Thursday 21 December 2017

போல்ஷிவிக்குகளுடைய வெற்றிக்கு இன்றியமையாத ஒரு நிபந்தனை - லெனின்

“எங்களுடைய கட்சியில் மிகவும் கடுமையான, மெய்யாகவே உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப்பாடு இல்லாமல், அல்லது தொழிலாளி வர்க்கத்தின் பெருந்திரளானோர் அனைவரின் -அதாவது அதைச் சேர்ந்த சிந்தனையுடைய, நேர்மையான, தன்னலங் கருதாத் தியாக உணர்வு கொண்ட, செல்வாக்குப் படைத்த பகுதியோர் யாவரின்; பிற்பட்ட பகுதிகளுக்குத் தலைமை தாங்கவோ அவற்றைத் தம்முடன் அழைத்துச் செல்லவோ வல்லமை பெற்ற பகுதியோர் யாவரின் - முழுநிறையான தங்குதடையற்ற ஆதரவு இல்லாமல், போல்ஷிவிக்குகளால் இரண்டரை ஆண்டுகள் வேண்டாம், இரண்டரை மாதங்களுக்குங்கூட அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது என்பது தற்போது அனேகமாய் எல்லோராலுமே உணரப்படுகிறது என்று நினைக்கிறேன்.

பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது புதிய வர்க்கம் தன்னைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த பகைவனான முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் மிகமிக வைராக்கியமான ஈவிரக்கமற்ற யுத்தத்தைக் குறிக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் கவிழ்க்கப்பட்டதால் (ஒரேயொரு நாட்டில் மட்டும்தான் என்றாலுங்கூட) அதன் எதிர்ப்பு பத்து மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் வலிமை சர்வதேச மூலதனத்தின் பலத்தில் மட்டுமின்றி, இதன் சர்வதேசத் தொடர்புகளின் பலத்திலும் திண்மையிலும் மட்டுமின்றி, பழக்கத்துக்குள்ள பிடிப்பின் வலிவிலும் சிறுவீதப் பொருளுற்பத்திக்குள்ள பலத்திலும் அடங்கியுள்ளது. துரதிருஷ்டவசமாய் உலகில் சிறுவீதப் பொருளுற்பத்தி இன்னமும் மலிந்தே இருக்கிறது. இந்தச் சிறுவீதப் பொருளுற்பத்தி முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் இடையறாது நாள்தோறும் மணிதோறும் தன்னியல் பாகவும் பெருவீத அளவிலும் தோற்றுவிக்கிறது. இக் காரணங்களால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் இன்றியமையாததாகி விடுகிறது. நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும் அசைக்க முடியாத ஒருமித்த திடச்சித்தமும் தேவைப்படும் விடாப்பிடியான உக்கிரமான நீண்டதோர் ஜீவ-மரணப் போராட்டமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின்மீது வெற்றி பெறுவது சாத்திய மன்று.

திரும்பவும் கூறுகிறேன். பாட்டாளி வர்க்கத்திடம் முழுமையான மத்தியத்துவமும் கடுமையான கட்டுப்பாடும் இருக்க வேண்டியது முதலாளித்துவ வர்க்கத்தின்மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனையாகும் என்பதை ருஷ்யாவில் வெற்றி கண்ட பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் அனுபவம், சிந்தனை ஆற்றல் இல்லாதோருக்குங்கூட, அல்லது இதில் சிந்தனை செலுத்த வாய்ப்பு இல்லாமற் போனவர்களுக்குங்கூட தெளிவாகக் காட்டியுள்ளது.

("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-2)

No comments:

Post a Comment