Wednesday 6 December 2017

கம்யூனிசத்தைக் கற்பது பற்றி லெனின்

“கம்யூனிஸ்டுப் பாடப் புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் நூல்களிலும் அடங்கியுள்ள ஒட்டுமொத்த அறிவை ஏற்றுக் கொள்வதே கம்யூனிசத்தைக் கற்றறிவதாகும் என்பதே இயல்பாய் ஒருவர் மனதில் முதலில் தோன்றும் எண்ணம். ஆனால் கம்யூனிசத்தைப் பயிலுதல் என்பதற்கு இவ்விதம் இலக்கணம் கூறுவதானது மிதமிஞ்சிக் கொச்சைப் படுத்துவதும் குறைப்படுத்துவதுமாகவே இருக்கும். கம்யூனிஸ்டுப் புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் இருப்பதை ஏற்றுக் கொள்வதே கம்யூனிசம் பயிலுதலாய் இருப்பின், கம்யூனிஸ்டு வாசகம்பேசி வித்தை காட்டுவோரை, அல்லது வாய்ச் சவடால்காரர்களை எளிதில் நாம் நிறைய பெற்றுக் கொண்டு விடலாம். பல சந்தர்ப்பங்களிலும் இதனால் நமக்குத் தீங்கே ஏற்படும். ஏனெனில் இத்தகையோர் கம்யூனிஸ்டுப் புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் எடுத்துரைக் கப்படுவதைப் படித்துத் தெரிந்து கொண்டபின் பல்வேறு அறிவுத்துறைகளைச் சேர்த்து இணைத்திடும் திறனற்றேராகவே இருப்பர்; கம்யூனிசத்துக்கு உண்மையில் அவசியமாயுள்ள முறையில் இவர்களால் செயல்பட முடியாது.
கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டு அறிவை ஏற்றுக் கொள்வதுடன் நின்று விடுவது மிகப்பெரும் தவறாகும். கம்யூனிசத்தைப் பற்றி வழக்கமாய்க் கூறப்பட்டு வந்ததைத் திரும்பவும் வலியுறுத்துவதுடன் இப்பொழுதெல்லாம் நமது பேச்சுக்களும் கட்டுரைகளும் நின்று விடுவதில்லை. ஏனென்றால் நமது பேச்சுக்களும் கட்டுரைகளும் எல்லாத் துறைகளிலும் நமது அன்ருட வேலைகளுடன் இணைந்திருக்கின்றன. வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் கம்யூனிஸ்டுப் பிரசுரங்களிலிருந்தும் நூல்களிலிருந்தும் கம்யூனிசம் குறித்துப் பெறப்பட்ட ஏட்டு அறிவு சிறிதும் பயனற்றதாகும். ஏனெனில் அது தத்துவத்துக்கும் நடை முறைக்குமிடையே இருந்த பழைய பிளவையும் பழைய முதலாளித்துவ சமுதாயத்தின் கேடுகெட்ட இயல்பான இந்தப் பழைய வேறுபாட்டையும் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

கம்யூனிஸ்டுக் கோஷங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முற்படுவதானது இன்னுங்கூட அபாயம் விளைவிப்பதாய் இருக்கும். இந்த அபாயத்தை நாம் தக்க காலத்தில் உணராமலும், இந்த அபாயத்தைத் தவிர்ப்பதில் நமது முயற்சிகள் அனைத்தையும் ஈடுபடுத்தாமலும் இருந்திருப்போ மாயின், இவ்வழியில் கம்யூனிசத்தைக் கற்றறிந்து கொண்டு தம்மைக் கம்யூனிஸ்டுகளென அழைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஐந்து அல்லது பத்து லட்சம் இளைஞர்களும் யுவதிகளும் கம்யூனிச இலட்சியத்துக்குப் பெருந் தீங்கே இழைத்திருப்பார்கள்.
பழைய கல்வி முறை வெறும் ஏட்டு அறிவையே புகட்டியது. பயனற்ற, வேண்டாத, வறட்டுத்தனமான அறிவைப் பெருமளவில் ஏற்றுக் கொள்ளும்படி மாணவர்களைப் பலவந்தம் செய்தது. இந்த அறிவு குப்பையாய் மூளையில் அடைந்து, ஒரே அச்சில் வார்க்கப்பட்ட அதிகாரிகளாய் இளந் தலைமுறையினரை மாற்றியது. ஆனால் மனித குலம் சேகரித்திருக்கும் அறிவுச் செல்வத்தை ஏற்றுக் கொள்ளாமலே ஒருவர் கம்யூனிஸ்டாகி விடலாம் என்பதாய் இதிலிருந்து நீங்கள் முடிவுக்கு வர முயன்றால் அது மிகக் கடும் பிழையே ஆகும். அறிவின் கூட்டுத் தொகையிலிருந்து விளைந்த பயனே கம்யூனிசம். இந்த கூட்டுத் தொகையான அறிவைப் பெறாமலே, கம்யூனிச கோஷங்களையும் கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் கற்றறிந்து கொண்டால் போதுமென நினைப்பது தவறாகும். மார்க்சியமானது மனித அறிவின் கூட்டுத் தொகையிலிருந்து எப்படிக் கம்யூனிசம் தோன்றியது என்பதைக் காட்டும் ஓர் உதாரணமாகும்.

பிரதானமாய் மார்க்ஸ் படைத்தளித்த கம்யூனிசத் தத்துவம், கம்யூனிச விஞ்ஞானம், மார்க்சியம் எனும் இந்தப் போதனை பத்தொன்பதாம் நூற்ருண்டைச் சேர்ந்த தனியொரு சோஷலிஸ்டின்-அவர் ஒரு மாமேதையே என்றாலுங்கூட -படைப்பாய் இருந்த நிலை முடிவுற்று விட்டது என்பதையும், அது உலகெங்குமுள்ள லட்சோபலட்சக் கணக்கான, கோடானு கோடியான பாட்டாளி வர்க்கத்தாரின் போதனையாகி விட்டது, முதலாளித்துவத்துக்கு எதிரான தமது போராட்டத்தில் அவர்கள் இதைச் செயல்படுத்தி வருகிறார்கள் என்பதையும் நீங்கள் படித்தும் கேட்டும் இருக்கிறீர்கள்.

மார்க்சின் போதனை மிகவும் புரட்சிகரமான வர்க்கத்தைச் சேர்ந்த லட்சக் கணக்கானேரின், கோடிக் கணக்கானேரின் உள்ளத்தையும் சிந்தனையையும் கவர்ந்திழுக்க முடிந்தது எப்படி என்று நீங்கள் கேட்டீர்களானல், உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பதில் ஒன்றே ஒன்றுதான்: முதலாளித்துவத்தில் கிடைக்கப் பெற்ற மனிதகுல அறிவெனும் உறுதியான அடித்தளத்தை மார்க்ஸ் தமது படைப்புக்கு ஆதாரமாக்கிக் கொண்டதால்தான் என்பதே அந்தப் பதில். மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஆளும் விதிகளை ஆராய்ந்து அறிந்து, முதலாளித்துவமானது கம்யூனிசத்தை நோக்கி வளர்வது தவிர்க்க முடியாத தாகும் என்பதை மார்க்ஸ் உணர்ந்து கொண்டார். மிகவும் முக்கியமானது என்னவென்றால், இந்த முதலாளித்துவ சமுதாயத்தை மிகவும் துல்லியமாகவும் விவரமாகவும் ஆழ்ந்த முறையிலும் ஆராய்வதெனும் ஒரே அடிப்படையில் அவர் இதை நிரூபித்தார், முந்திய விஞ்ஞானம் தோற்றுவித்தது அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவர் இதைச்செய்தார். மனித சமுதாயம் தோற்றுவித்தவை யாவற்றையும், ஒரு சிறு விவரத்தையும் கவனியாது விடாமல், விமர்சனக் கண்கொண்டு பரிசீலித்துத் திருத்தியமைத்தார். மனித சிந்தனை தோற்றுவித் திருந்தவை யாவற்றையும் அவர் மறு பரிசீலனை செய்தார், விமர்சனத்துக்கு உட்படுத்தினர், தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்தார். முதலாளித்துவ வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டோரால், அல்லது முதலாளித்துவத் தப்பெண்ணங்களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் வரையறுத்துக் கொடுத்தார்.
இளைஞர்களின் பிரதிநிதிகளும், மற்றும் ஒரு புதிய கல்வி முறையின் குறிப்பிட்ட சில ஆதரவாளர்களும் பழைய கல்வி முறையைத் தாக்கி, அது நெட்டுருப் போடும் முறையாகுமென அடிக்கடி பேசக்கேட்கிரறோம். பழைய கல்வி முறையிலிருந்து நல்லதை எடுத்துக் கொண்டாக வேண்டுமென இவர்களுக்கு நாம் பதிலளிக்கிறோம்: பத்தில் ஒன்பது பங்கு உதவாக்கரையானதும் எஞ்சிய ஒரு பங்கு திரித்துப் புரட்டப்பட்டதுமான அளவிலா அறிவை இளம் மக்களின் தலையில் அடைத்து நிரப்பும் அந்த முறையை நாம் கடன் வாங்கக் கூடாதுதான். ஆனால் இதற்கு அர்த்தம் கம்யூனிச முடிவுகளுக்குள் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடலாம், கம்யூனிசக் கோஷங்களை மட்டும் கற்பதுடன் நின்று விடலாம் என்பதல்ல. இவ்வழியில் உங்களால் கம்யூனிசத்தைத் தோற்றுவிக்க முடியாது. மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டு ஆக முடியும்.
நெட்டுருப் போட வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஆனால் அடிப்படை உண்மைகளைப் பற்றிய அறிவை அளித்து ஒவ்வொரு மாணவரின் மனத்தையும் வளர்த்திடு வதும் செம்மையாக்குவதும் நமக்கு அவசியமே. கற்கும் அறிவு அனைத்தும் மனத்துள் செரிமானம் செய்யப்பட வில்லையானல், கம்யூனிசம் வெற்றுச் சொல்லாய், வெறும் பெயர்ப் பலகையாய் இழிவுற்று விடும், கம்யூனிஸ்டுகள் வீம்புரை பேசும் வீணராகி விடுவர். இந்த அறிவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, விமர்சனக் கண்கொண்டு ஆய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வேண்டாத குப்பையை எல்லாம் மூளையில் அடைத்து கொள்ளாமல், கல்வியில் சிறந்த இக்கால மனிதர் எவருக்கும் அத்தியாவசியமான உண்மைகளைக் கொண்டு சிந்தனையை வளமாக்கிக் கொள்ள முடியும்.

கருத்து மிக்க கடும் முயற்சி இல்லாமலே, விமர்சனக் கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்டு, தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளைத் தெரிந்து கொண்டு விட்ட ஒரே காரணத்தால் தனது கம்யூனிசத்தை மெச்சிப் புகழ்ந்து கொள்ள நினைப்பாராயின் உண்மையில் அவர் பரிதாபத் துக்குரிய கம்யூனிஸ்டுதான். இத்தகைய நுனிப் புல் மேயும் போக்கு நிச்சயமாய் ஆபத்தையே உண்டாக்கும். அறிந்தது குறைவே என்பது எனக்குத் தெரிந்தால் மேலும் கற்க முயலுவேன். ஆனல் நான் ஒரு கம்யூனிஸ்டு, எதையும் நான் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பானவராக முடியவே முடியாது.
கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய்க் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து எழும் தவிர்க்க முடியாத முடிபுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும். கம்யூனிசத்தைக் கற்றறிதல் என்னும் குறிக்கோள் குறித்துப் பேசுகையில் பிரதான பணிகளை மேற்கூறிய வாறுதான் எடுத்துரைக்க வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில். இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும் சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடியும்.
நாம் கற்றறிய வேண்டியது என்ன, பழைய கல்வி முறை யிலிருந்தும் பழைய விஞ்ஞானத்திலிருந்தும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது என்ன என்கிற கேள்விகளுக்கு நான் பதிலளித்துள்ளேன். இப்பொழுது இதைக் கற்றறிவது எப்படி என்னும் கேள்விக்குப் பதிலளிக்க முயலுகிறேன். பள்ளியின் செயற்பாடுகளில் ஒவ்வொரு படியையும், பயிற்சி, கல்வி, போதனை இவற்றில் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களுக்கு எதிராய் உழைப்பாளி மக்கள் அனைவரும் நடத்தும் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவாறு அதனுடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கற்றறிய வேண்டும் என்பதே இக்கேள்விக்குரிய பதில்.
(இளைஞர் கழகங்களின் பணிகள்)


No comments:

Post a Comment