளையும் பல்வேறு கட்சிகளுடைய நிலைகளையும் எப்படி அம்பலம் செய்யப் போகிறீர்கள்?

நீங்கள் மார்க்சியவாதிகள்தான் என்றால், முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளுக்கும் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் நெருங்கிய இணைப்பு உண்டென்பதை நீங்கள் ஒத்துக்கொண்டாக வேண்டும். திரும்பவும் கேட்கிறேன்: பாராளுமன்ற உறுப்பினர்களாய் இல்லையேல், பாராளுமன்ற வழியிலான செயற்பாட்டினை நிராகரிப்பீர்களாயின், இவற்றை எல்லாம் எப்படி புலப்படச் செய்யப் போகிறீர்கள்? தொழிலாளி வர்க்கத்தினர், விவசாயிகள், சிறு அலுவலகச் சிப்பந்திகள் ஆகிய வெகுஜனங்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் வாயிலாகவே அன்றி, எந்த வாதங்களாலும் உண்மை நிலைமையை உணர்த்திவிட முடியாது என்பதை ருஷ்யப் புரட்சியின் வரலாறு தெளிவாய்க் காட்டியிருக்கிறது.

பாராளுமன்றப் போராட்டத்தில் ஈடுபடுவது வெறும் கால விரயமே என்பதாய் இங்கு வாதாடப்பட்டது. பாராளுமன்றத்தைப் போல, எல்லா வர்க்கங்களும் இந்த அளவுக்குப் பங்கெடுத்துக் கொள்ளும் வேறொரு நிறுவனம் இருப்பதாய் யாரும் நினைக்க முடியுமா? செயற்கை முறையிலே இப்படி ஒன்றை படைத்திட முடியாது. எல்லா வர்க்கங்களும் பாராளுமன்றப் போராட்டத்தினுள் கவர்ந்திழுக்கப்படுகின்றன என்றால், வர்க்க நலன்களும் மோதல்களும் பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கப்படுவதுதான் காரணம். உதாரணமாய், தீர்மானகரமான பொது வேலைநிறுத்தத்தை எங்கும் உடனடியாக உண்டாக்கி ஒரே அடியில் முதலாளித்துவத்தை வீழ்த்தி விட முடியுமானல், பல நாடுகளிலும் ஏற்கனவே புரட்சி நடைபெற்று முடிவுற்றிருக்குமே.

உண்மைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும், பாராளுமன்றமானது வர்க்கப் போராட்ட அரங்காய் இருந்து வருகிறது. தோழர் பொர்டீகாவும் அவருடைய கருத்தோட்டங்களை ஏற்றுக் கொள்வோரும் வெகுஜனங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுக் குழு ஒன்று செயல்படுவது சாத்தியமே என்பதற்கு ஜெர்மனி சிறந்த உதாரணமாய் அமைகிறது. ஆகவே நீங்கள் ஒளிவுமறை வின்றி வெகுஜனங்களிடம் சொல்ல வேண்டும். “வலுவான நிறுவன ஒழுங்கமைப்பு கொண்ட ஒரு கட்சியைப் படைப் பிக்க நாங்கள் பலமற்றோராய் இருக்கிறோம்". இதுதான் சொல்லப்படவேண்டிய உண்மை. ஆனால் வெகுஜனங்களிடம் சென்று உங்கள் பலவீனத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் உங்கள் ஆதரவாளர்களாய் இருக்க மாட்டார்கள், எதிராளிகளாகவே இருப்பார்கள்; அவர்கள் பாராளுமன்ற முறையின் ஆதரவாளர்களாகிவிடுவார்கள்.

"தொழிலாளித் தோழர்களே, நாங்கள் மிகவும் பல வீனமாயிருக்கிருறோம், பாராளுமன்றத்திலுள்ள கட்சி உறுப்பினர்களைக் கட்சிக்குக் கீழ்ப்படிய வைக்கவல்ல கட்டுப்பாடுள்ள கட்சியினை எங்களால் அமைக்க முடியவில்லை" என்று சொல்வீர்களாயின், தொழிலாளர்கள் உங்களை விட்டுத் துறந்துவிடுவார்கள் "பலமில்லாத இந்த சோனிகளைக் கொண்டு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நாங்கள் நிறுவுவது எப்படி?" என்றுதான் அவர்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்வார்கள்.

பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற்ற மறுதினமே அறிவுத் துறையினரும் மத்தியதர வகுப்பாரும் குட்டிபூர்வு"வாக் களும் கம்யூனிஸ்டுகளாகிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத் தால், அது சிறு பிள்ளைத்தனமே ஆகும். இந்தப் பிரமை உங்களிடம் இல்லையானல், உடனே நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை அதன் சொந்தக் கொள்கை வழியைக் கடைப்பிடிக்கும்படி வைப்பதற்குத் தயார் செய்தாக வேண்டும். அரசு விவகாரங்களில் எந்தக் கிளையிலும் இந்த விதிக்கு விலக்குகள் இல்லை என்பதைக் காண்பீர்கள். புரட்சிக்கு மறுநாளன்றே நீங்கள் எங்கும் தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்பதாய்க் கூறிக்கொண்டு சந்தர்ப்பவாதத்தைக் கைக்கோள்வோரைக் காண்பீர்கள்; அதாவது, கம்யூனிஸ்டுக் கட்சியின் அல்லது பாட்டாளி வர்க்க அரசின் கட்டுப்பாட்டை அங்கீகரிக்க மறுக்கும் குட்டிபூர்ஷ்வாக்களைக் காண்பீர்கள். தனது எல்லா உறுப்பினர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படிக் கட்டாயப்படுத்தக் கூடியதான, மெய்யான கட்டுப்பாடு வாய்ந்த கட்சியை அமைத்திட நீங்கள் தொழிலாளர்களைத் தயார் செய்யாவிடில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உங்களால் ஒரு நாளும் தயார் செய்ய முடியாது. புதிய கம்யூனிஸ்டுக் கட்சிகள் மிகப் பலவும் பாராளுமன்றத்தில் பங்குகொண்டு செயல்படுவதை நிராகரிப்பதானது அவற்றின் பலவீனத்திலிருந்து எழும் போக்கே ஆகுமென்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள விரும்பாததற்கு இதுவேதான் காரணமென நினைக் கிறேன். மெய்யாகவே புரட்சிகரமான தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலோர் எங்களைத்தான் பின்பற்றுவார்கள், உங்களுடைய பாராளுமன்ற - எதிர்ப்பு உரைகளை எதிர்த்துப் பேசுவார்கள் என்பதில் எனக்கு ஐயப்பாடு சிறிதும் இல்லை.’

(முதன்முதல் 1921ல் முழு வாசகமும் கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ்.)


No comments:

Post a Comment